ஈழத் தமிழினத்திற்குப் பேரழிவையும், பெருத்த அவமானங்களையும், மீளாப் பெரும் துயரையும் ஏற்படுத்திய சிங்கள தேசத்தின் அனைத்து வளமும், பலமும் புலம்பெயர் தமிழர்களை நோக்கித் திருப்பப்பட்டுள்ளதான எதிர்வு கூறல்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
சிங்கள தேசம் ஈழத் தமிழர்கள்மீது இன அழிப்பு யுத்தத்தை நடாத்திப் பெற்றுக்கொண்ட வெற்றியைத் தக்க வைப்பதற்குப் புலம்பெயர் தமிழர் தளத்தின் சிதைவு சிங்கள தேசத்திற்கு அவசியமாக இருந்தது.
சிங்கள தேசத்தின் இந்த விருப்பம் எந்த வகையிலோ, புலம்பெயர் தமிழர் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி, தமிழ்த் தேசிய சிதைவை வேகப்படுத்தி வருகின்றது. இது இயல்பானதோ அல்லது சிங்கள தேசத்தினால் உருவாக்கப்பட்டதோ என்பதற்கு அப்பால் இந்தத் தமிழ்த் தேசிய சிதைவினை புலம்பெயர் தமிழர்கள் எப்படி முறியடித்து, தமிழீழ விடுதலைத் தளத்தை முன் நகர்த்தப் போகின்றார்கள்? என்பதிலேயே ஈழத் தமிழர்களது எதிர்காலமும், மாவீரர்களது தாயகக் கனவும் தங்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், விடுதலைப் புலிகளின் உயர் மட்டத்தில் உருவான கருத்து முரண்பாடு புலம்பெயர் தமிழர்களைத் இரு துருவப்படுத்தும் வகையில் கூர்மையடைந்து வருகின்றது. விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களும், பெரும்பான்மைத் தமிழ் மக்களும் ஒரு அணியாகவும், கே.பி. குழுவும், கே.பி.யால் உருவாக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ருத்திரா குழுவும், அவர்களுக்கு ஆதரவான சிறு மக்கள் கூட்டமும் ஒரு அணியாகவும் பிளவு படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில், கே.பி.யின் சதியினை முறியடிக்கும் நோக்கத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் பங்குபற்றிய தமிழ்த் தேசிய தளம் சார்ந்தவர்களாலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை விடுதலைத் தளம் நோக்கி நகர்த்த முடியவில்லை. அதற்கு முற்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் வேறு தெரிவற்ற வகையில் ஜனநாயக அணியாகத் தமிழ்த் தேசிய தளங்களுடன் இணைந்து பணியாற்றும் முடிவினை மேற்கொண்டார்கள்.
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் தமிழீழ மக்களின் ஒரே நம்பிக்கையாகப் புலம்பெயர் தமிழர்களது பலமே உள்ளது. அதுவும் சிதறடிக்கப்படுமாயின் தமிழீழம் என்ற உன்னத இலட்சியத்தை மட்டுமல்ல, தமிழீழ மக்களது எதிர்காலத்தையும் நாமே சிதைத்தவர்களாக வரலாற்றுப் பழியினைச் சுமக்க வேண்டியவர்கள் ஆகிவிடுவோம். அதிலிருந்து நாம் விடுபடுவதாயின் தேசியத் தலைவர் அவர்கள் எமக்கு இட்ட ஆணையின் பிரகாரம் எமக்கான பணியினை நிறைவேற்றுவதற்காக நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.
புலம்பெயர் தேசத்தில் உச்சக் கட்டத்தைத் தொட்டிருக்கும் தலைமைத்துவப் போட்டியை சிங்கள அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றது. தலைமைத்துவப் போட்டியை உருவாக்கி, கருணாவை உள்வாங்கியது போலவே கே.பி. குழுவையும் சிங்கள அரசு உள்வாங்கியுள்ளது. தமிழீழம் சிதைவுண்டு, தமிழ் மக்கள் அவலத்தினுள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இன்றைய காலத்தில் பதவி வெறி கொண்ட சிலரால் தமிழீழ இலட்சியக் கனவு சிதைக்கப்படுவதை யாரும் அனுமதிக்க முடியாது.
தற்போது இந்தச் சிதைவு தளத்துடன் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் கைகோர்த்துள்ளதான அதிர்வுகள் வெளிப்பட்டு வருகின்றன. பிரான்சில் 13 வருடங்களாக தமிழ்த் தேசிய தளமான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடனும், ஆதரவுடனும், பங்கேற்புடனும் நடாத்தப்பட்டுவந்த தமிழர் விளையாட்டு விழா கே.பி. குழுவினரால் கையேற்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் உப கட்டமைப்புக்களும் புறக்கணித்த நிலையில் மக்கள் திரள்தலின்றி சோபையிழந்து காணப்பட்டது. தமிழர் விளையாட்டு விழா வென்றாலும், தோற்றாலும் அது சிங்கள தேசத்திற்கான வெற்றியாகவே அமையும் என்பதால், இதற்கு எதிரான பிரச்சாரத்திலோ, எதிர் நடவடிக்கைகளிலோ தமிழர் ஒருங்கிணைப்பு ஈடுபடாமல் ஒதுங்கியது அதன் அசைக்க முடியாத தமிழீழ இலட்சியப் பற்றை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளது.
இப்போது தேவை பதவிகளுக்கும், கதிரைகளுக்குமான போராட்டம் அல்ல. முள்ளிவாய்க்காலில் சிங்கள தேசத்தால் முறியடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை சர்வதேச அங்கீகாரம் நோக்கிய ஜனநாயகப் பாதையில் முன்நகர்த்திச் செல்வது மட்டுமே. அதற்கான ஒன்றுபடுதல் மட்டுமே தமிழீழ விடுதலைப் பாதைக்குப் பலம் சேர்க்கும். அதை நோக்கிய நகர்வுகளை மேற்கொள்ளாத எந்தவொரு நபரும், அணியும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும். அதுவே தமிழீழ மக்களுக்கும், தமிழீழ இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கும் நாம் செய்யும் நன்றிக்கடனாகவும், தமிழீழ மண்ணுக்கு நாம் பெற்றுக்கொடுக்கும் விடுதலையாகவும் அமையும்.
- இசைப்பிரியா-
Comments