வன்னி மீன்களின் வகைப்படுத்தல்..

‘மீன் செத்தால் கருவாடு, மனிதன் செத்தால் சுடுகாடு’என்று ஒரு கவிஞன் சொன்னதாகக் கேள்வி. இந்த வரிகள் சரியோ தவறோ தெரியவில்லை ஆனால் அதில் உள்ள அர்த்தம் வெளிப்படையாகத் தெரிகிறது.


இந்த வரிகளுக்கு மேலதிக விளக்கம் கொடுக்கலாம் என்று நினைக்கிறோம். மீன்கள் பற்றிய ஆய்வு நூல்கள் அவற்றின் பயன்பாடு என்ற அடிப்படையில் பகுப்பாய்வு செய்துள்ளன. ஐந்து தலைப்புக்களின் கீழ் மீனினம் வகைப் படுத்தப் படுகிறது. ஐந்து தலைப்புகளும் மீனின் பயன்பாட்டு அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளன.


மனித உணவுக்காக, மருந்துக்காக, விவசாய பசளைக்காக, விலங்கின உணவு தயாரிப்புக்காக, மீன்களை விளையாட்டுக்காகப் பிடித்தல் என்று ஐந்து முக்கிய தேவைகளுக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன.


இந்த ஐந்து தலைப்புக்களில் எவை வன்னிக்குப் பொருத்தமானவை என்று பார்ப்போம். வன்னிக் கடலிலும் நீரேந்தும் குளங்களிலும் பிடிக்கப்படும் கடல் நீர், நன்னீர் மீன் கூடுதலாக மனித உணவாகப் பயன்படுகின்றன. இந்த நோக்கில் கடல்நீர், நன்னீர் மீன்கள் கருவாடாகவும் மாற்றப்படுகின்றன.


வன்னியில் நன்னீர் மீன் பெருமளவில் உண்ணப்பட்டாலும் நன்னீர் மீன் கருவாட்டை வன்னி மக்கள் உண்பதில்லை. நன்னீர் மீன் கருவாடு தென் இலங்கைச் சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு நல்ல விலை போகின்றன. தென் இலங்கை மக்கள் அவற்றை விரும்பி உணவாக்குகின்றனர்.


நாளாந்திரம் ‘உயிர் மீன்’ கிடைப்பதால் ஏன் கருவாட்டைத் தின்ன வேண்டும் என்ற கேள்வியை வன்னி மக்கள் கேட்கிறார்கள். என்றாலும் உயிர் மீனிலும் பார்க்கக் கூடிய உணவுச் சத்து கருவாட்டில் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்கிறார்கள். வெய்யில், கடல் காற்றில் உலரும் போது கருவாட்டில் மேலதிக உணவுச் சத்துக்கள் ஏறுகின்றன.


நன்னீர் மீனினத்திற்கு மருத்துவக் குணம் இருப்பதை ஐசி ஆர் சி , உலக சுகாதரா நிறுவன மருத்துவர்கள் உறுதி செய்கின்றனர். மலேரியா நோய் தடுப்பிற்கு நன்னீர் மீன்கள் உதவுவதாகவும் கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் அதை உண்பது மூலம் நலம்பெறுவதாகவும் அதே மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.


சமையல் செய்யாமல் பச்சையாக மீன், கருவாடு ஆகியவற்றை உண்ணும் வழமை வன்னி மக்களிடம் இல்லை. உப்புத் தடவாமல் கடலில் நிறுத்தப்பட்ட படகில் காயப்போட்ட முரல் போன்ற மீனைப் சமையல் செய்யாமல் உண்ண முடியும் என்று ஒரு அன்பர் சொன்னார். நான் உண்டு பார்க்கவில்லை.


கடலில் வேலை செய்வோர் மீனைப் பிடித்தவுடன் அதை வெட்டிச் சுத்தப் படுத்திய பிறகு கடற்கரை சுடு மணலில் புதைத்து வைத்தபின் உண்பதாக தகவல் கிடைத்துள்ளது. சுண்டிக்குளம் கடற்கரையில் எனக்கு இந்த அனுபவம் கிடைத்தது.ஹெரிங் (Herring) மீனினத்தை நோர்வே நாட்டவர்கள் தமது பிரதான உணவாக்குகின்றனர். இது வட கடலில் (North Sea) நவம்பர் தொட்டு ஏப்பிறில் மாதங்களில் பிடிக்கப்படுகிறது. இந்த மீனை நோர்வே உட்படச் ஸ்கன்டிநேவியன் நாட்டவர்கள் பின்வரும் விதமாகத் தயாரித்து உண்கின்றனர்.


ஊறுகாய் தயாரிப்பது போல் சேமித்து வைப்பார்கள. மக்கரல், ஹெரிங், கொட், (Cod) போன்ற வட கடல் மீன்கள் நெருப்புப் புகையில் வாட்டி ஒரு வகை கருவாடாக மாற்றப்படுகின்றன. இது ஒரு பாரம்பரிய உணவு அதற்கு வித்தியாசமான சுவை உண்டு. விலையும் சற்று அதிகம்.


ஹெரிங் மீன் சமையல் செய்யப்படாமல் பச்சையாகவும் (Raw) உண்ணப்படுகிறது. மனித உடலுக்கு முக்கியமான ஒமேகா3 அமிலம், விற்றமின் ஏ.டி என்பன இதில் நிறைய உண்டு. வன்னி மீன்களிலும் இந்தச் சத்துக்கள் நிறைய இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


வியற்நாம் நாட்டில் வன்னிக் கடலில் கிடைக்கும் சீலா, காடன், மணலை போன்ற மீன்கள் இனத்தைச் சேர்ந்தவற்றிலிருந்து சோஸ் (Fash sauce) தயாரிக்கிறார்கள் மூலிகைகளில் ஊற வைத்த மீன்களில் இருந்து பல மாதங்களுக்குப் பிறகு வடியும் திரவத்தை சாடிகள், போத்தில்களில் அடைத்து ஏற்றுமதி செய்கிறார்கள்.


வியற்நாமின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் இந்த மீன் சோஸ் பங்கெடுக்கிறது. வன்னியில் இந்தளவு முன்னேற்றமும் பாராம்பரியமும் கிடையாது. ஆனால் இது பற்றிப் படித்து எதிர் கால திட்டங்களைப் புலிகள் தயாரித்தார்கள். விளைச்சலைப் பெருக்கும் சிறந்த பயிர் உரமாக சில வகை மீன்கள் உதவுகின்றன.


சூடை என்ற முல்லைத்தீவுக் கடலில் கிடைக்கும் மீனை இயற்கைப் பசளை தயாரிப்பதற்காகப் புலிகளின் விவசாயப் பிரிவு பயன்படுத்தியது. தெற்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரசாயன உரத்திலும் பார்க்கப் புலிகள் சூடை மீனையும் வேறு பொருள்களையும் கூட்டித் தயாரித்த பசளை நெல் விளைச்சலைப் பன்மடங்காக உயர்த்தியது. மண்ணையும் இந்த உரம் பாதுகாத்தது.


கோழி உணவு, பன்றி உணவு, கால்நடைகள் உணவு ஆகியவற்றையும் புலிகள் நிர்வாக ஆராய்ச்சிப் பிரிவு மீன், சோளம், வேறு தானியங்கள் போன்றவற்றை கூட்டுச் சேர்த்துத் தயாரித்தார்கள். இவை இறைச்சித் தேவை, முட்டை, பால் தேவை என்பனவற்றைப் பூர்த்தி செய்தன. வன்னி மக்கள் வாழ்வையும் சிறப்பித்தன.

Comments