முத்தையா முரளிதரனின் சிங்கள் பக்தி !

இலங்கையில் பிறந்து வளர்ந்து செழிப்பு பெற்றவரான (மட்டை) எறி பந்து விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு சித்த சுவாதீனம் ஏற்பட்டுவிட்டதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ. மோசமான போர்குற்றம் புரிந்தவர் என்பது பல வழிகளில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதன் பின். அவர் தப்பித்து விடக்கூடாது. சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்தவேண்டிய கொடிய மிருகம். என அகில உலகமே திரண்டு நின்று கூறுகிறது.

இலங்கையின் அதிபர் ராஜபக்க்ஷ மன்னிக்க முடியாத இனப்படுகொலை குற்றவாளி, என்று தமிழினம் மட்டுமல்ல அகில உலகமே கைகாட்டுகிறது.

இலங்கை அரசு தொடர்ந்து புரிந்துவரும் அடாவடிகளை கட்டுக்குள் கொண்டுவர சிலநடவடிக்கைகளை உலகம் எடுக்க முயற்சிக்கிறது. அவைகளில் சில ஒத்துழையாமை பொருளாதார நெருக்கடி.

பின்னணி இப்படியிருக்கும்போது விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் அவர்கள், படுகொலை குற்றவாளி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு எதிராக, உலகம் செயற்படுவதா? இலங்கையை தள்ளி வைப்பதா, என்று ராஜபக்க்ஷவுக்கு துணை நின்று விளையாட்டுத்தனமாக பின் விளைவு பற்றி சிந்திக்காமல் எழுந்தமானத்தில் கொதித்து குமுறி,, தனது பெயரை கெடுத்திருக்கிறார்.

சுயநலத்துக்காக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் போய் தஞ்சமடைந்துள்ள சிலர், தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக நடந்து வருகின்றனர். இவர்களது வலியுறுத்தலுக்குப் பயந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்தால் கடும் விளைவுகளை கிரிக்கெட் சந்திக்க நேரிடும் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மிரட்டலாக எச்சரித்திருக்கிறார்.

முரளிதரன் உங்கள் தேசபக்திக்கு முன் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் நீங்கள் இலங்கையில் தமிழனாகப் பிறந்து தமிழனாக வாழ்ந்திருந்தால் இந்தக்கருத்துக்கே இடமிருந்திருக்காது.

சுயநலத்துக்காக இங்கிலாந்து, அவுஸ்ரேலியாவில் போய் தஞ்சமடைந்த சிலர், இன்று இலங்கைக்கு எதிராக நடந்து வருகின்றனர், என்ற முரளிதரனின் மலிவான சொல்லாடல் வெட்கப்பட வைக்கிறது. இலங்கையிலுள்ள தனது இனம் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டதை சகிக்கமுடியாத (இலங்கை) ஈழ தமிழன் தாயக உறவுகள் சந்தித்த கொடூரத்திற்கு, உலகத்தில் நியாயம் கேட்டு போராடுவதை, உணர்வில்லாவிட்டாலும் முரளிதரனால் எப்படி இப்படி மலிவாக விளிக்க முடிகிறது.

ஈழத்தமிழனுக்கு நடந்த கொடூரம் முரளியின் குடும்பத்தில் உள்ள அவரது மனைவி குழந்தை தாய் தகப்பனுக்கு நடந்திருந்தால் முரளி இப்படி பேசியிருப்பாரா? முரளியின் குடும்பத்தில் எப்போதாவது ஒரு உயிர் வலுக்கட்டாயமாக சித்திரவதை செய்யப்பட்டு பறிக்கப்பட்டிருக்கிறதா? சிங்களவனோடு கைகோர்த்துக்கொண்டிருந்த அவரது குடும்பம் குறைந்தபட்சம் ஒரு கைதையாவது சந்தித்திருக்கிறதா.

அடிப்படையில் விளையட்டு என்பதே சமூக ஒற்றுமை உண்டுபண்ணுவதற்கு மனித இனத்தால் சிருஸ்டிக்கப்பட்ட ஒன்றுதான். பணங்கொழிக்கும் ஒரு விளையாட்டு என்பதால் படுகொலைகளை எந்த விளையாட்டாலும் சமன்படுத்தக்கூடியதல்ல என்பதை முரளி உணரவேண்டும். ஒருமணி நேரம் நிம்மதியாக உண்டு உறங்கி உயிர்வாழமுடியாத ஒரு தேசத்தில் விளையாட்டை தூக்கிப்பிடிக்கும் முரளி போன்றவர்களை என்னவென்று சொல்லமுடியும்.

