சிறிலங்காவின் போர்க்குற்றங்கள்- அனைத்துலக விசாரணைக் கோரிக்கைக்கு அமெரிக்காவில் ஆதரவு அதிகரிப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ஆவணப்படம் நேற்று வொசிங்டனில் காண்பிக்கப்பட்டதை அடுத்து, அது குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் கப்பிரல் வளாகத்தின் உள்ளே நேற்று சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும், காங்கிரசின் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் இணைத் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவருமான ஜேம்ஸ் மைக் கொவென், மிகமோசமான மனிதர்களுக்கு இவர்கள் பயங்கரமான எடுத்துக் காட்டாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தக் காட்சிகள் வெறுமனே அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக அமைவதுடன் மட்டுமன்றி குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக் கூற வைக்கும் சுதந்திரமான விசாரணைகளுக்குத் தேவையான சக்திவாய்ந்த ஆதாரமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் அதைச் செய்யவில்லையென்றால்,அனைத்துலக சமூகம் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் ஜேம்ஸ் மைக் கொவென் வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குற்றங்கள் புரிந்தது கண்டறியப்பட்டால், அவர் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்ம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆவணப்படம் காண்பிக்கப்பட்டதை அடுத்து, இந்த நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா தலைமையிலான போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த ஆவணப்படத்தை வொசிங்டனில் திரையிட அனைத்துலக மன்னிப்புச்சபை ஆதரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments