சிங்கள அரசால் குறிவைக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகள்!

அண்மையில், மேற்குலக நாடொன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர் ‘சிறிலங்காவை நெருக்கிவரும் போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து உங்களால் எப்படி விடுபட முடியும்?’ என்ற கேள்வியை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்திருந்தார்.

அதற்கு, அவர் சிரித்துக்கொண்டே ‘தமிழர்களைக் கொண்டே தமிழர்களது போராட்டத்தை அடக்கிய எனக்கு, தமிழர்களைக் கொண்டே அதிலிருந்து விடுபடத் தெரியாதா?’ என்று பதிலளித்தார்.

ஆம், சிங்கள தேசம் நடாத்திமுடித்த தமிழினப் படுகொலைக்கான மிகப் பெரிய போராயுதமாகத் தமிழர்கள் சிலர் பயன்பட்டுள்ளார்கள். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிங்கள இராணுவம் பாரிய தாக்குதல்களை நிகழ்த்தி, தமிழீழ மண்ணைக் கைப்பற்றிக் கொண்டது. அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிங்கள தேசம் எங்கும் பரவிப் படர்ந்திருந்த தமிழ் உளவாளிகள் படுகொலை செய்யப்பட்டு, ஆறுகளிலும், வீதிகளிலும் போடப்பட்டார்கள். அவர்கள் வழங்கிய தகவல்களைக் கொண்டே முற்றுகை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் உயர் தளபதிகள் முற்றாக அழிக்கப்பட்டர்கள்.

அந்த ஈவிரக்கமற்ற கொலைக் களம் இப்போது புலம்பெயர் நாடுகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ளது புலப்பட ஆரம்பித்துள்ளது.

இதுவரை காலமும், விடுதலைப் புலிகளது புலம்பெயர் தளங்களை நோக்கி ஏவப்பட்ட அதே கொலைக் கரங்கள், எதிர்வரும் மாவீரர் தினத்தைக் குறிபார்க்க ஆரம்பித்துவிட்டது. போட்டி, பொறாமைகள், பதவி ஆசை கொண்டு அலையும் எம்மவர்கள் சலரும் அதற்கு உடந்தையாகிவிட்ட கொடுமைகள் மனதை உலுக்குகின்றது. இதுவரை காலமும், தேசியத் தலைவரது ஆணையுடன் புலம்பெயர் தேசங்களில் தேசிய விடுதலைக் கட்டமைப்புக்களே மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தியுள்ளன. விடுதலைப் புலிகளது கிளைகளாக இயங்கிய இந்தக் கட்டமைப்புக்கள் முள்ளிவாய்க்காலின் பின்னரும் தேசியத் தலைவரி ஆணைப்படி, வரலாற்றுக் கடமையாக மாவீரர் நிகழ்வுகளை நடாத்தி முடித்தன. அந்தத் தேசிய எழுச்சி நிகழ்வின் தொடர்ச்சி, சிங்கள தேசத்தின் நிகழ்ச்சிநிரலுக்குச் சவாலாக இருந்ததனால், அதன்மீது கடந்த வருடத்திலேயே குறி வைக்கப்பட்ட போதும், அது வெற்றியழிக்கவில்லை.

இதனால், புலம்பெயர் தேசங்களில் கே.பி. குழுவினர் களத்தில் இறக்கப்பட்டு, அதற்கான வழங்கல்களும் வாரி இறைக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்கள் தங்களது மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செய்ய முடியாது தவிக்கும் நிலையில், மாவீரர் துயிலும் இல்லங்கள் முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் தமிழர்களது எழுச்சியை நிர்மூலமாக்கும் இந்த நிகழ்ச்சி நிரலில் நம்மவர் சிலரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஊடாக, மாவீரர் தின நிகழ்வைக் குழப்புவதற்கும், மக்களது பங்குபற்றலைச் சிதறடிப்பதற்கும் சிங்கள தேசம் முயற்சி செய்து வருகின்றது.

