அமரர். பேராசிரியர் கா. சிவத்தம்பி ஒரு பார்வை..

அவர் கூறிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் ஆழமான கற்கைக்குப் பின் வெளி வந்தவையே.. அவரை அறிய அதிகம் கற்க வேண்டும்..

ஈழத்தின் தமிழ் வரலாற்றில் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுடைய 79 வருடகால வாழ்வு இருபதாம் – இருபத்தோராம் நூற்றாண்டு என்று இரண்டு நூற்றாண்டுகளுக்குள் நடைபெற்றிருக்கிறது. ஈழத்தின் அரசியல், சமுதாய, தமிழிலக்கிய வரலாற்று நதியோடு அவருடைய பயணம் இரண்டு நூற்றாண்டு கால வீறு நடை போட்டுள்ளது.

சிறீலங்கா போன்றதொரு நாட்டில் தமிழனாக இருப்பது உலகின் முதலாவது ஆபத்தான விடயம். தமிழனாக இருந்தாலும் அறிஞனாக இருப்பது அதைவிடப் பேராபத்தான விடயம். உயிரற்ற யாழ். நூல்நிலையத்தையே எரியூட்டிய ஒரு நாட்டில் மிகப்பெரிய தமிழ் நூல்நிலையமாக வாழ்ந்து காட்டியது அவருடைய வாழ்வின் மாபெரும் சாதனையாகும்.

உயிருடன் வாழ்வதானால் சிறீலங்கா என்ற நாட்டை விட்டு வெளியேறுவதுதான் ஒரே வழியென்று கற்ற அறிஞர்கள் அந்த நாட்டை புறந்தள்ளி வெளியேறியபோது, இறுதிவரை அந்த நாட்டைப் புறந்தள்ளாது அவர் வாழ்ந்தது அதைவிட மிகப்பெரிய தமிழ்ப்பணியாகும்.

தமிழ் மொழியில் பேராசிரியராக ஒருவர் இருக்கிறார் என்றால் அவருக்கான தோற்றப்பாடு சில இலக்கணங்களைக் கொண்டிருக்கும். ஆனால் அதிலிருந்து வேறுபட்டு மார்க்சீயத்தை இணைத்த தமிழறிஞராக அவர் பாரம்பரிய யாழ். பல்கலைக்கழகம் வந்தபோது பல்வேறு எதிர்ப்புக்களை சந்தித்தார். அந்த எதிர்ப்புக்களை முறியடிக்க அவர் மிக நீண்டகாலம் போராட வேண்டியிருந்தது. அந்தக்கதை இதுவரை எழுத்தில் வராத பெரிய புத்தகம்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் பெறுவதற்கான நேர்முகப் பாPட்சைக்கு சென்றபோது அவரை நேர்முகம் கண்ட மூன்று யாழ்ப்பாணத்து அறிஞர்களிடமிருந்து அவர் சந்தித்த காழ்ப்புணர்ச்சி அதற்கு ஓர் மெல்லிய உதாரணமாகும். ஆனால் அந்த நிகழ்வுகளின் கொடுமைகளை அடிப்படையாக வைத்து யாழ்ப்பாண சமுதாயத்தை விளங்கிக் கொள்ளல் என்ற நூலை எழுதியுள்ளார். படித்துப் பார்த்தால், யாழ். சமுதாயத்தில் நாம் கடக்க வேண்டிய பாரமும் சுமையும் தெளிவாகத் தெரியவரும்.

தமிழிலக்கியக் கொள்கைகளை பேசுவதில் யாழ். பல்கலைக்கழகத்தில் அவருடைய காலத்தில் க.கைலாசபதி பிரிவு, கா.சிவத்தம்பி பிரிவு என்று இரு பிரிவுகள் இருந்தன. இவர்கள் இருவரையும் தமிழ் அறிவியலாளர் போற்றினார்கள். ஆனால் இரு தரப்பிற்கிடையும் ஒரு மோதல் நிலவியது. அத்தருணங்களில் தனக்கு எதிராக உருவாக்கப்பட்ட கருத்துக்களை அவதானித்து, தனிமனித குரோதங்கள் சித்தாந்த உருவாக்கங்களாகக் கூடாது என்ற லெனின் கருத்தை முன் வைத்துப் போராடினார். முற்போக்கு எழுத்தாளர் மாநாட்டு காலத்தில் அவரை ஓரங்கட்ட எடுக்கப்பட்ட முயற்சிகளை வென்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

