ஓ ஈழம் என்ற பெயரில் கன்னட மொழியில் வெளிவந்த நூலைப் பற்றி திரு.நாகரிகரே இரமேசு(மனித உரிமை ஆர்வலர்) அவர்கள் “போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்” சார்பாக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
மே 19,2009 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும், கவர்ந்திழுக்கக்கூடிய ஆளுமை கொண்டவருமான மேதகு.பிரபாகரன் அவர்களை இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதாக இலங்கை உலகுக்கு அறிவித்தது. தேசியம், உறுதியான கொள்கை பிடிப்பு, இரத்தக்களறியான போர்க்களங்கள், தியாகங்கள், சூழ்ச்சிகள், தவிர்த்திருக்கப்பட வேண்டிய பல படுகொலைகள் (பொதுமக்களினதும், போராளிகளினதும்) கொண்ட இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயம் முடிவுக்கு வந்தது.
தமிழ்ப்போராளிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப்போரில் வெற்றிபெற்றதாக இலங்கை அதிபர் இராசபக்சே அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழ் மக்களின் ஈழத்தேசக் கனவுகளை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது….போர் நடைபெற்ற பொழுதே இலங்கை இராணுவத்தின் அறம்தவறிய, ஒழுக்கக்கேடான கொலைகள் பற்றிய தகவல்கள் உலக சமூதாயத்தைச் சென்றடைந்தது, ஆனால் இராணுவம் மக்களின் மீது மேற்கொண்ட கருணையற்ற படுகொலைகள் பற்றி போர் முடிந்த பின்னர் வெளிவந்த எல்லாத்தகவல்களும் உலகெங்கும் வாழும் சமூக அக்கறைக் கொண்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மனித உரிமை சட்டங்களை மீறி பொதுமக்களைக் கொலை செய்யும் படங்களும், நாசிக்களின் வதைமுகாம்களை நினைவுப்படுத்தும் இலங்கை அரசின் ‘நலன்புரி முகாம்கள்’ என்ற வதை முகாம் புகைப்படங்களும், காணொளிகளும் இலங்கை அரசின் பொய்பிரச்சாரங்களுக்கு எதிரான வலுவான ஆதாரங்களாகின.
பெரும்பாலான மக்களுக்கு இந்தியாவிலிருந்து பெறப்பட்ட செவிவழிச்செய்திகள் மூலமாக தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி தெரியும், ஆனால் தரவுகளும், புனைவுகளும் மிகுந்த தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றைப்பற்றியும், அதன் அரசியல் இயக்கங்களைப் பற்றியும், அந்த இயக்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க தலைவனைப் பற்றியும் இவர்களில் யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். இது ஈழப்போராட்டத்தைப் பற்றி வெளிவந்த புத்தகங்கள், கையெழுத்துப்பிரதிகள், ஊடகங்களில் வந்த செய்திகள், இணையத்தில் வந்த செய்திகளை எல்லாம் தொகுத்து யாராவது ஒரு நூலாக வெளியிட மாட்டார்களா? என்ற தேவையை உருவாக்கியது, திரு.குமார் பருடைக்கட்டி எழுதி, கன்னடப் பதிப்பகங்களில் மதிப்புமிக்க பதிப்பகமான ‘லங்கேசு பிரகசனா’ பதிப்பகம் வெளியிட்ட “ஓ ஈழம்” என்ற புத்தகத்தின் மூலம் கன்னடர்களுக்கு மேற்கூறிய தேவையானது நிறைவு செய்யப்பட்டது.
இலங்கையில் இறுதிப் போர் முடிந்த உடன் வெளிவந்த 360 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் ஈழப்போராட்டம் பற்றிய கேள்விகளை அந்த போராட்டக் களத்தின் உள்ளும், வெளியும் இருந்த கள நிலைப்பற்றிய தகவல்களையும், கடுஞ்சிக்கல்களையும் தெளிவாக ஆராய்ந்து வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது. இந்தப் புத்தகத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் இப்புத்தகம் வாசகர்களுக்கு ஈழப்போராட்டத்தின் தொடக்கம் முதல் இன்று வரையிலான எல்லா காலக்கட்டத்தையும் தெளிவாகக் காட்டுகின்றது. அதுமட்டுமின்றி இப்புத்தகம் தற்கால நிகழ்வுகளையும் ஆராய்ந்து அந்த போராட்டத்தைப்பற்றிய முழுமையான சித்திரத்தை வரைவதால் இது இந்தியாவில் வாழும் இந்தியர்களாகிய எங்களுக்கு அண்டை நாடான இலங்கையில்(இந்தியாவுடன் கலாச்சார, வரலாற்று தொடர்புகள் கொண்டது இலங்கை) என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்வதில் மிக முக்கியமான பங்காற்றுகின்றலது.