உலகின் அனைத்து இனங்களையும், சமூகத்தையும் ஒன்றிணைக்கும் சக்தியாக, அந்த மக்கள் குழாமின் சமயங்களே செயற்படுகின்றன. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும், பௌத்தர்களையும், யூதர்களையும் பலம் பெறச் செய்ததும், அணி திரள வைத்து அவர்களுக்கான தேசத்தை வென்றெடுத்ததிலும் அவர்களது சமயத்தின் பங்கு அளப்பரியது. இந்து மதத்தில் அவ்வாறான அணுகு முறையோ, அக்கறையோ இல்லாதது மட்டுமல்ல, இந்து மதம் தனது மக்கள் கூட்டத்தையும் சாதிகளாக்கிப் பிளவு படுத்தியதன் மூலம் ஒருங்கிணைந்த எழுச்சி பெறுதல் ஒன்றிற்கான சாத்தியத்தை இல்லாமலே ஆக்கிவிட்டது.

ஆரம்ப காலத்தில் நடைபெற்ற ஆரியப் படையெடுப்பின்போது, ஆட்சியுரிமையுடன் திகழ்ந்த திராவிடர்களைத் தோற்கடிப்பதற்கான தந்திரமாக, ஆரியர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட சாதி முறைமையின் தொடர்ச்சியே இந்து மதம் சார்ந்த பல இனக் குழுமங்களால் ஆட்சி அதிகாரங்களுக்குட்பட்ட நிலப்பரப்புக்களைத் தமதாகத் தக்க வைத்துக்கொள்ள முடியாது போய்விட்டது. அதுவே, தமிழர்களது தலைவிதியாகவும் நிச்சயிக்கப்பட்டு விட்டது.

இதன் காரணமாகவே, ஈழப் போரில் இந்து மதம் சார்ந்த மக்கள் கொன்றொழிக்கப்பட்ட போதும், தமிழர்களுக்குச் சொந்தமான இந்துக் கோவில்கள் தரைமட்டமாக்கப்படும்போதும் இந்துமத பீடங்கள் மவுனமாகவே தங்கள் வரலாற்றைத் தக்க வைத்துக்கொண்டனர்.

இவற்றை எல்லாம் மீறி, ஈழத் தமிழர்களது ஒன்றிணைதலும், எழுச்சியும் விடுதலைப் புலிகளால் சாத்தியமாக்கப்பட்டது. தாய் மண்ணுக்காகத் தமது இன்னுயிரை ஈந்து, காவிய நாயகர்களான மாவீரர் தினம் இந்த ஒன்றிணைதலின் உச்சக் கட்டமாக உள்ளது. தாயகக் கனவுகளுடன் கண்ணுறங்கும் மாவீரர்களது நினைவுகளைச் சுமந்து, தமிழீழ விடுதலைக்கான மீளுறுதியைக் கொள்ளும் அந்தத் தேசிய தினத்தைச் சிதைக்கும் நோக்கில் முதலில் லண்டனை மையப்படுத்தி ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த பலர், தங்களது சம்மதமில்லாமலேயே தங்களது பெயர்கள் அதில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துத் தம்மை அசுத்தப்படுத்தலிலிருந்து விடுவித்துக்கொண்டர்கள்.

தற்போது, பிரான்சை மையப்படுத்தி மாவீரர் தினத்தை சிதைக்கும் நிகழ்ச்சிநிரலுடன் 12 பேர் கொண்டதொரு குழு ‘ஈழநாதம்’ இணையத்தளம் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையாகவே, சிங்கள தேசத்தின் சதி வலைக்குள் இந்த 12 நபர்களும் சிக்கிக்கொண்டார்களா? அல்லது லண்டனில் நடைபெற்றதுபோல் வலிந்து இணைக்கப்பட்டார்களா? என்பதை அறிய முடியவில்லை.

