மிக நீண்ட காலத்தின் பின்னர் நடைபெறுகின்ற தேர்தல் என்பதாலும் தேர்தல் திணைக்களத்தால் இரத்து செய்யப்பட்ட கட்சிகளும் பின்னர் அதே அரசின் நீதிமன்றத்தால் போட்டியிட அனுமதிக்கப்பட்ட ஆளும்கட்சியை அலங்கரிக்கும் கட்சிகளும் கடும் பிரச்சார உத்திகளை கையில் எடுத்து தமது கைங்கரியங்களை ஆற்றிவருகின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கிலே எவ்வளவு பணத்தை செலவழித்து பிரச்சாரத்தை முன்னெடுத்தர்களோ அதே முக்கியத்துவத்துடன் ஆளும் வர்க்கம் அத்தனை அமைச்சர்களையும் வடக்கின் பக்கம் திருப்பி விட்டுள்ளனர்.
அனைத்து அமைச்சர்களும் கடந்த இரண்டு வாரங்களாக சனாதிபதியின் உத்தரவுக்கிணங்க ஒவ்வொரு பிரதேசங்களில் தங்கி நின்று தமது தேர்தல் உத்திகளில் கவனம் செலுத்தியுள்ளனர். வாழ்வாதார கடன்வழங்கல்,பணம்கொடுத்தல்,காசோலை வழங்கல்,இலவச உடைவழங்கல் என ஒவ்வொருவரும் தம்மாலான வழிகளில் முயல்கின்றனர்.
ஈ.பி.டி.பி; அமைச்சரும் சும்மா இருக்கவில்லை. வீதியில் எம்.ஜி.ஆர் ஸ்ரைலில் சைக்கிள் பயணம், கிரிகெட் விளையாட்டு, தேர்தலுக்கு பின்திகதியிடப்பட்ட காசோலை வழங்கல் என தனது வழமையான ஏமாற்றுவேலைகளில் இம்முறையும் ஈடுபட்டுள்ளார்.
இவரைப்பற்றி ஒருவிடயத்தை மாத்திரம் உங்களோடு பகிரலாம் என நினைக்கின்றேன். யாழ்குடாநாட்டிலே வழமையான மண்வளத்தை கொண்டது வடமராட்சி கிழக்கு பகுதி. அங்கே இவரது கட்சி நடாத்திவரும் அட்டூழியங்கள் எவரையும் அதிர வைத்ததாக தெரியவில்லை.
இவர்கள்தான் அந்த பகுதி காணிகளின் சொந்தக்காராகள் போல அப்பகுதியிலுள்ள மண்ணிணை அகழ்ந்து யாழ்குடாவில் எல்லா பகுதிக்கும் வியாபாரம் செய்து வருகின்றார். இதனை செய்தியாக வெளியிட்டவருக்கு மரணதண்டணைகூட இவரது அமைப்பால் 2010இல் வழங்கப்பட்டது.
இதைப்பற்றி கதைத்தால் எல்லோருக்கும் இதுதான் நடக்கும் என்று மற்றவர்களும் அமைதியாகி விட்டனர் ஆனால் நாம் தொடர்ந்து அமைதியாகவே இருக்கப்போகின்றோமா? இதனை எப்படி அகிம்சை வழியில் தடுப்பது? இங்கே உண்மையாக என்ன நடைபெறுகின்றது? யார்யாருக்கு எவ்வளவு பணம் எப்படி போகின்றது.
ஒருலோட் மணலுக்காக வரியாக ரூ 150.00(*) பிரதேச சபைக்கு வழங்கப்படுகின்றது. இவ்வாறு பெறப்பட்ட மண் பின்னர் அவர்களால் வல்லிபுரம் பகுதியில் இன்னோரிடத்தில் களஞ்சியப்படுத்தப்படுகின்றது. அதிலிருந்து தமது வியாபாரத்தை ஆரம்பிக்கின்றார்கள். அங்கே ஒரு லோட் ரூ 6,000.00(*) இலிருந்து ரூ10,000.00வரை அவ்விடத்திலிருந்து விற்பனை செய்யப்படுகின்றது.