தமிழ் இலக்கிய வரலாறு என்ற தலைப்பிலான நூலை பலர் எழுதியுள்ளார்கள். ஆனால் இவர்கள் மீது கடுமையான கேள்வி ஒன்று பேராசிரியர் கா. சிவத்தம்பிக்கு இருந்தது. பாமரமக்கள் வரலாறு நீக்கப்பட்ட இலக்கிய வரலாறாக அது இருக்கிறது. எனவேதான் தமிழில் இலக்கிய வரலாறு என்ற நூலை வெளியிட்டார். தமிழ் மொழியில் கடந்த இரண்டாயிரமாண்டு இலக்கிய வரலாறு எப்படியாக திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது என்பதை அவர் தனது அறிவால் வேறுபடுத்திக் காட்டினார்.

இதுபோல சமுதாய அரசியல் வாழ்விலும் பல துணிச்சலான சாதனைகளை அவர் படைத்துள்ளார். யாழ். பிரஜைகள் குழு தலைவராக இருந்தபோது சிறீலங்கா இராணுவத்தையும், அரசின் சிங்கள இனவாதத்தையும் அவர் சந்தித்தார். பிரஜைகள் குழு தலைவராக அவர் போனபோது சிறீலங்கா இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகங்களை பல தடவைகள் சந்தித்தார். அத்தருணம் அவர் உயிரை துச்சமாக மதித்துப் போராடினார். தனக்குள்ள சிங்கள, ஆங்கில, தமிழ் மொழி புலமையால் அவற்றை கச்சிதமாக எதிர் கொண்டார். தமிழ் பிரஜைகளுக்கு சிறீலங்காவில் எந்த மரியாதையும் தரப்படவில்லை என்று அப்பதவியை தூக்கியும் எறிந்தார்.

வல்வைக்குள் நுழைந்த சிங்கள இராணுவம் தொண்ணுhறு பொது மக்களை கொன்றபோது அது இராணுவத்தின் குற்றச் செயல் என்று அதே கொலைக்களத்தில் இருந்து குரல் கொடுத்தார். அப்போதய அமைச்சர் ஆனந்த தசநாயக்கா சிவத்தம்பிக்கு என்ன தெரியும் அதுபற்றி என்று கேள்வி எழுப்பி, இப்போது வன்னியில் ஒருவரையும் கொல்லவில்லை என்று மகிந்த அரசு கூறுவதைப்போல தமது இராணுவம் ஒருவரையும் கொல்லவில்லை என்று கூறினார். சிங்கள அமைச்சர்களையே வல்வையில் இருந்து அதிர வைத்தார்.

இலங்கையின் இனப்பிரச்சனை காலத்தில் தமிழ் அகதிகளுக்கான பணிகளை மேற்கொள்வதில் சில காலம் பணியாற்றினார். அதற்காக ஒரு தடவை டென்மார்க் வந்து இங்குள்ள அரச உயர் மட்டங்களுடன் பேச்சுக்களை நடாத்தினார். சிங்கள தொலைக்காட்சிகளில் தனது சிங்கள மொழி அறிவினால் ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தை

சிங்கள வெகுஜனத்திற்குள் எடுத்துச் சென்றார். அப்போது புலிகளை குறை சொல்லி யாதொரு பயனும் கிடையாது. சிறீலங்கா இராணுவத்தின் அடாவடித்தனங்களே புலிகளை உருவாக்கியது என்று சிங்கள மக்களிடம் எடுத்துரைத்தார். அது கேட்ட சிங்கள இனவாத தலைவி ஒருத்தி சிவத்தம்பிக்கு உடல் நிலை கெட்டுவிட்டாலும் வாய் மட்டும் அப்படியே இருக்கிறது என்று கூறினாள். குமார் பொன்னம்பலம் போன்ற தமிழ் தலைவர்கள் கொழும்பு வீதியில் சிறீலங்கா உளவுப்பிரிவால் சுடப்பட்டபோது அதே துப்பாக்கி முனையின் முன்னால் அவர் கொழும்பில் நின்று பணியாற்றினார். தராக்கி கொலை நடந்தபோது அதை வன்மையாக எதிர்த்தார்.