இந்த புத்தகம் பனிரெண்டு அத்தியாயங்களைக் கொண்டது. முதல் அத்தியாயம் இலங்கையின் பூர்வகுடிகளைப் பற்றி அறியத்தருகின்றது. முதல் அத்தியாயம் இலங்கையில் பூர்வகுடிகளான திராவிடர்கள் வாழ்ந்த காலத்திற்கு நம்மை அழைத்துச்செல்கின்றது. திராவிடர்களே அம்மண்ணின் உண்மையான பூர்வகுடிகளாவர். இன்றிலிருந்து சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு சென்ற விசயன் என்ற மன்னனைப் பற்றியும் அவன் அங்கு அமைத்த சிங்கள அரசைப் பற்றியும் விளக்குகின்றது நூல். திரு.குமார் அவர்கள் இலங்கையின் வளர்ச்சியை, சிங்கள, தமிழ், இசுலாமிய குழுமங்களுக்கிடையேயான போட்டியும், ஐயுறவும் கொண்டு ஒருங்கிணைந்து வாழ்ந்த வரலாற்றின் வாயிலாக கூறுகின்றார்.
இரண்டாவது அத்தியாயம் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள் கொண்டு வந்த “பிரித்தாளும் சூழ்ச்சியைப்” பற்றியும், அந்த ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலை பெறுவதற்காக சிங்கள, தமிழ் மக்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றியும் விளக்குகின்றது. ஆங்கிலேயர்களால் சிலோன் என்றழைக்கப்பட்ட இன்றைய இலங்கை 1948ல் சுதந்திரம் அடைகின்றது. சுதந்திரம் பெற்ற அன்றைய நாளிலிருந்து ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாக சிங்கள, தமிழ் இனங்களுக்கிடையே உருவான பகைமை உணர்வு மேலும் வளர்வதற்கான விதைகள் இங்கே தான் விதைக்கப்பட்டன. முதல் பிரதமரான சேனநாயக தமிழ் மக்களின் மீதான முதல் தாக்குதலைத் தொடுத்தார். ஆம் இந்தியத் தமிழர்களான மலையகத்தமிழர்களின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்தார். (இம்மக்களே இலங்கையின் தேசிய வருமானத்தின் முக்கிய பங்கான தேயிலைத் தோட்டத்தை தங்கள் உயிரைக் கொடுத்து உருவாக்கியவர்கள் என்பதை நாம் நினைவு கூறவேண்டும்).
மூன்றாவது அத்தியாயம் 1956ல் அரசு கொண்டு வந்த “சிங்களம் மட்டுமே” அரசின் அதிகாரபூர்வமான மொழி என்ற சட்டத்தின் மூலம் தமிழர்கள் எவ்வாறு அரசிலிருந்தும், அரசியலலிருந்தும் படிப்படியாக வெளியேற்றப்பட்டார்கள் என்பதை விளக்குகின்றது. தமிழர்களின் போராட்டத்தின் ஓர் அங்கமாக, இலங்கையில் கொலைகளும், அதன் விளைவாக ஏற்படும் எதிர் கொலைகளும் 1976-77 லிருந்து தொடங்குகின்றன. இவை எல்லாம் அங்கு இருந்த தமிழ் போராளிக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்டன. இந்தக் குழுக்கள் தங்களுக்குள்ளே இரத்தக்களறி மிகுந்த சண்டைகளைப் போட்டுக்கொண்டே தமிழ் ஈழம் என்ற இலக்கை நோக்கி போராடின.
அத்தியாயம் நான்கிலிருந்து ஒன்பது வரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு எப்படி ஒரு முண்ணனி அமைப்பாகவும், தமிழர்களின் அரசியல் நோக்கிற்கான ஒரே அமைப்பாக மாறியது என்பதை விளக்குகின்றது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களின் இலட்சியமான தமிழீழத்தை அடைய கட்டமைக்கப்பட்ட வன்முறை வழிமுறையை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதையும் கூறுகின்றது. இந்த நேரத்தில் இந்தியா தனது புவிசார் அரசியல் நலன்களுக்காக இந்த பிரச்சனையில் தமிழர்களுக்கும், இலங்கை அரசிற்கும் இடையில் வந்து சிக்குகின்றது. இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை, உலக அரங்கிற்கு உள்ளே வருகின்றது. இந்திய அமைதிப் படை இலங்கைக்குள் சென்றது இந்தியாவின் நிலையை மேலும் மோசமாக்குகின்றது. எந்த மக்களைப் பாதுகாக்க அல்லது பெயரளவில் அப்படி சொல்லிக் கொண்டு இந்தியப் பாதுகாப்பு படை அனுப்பப்பட்டதோ, அந்த மக்களுடனே போரிட்டது இந்திய படை.