அதனை வாங்குபவர்களும் அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்களான லொறிசொந்தக்காரர்களே. அவர்கள் அதனை பெற்று மேலும் ஒருதொகை வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றார்கள். வழமையாக பெறுவதென்றால் 2தொடக்கம் 5மாதம்வரை மணல் அனுமதிக்காக காத்திருக்கவேண்டும்.
அவசியமாயின் பெருந்தொகை பணத்திற்கு பின்கதவாலும் பெறுவதற்கு சிலஏற்பாடுகளும் உண்டு. இவ்வாறு வாரத்தில் 400-600(*)லோட்வரையான மண் இப்பகுதியிலிருந்து ஏற்றப்படுகின்றது. கடல்நீர்உட்புகுவதுடன் இப்பகுதியிலுள்ள நன்நீர் உவர்நீராக மாறிவரும் அபாயம் அதிகரித்துள்ளது என்பதோடு இப்பகுதியின் சொத்தை கயவர்களை இப்படி அபகரிக்க விடலாமா?
அதாவது மாதாந்தம் 2500லோட் இப்பகுதியிலிருந்து அகற்றப்படுகிறது. அதன் கனவளவு 10000கியுப். மாதாந்தம் இவர்கள் ஈட்டும் குறைந்தபட்ச தொகை(2500 X 6000 = 15,000,000.00) ஒன்றரைக்கோடி ரூபாய். இந்த வியாபாரம் இன்று நேற்றல்ல. கடந்த சமாதான சூழல் குழம்பியதிலிருந்து அதாவது கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து 5வருடவியாபாரம் இப்படி போகின்றது.
(இதுவரை 1.5கோடி X 12மாதம் X 5வருடம் = அண்ணளைவாக 90கோடிரூபாய்) இப்பணத்தை இவர்கள் என்ன தேவைக்காக பயன்படுததியிருந்தார்கள்? இந்தபணத்தை இப்பகுதி அபிவிருத்திக்காக பயன்படுத்துவதற்கு யாராவது சிந்தித்தார்களா?இதனை அனுமதித்ததுயார்? இந்நிதியத்தின் கணக்காய்வை யார் மேற்பார்வை செய்கின்றார்கள்? அங்கிருந்துதான் ஒவ்வொன்றாக செய்திகள் வெளிவருகின்றது.
இதனை யாரும் தட்டி கேட்கமுடியாதபடி அரசின் தலைமைத்துவத்திலிருந்து யாழ் அரச அதிபர்வரை நீண்டு செல்கின்றது பட்டியல். உதயன் நிர்வாகியும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.சரவணபவான் அவர்கள் கூட நாடாளுமன்றம் வரை இப்பிரச்சனையை கொண்டுசென்றார். ஆனால் பலன்ஏதும் இல்லை.
நாடாளுமன்றத்தால்கூட எதுவும் செய்ய முடியாதென்றால் நாம் என்ன செய்யமுடியும்? இங்கேதான் பதிலே தங்கியுள்ளது. ஆம் எங்களால் முடியும், நிச்சயம் முடியும். நீங்கள் எல்லோரும் ஒத்துழைத்தால் நிச்சயம் முடியும். இன்னும் 2நாட்களில் நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலில்கூட இக்கட்சியினரே வெற்றிலை சின்னத்தில் எங்கள் வாக்குகளை கேட்டுவந்துள்ளார்கள்.
