"தோட்டாவால் ஆளப்பட்ட பிரதேசங்கள் வாக்குகளால் வென்றெடுக்கப்பட்டுள்ளன"

யுத்த காலப்பகுதியில் சிறிலங்காவிற்கு மிகப் பக்கபலமாக இருந்த இந்தியாவானது, தற்போது அதிகாரப் பரவலாக்கம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் உறுதியாக நிற்பது ஆச்சரியமான விடயமாகும்.

இவ்வாறு அமெரிக்காவை தளமாகக்கொண்டு பல நாடுகளில் வெளியாகும் TIME சஞ்சிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் எழுதப்பட்டுள்ளது. அதனை

சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலானது சிறியதொரு தேர்தலாக இருந்தபோதிலும் தற்போது அது பெரும் முக்கியத்துவம் மிக்கதாகவும், பெறுமதி மிக்க குறியீடாகவும் உள்ளது.

சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற பகுதியில் உள்ள இருபது உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த வார இறுதியில் நடைபெற்றது.

சிறிலங்காவைத் தற்போது ஆளும் மகிந்த அரசாங்கத்தின் கைகளில் வடபகுதிக்கான அதிகாரம் அனைத்தும் குவிந்துள்ளபோதிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வடபகுதி மாவட்டங்களில் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் இணக்கப்பாட்டு முயற்சிகளுக்கான முதலாவது மக்கள் கருத்து வாக்கெடுப்பாகவே தற்போது நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தல் அமைந்துள்ளது. இத்தேர்தல் தொடர்பான பெறுபேறுகள் வெளிவந்த போது மக்களின் விருப்பம் எது என்பதும் தெளிவாகியுள்ளது.

சிறிலங்காவின் ஏனைய பகுதிகளில் ராஜபக்சவிற்கான ஆதரவு குறையாத போதிலும் வடக்குப் பகுதியில் இந்த ஆதரவானது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

சிறிலங்கா அரச படைகளால் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்த, சிறிலங்கா நாடாளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போது நடந்து முடிந்த வடக்கிற்கான 20 உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 15 ஆசனங்களையும், பிறிதொரு தமிழ்க் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இரு ஆசனங்களையும், ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்று ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.

யூலை 23 அன்று தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 65 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 45 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

"சிறிலங்காவின் வடபகுதியில் வாழும் மக்கள் தமது விருப்பத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு சந்தர்ப்பமாக இத்தேர்தல் அமைந்துள்ளது" என கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் சூசைப்பிள்ளை கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.

25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது மே 2009ல் முடிவிற்கு வந்ததன் பின்னர் மேற்குறிப்பிட்ட வடபகுதியின் மூன்று மாவட்டங்களிலும் யுத்தத்தின் அழிவுகள் எஞ்சிக்காணப்படுகின்றன.

சிறிலங்காவின் வடபகுதியில் பெரும் தொகையில் வாழ்கின்ற தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்காக தனிநாடு வேண்டிப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது முற்று முழுதாக அழிக்கப்பட்டனர்.

இந்த யுத்தத்தில் அகப்பட்டுக் கொண்ட 300,000 இற்கும் மேற்பட்ட மக்கள் தமது வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர். எண்ணுக்கணக்கற்ற மக்கள் இந்தப் போரின் போது கொல்லப்பட்டனர் மற்றும் காயங்களுக்கு உள்ளாகினர்.

2009ன் இறுதிப்பகுதியில், இடம்பெயர்ந்தோர் முகாங்களில் வாழ்ந்த மக்களை சிறிலங்கா அரசாங்கம் மீளக் குடியேற்ற ஆரம்பித்தது. தற்போது 10,000 மக்கள் மட்டுமே முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் இடம்பெற்ற வன்னிப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் பல பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. வடக்குப் பகுதியை ஊடறுத்துச் செல்லும் ஏ-09 நெடுஞ்சாலையானது செப்பனிடப்பட்டு வருகிறது. மின்சார வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள 80 வீதமான பயிர்செய் நிலங்கள் மீளவும் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. யுத்தம் முடிவிற்கு வந்ததையடுத்து சிறிலங்கா அரசாங்கமானது பல்வேறு கடன் திட்டங்களுக்குக் கீழ் வடபகுதியில் 42 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியைச் செலவிட்டுள்ளது என மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய மாதங்களில் சிறிலங்காத் தீவில் அதிகம் கடன் திட்டங்கள் வழங்கப்படும் இடமாக வடக்குப் பகுதி அமைந்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் வன்னி மக்கள் தமது நாளாந்த வாழ்வை கழிப்பதில் பெரும் பிரயத்தனப்படுகிறார்கள்.

யுத்தத்தின் பின் தமது சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பிய மக்களில் 63 வீதமானோர் நாளொன்றுக்கு ஒரு டொலரைக் கூடச் செலவழிக்க முடியாதவர்களாக உள்ளதுடன், 20 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந்தப் பிரதேசத்தில் இராணுவ நடமாட்டங்கள் அதிகம் காணப்படுவதுடன், இங்கு வாழும் மக்கள் மிக மெதுவாகவே இயல்புநிலைக்குத் திரும்புவதுபோல் தெரிகிறது.

