சிறிலங்கா இந்தியாவின் பக்கம் நிற்பதையே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் விரும்புகின்றனர்

மனித உரிமை மீறல்கள் குறித்த விடயத்தில் கவனம் செலுத்துவார்கள் என முதல்வர் ஜெயலலிதாமீதும் கிளின்ரன் அம்மையார்மீதும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த தமிழர் தரப்பிற்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

"எகிற வந்த மாடு அருகாலே ஓடிவிட்டது ஏதோ தப்பி விட்டோம்" என்பது போல அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிலாரி கிளின்ரனின் சென்னை பயணம் குறித்து கொழும்பு வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

கிளின்ரன் அம்மையார் சென்னை வருகிறார் என்று கேள்வியுற்ற செய்தியிலிருந்து சிறிலங்கா அரசு பெரும் சங்கடநிலையை அடைந்திருந்தது என்பதை அவர் வந்து சென்றதன் பின்பு தான் அரச அதிகாரிகள் ஏற்று கொண்டனர்.

சிறிலங்காவின் இந்த பதட்டநிலைக்கான காரணங்கள் உலகம் பூராகவும் தற்போது தெரிந்த விடயமாகும்.

கிளின்ரன் அம்மையாரின் இந்த பயணம் குறித்த செய்திகளை வெளியிட்ட அனைத்துலக ஊடகங்கள் அனைத்தும் சிறிலங்காவில் தமிழ்மக்களுக்கு எதிராக இடம் பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த செய்திகளையும் வெளியிட தவறவில்லை.

அவற்றில் அமெரிக்காவின் புகழ்பெற்ற The Wall Street Journal பத்திரிகையாயினும் சரி சாதாரணமான தெற்கு, தென்கிழக்காசியாவின் பத்திரிகைகளில் ஏதாவது ஒன்றிலும் சரி கிளின்ரன் அம்மையாரின் முதன்முறையான சென்னை பயணம் குறித்த செய்திகளில் சிறிலங்கா அரசின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிரான எதேச்சதிகார மக்களாட்சிப்போக்கும், மனித விழுமியங்களுக்கு எதிரான கொலைகளும் முதன்மை அங்கங்களாக வெளிவந்திருந்தன.

'சிறிலங்காவின் கொலைக்களம்' எனப்படும் காணொலி கூட அனைத்துலக அளவில் பல்வேறு நாடுகளிலும் தாக்கத்தை விளைவித்த வண்ணம் உள்ள இந்த நிலையில் சிறிலங்காவின் அரச நடவடிக்கைகள் அமெரிக்க இராஜாங்க அமைச்சகத்திற்கு தெரிந்திராத விடயமல்ல.

இவை எல்லாவற்றிகும் மேலாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் பதில் இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் அவர்கள் மிக அண்மையிலேயே கிளிநொச்சிக்கும் சென்னைக்கும் கொழும்புக்கும் பயணங்களை மேற்கொண்டிருந்தார்.

இவற்றுடன் தற்போது கிளின்ரன் அம்மையாரின் பயணமும் பேச்சும் தமிழ் நாட்டில் அண்மையில் இடம் பெற்ற ஆட்சிமாற்றமும் அதன் தன்மையும் பின்புலமும் அமெரிக்க இராஜாங்க அமைச்சினால் நன்கு ஆராயப்பட்ட தன்மை இந்த பயணத்தில் தெரிந்தது எனலாம்.

தமிழ் நாட்டிற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் இடையிலான பொருளாதார வியாபார நிலைமைகள் பற்றிய முக்கியத்துவமும் மீள்வலியுறுத்தல்களும் இப்பேச்சுகளில் முதன்மை பெற்றிருக்கிறன.

கல்வி வளர்ச்சியிலும் தொழில்நுட்ப அறிவிலும் முதன்மைபெறும் தமிழ்நாடு, இந்தியாவின் தரத்தை பிராந்திய தலைமைத்துவத்திற்கு இட்டு செல்ல குறிகாட்டி நிற்பதாக கிளின்ரன் அம்மையார் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆசியாவை இருகூறுகளாக பிரிப்பதில் இந்தப்பயணம் முன்னுரிமை வகுத்திருப்பதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு பகுதி சீனாவுடனும் இன்னுமெருபகுதி இந்தியாவுடனும் என உருமாற்றம் செய்வதில் கணிசமான அளவு முன்னேற்றமும் கண்டிருக்கிறது.

