ஈழத் தமிழனைப்போல் புலம்பெயர் தமிழன் ஒன்றுபட வேண்டும்

வருடா வருடம் வருகின்ற எத்தனை சோக நாட்களை ஈழத் தமிழன் மனதில் சுமக்கின்றான்? நமது மக்களையும், மாவீரர்களையும், மாமனிதர்களையும் பறிகொடுத்த நாட்களெல்லாம் நினைவு தினங்களாகி ஈழத் தமிழனின் நாட்காட்டிகள் நிறைத்துவிட்டன.

சுனாமி போன்ற இயற்கையின் கொடூரங்கள்கூட எமக்கு அழிவுகளைத் தந்து அதன் சோக நினைவுகளை பதிவு செய்துவிட்டு சென்றுள்ளன. அதுவும் ஆடி மாதம் என்றாலே 1983 இல் இலங்கை அரசினால் அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அதிஉச்ச பயங்கரவாதக் ‘கொலைக்களமே’ அனைவருக்கும் நினைவில் வரும்.

அதிக உயிர் உடமைகளை ஈழத் தமிழன் ஆரம்ப காலகட்டத்தில் பலிகொடுத்த ‘கறுப்பு ஜூலை’ என்பது ஈழத் தமிழன் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒன்று. அறுபது ஆண்டு உரிமைப் போராட்டம் இன்றுவரை தொடரவே செய்கிறது. இடையில் வந்த ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தபோதும், அதனால் ஆயிரக்கணக்கில் நம் உறவுகளை இழந்தபோதும், சொந்த மண்ணில் தமக்கிருக்கும் உரிமைகளை பெற்று வாழவேண்டும் என்ற தமிழனின் உணர்வு இன்னும் சாகவில்லை என்பதை இவ்வருட ஆடிமாத நினைவு நாட்களில் இடம்பெற்ற உள்ள+ர் தேர்தலின் முடிவுகள் சுட்டி நிற்கிறன.

கோடிக்கணக்கில் செலவு செய்து, வடகிழக்கில் தேவையில்லாத ஒரு தேர்தலை நடாத்தி மூக்குடைபட்டு நிற்கிறது இலங்கை அரசு. என்ன நோக்கத்துக்காக இந்தத் தேர்தல் இலங்கை அரசால் நடாத்தப் பட்டதோ, அதன் நோக்கம் நிறைவு பெறவில்லை. அதி உச்சமான கொடுமைகள் நடந்தேறி இரண்டு வருடங்கள் கடந்துவிட்டதால், ஏற்பட்ட அழிவுகளை தமிழன் மறந்திருப்பான் என்று தப்புக் கணக்குப் போட்டது அரச தரப்பு.

அழிவுகளால் வாடி வதங்கி நிற்கும் தமிழன் அற்ப சலுகைகளுக்கும், பெய்யான வாக்குறுதிகளுக்கும், சாராயப் போத்தலுக்கும் அடிமையாகிவிடுவான் என்று நினைத்து அரச பரிவாரங்களை களத்தில் இறக்கியிருந்தார் இலங்கை அதிபர். கூடவே ஒட்டுக் குழுக்கள் புடைசூழ, அபிவிருத்திக்கு அடிக்கல் நாட்டும் போர்வையில் வடக்கை வலம்வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனாலும் எதையுமே சாதிக்க முடியவில்லை. ஈழத் தமிழர்கள் தங்கள் உணர்வில் உறுதியாக இருந்தது தேர்தல் முடிவில் வெளிவந்தது.

‘அபிவிருத்தி...!’ என்ற சொல்லுக்கு தங்க முலாம் பூசி தேர்தலில் குதித்தது இலங்கை அரசு. ‘அரசியல் தீர்வு!’ என்ற அறுபது வருடகால அடிப்படைப் பிரச்சனையை முன்வைத்தது தமிழர் தரப்பு. முப்பது வருடகாலம் தொடர் இழப்புகளை சந்தித்தும், இன்னமும் மரத்தின் கீழும் குடிசைகளிலும் முகாம்களிலும் வாழும் நிலையிலும்கூட, பட்டினி வாழ்வு வாழ்ந்தாலும் தமது சொந்த மண்ணில் உரிமையுள்ள மனிதராய் வாழவேண்டும் என்பதே தங்கள் முடிவு என்பதை மக்கள் முதன்மைப் படுத்தியதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன

நாடி பிடித்துப் பார்த்த இந்த ஆடி மாதத் தேர்தல் முடிவுகள் சம்பந்தப்பட்ட சிலரை ஆடி அடங்க வைத்திருக்கிறது. அனியாயமாக பணத்தை கொட்டிக் கொடுத்து தோற்று விட்டோமே என்று குமுறுவது அவர்களது வார்த்தைகளில் தெரிகிறது. அவர்கள் ஒன்றை புரிந்தகொள் வேண்டும்!

எங்களது மக்களை கடந்த முப்பது ஆண்டுகளாக பட்டினியோடும், குடிசை வாழ்வோடும் வாழப் பழக்கிவிட்டவர்கள் இலங்கை அரசுகள்தான் என்பதும், அவற்றுக்கு பழக்கப் பட்டதனால்தான் அபிவிருத்தியை விடவும், தமது மண்ணில் நிம்மதியோடு தலை சாய்க்கும் உரிமை தமக்கு வேண்டும் என்பதை முதன்மைப் படுத்தி இலங்கை அரசுக்கு புரியவைத்திருக்கிறார்கள்.

முப்பது ஆண்டுகளாக பொரளாதார தடை போட்டு, வெளிநாடுகள் கொடுத்த மாவையும் சீனியையும் மட்டுமே பிச்சையாகப் போட்டு மக்களை வாட்டி வதைத்து அவர்களது உயிர்களையே துச்சமாக மதித்தவர்கள்,

சுனாமியால் தமிழினம் இழப்புகளை சந்தித்தபோது கூட, வெளிநாட்டு உதவிகள் வவுனியாவை நெருங்க முதலே பறித்து திசை திருப்பியவர்கள்,

இப்போது வடகிழக்கின் அபிவிருத்தி என்ற பெயரில் வெளிநாட்டு உதவிகளை பெற்று தேர்தலில் வெல்ல நினைத்தார்கள். எதுவுமே பலிக்கவில்லை ஈழத் தமிழனிடம்.

அரசியல் தீர்வின் மூலம் அன்னியப் படைகளின் ஆதிக்கம் இல்லாத, சம உரிமையுள்ள தீர்வைத் தந்தால், நாட்டின் அபிவிருத்தியை தமிழன் தானாகவே உயர வைப்பான் என்பது ஏனோ சிங்களவனுக்கு புரியவில்லை.

அதேவேளை, தாயகத் தமிழனிடம் கற்றுக்கொள்ள வெண்டிய பாடம் நிறையவே புலம்பெயர் தமிழனுக்கு இருக்கிறது. ஒற்றுமைப் படவேண்டும் என்ற உணர்வு மட்டுமே தமிழனை வாழவைக்கும்.

kana-ravi@hotmail.com

Comments