"அரசாங்கத்தின் தேர்தல் பரப்புரையானது அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இங்கு வாழும் தமிழ் மக்கள் தமக்கு எது தேவை என்பதை தாம் வழங்கிய வாக்குகள் மூலம் காட்டியுள்ளனர்" என யாழ் மாவட்டத்திற்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வட பிராந்தியத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் தமது ஆதரவுகளை வழங்கியதன் மூலம் மக்கள் தமது ஆணையை வழங்கியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருதி தோய்ந்த யுத்தத்தின் பாதிப்புக்களைச் சுமந்துள்ள சிறபான்மைத் தமிழர்கள் சிறந்த தேசிய ஒருமைப்பாட்டை அடைந்துகொள்வதற்கு அதிகார மாற்றம் என்பது மிக இன்றியமையாத ஒன்று என்பதை உணர்ந்து கொண்டு தமது ஆணையை வழங்கியுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய சங்கம் போன்ற வலும்மிக்க அனைத்துலக அதிகார சக்திகள், சிறிலங்காவில் தமிழர் வாழும் பகுதிகளில் அதிகாரப் பகிர்வு என்பது தேவைப்பாடுடைய ஒன்றாகும் எனவும், இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பான அனைத்தலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்த மீறல்களை சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கமானது வடக்கில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் வென்றிருக்குமானால், தன் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்துலக அழுத்தங்களை முறியடிப்பதற்கான கருவியாக இத்தேர்தல் வெற்றியை பயன்படுத்தியிருக்கும் என பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.

ஆனால் தேர்தல் வெற்றியானது சிறிலங்கா அரசாங்கத்திற்கு சாதகமாக அமையாததால், அனைத்துலகத்தை தனது பக்கம் கவருவதற்கான வேறு முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளலாம் எனவும் பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த காலப்பகுதியில் சிறிலங்காவிற்கு மிகப் பக்கபலமாக இருந்த இந்தியாவானது, தற்போது அதிகாரப் பரவலாக்கம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் உறுதியாக நிற்பது ஆச்சரியமான விடயமாகும்.

கடந்த யூனில் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிற்கு வருகை தந்திருந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் மற்றும் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளுடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

2006 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டு இறுதியுத்தத்தின் போது, சிறிலங்கா மீது மெற்கொள்ளப்பட்ட அனைத்துலக சமூகத்தினது அழுத்தங்களை ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் எதிர்த்து நின்றன. இதில் ரஷ்யா, சீனா ஆகிய இரண்டும் தமது ஆதரவுகளை சிறிலங்காவிற்கு வழங்கியவண்ணமுள்ளன.

இந்த அடிப்படையில், சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளிவந்ததன் பின்னர், சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களில் அதிகம் தலையிட்ட முதலாவது நாடாக ரஷ்யா உள்ளது. சீனாவானது போருக்குப் பின்னான சிறிலங்கா அபிவிருத்தித் திட்டங்களில் அதிகளவான தனது நிதியை முதலீடு செய்துள்ளது.

இவற்றுக்கு மாறாக, அனைத்துலக சமூகத்தால் மேற்கொள்ளப்படும் நேர்த்தியான மாற்றங்களை ராஜபக்ச அசட்டை செய்வாரானால் அவர் முட்டாளாகவே இருப்பார் என்பது அரசியல் அவதானிப்பாளர்களின் கருத்தாகும்.

"சிறிலங்காவில் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை அடைந்து கொள்வதற்காகவே சிறிலங்கா மீது இந்நாடுகள் தமது செல்வாக்கைப் பிரயோகிக்கின்றன" என அனைத்துலக நெருக்கடிக்கான குழுவின் சிறிலங்காவிற்கான திட்ட இயக்குனரும் மூத்த ஆய்வாளருமான அலன் கீனன் தெரிவித்துள்ளார்.

"அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்றவை சிறிலங்கா விடயத்தில் சாதகமானதொரு நிலைப்பாட்டை எடுப்பதில் கூட்டாக இணைந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யா, சீனா அகிய இரு நாடுகளும் சிறிலங்கா தொடர்பான தமது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் மாறாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்குமானால் அதில் எந்தவொரு பயனையும் பெற முடியாது" என அலன் கீனன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம் ஏற்கனவே இடம்பெற்றுள்ளதற்கான ஒரு அறிகுறியாகவே கடந்த வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் கண்காணிப்பு செயற்பாட்டு அமைப்பான ஊயகுகுநு யின் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

"தோட்டாவால் ஆளப்பட்ட பிரதேசங்கள் வாக்குகளால் வென்றெடுக்கப்பட்டுள்ளன" என தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

"நீண்ட காலமாக நாங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால் தற்போது நாம் அதில் நம்பிக்கை கொள்ளலாம்" என சிறிலங்காவின் யுத்தம் இடம்பெற்ற வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த வாக்களரான வேலாயுதம் றமணன் தெரிவித்துள்ளார்.

நித்தியபாரதி.

Comments