ஆகவே நாம் மிகவும் விழிப்பாக இருந்து நம் ஒவ்வொருவரின் வாக்குகளையும் - அவர்களுக்கு வழங்காமல் - நமது பிரதேச வளங்களை நமது பிரதேச அபிவிருத்திக்கும் தேசகட்டுமானத்திற்கும் நாமே பொறுப்பாகவிருந்து செய்வதற்கு ஏற்ற ஒரு ஜனநாயக கட்சிக்கு எமது தேசிய தலைவன் தெரிவுசெய்த கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வழங்குவதன் ஊடாக இதனை தடைசெய்யலாம் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
எம் அன்பான உடன் பிறப்புக்களே! நீங்கள் ஒவ்வொருவரும் உளமார சிந்தித்து வாக்களியுங்கள். பிரதேச சபையின் அனுமதியில்லாமல் யாருமே இப்பிரதேசத்திலிருந்து எதனையும் கொண்டுசெல்லமுடியாது. இந்த ஒரு அகிம்சை வழியை நாம் சரியான வழியில் பயன்படுத்தினால் மாத்திரமே இந்த பேரழிவிலிருந்து நாம் காப்பற்றப்படுவோம்.
இதனை நீங்கள் உங்களோடு மட்டுமில்லாது உங்கள் சொந்தங்கள்,உறவுகள் யாவருக்கும் தெரியப்படுத்துவதனூடாக ஒருவரேனும் தவறாது உங்கள் கடமையை சரியான வழியில் பயன்படுத்துவதனூடாக எங்களுக்கு பாரிய அவலத்தை ஏற்படுத்திய ஜூலை 23 அன்று எமது அபிலாசைகளை வெளிப்படுத்துவதோடு எங்கள் தேசத்தின் அழிவை காப்பாற்றும் பெரும்பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றோம்.
இன்றைய நிலையில் இத்தேர்தலில் அரசும், சர்வதேசமும் காட்டிவரும் அக்கறையை தமிழர் தரப்பும் காட்டவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்த தேர்தலைப்பொறுத்தவரை பிரதானமாக போட்டியாளர்கள் இருவர்தான். ஒன்று தமிழர்தேசம் இரண்டாவது சிங்களதேசம். உங்களுக்கும் சிலவேளை குழப்பம் வரலாம். நாம் இங்கே ஆழமாக நோக்கவேண்டியது இவ்விடயமேயாகும்.
அதாவது தமிழ் மக்கள் சார்பாக தமிழர்களுக்காக போட்டியிடும் பிரதான கட்சியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தமிழ்மக்கள் உரிமைகளை விரும்பவில்லை அவர்கள் சலுகைகளையே விரும்புகின்றார்கள் என்ற தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்கு சொல்ல வேண்டும் என்று துடியாய் துடிக்கும் ஈ.பி.டி.பி கட்சியும்,கருணா பிள்ளையான் போன்றோரும்,சிறீலங்கா சுதந்திரக்கட்சியும் பிரதான இடம் வகிக்கின்றார்கள்.
தமிழர் தரப்பு என்றால் தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு மட்டுமேயாகும், தமிழர் பிரதிநிதிகளே எனகூறிக்கொள்ளும் டக்ளஸோ,கருணாவோ தமது கட்சி சின்னத்தில் போட்டியிடவே அனுமதியற்றவர்களாகவே அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து கைப்பொம்மைகளாக சிங்களப் பேரினவாத கட்சியின் சின்னத்தில் அவர்களுடைய கட்சியின் பெயரிலேயே போட்டியிடுகின்றார்கள்.
யாராவது விரும்பியோ அல்லது வாங்கிய பணத்திற்காகவோ வாக்களிப்பார்களாக இருந்தால் அவர்களின் அந்த வாக்கு சிங்களப்பேரினவாதத்திற்கு வளங்கப்பட்ட வாக்காகவே கருதப்படும்.
அவர்கள் உங்களுக்கு ஏதாவது கொடுப்பனவுகள் தந்தால் அதனை உரிமையோடு பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் வரிப்பணத்தில் பெறப்பட்ட பணம். தமிழகத்தில் கருணாநிதி செய்த அதே திருவிளையாடல்களையே இவர்களும் செய்கின்றார்கள். எதைதந்தாலும் வாங்குங்கள் ஆனால் வாக்களிக்கும் போது இதய சுத்தியோடு ஆயிரமாயிரம் அப்பாவி பொதுமக்களினதும் உயிர்நீர்த்த போராளிகளினதும் உயிர்த்தியாகங்களை எண்ணி வாக்களிக்குமாறு அன்போடு வேண்டுகின்றோம்.
