மௌனம் கலைத்தது இந்தியா – போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் புதுடெல்லியில் நேற்று இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும்- சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் கடந்தவாரம் இந்தியாவின் ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருந்தது.

இதையடுத்து ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சி இதுபற்றிய இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தது.

அதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் நிருபமா ராவ் இதுபற்றித் தாம் கருத்து வெளியிடப் போவதில்லை என்று கூறியிருந்தார்.

போர்க்குற்ற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்ட எட்டு நாட்களின் பின்னர் இந்தியாவின் மௌனம் கலைந்துள்ளதாக ‘ஹெட்லைன்ஸ் ருடே‘யின் இணை ஊடகமான ‘இந்தியா ருடே‘ தெரிவித்துள்ளது.

இந்த ஆவணப்படம் உலகெங்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் சிறிலங்காப் படையினருக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பியுள்ளதாகவும் ‘இந்தியா ருடே‘ தெரிவித்துள்ளது.

ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து சிறிலங்கா முழுஅளவிலான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா முதல்முறையாக கருத்து வெளியிட்டுள்ளது.

‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சிக்கு செவ்வி அளித்துள்ள இந்திய வெளிவிகார அமைச்சு பேச்சாளர், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய கவலைகள் குறித்து சிறிலங்கா பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிறுபான்மை இனங்களின் கவலைகளை தீர்க்க உண்மையானதும் அர்த்தபூர்வமானதுமான அரசியல்தீர்வு ஒன்றுக்கு சிறிலங்கா முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதுவரை சிறிலங்காவின் உள்விவகாரம் என்று கூறிவந்த இந்தியா முதல்முறையாக தனது மௌனத்தைக் கலைத்துள்ளதாக ‘இந்தியா ருடே‘ கருத்து வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதை அடுத்து எழுந்துள்ள நெருக்கடிகளால் தான் இந்தியா முழு அளவிலான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ‘இந்தியா ருடே‘ தெரிவித்துள்ளது.

Comments