படுகொலைகளை நியாயப்படுத்த விழையும், உலகம் அறிந்த ஒரு விளையாட்டுவீரரான முரளியின் மனநிலையை பகுப்பாய்வு செய்யவேண்டிய நிலையில் சர்வதேச விளையாட்டு உலகம் தள்ளப்பட்டிருக்கிறது.

முரளிதரனின் நியாயத்தின்படி பார்த்தால் முரளிதரனின் பெற்றோர் முத்தையா போன்றவர்கள் அன்றொருநாள் வயிற்று பசி காரணமாக. சுயநலன் கொண்டு "பத்தும் பறந்துபோக" பஞ்சம் போக்க பிழைப்புதேடி இந்தியாவிலிருந்து இலங்கை சென்று மலையகத்தில் தஞ்சமடைந்து குடியேறிய ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்தான்.

முரளிதரன் தனக்கான வாழ்க்கைத் துணையைக் கூட பஞ்சம் பிழைக்கவந்த ஒரு மலையக தமிழ் குடும்பத்திலிருந்து தெரிவுசெய்யாமல். தனது பூர்வீக இந்தியாவிலேயே தெரிவு செய்திருக்கும் அவருக்கு முதலில் இலங்கையை, அங்கு வாழும் பூர்வீக தமிழர்களைப் பற்றி வரலாறு புரியாமல் இழிவுபட பேசுவதற்கு அருகதை இல்லை.

ஆரம்பகாலமிருந்தே முரளி தன்னையும் தனது நலனையும் தக்க வைப்பதற்காக தன்மானத்தை புறந்தள்ளிவிட்டு சிங்கள இனத்தின் துடைப்பமாகவே செயற்பட்டு வந்திருக்கிறார். தனது பேட்டிகளில் அதை அவர் நிரூபித்துமிருக்கிறார். இலங்கையில் சிங்களவர்களின் பிரதேசங்கள் தவிர தமிழர் பிரதேசங்களுக்கு தான் சென்றதில்லை என்ற வாக்குமூலத்தையும் முரளி பல மீடியாக்களில் பதிவு செய்திருக்கிறார்.

முரளிதரன் தனது சொந்த பிரச்சினைகளை எப்படி வேண்டுமானாலும் செய்து கொண்டு போகலாம். யாரும் கவலைப்பட்டப்போவதில்லை. சர்வதேச மயப்பட்டிருக்கும் ஒரு பாதகமான கொலை சர்வாதிகாரியின் பிடியிலிருக்கும் ஈழத்தமிழினம் மீண்டு, இலங்கையை மீட்டு எடுப்பதற்கு ஜனநாயக ரீதியாக உலகம் தெரிவு செய்திருக்கும் பொறிநிலை "பொருளாதாரத்தடை, விளையாட்டுத்தடை" போன்றவைகளே. அவற்றை மலினப்படுத்தும் வகையில் சுயநலன் சார்ந்த கருத்துக்களை அவர் நிறுத்தவேண்டும்.

முன்பு தென் ஆப்பிரிக்காவின் இனவெறியைக் கண்டித்து சர்வதேச அளவில் அந்த நாட்டுடன் யாரும் கிரிக்கெட் உறவுகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்தது. இதனால் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக தென் ஆபிரிக்கா சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாமல் போனது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியையும், அதன் இனவெறிக்காக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் புறக்கணித்து வருகின்றன.

தற்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கும் அதேபோன்ற ஒரு நிலை நெருங்கி வரத் தொடங்கியுள்ளது. இலங்கை ராணுவத்தினர், ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடத்திய அகோர கொடூர கொலை வெறியாட்டக் காட்சிகள் அடங்கிய இலங்கையின் கொலைக்களம் என்ற வீடியோவைப் பார்த்து உலக அளவில் மக்கள் (மனிதர்கள்) அதிர்ந்து போயுள்ளனர்.

இந்த கொடூர இனவெறி காட்சிகளால் இப்போது இலங்கையின் கி்ரிக்கெட் நிர்வாகத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. இதை திசை திருப்பும் விதமாக ராஜபக்க்ஷவால் கொம்பு சீவி விடப்பட்டு முரளி இறங்கியிருக்கிறார். வினாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் 'கருணா' செல்லாக்காசாகப்போயிருக்கும் நிலையில், முத்தையா முரளிதரன். பெயர்களில்க்கூட நல்ல ஒரு ஒற்றுமை.