இதன்பொருட்டே இந்தியாவின் கிழக்கு நோக்கிய பார்வை கொள்கையை வலியுறுத்துவதுடன் அதன் தலைமைத்துவத்திலும் அமெரிக்கா விருப்பம் கொண்டுள்ளதாக இவ்வாய்வாளர்கள் கருதுகின்றனர்.

தமிழர்களின் தொன்மை குறித்த தகவல்கள் குறிப்பாக கம்போடிய அங்கோர் வற் என அழைக்கப்படும் புராதன கோயிற் கட்டட கலையின் பெருமையும் குறித்த தகவல்கள் என்பன கூட தமிழர்கள் கிழக்காசியாவில் செல்வாக்க செலுத்தியதை கிளின்ரன் அம்மையார் குறிப்பிடத் தவறவில்லை.

அத்துடன் ஈழத்தமிழர்கள் மீதான தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு கோடி தமிழர்களது கரிசனை குறித்த தமது அறிவையும் பகிர்ந்து கொண்டிருந்தார் என்பது முக்கியமானதாகும்.

கிளின்ரன் அம்மையார் இங்கு குறிப்பிடுமிடத்தில் சிறிலங்கா அரச பயங்கரவாதம் குறித்தும் பேரினவாத போக்கு கொண்ட மக்களாட்சிப்பண்புகள் குறித்த ஆழமான அறிவும் இருந்த போதிலும் அவர் இங்கு மிகவும் மென்மையாக "உதாரணமாக அனைத்து மக்களும் பங்கு கொள்ளும் வகையில் இந்திய அமைப்பை மாதிரியாகக் கொண்டு சிறிலங்காவிலும் புதியதொரு மாதிரியை உருவாக்குவது, இணக்க அரசியலை [ political reconciliation] நாடிச்செல்ல முனையும் சிறிலங்காவிற்கு உதவுவதாக அமையலாம்" என கருத்து தெரிவித்திருந்தார்.

தெற்கில் உள்ள சிறிலங்கா இந்தியாவின் பக்கம் நிற்பதையே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் விரும்புகின்றனர்.

மனித உரிமை மீறல்கள் குறித்த விடயத்தில் கவனம் செலுத்துவார்கள் என முதல்வர் ஜெயலலிதாமீதும் கிளின்ரன் அம்மையார்மீதும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த தமிழர் தரப்பிற்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

இருந்த போதிலும் தொடர்ச்சியான உயர் தொழில்நுட்ப வர்த்தகத்தின் வளர்ச்சியை மேம்படுத்த முனையும் முதன்முறையான உயர் நிலை சந்திப்பில் வர்த்தக நலன்கள் முன்னுரிமை பெற்றிருப்பதால் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பெரிது படுத்தபடவில்லை என கிளின்ரன்அம்மையாரின் சென்னை பயணத்தில் நன்மை நோக்கிய பார்வை கொண்டவர்களால் கூறப்படுகிறது.

மறுபுறத்தில் எகிறுவார் என எதிர்பார்த்திருந்த கொழும்புத்தலைமை தப்பித்தோம் என்பது போல பெருமூச்சு ஒன்றுடன் விழிபிதுங்க மகிழ்ச்சி கொண்டது.

முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முன்மொழிவுக்கு அடுத்த படியாக சிறிலங்கா மீதான பொருளாதார தடைகுறித்த பேச்சுகள் வெளிவரும் என்றே சிறிலங்கா உட்பட பல்வேறு தரப்பிலும் எதிர்பார்ப்பு இருந்தது.

திட்டமிட்ட வகையில் தமிழ் சமுதாயத்தின் மீது இழைத்து வரும் கொடுமைகளையும், இராணுவ அடக்குமுறைகளையும், தமிழர் பாரம்பரிய நிலங்களை அபகரிப்பதுடன், அவர்களின் பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் சொத்து நாசம், வாழ்வு முறைநாசம் என ஒரு இன அழிப்பை திட்டமிட்ட வேகத்தில் நிகழ்த்திவரும் சிறிலங்கா அரசு. அனைத்துலக மட்டத்தில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை மட்டத்தில் political reconciliation என்ற பெயரில் பல்வேறு சலுகைகளை பெற்று கொள்ள முனைகிறது.

அத்துடன் உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களில் கருத்தாதரவு செயற்பாடுளை பல்வேறு இணங்கி செல்லகூடியவர்கள் மூலமாக முடுக்கி விட்டிருக்கிறது.