அத்தியாயம் பத்து இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட புதிய முயற்சிகளை விளக்குகின்றது. சண்டை புரிந்து வந்த இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமரசப் பேச்சாளராக நார்வே அரசு உள்ளே வந்து இரண்டு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடங்கி வைத்தது. ஆனால் இந்த சமரச பேச்சுவார்த்தை நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. இது இரண்டு தரப்புகளுக்கும் இடையேயான இறுதிப் போரைத் தொடங்கியது. இது அத்தியாயம் பதினொன்றில் தெளிவாக விளக்கப்படுகின்றது. இறுதியாக இந்தப் போர் மே 18,2009 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. இறுதி அத்தியாயமான பனிரெண்டாவது அத்தியாயம் இலங்கை அரசு எவ்வாறு திட்டமிட்டு தமிழர்களை அந்நியப்படுத்தியது என்பதையும், தமிழர்களுக்கு எதிராக நடந்த சித்ரவதைகளையும் விளக்குகின்றது. மேலும் எந்த விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்பொழுது உள்ள பிரச்சனையை சரி செய்வது என்றும் கூறுகின்றது.
திரு.குமார் அவர்கள் தமிழ் ஈழ அரசியல் போராட்ட வரலாற்றை மட்டுமல்லாது போர் முடிந்த வரையிலான முழு இலங்கையின் வரலாற்றையும் தன்னுடைய எழுத்தில் கொண்டுவருவதில் வெற்றியடைந்திருக்கின்றார். அதுமட்டுமின்றி தெளிவாகவும், நேர்மையான ஆய்வுகளோடும் அவர் தமிழ் போராளிகளை வெறுமனே பாராட்டிவிட்டு மட்டும் செல்லாமல், அவர்கள் அடைந்த தோல்விக்கான காரணங்களையும், போராளிகள் செய்த தவறுகளையும் விமர்சனம் செய்கின்றார். இவை எல்லாம் இந்த புத்தகத்திற்கான நோக்கத்தையும், அவரது கடுமையான உழைப்பையும் நமக்கு காட்டுகின்றது.
“ஓ ஈழம்” என்ற இப்புத்தகம் ஈழப்போராட்டத்தின் சமகால வரலாற்றை விளக்கும் அதே நேரத்தில், சமூக அக்கறைக் கொண்ட அனைத்து குழுக்களும் நல்லிணக்கத்தோடு ஒருங்கிணைந்து பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான உறுதியோடு செயல்படவேண்டும் என நமக்கு கற்பிக்கின்றது. அரச அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் செயல்படவேண்டும், அவ்வாறு செயல்பட தவறும் போது தன் சொந்த மக்களுக்கு அவர்கள் இழைக்கும் துன்பங்கள், அவர்களுக்கு(அரசுகளுக்கு) வரலாற்றில் மாறாத களங்கத்தை ஏற்படுத்திவிடும்.
போருக்கு பிந்தைய கால கட்டம் தமிழ் மக்கள் எவ்வாறு இராணுவமயமாக்கப்பட்ட சூழலில் அங்கு எந்த ஒரு உரிமையுமற்று அல்லல்படுகின்றார்கள் என்பதை நமக்கு தெளிவாக்குகின்றது. எந்த ஒரு பொறுப்புள்ள நாகரிகமான அரசும் இதை போன்று செயல்படாது. அங்குள்ள அரசமைப்பு என்பது அப்பாவி பொதுமக்களை ஒடுக்கி அகற்றுவதற்கான எல்லா நெளிவு சுளிவுகளையும் கொண்டே உள்ளது. அவர்கள் கூறும் “நலன் புரிமுகாம்கள்” என்பவையோ நமக்கு நாசி செர்மனியின் “வதை முகாம்களையே” நினைவூட்டுகின்றது. மேலும் தற்பொழுது நமக்கு கிடைக்கும் காணொளிகளும், புகைப்படங்களும் அங்கு எவ்வளவு மோசமான சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை நமக்கு காட்டுகின்றது. உலக சமூதாயம் இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுத்து அந்த அரசு பன்னாட்டு மனித உரிமை சட்டதிட்டங்களைப் பின்பற்றும்படியும், அங்கு மக்கள் ஒரு கௌரவமான வாழ்வு வாழ்வதற்கான சூழலை அரசு உருவாக்க வேண்டும். இலங்கை அரசு தன் மக்களின் ஒரு பகுதியினருடனே போரிடவும், பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொலை செய்யவும் உதவிய இந்திய அரசு இதற்கான பரிகாரமாக மேற்கூறியவற்றை முன்னின்று செய்ய வேண்டும்.
இந்தியாவில் உள்ள சமூக அமைப்புகள் எல்லாம் இந்திய அரசு இந்த வழியில் பயணம் செய்வதற்கான நெருக்குதலை அரசுக்கு கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும், அதுடனாகவே இலங்கை அரசு தன் குடிமக்களின் மீதே செய்த குற்றங்கள் அனைத்தும் விசாரிக்கப்படவேண்டும்.
மொழியாக்கம்: நற்றமிழன்.ப
Comments