பிள்ளைகளே கவனம் தலையில்லாத பரியலம் எண்ட பேயள் ஊர் முழுக்க உலாப்போகுது.. பாட்டி சொன்ன கதை..
சிறீலங்காவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் சனல் 4ற்குப் பின்னர் ஏதாவது ஆக்கபூர்வமாக நடந்துள்ளதா.. இதுதான் இன்றைய தினத்தில் ஆர்வத்தைத் தூண்டும் கேள்வியாகும்..
புண்ணியவான் மகிந்தராஜபக்ஷ என்ன சொல்கிறார்..?
சனல் 4 ஐ உற்றுப் பாருங்கள் அது பொய்யான காணொளி என்பதை நீங்கள் தெளிவாகக் காண்பீர்கள் என்று கூறுகிறார். இப்படியொரு கருத்தை பழைய டிங்கிரிபண்டா சொல்லியிருந்தால்கூட விட்டிருக்கலாம், ஆனால் சொன்னவர் நாட்டின் அதிபர். மகிந்த சிந்தனை ஒரு விடயத்தை எப்படி உற்றுப்பார்க்கிறது என்பதற்கு இதைவிட இனி உதாரணம் தேவையில்லை. இதே கண்ணோடு இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் அவர் பார்ப்பதால் இனி அவரிடம் கேட்கவும், பேசவும் ஏதாவது இருக்குமா எனபது பெரிய கேள்விதான்.
பாரதமாதா புகழ் மன்மோகன் சிங் என்ன சொல்கிறார்..?
சிறீலங்கா அரசை நாம் கட்டாயப்படுத்த முடியாது, அதனுடைய போக்கில் அதைவிட வேண்டுமேயல்லாது வேறு எதையும் செய்வதற்கில்லை. இந்திராகாந்தி, பார்த்தசாரதி, பண்டாரி காலத்து குரல் மறுபடியும் கேட்டுள்ளது. மன்மோகன் சிங் இப்போது யூலைக்கலவரத்திற்கு கொஞ்சம் முன்னாடி நிற்கிறார். இவருக்கு இலங்கைப் பிரச்சனை விளங்க வாய்ப்புக்கள் எதுவும் இல்லை. சனல் 4 காட்சிகள் ஏதோ சந்திரமண்டலத்தில் நடந்தது போல அவருடைய கருத்து இருக்கிறது. எதற்காக போராளிகளுக்கு பயிற்சி கொடுத்தீர்கள்.. எதற்காக அவர்களுக்கு ஆயுதம் கொடுத்தீர்கள்.. இப்போது எதற்காக இப்படி சொல்கிறீர்கள்… என்பதை இந்தியாவிடம் கேட்க நம்மிடம் வலு இல்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் தங்கபாலுவின் அறிக்கைகள் என்ன சொல்கின்றது..?
மகிந்த ராஜபக்ஷ பச்சைப் பொய்யர் என்று அறிக்கை விட்டுள்ளார். ஏன் பச்சைப் பொய்யர் என்பதற்கு அவர் கொடுத்த விளக்கம் இப்படியுள்ளது. இந்திய அரசு இலங்கைத் தமிழர் விடயத்தில் யாதொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்று மகிந்த கூறுகிறார். இது அப்பட்டமான பொய், உண்மையில் இந்திய அரசு அழுத்தியுள்ளது என்பது இவருடைய அறிக்கையின் சாராம்சம். அடுத்த தேர்தலில் தங்கபாலு பிரபாகரன் ரீ ஷேட் போட்டு மேடைக்கு வந்து வாக்குக் கேட்டாலும் ஆச்சரியப்பட முடியாது. சீமானை விழுத்த சிதம்பரமும் புலிக்கொடியோடு மேடைக்கு வந்தாலும் வரலாம்.
அதிரடி அன்பழகன் கூத்து..