பேராசிரியர் கா. சிவத்தம்பிக்கு மிகப்பெரிய எதிர்ப்புக்கள் இலக்கிய உலகில் இருந்தும், அரசியல் விமர்சன உலகில் இருந்தும் எழுந்துள்ளன. புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று கூறி புலிகளுக்கு எதிரான இயக்கங்கள் அவரை தாறுமாறாக விமர்சித்து வந்தன. அதேவேளை புலிகள் தவறிழைத்தால் அதையும் அவர் மறக்காமல் சுட்டிக்காட்டினார். யாழ். குடாநாட்டில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட செயலை அவர் பகிரங்கமாக கண்டித்தார். உண்மையான தமிழ் நேசம் பக்கச்சார்பற்று கருத்துரைக்கும் என்பதற்கு இலக்கணமாக அவருடைய கருத்துக்கள் வந்தன. அவர் சொன்ன கருத்துக்களில் பல உடனடியான விமர்சனங்களை சந்தித்தன. ஆனால் காலமாம் பெரு வெள்ளம் அதன் உண்மைகளை நிதர்சனமாக்கியபோது அனைத்து விமர்சனங்களும் அடிபட்டுப் போய்விட்டன.

ஒரு தடவை டென்மார்க் வந்தபோது அருணகிரிநாதர், அப்பர் சுவாமிகள் பாடல்களில் நிறைந்துள்ள மரணபயம் என்ற தலைப்பில் அறிஞர்களுடன் உரையாடினார். சர்வாதிகாரம் மிக்க தமிழ் மன்னராட்சியில் தமிழ் அறிஞர்களுக்கு இருந்த உயிரபத்தும் அவர்களின் அச்சக் குரல்களும் அன்றைய பேச்சுக்களில் இடம் பெற்றிருந்தன. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்ற அப்பர் சுவாமிகளின் குரலின் பின்னால் புதைந்து கிடந்த தமிழ் சர்வாதிகாரத்தை அவர் விண்டுரைக்கத் தவறவில்லை.

இன்றைய தமிழர் கூட்டமைப்பில் உள்ள சில பா.உக்கள் அன்று அவருக்கு உயிரச்ச மூட்டியவர்களாகும். மாற்று குழுக்களின் ஆயதங்களின் அபாயம் அவர் வாழ்வுக்கு சவாலாக இருந்தது. இந்திய இராணுவம் வந்து தமிழ் அறிஞர்களை கொன்றபோது அதிலிருந்து தப்பி வாழ்வது பாரிய தலைவலியானது. அதேவேளை அவரை களங்கப்படுத்தி கொல்ல முயன்ற சிலரையும் அவர் நேசித்தார், மன்னித்தார். தன்னை யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்களை எல்லாம் மன்னித்து நேசித்த உயர் தமிழ்ப் பண்பு அவருக்குரியது.

யாழ். குடாநாட்டின் சாதிக் கொடுமைகளுக்கு எதிராக அவர் நடாத்திய போராட்டம் நீண்ட நெடும் பயணமாகும். தீண்டாமை ஒழிப்பிற்காக போர்க்குரலாக எழுந்த படைப்புக்களை அவர் உற்சாகம் கொடுத்து போற்றினார். சிங்கள பெண் ஒருத்தியை தமிழன் ஒருவன் மணம் முடித்ததால் வந்த சிக்கல்களை விளக்கும் அவர்களுக்கு வயது வந்துவிட்டது என்ற அருள். சுப்பிரமணியத்தின் நாவலுக்கு விமர்சனம் வழங்கிய அவர் ஈழத்தின் தமிழ் நாவல்களுக்கும் வயது வந்துவிட்டது என்று கூறினார். ஈழத்தில் படைப்பிலக்கியம் வளரவில்லை என்ற தமிழகத்தின் கல்கி இதழின் குரலுக்கு அவர் கொடுத்த பதிலடி அதுவாகும்.

