தென்னாசியாவில் சிறீலங்கா நடாத்திய இனவாத ஆட்சிக்கு சாவுமணி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது..தமிழ்நாடு சட்டசபையில் சிங்கள அரசுக்கு எதிராக போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா கொண்டுவந்த பிரேரணையானது எதிர்த்து வாக்களிக்க யாரும் இல்லாமல் ஏகமனதாக நிறைவேறியுள்ளது.
தமிழக முதல்வர் கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை இதுவரை தமிழகத்தில் உள்ள அனைத்துத் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். உலக நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் முதல்வருக்கு தமது மகத்தான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேவேளை போர் நடைபெற்ற வேளை செல்வி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால் இத்தனை நாசங்கள் நடந்து முடிந்திருக்காதே என்ற கவலையும் நிலவுவதை உணர முடிகிறது.
மறுபுறம் :
அவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஈழத் தமிழர் படுகொலைக்கு கருணாநிதி ஆடிய நாடகமே காரணம் என்று தெட்டத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அவருடைய கருத்துக்கு எதிராக கூச்சல் வைத்து திமுக வெளிநடப்பு செய்தது. ஆனாலும் கேப்டனின் துணிச்சலான கருத்து வெளிநாடுகளில் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது.
சந்தர்ப்பம் என்பது வரலாற்றில் ஒரு தடவை மட்டுமே கிடைக்கும். அது மு.கருணாநிதிக்கு ஒரு தடவை கிடைத்தது. வன்னிப் போர் நடைபெற்றபோது அவருடைய படலையை அது பல தடவைகள் தட்டியது. ஆனால் தனது குடும்ப நலனுக்காக நாடகமாடி அதை விரட்டியடித்தார். அன்று மட்டும் மு.கருணாநிதி உறுதியாக நின்றிருந்தால் இன்று அவர் உலகத் தமிழினத்தின் தலைவராக முடிசூடியிருப்பார். அநியாயமாக அந்த அரிய வாய்ப்பை இழந்துவிட்டார். குடும்பபந்தத்தில் சிக்குண்டு, உன்னதமான ஓரிடத்தை ஜெயலலிதாவிடம் பறி கொடுத்துவிட்டார்.
அன்று கலைஞர் பா.ஜ.க கூட்டணியில் இருந்தபோது அதன் பிரதமராக இருந்த வாஜ்பாயை திருதராட்டிரன் என்று கேலி செய்தார். பாரதக் கதையில் வரும் திருதராட்டிரன் போல கண்ணற்ற கபோதியாக இருக்கிறார். தனது கட்சிக்காரர் செய்யும் தவறுகளை பார்க்காத குருடனாக இருக்கிறார் என்று கூறித் திட்டினார், அந்தக் கூட்டணியில் இருந்தும் விலகினார்.
அப்படிச் சொன்ன கருணாநிதியே பின்னொரு கட்டத்தில் வாஜ்பாஜையே வென்று முன்னேறினார். தனது குடும்பத்தினர் செய்த அநீதிகளை எல்லாம் கண்டும் காணாத திருதராட்டிரனாக இருந்தார். வன்னியில் தமிழ் மக்கள் இறந்தபோது திருதராட்டிரன் போல ஆட்சி நடாத்தினார். இன்று அவரைவிட கவலைப்படும் ஒரு தலைவர் தமிழகத்தில் வேறொருவர் இருக்க முடியாது.
இது மட்டுமா.. எப்பொழுது பார்த்தாலும்…
தமிழக சட்டசபையில் ஈழத்தமிழருக்கு ஒருமித்த ஆதரவு இல்லை என்று சாக்குப் போக்கு சொல்லிவந்த சோனியா அரசுக்கு இது ஒரு சவாலான தீர்மானமாகவே அமையப்போகிறது. மகிந்த ராஜபக்ஷவைஆதரிக்க காங்கிரஸ் அரசுக்கு இனி யாதொரு முகாந்திரமும் இருக்கப்போவதில்லை.
இதுமட்டுமா தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றம் முழு இந்திய அரசியலையுமே ஆட்டித் தள்ளப்போகிறது என்று சென்ற வாரம் எல்.கே. அத்வானி கூறியிருந்தார். இப்போது வடக்கு இந்தியாவில் நடக்கும் ஆர்பாட்டங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கும் திமுகவுக்கு ஏற்பட்ட கெதியே வரப்போவதை பறைசாற்றுகின்றன.
தென்னாசியாவில் சிறீலங்கா நடாத்திய இனவாத ஆட்சிக்கு சாவுமணி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது..
இத்தனைக்கும் காரணமான தமிழக முதல்வரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருக்கு எமது மகத்தான வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கும் எமது மகத்தான வாழ்த்துக்கள்.
இந்தப் பிரேணையை ஏகமனதாக ஆதரித்த அனைத்துக் கட்சிகளுக்கும் வாழ்த்துக்கள்.
தமிழக சட்டசபையின் இந்தத் தீர்மானத்தை ஒரு மாநில அரசின் தீர்மானமென இனியும் கருதிவிட முடியாது. மத்திய அரசைவிட ஐ.நாவும், ஐரோப்பிய ஒன்றியமும், உலக சமுதாயமும், அமெரிக்காவும் இந்தத் தீர்மானத்தைப்
பார்க்கும். ஐ.நா செயலர் பான் கி மூன் துணிச்சலான நடவடிக்கை எடுக்க இதுவே போதுமான முடிவாகும்.
ஏழு கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை புறந்தள்ளி இனி ஐ.நா அடுத்த கட்டத்திற்கு போக முடியாது. அதைவிட முக்கியம் ஏழு கோடி தமிழருக்கு எதிராக சீனாவும், ரஸ்யாவும் நிற்கப்போகிறதா என்பதும் அடுத்த கேள்வியாகும். உலகத் தமிழினம் வரலாற்றில் முதல் தடவையாக ஒன்றுபட்டுள்ளது. அந்த ஒற்றுமைக்கு தலைமைதாங்கியுள்ள தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கரங்களை அனைவரும் பலப்படுத்த வேண்டும்.
வாழ்க தமிழக முதல்வர்..!
வாழ்க தமிழக மக்கள்..!!
அலைகள் தென்னாசியப் பிரிவு 08.06.2011
Comments