இது சிறிலங்கா அரசு புரிந்த இன அழிப்பையும் மனிதாபிமானத்திற்கு முரனான செயற்பாடுகளையும் மூடி மறைப்பற்காகவே என தெரிகிறது.

இங்கே reconciliation என்ற சொல் 'மன்னித்து - இணங்கி - போகசெய்தல்' என எடுத்து கொள்ளப்படுகிறது. தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பு, கெடுபிடிகளுக்குள் வாழும் மக்கள் எதை மன்னிப்பது யாரை மன்னிப்பது, எதனுடன் இணங்கிப்போவது யாருடன் இணங்கிப்போவது என்று தெரியாது தவிப்பது மிக முக்கியமான விடயமாகும்.

இந்த நிலையில் கொழும்பு அதிகாரிகளின் சொல்லளவிலான கரிசனை வார்த்ததைகளை மேலை நாட்டு வெளியுறவு அமைச்சகங்களிலும் பன்னாட்டு நிறுவனங்கள் மத்தியிலும் இன்னமும் கருத்தில் எடுத்து கொள்ள தயாரான நிலையே உள்ளதை கிளின்ரன் அம்மையாரின் சென்னைப் பேச்சு குறிக்கிறது.

இந்த பேச்சுக்கு பின்பு சிறிலங்கா வெளியுறவு அதிகாரிகள் முன்பு போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ளூர் தலைவர்களை உருவாக்குதல், மீள்குடியமர்வு முயற்சிகள் துணைப்படைகளை நிராயுதபாணிகளாக்குதல் போன்றவற்றுடன் மன்னித்து இணங்கிப்போகும் தன்மையை உருவாக்கவே தாம் முன்னுரிமை வகிப்பதான கருத்தை இறுக்கிப்பிடித்து கொண்டுள்ளனர்.

இனப்படுகொலைகளின் பின்பு அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இன்னமும் தமிழர் பகுதிகள் இராணுவ அடக்கு முறைகளால் வாழ்வாதாரமற்ற நிலையில் கிடக்கிறது.

இதிலே கிளின்ரன் அம்மையாரின் பேச்சு சிறிலங்கா அதிகாரிகளுக்கு புதிய ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. மேலும் பல மேலை நாடுகளை அணுகுவதற்குரிய கதவுகளை திறந்தது விட்டிருக்கிறது எனலாம்.

கடந்த காலங்களில் இந்திய காங்கிரஸ் மத்திய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கங்களை பல்வேறு இடங்களில் துணை நின்று காத்துள்ளது. இராணுவ பொருளாதார வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.

இருந்த போதிலும் சிறிலங்கா அரசாங்கமோ திசைமாறி போகும் நிலை போர்முடிவுக்கு வந்ததிலிருந்து வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.

political reconciliation
என்பதன் மூலம் சிறிலங்காவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதுவும், ஆர்ப்பரித்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய தமிழ்நாட்டு மக்களுக்கு வல்லரசுகளின் பொறுப்பு குறித்து உணர்த்துவதன் மூலம் கொதிநிலையை அகற்றுவதும் முக்கிய கருப்பொருளாக கிளின்ரன் அம்மையாரின் பேச்சுகள் கணிக்கப்படுகிறது.

அத்துடன் பிரிவினைகளை தடுத்து அணுகுமுறைகளுக்கு ஏதுவாக மென்மைப்படுத்தும் பாணியிலான போக்கு தென்படுகிறது.

ஆனால் பேரினவாத மக்களாட்சியில் சிறுபான்மையினரை இணங்கிப்போக வற்புறுத்துவதோ அல்லது தூண்டுவதோ சிறுபான்மையினத்தவரின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்காத நிலையையே வெளிகாட்டுவதாக அமையும்.

வல்லரசுகள் சொந்த நலன்களின் அடிப்படையில் தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு துணைபோவது நியாயமற்றது என்பது எந்த உலக ஒழுங்கு மாற்றத்தின் பின்பும் தெளிவடைந்ததாக தெரியவில்லை.

ஈழத்தமிழ் மக்களை பொறுத்தவரையில் தமது தேவையை நன்கு வரையறை செய்து கொண்டு சலிப்பற்ற வகையில் செயற்பட்டு வருகின்றன. மேலும் திட்டமிட்ட தொடர்ச்சியான செயற்பாடுகளின் அவசியத்தையும் தமிழ் நாட்டின் இடைவிடாத எழுச்சியின் அவசியத்தையும் வல்லரசுகளின் நகர்வுகள் காட்டி நிற்கின்றன.

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்து எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk

Comments