செம்மொழி மாநாட்டுக்கு போக முடியாது என்று முதலில் அவர் வெளிப்படையாக மறுத்தார். பின்னர் ஏதோ காரணங்களுக்காக சென்றார், அங்கிருந்து சில கருத்துக்களை முன் வைத்தார். அதைப் பிழைபிடித்து அவரை மிக மலிவாக பலர் விமர்சித்தார்கள். அவருடைய நீண்ட இலக்கியப் பணிகளை ஒரு நொடியில் மறந்தார்கள். அவர்களுடைய தாக்குதல்கள் அன்றைய சூடான நிலையில் பலருக்கு சரியாக இருந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால் எதையுமே காரணமில்லாமல் அவர் பேசவில்லை என்பதை நோக்க அவருடைய கருத்துக்கள் பற்றிய ஆழமான அறிவு அவசியமாகும்.

உணர்வுகளை தீ மூட்டும் சில கருத்துக்களை அவர் முன் வைத்தது சமுதாயத்தின் மறு வாசிப்பிற்க்காகவே. அக்கருத்துக்களை படித்ததும் இவர் இப்படி சொல்லலாமா என்று மலிவான பாதையில் பலர் அடியெடுத்துவிடுவதுண்டு. ஆனால் இவர் ஏன் இப்படி சொல்கிறார், இதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று சமுதாயம் சிந்தித்திருக்க வேண்டும். ஆனால் சமுதாயத்தை சிந்திக்க விடாமலே பலருடைய அவசரம் எல்லாவற்றையும் சிதறடித்துள்ளது.

செம்மொழி மாநாட்டுக்கு செல்ல மறுத்தவர் பின் ஏன் சென்றார்…? இதற்குப் பின்னால் இருந்த மோசமான கரம் எது.. நமது படைப்புலகம் அந்தப் பாதையில் தனது கவனத்தை திசை திருப்பவில்லை..

ஈழம் என்ற சொல்லை நான் உச்சரிப்பதில்லை என்று தமிழகத்தில் வைத்து ஏன் கூறினார்.. அவ்வளவு தூரத்திற்கு அவருக்கு பின்னால் இருந்த ஆபத்தான கரங்கள் எவை.. ? நாம் சிந்திக்கவில்லை.

அவருடைய மைத்துனரை வெள்ளை வானில் வந்து சில ஆண்டுகளுக்கு முன் கடத்திச் சென்றார்கள் சிங்கள உளவுப் பிரிவினர். இன்றுவரை அவரை விடுதலை செய்யவில்லை. அந்தக் கடத்தல் தந்த எச்சரிக்கை என்னவென்று யாரும் பார்க்கவில்லை.. அத்தகைய ஆபத்துக்களை நுட்பமாக முன் வைக்கிறார் என்பதை பலரால் சிந்திக்க முடியாமல் போய்விட்டது.

அதேவேளை மார்க்சிஸ்டுக்கள் தமிழ் தேசியத்தை தமது கையில் எடுக்காதது தப்பு என்பதை பிற்காலத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். தமிழரசு போன்ற கட்சிகளின் பின்னால் பெருந்தொகையான இளைஞர்களைப் போக வைத்தது அந்தத் தப்பான செயலே என்பதையும் அவர் மறுக்கவில்லை. இன்று தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சிகள் தமிழ் தேசியத்தை தமது கையில் எடுத்துள்ளன. அவர்களுக்குள் அந்த மாற்றத்தை ஏற்படுத்தியது பேராசிரியரின் மார்க்சிய சிந்தனைகளே என்பதை சிந்தித்தால் அவர் எவ்வளவு நுட்பமான அறிஞர் என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.

இந்தியா முதற் கொண்டு ஜப்பான் வரை பல அதி உயர் பல்கலைக்கழக விருதுகளை வாங்கியவர். தமிழ் நேசத்துடன் வாழ்ந்த அன்றமைந்த புலமையாளர், ஈழத் தமிழினத்தில் தமிழ் அறிவியலை உலக மன்றில் நிறுத்திய பேராசான். பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுடைய புகழ் தமிழ் உள்ளவரை மணக்கும்.

ஓடையிலே என் சாம்பர் கலக்கும்போதும்
ஓண் தமிழே சலசலத்து ஓட வேண்டும்
பாடையிலே படுத்து ஊரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்க வேண்டும்.

தமிழே சென்று வா..

அலைகளுக்காக கி.செ.துரை.

Comments