படுகொலைக்களமான ஒரு நாட்டுக்கு கிரிக்கெட் ஆடப் போகக் கூடாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தை அங்குள்ள தமிழர் அமைப்புகள் அமைதி வழியில் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளதாக தெரிகிறது. மேலும், ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் கூட இலங்கைக்குச் செல்ல விருப்பமில்லை என்று கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே ஒகஸ்ட் 6ம் தேதி தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுயள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்த யோசனைக்கு வர முக்கியக்காரணம், சேனல் 4 அம்பலப்படுத்தியுள்ள ஆவணப்படம் ஒரு காரணம். இதில், ராணுவம் நடத்திய கொடூரங்களை ஆஸ்திரேலியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2வது தி ஏஜ் பத்திரிக்கை நடத்திய ஒன்லைன் கருத்துக் கணிப்பு. அவுஸ்த்ரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்குப் போகலாமா என்ற கருத்துக் கணிப்பில், 81 சதவீதம் பேர் போகக் கூடாது என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர். இதனால்தான் இலங்கைக்குப் போவதை மறு பரிசீலனை செய்ய அவுஸ்த்ரேலிய கிரிக்கெட் அணி ஆரம்பித்துள்ளது.

ஆனால் முரளியின் கருத்துப்படி இலங்கை அணி இங்கிலாந்தில் விளையாடியபோது மைதானத்திற்குள்ளும் மைதானத்திற்கு வெளியேயும் தமிழர்கள் பலர் இலங்கை அணிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஆனால் இவர்கள் எல்லாம் தங்களது சுயநலத்திற்காக செயல்படக் கூடியவர்கள். இவர்களால் இலங்கைக்கு எந்தவிதப் பிரச்சினையும் வராது என்றே நான் கருதுகிறேன். வேறு ஒரு நாட்டில் புகலிடம் பெற்று வாழ்ந்துவரும் இவர்கள் சொந்த நாட்டுக்கு எதிராக செயல்படுவது கண்டனத்துக்குரியது என்று கூறியிருக்கிறார்.

தஞ்சமடைந்து வசித்து வரும், சில தமிழர்களே இந்த செயல்களுக்குப் பின்னணியில் உள்ளனர். தாயகத்திற்குத் திரும்ப முன்வராத அவர்கள் தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். சுயநலத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர். என்று முரளிதரன் கூறியிருக்கிறார்.

இலங்கையில் மிகுந்த செல்வாக்கோடு இருந்துகொண்டு, விளையாட்டு முரளி செய்யாத ஒரு மகத்தான பணியை புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்கின்றனர். முரளி அவர்கள் தானும் தமிழன் என்று கூறுவதால் குறைந்தபட்சம் சனல் 4 அம்பலப்படுத்திய ஆவணப்படத்தையாவது பார்க்கவேண்டும் என்பதே தமிழினத்தின் வேண்டுகோள்.

ஊர்க்குருவி


முத்தையா முரளிதரன் அவர்கள் உங்கள் வேலையை மட்டும் பார்க்கலாமே!


அவுஸ்திரேலியா அணி இலங்கையுடன் விளையாட மறுத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என புலம்பெயர் மக்களை எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

புலம்பெயர் மக்களுக்கு அறிவுரையோ ஆலோசனையே சொல்ல தகுதி உள்ளதா என முதலில் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளட்டும்.
விளையாட்டையும் அரசியலையும் கலக்க வேண்டாம் என எமக்கு அறிவுரை கூறும் புத்திஜீவிகள் முதலில் முரளிக்கு அறிவுரை கூறட்டும்.

முத்தையா அவர்களின் திறமையான விளையாட்டை உலகமே மெச்சுகின்றது நாமும் அதற்காக மகிழ்கின்றோம் நீங்கள் சிங்கள தேசத்தின் விளையாட்டுக்கு மட்டும் விசுவாகமாக இருங்கள் போதும். தமிழர்களின் சாபங்களுக்கு ஆளாக வேண்டாம்.

தமிழர்கள் ஒரு போதும் உங்களை சிங்கள அணியை விட்டு விலகி வரச்சொல்லி கேட்டதில்லை. உங்களுடன் சேர்த்து ஒட்டுமொத்த அணியையுமேதான் நாம் புறக்கணிக்கின்றோம்.

இறுதியாக முத்தையா முரளிதரன் அவர்களுக்கு நாம் சொல்வது புலம்பெயர் மக்களை நோக்கி உங்கள் சுழல்ப் பந்தை வீசாதீர்கள்

Comments