முடிவு எப்படி அமையும் என்று கருத்துக்கணிப்பு தேவையற்றிருந்தாலும் வெற்றி தமிழர்களுக்கானதே என்று நாம் சும்மா இருந்துவிட்டால் எல்லாம் நடந்துவிடுமா? இங்கேதான் எமது ஒவ்வொருவரினதும் வரலாற்று கடனை நிச்சயம் நிறைவேற்றியே தீரவேண்டும்.
இந்த கடமையை தாயகத்திலுள்ளவர்களால் மட்டும் ஆற்றிவிடமுடியுமா? அவர்கள் அவ்வாறான சூழலில் வாழ்கிறார்களா? அவர்கள் நித்தமும் நெருப்பை வயிற்றில் சுமந்தவண்ணமே பேரினவாதத்தின் கொடிய வலைவிரிப்புக்குள் தமது அன்றாட பணிகளை மாத்திரமே ஆற்றமுடிகின்றது.
அதைவிட அவர்களால் சுதந்திரமாக நடமாடும் சுதந்திரமோ,பேசும் சுதந்திரமோ,கருத்துதெரிவிக்கும் சுதந்திரமோ மறுக்கப்பட்ட நிலையில் தமது உணர்வுகளை உள்ளத்தில் சுமந்தவாறும் இன்னும் சிலம் கடந்தகாலத்தை மறந்தவர்களாகவும் திரிகின்றனர். இவ்வாறான ஒரு சூழலில்தான் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகவே நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதும் புலத்திலிருந்து நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள் என்பதிலுமே எமது வெற்றியே தங்கியுள்ளது.
தற்போதைய நிலையில் இந்த தேர்தலால் பெரிய மாற்றங்கள் ஏற்படாவிட்டாலும் சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக தமிழர் பிரதிநிதிகளான தமிழ்தேசியக்கூட்டமைப்புடன் பேச்சில் ஈடுபட்டுவரும் அரசிற்கு மேலும் அழுத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் தொடர்ந்தும் தமிழர் பிரதிநிதுத்துவத்தை வலுப்படுத்துவதன் ஊடாக எமது அபிலாசைகளை ஓங்கி ஒலிக்கச்செய்வதனூடாக எமது உரிமைகளை பெறுவதற்கும் தமிழர்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்தவேண்டிய இக்கட்டான சூழலில் இருக்கின்றார்கள்.
இந்தியாகூட தமிழர்களுக்கு 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும்படி இலங்கை அரசை வற்புறுத்தி வருகின்றது. இதுகூட தமிழர் மீது கொண்ட அன்பிலோ,கரிசனையிலோ அல்ல. போர்குற்ற விசாரணைகள் வேண்டுமென வலுவாக குரல்கள் ஐநாவில் ஓங்கி ஒலித்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில் அவ்விசாரணை முன்னெடுக்கப்பட்டால் இந்தியாவின் முகத்திரையும் கிழிக்கப்பட்டுவிடுமே என்ற ஐயப்பாட்டில்தான் ஏதாவது ஒரு சிறிய தீர்வையாவது வழங்குவதனூடாக இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நல்லாட்சி ஓற்படுத்திவிட்டோம் என்ற மாயையை உருவாக்கி தாம் தப்பிவிடவே இந்தியா ஆசைப்படுகின்றது. இப்போது எல்லோருடைய அரசியல் காய் நகர்த்தல்களுக்கும் நாம்தான் பகடைக்காய்களாக உள்ளோம் ஆகவே நன்றாக சிந்தித்து நாம் எடுக்கும் முடிவிலேயே எம் இனத்தின் வெற்றி தங்கியுள்ளது.
சக்கரவர்த்தி
Comments