இதில், வெளிப்படுத்தப்பட்ட 12 பேர்களில், ஏற்கனவே தமிழ்த் தேசிய சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சிலரும் அடங்கியுள்ளார்கள். மாவீரர் தினத்தைச் சிதைக்கும் நோக்கோடு, சிங்கள தேசத்தால் விதைக்கப்படும் விஷ விதைகள் முளைக்குமுன்னர் களை எடுப்பதன் அவசியத்தைப் புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி, மாவீரர் கனவுகளைச் சிதைக்கும் தேசிய விரோத செயல்களில் சிங்கள தேசத்தின் கையாட்களாகச் செயற்பட வேண்டாம் என்ற கோரிக்கையினை வலியுறுத்த வேண்டும்.

- இசைப்பிரியா

திங்கட்கிழமை, யூலை 25, 2011
maaveerar naal
எமது விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மகத்தான எம் மாவீரர் செல்வங்களின் தியாகங்களை போற்றிப் பூசிக்கின்ற புனிதமான அந்த நாளை சிறப்புற நடாத்துவதற்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் ஒன்றுகூடி மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு ஒன்றினை உருவாக்கியுள்ளனர். சமூகப் பிரதிநிதிகள், தமிழ் அமைப்புக்கள், மற்றும் நீண்டகால தேசியச் செயற்பாட்டாளர்கள், மாவீரர் குடும்ப அங்கத்தவர்கள், சட்டவல்லுனர்கள் போன்றோர்களை உள்ளடக்கியதாக இவ் ஏற்பாட்டுக் குழுவும், அதன் ஆதரவுக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்பாட்டுக் குழு

1. திரு. றொனி மருசலின் ( முன்னால் தமிழ்ச் சோலை பொருப்பாளர், )
2. திரு. பரராசா குமாரசாமி ( பிரான்ஸ் தமிழர் கலைத்துறை செயற்பாட்டாளர். )
3. திரு. செல்லையா ஜெயச்சந்திரன் ( தேசியச் செயற்பாட்டாளர். )
4. செல்வி. பிரியதர்சினி ( மாவீரர் குடும்பம், )
5. திரு. ஜோர்ஜ் ஜெயராஜன் ( மாவீரர் குடும்பம், )
6. திரு. எஸ். என். ஜே. அன்ரனிப்பிள்ளை ( விளையாட்டுத்துறை, )
7. திருமதி. நாகபூசணி சுரேந்திரன் ( பெண்கள் அமைப்பு, )
8. திரு. சுதர்சன் சிவகுருநாதன் ( தேசியச் செயற்பாட்டாளர், )
9. திரு. அலன் ஆனந்தன் ( உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம், )
10. திரு. வல்லிபுரம் வைரமுத்து ( தேசியச் செயற்பாட்டாளர், )
11. திரு. சோமசுந்தரம் பிரபாகரன் ( மாவீரர் குடும்பம், )
12. திரு. கந்தசாமி கோபிநாத் ( தேசியச் செயற்பாட்டாளர்,)

இந் நிகழ்வு சார்ந்த வரவு செலவு கணக்கு விபரம் யாவும் வெளிப்படையானதாகவும், குறிப்பிட்ட நாட்களுக்குள் மக்களின் பார்வைக்கும் கொண்டுவரப்படும்.

எவற்றோடும் ஒப்பிட முடியாத அதியுயர் உன்னதமானவர்களை வணங்கும் இந் நாளை, வடுக்கள் ஏதும் இன்றி சிறப்புற செய்யவேண்டும் என்பதே முக்கிய நோக்காகும்.

எனவே எமது தமிழ் உறவுகள் அனைவரும் இந் நன்னாளில் உணர்வால் ஒன்றிணைந்து எம் மாவீரர் செல்வங்களை மனதில் இருத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் அதே வேளை தியாக தீபங்களின் ஒளியில் இன்றைய யதார்த்தங்களை உணர்ந்து எமது பாதையில் தொடர்ந்து அடுத்த அடிகளை வைப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.


மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழு
பிரான்ஸ் - 2011

Comments