இதுவரை காலமும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நாடகமாடிய கலைஞர் இப்போது அதிரடி அன்பழகன் என்பவரை உசுப்பேற்றி விட்டுள்ளார். கலைஞர் குடும்பத்தின் பழைய இறப்பர் ஸ்டாம்பு அன்பழகன் அல்ல இவர், புதியவர். அதிரடி இவருக்குப் பட்டப் பெயர். ஆக தமிழகத்தில் எல்லோரும் புலி வேடம் போட தயாராவது தெரிகிறது. தமிழகத் தேர்தல் செய்த வேலை.
ஐ.நா செயலர் மீது வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்கள்..
ஐ.நா செயலர் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தவறு இழைத்துள்ளார் என்று இப்போது மேலை நாடுகளில் பொதுவான கருத்து நிலவுகிறது. சிறீலங்கா அதிபரால் அவர் ஏமாற்றப்பட்டுள்ளார் என்று ஓர் அறிக்கை வந்துள்ளது. ஆய்வாளரையும் புண்ணாக்குகளையும் விட்டுவிட்டு தெருவால் போன தமிழ் மூதாட்டி ஒருவரிடம் இவரைப்பற்றி விசாரி;த்துப் பார்த்தோம். அவனும் புத்தசமயம் இவனும் புத்தசமயம், அசூசி யக்காசியும் புத்த சமயம் அதுதான் இப்பிடி செய்தவங்கள் என்று கூறினார்.
தமிழர் கூட்டமைப்பு என்ன சொல்கிறது..
வடக்கில் முழுமையான இராணுவ ஆட்சிதான் நடைபெறுகிறது என்று கூட்டமைப்பு நேற்று முழுவதும் கதறியுள்ளது. அங்கு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இராணுவம் அழைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது. அளவெட்டியில் புகுந்த இராணுவம் கூட்டமைப்பிற்கு கொட்டன் அடி போட்டு கோபம் தணிந்துள்ளது. இந்த மோதல் கூட்டமைப்பின் மெய் பாதுகாவலருக்கும் இராணுவத்துக்கும் நடந்த மோதல் என்று மகிந்த சிந்தனை கூறியுள்ளது. சிங்கள இராணுவத்தை படலைக்கு படலை நிறுத்தவா முப்பது வருடங்கள் போராடினோம் என்ற கேள்வியே இப்போது கூட்டமைப்பின் கண்ணீராக நிற்கிறது. கூட்டமைப்பிடம் கண்ணீரை விட வேறு என்ன இருக்கிறது.?
பொது மக்கள் என்ன சொல்கிறார்கள்..?
வாழ அச்சத்தில் வாழ்வதாகக் கூறுகிறார்கள். அந்தக் காலத்தில் பரியலம் என்ற தலையில்லாத பேய்கள் ஊர் முழுதும் இரவில் நடமாடும் என்று பாட்டி கதை கூறுவாள். காலனித்துவ கால அன்னியப் படைகளையே பரியலங்கள் என்று பாட்டி கதை அடையாளப்படுத்தும். இப்போதும் அங்கு பரியலங்கள் நடமாடுகின்றன. அது மட்டுமல்ல உரிமை கேட்க முடியாதபடி அன்றாட வாழ்க்கைச் செலவு அவர்களை அழுத்துகிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா இல்லாமல் வாழ முடியவில்லை என்கிறார்கள். முள்ளிவாய்க்காலுக்கு முந்தித்தன்னும் எவ்வளவோ பரவாயில்லை என்கிறார்கள்.
முடிவுதான் என்ன..?
அனைத்து அரசியல் சக்திகளும் தங்களுடைய இருத்தலைத் தக்க வைப்பதற்காக ஏதோ ஒரு நியாயத்தை கூறிக்கொண்டிருக்கிறன.
இல்லாமல் போனவர்களின் இலட்சியங்கள் பற்றி யாரும் அக்கறைப்படவில்லை.. வீதியில் சிதறிக்கிடக்கும் உடலத்தை பார்க்க மனமின்றி அதைக் கடந்து போகும் மனிதர்களைப்போல பொறுப்புள்ள உலகத் தலைவர்கள் கடந்து போகிறார்கள்.
தூ..
தூ என்ற ஓர் எழுத்துக்குத்தான் எத்தனை அர்த்தங்கள்..
அலைகள் வாராந்தப் பார்வை. 30.06.2011
Comments