ராஜபக்ஷ போர் குற்றவாளி: தமிழக சட்டமன்றத்தில் சு.குணசேகரன் கோரிக்கை !

இலங்கையில் தமிழ் மக்களை பூண்டோடு அழிக்கும் கொடிய செயலுக்கு உதவியவர்களுக்கு தண்டனை தரும் நோக்கத்தோடு தமிழக தேர்தல் தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு துணைத் தலைவரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான சு.குணசேகரன் இன்று தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றுகையில் தெரிவித்தார். இலங்கையில் நிகழ்ந்துள்ளது. போர் குற்றம் என்று சிலர் கூறுகிறார்கள் இதனை இன அழிப்பு போர் குற்றம் என்று தனது கட்சி கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதிப் போரில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய ஆதாரங்களும் இருக்கின்றன. இத்தகைய பெரிய படுகொலை இரண்டாவது உலக பெரும்போருக்கு பின் உலகில் எங்கும் நடக்கவில்லை.

கடந்த காலங்களில் போர் குற்றம் செய்தவர்கள் ஐக்கிய நாடுகள் சபையால் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஹிட்லரின் தலைமையில் நடைபெற்ற இழிவு மிகுந்த படுகொலைக்காக நூரம் பேர்க் எனும் இடத்தில் விசாரனை மன்றம் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். போஸ்னியா மக்கள் 1995 ஆம் ஆண்டில் 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.
இன அடிப்படையில் இந்த கொலைக்கு காரணமானவர்கள் மீது விசாரனை நடத்தப்பட்டு 2007 ஆம் ஆண்டு தீர்ப்பும் வழங்கப்பட்டது. முன்னாள் தளபதி ரட்கோ மிலாடிஜ் என்பவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைப் போன்றே ஆப்ரிக்காவிலுள்ள ருவாண்டாவிலும் போர்க்குற்றவாளிகள் விரசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கடந்த 27 ஆண்டுகளாக தமிழ் மக்களை அழிப்பதற்கு தொடர்ந்த இன அழிப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 2008௨009 ஆம் ஆண்டுகளில் உலகில் தடைசெய்யப்பட்ட குண்டுகள் அனைத்தும் அந்த மக்கள் மீது போடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17, 18 தேதிகளில் மட்டுமே 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளைக் கொடியோடு புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் வருமாறு ஐக்கிய நாடுகள் பொறுப்பாளர்காளல் வழிகாட்டப்பட்டும். இவரோடு வந்தவர்கள் அனைவரையும் சேர்த்து கூண்டோடு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு உலகில் எங்கும் வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்கள் கொல்லப்பட்டது இல்லை.

இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை மட்டும் படுகொலை செய்யவில்லை. தமிழக மீனவர்களையும் படுகொலை செய்து வருகிறது. போர் முடிந்த பின்னரும் மீனவர்கள் அவமானப் படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர். இனவெறி மிகுந்த கொடுமையான இலங்கை அரசு என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை நாடு, எல்லை கடந்த வந்து இனவெறி கொண்டு தமிழக மீனவர்கள் சுடப்படுகின்றார்கள். தமிழ் மக்கள் இலங்கையிலும் தமிழக கடற்கரையில் தமிழக மீனவர்களும் கொல்லப்படும் போது மத்திய அரசும் அன்றைய மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை வன்னிப் பிரதேசத்திலே தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு ஆயுதங்களை வழங்கியது. அன்றை மாநில அரசு போரை நிறுத்தி மக்களை பாதுகாக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ் இனத்தை அழிப்பதை நோக்கமாக கொண்டு போர் நடத்திய ராஜபட்சே இன அழிப்பு போர் குற்றவாளியாக அறிவிப்பதற்குரிய முழு பொறுப்பையும் காங்கிரஸ் கட்சி செயல்படுத்த வேண்டும்.

இன்று இலங்கை தமிழ் மக்களின் தாயக உரிமைக்கான போராட்டத்திற்கு தமிழக முதல்வர் தலைமையேற்க வேண்டும் என்றும் தமிழகத்தின் 7 கோடி தமிழ் மக்களும் உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழ் மக்களும் இதைத்தான் எதிர்பார்கிறார்கள். இன அழிப்பு குற்றவாளியான ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். என்பதற்கான தீர்மானத்தை இந்த அவை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

Comments