கனடாவில் தமிழீழத்தைப் பார்த்தோம்!

ரொரண்டோ நகரின் வடக்கே, மார்க்கம் ஃபெயார் மைதானத்தில் கடந்த 9ம் 10ம் ஆகிய இரண்டு நாட்கள். ஈழ உறவுகள் மட்டுமன்றி, பல்லின மக்களும் அலைமோதின. நல்லூர் திருவிழாவுக்கு, மாமாங்கப்பிள்ளையாரது தீர்த்தக்கரைக்கு, புளியம் பொக்கணை நாகதம்பிரான் திருவிழாவுக்கு, கொச்சிக்கடை அந்தோணியாரது திருவிழாவுக்கு என்று அலை அலையாக மக்கள் சென்றது போல் தோற்றம் அளித்தது. என்ன அது என்று அறிந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. நேரத்தை சிக்கனப்படுத்திக் கொண்டு சென்றேன்.

வூட்சைட் மோளில் பேரூந்து காத்து நின்றது. ஏறி உட்கார்ந்தேன். சில விநாடிகளில் பேரூந்து நிறைந்தும் அந்த நெரிசலும் அவிச்சலும் கிளிநொச்சி - புதுக்குடியிருப்பு பேரூந்தை ஞாபகப் படுத்தியது. ஒரு வாறாக மைதானத்துக்குள் உள்ளிட்டேன். எங்கே போவது எதனைப் பார்ப்பது என்று தெரியாமல் ஒரு கணம் ஆடிப் போய்விட்டேன்.

சற்று திரும்பினேன். என்னை மறந்து என்கால்கள் எங்கே ஓடின. நின்றவர்களை தள்ளி இடித்து விட்டு என் வீட்டுக்குள் நின்றேன். அந்த ஓலைக் குடிசை. அப்படியே என்னை ஊருக்கு கூட்டிச் சென்று விட்டது. ஈழத்தில் எனது அம்மம்மாவின் வீடு. அந்த ஞாபகத்தில் என்னை மறந்து சுற்றிச் சுற்றி ஓடினேன். உண்மையிலே நான் அகவை எட்டை தொட்டு விட்டேன். இந்நிலையில் என்னை மறந்து எனது செயற்பாடுகள் மூலம் சிறுபையனாக மாறியிருந்தேன். நான் தேடிய என் அம்மம்மாவை கிணற்றடியிலும் காணாத நிலையில் சுதாகரித்துக் கொண்டேன்.

அத்தனை அழகான கைவண்ணத்தில் அந்தக் குடிசை மட்டுமன்றி சுற்றுச் சூழலும் நிர்மானிக்கப்பட்டிருந்தது. அழகான ஓர் கிணறு. கப்பி வாளி, வெளிப்புறமாக சிறு பூந்தோட்டம். குடிசைக்குள்ளே மண் முட்டி, களியடுப்பு, தலைசாய பாய், வெற்றிலைத் தட்டம் இப்படி பல விடயத்தையும் தாண்டி வெளியே ஓர் மிகப் பெரிய விடயம்!

ஆடும் குட்டியும், சேவலும் பேடும். அந்த குடிசை வீட்டின் தாள்வாரத்தில் அமைக்கப்பட்ட பத்தியில் கட்டப்பட்டிருந்தன. இத்தக் காட்சியை எப்படி கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை.
அந்த ஆட்டையும் கோழியையும் ஆசையோடு அத்தனை குழந்தைகளும் பல மணித்தியாலங்களாக தொட்டும், பார்த்தும் இரசித்தமையும் ஓர் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

மறுபுறம் கிளி;த்தட்டு விளையாட்டு, முட்டி உடைத்தல், கரப்பந்து, தலையணைச்சமர், வழு மரம் ஏறுதல் என்பதைத் தாண்டியும் சிறுவர்களுக்காக எத்தனையோ ஏற்பாடுகள் காத்திருந்தன.
மேலும் ஊர்வனவுகளின் காட்சி, அதனை தொட்டுப்பார்க்க குவிந்த சிறுவர்கள். மறுபுறும் ஆடல் பாடலுடன், காத்தவராயன் கூத்து என்று எமது கலாச்சாரத்தை பிரதிபலித்த நிகழ்வுகள்.
அத்துடன், எமது கலாச்சார உணவு வகைகள், புடவைக் கடைகள் என்று மார்க்கம் ஃபெயார் மைதானம் நிறைந்து வழிந்தது.

ஊர் இளநீர், நொங்கு, கரும்பு என்று மிகப் பெரிய கடை தெருவொன்றில் மக்கள் முட்டி மோதினர். மறுபுறம் தாயக மக்களை வாழ சில நிவாரண நிலையங்களும் தமது செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

இவ்வாறான அத்தனை விடயங்களையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்த கனடியத்தமிழ் வானொலி சீரிஆர், உண்மையிலேயே மண்ணணையும் மனங்களையும் நேசிப்பதை மீண்டும் உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது. மீண்டும் ஒரு முறை சீரிஆர்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

- தூரன்

Comments