“கொல்வதற்கான உரிமையை வழங்கினார் கோத்தாபய“ – இறுதிப்போரில் பங்கேற்ற படைஅதிகாரியின் பதறவைக்கும் வாக்குமூலம்

சிறிலங்கா அதிபரால் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டு சரணடையும் தமிழ்ப் போராளித் தலைவர்களின் கதையை முடித்து விடுமாறு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்குப் பணித்திருந்ததாக சனல்-4 தொலைகாட்சியிடம் சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.


அதேவேளை, 58வது டிவிசனில் பணியாற்றிய மற்றொரு சிறிலங்கா இராணுவ அதிகாரி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வேலையை முடித்து விடுமாறு பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்கு கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.

இது படையினர் கொலைகளைச் செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனல்-4 தொலைக்காட்சி சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான மேலும் இரண்டு புதிய சாட்சிகளின் செவ்விகளை நேற்று வெளியிட்டுள்ளது.

இதில் இறுதிக்கட்டத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் படைப்பிரிவில் பங்கெடுத்த பெர்னான்டோ என்ற படை அதிகாரி, சிறிலங்கா படையினரால் பெண்களும் சிறுவர்களும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை விபரித்துள்ளார்.

அவர் சனல்-4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில் அரசபடையினரால் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் சிறிய ஆயுதங்களால் இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

“நான் வெளியில் இருந்து பார்க்கும் போது அவர்களை வெறுமனே கொடூரமான விலங்குகள் என்று தான் நினைக்கிறேன். அவர்களுடைய இதயங்களில் மனித உணர்வு இல்லை. விலங்குகள் போன்று தான் உணர்கிறேன்.

அவர்கள் பொதுமக்கள் மீது கண்டபடி சுட்டார்கள். பொதுமக்களைக் குத்தினார்கள். அவர்களின் நாக்குகளை அறுத்தார்கள். பெண்களின் மார்பகங்களை வெட்டினார்கள்.

இவற்றையெல்லாம் நான் எனது கண்களால் பார்த்தேன். சிறுவர்கள் இறந்து கிடந்ததை கண்டேன்.

பெருமளவு சிறுவர்கள் இறந்து கிடந்தார்கள். அவர்கள் அப்பாவிகள். பெருமளவு முதியவர்களும் கொல்லப்பட்டுக் கிடந்தனர்.

நீரேரியைக் கடந்து வந்தபோது பெண்கள், சிறுவர்கள் என்று பொதுமக்கள் மீது படையினர் சுட்டார்கள். அவர்கள் புலிப்போராளிகள் அல்ல. சாதாரண பொதுமக்கள். சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டதை எனது கண்களால் பார்த்தேன்.

தாயும் மூன்று குழந்தைகளுமாக ஒரு சிறிய குடும்பம் தப்பிச் சென்று கொண்டிருந்ததை நான் கண்டேன். அவர்களில் ஒரு சிறுவனின் காலில் சூடுபட்டு கிழே விழுந்தார்.

அந்தக் குழந்தையை நான் இந்தக் கைகளால் தூக்கினேன். தாயார் கதறி அழுதார். அந்தத் துன்பத்தின் மத்தியிலும் என்னை நன்றியுணர்வோடு பார்த்தனர்.

ஒரு நாள் ஆறு படையினர் தமிழ்ப் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்வதை எனது கண்களால் கண்டேன்.

தான் ஒரு நடைப்பிணம் போலவே இருக்கிறேன்.

ஒரு தமிழ் பெண்ணை வன்புணர்வு செய்ய வேண்டுமானால் அவளை அவர்களால் அடிக்க முடியும். அவளது பெற்றோர் அதைத் தடுக்க முனைந்தால் அவர்களை அடிக்கவோ கொல்லவோ முடியும்.

அங்கு அவர்களின் ஆட்சி தான் இருந்தது.

போர் முனையில் இருந்த படையினரின் இதயங்கள் கற்களாகிப் போயிருந்தன.

இரத்தம், கொலைகள், மரணம் என்று பார்த்துப் பார்த்து அவர்கள் மனிதஉணர்வுகளை இழந்து விட்டார்கள்.

அவர்களை என்னால் காட்டேறிகள் என்று தான் கூற முடியும்.

தலை மற்றும் பிற உடற்பாகங்கள் இல்லாத பெண்களின் உடல்களை நான் கண்டேன்.
இறந்து கிடந்த தாய் மற்றும் குழந்தையின் சடலங்களையும் பார்த்தேன், ஆனால் குழுந்தையின் தலை இருக்கவில்லை.

போரின் இறுதிக் கட்டத்தில் பெரும் எண்ணிக்கையான சிறுவர்களும், பெண்களும், ஆண்களும் கொல்லப்பட்டனர்.

புதுமாத்தளனில் மட்டும் 1500இற்கும் அதிகமான பொதுமக்கள் இறந்து கிடந்ததை நான் கண்டேன்.

அவை அனைத்தையும் அவர்களால் அடக்கம் செய்ய முடியவில்லை. அவற்றை ஒன்றாக அடுக்கி புல்டோசர் மூலம் மண் பரப்பி ஒரு அணைபோல அமைத்து அவை புதைக்கப்பட்டன.

புதுமாத்தளனில் 1500 சடலங்களை நான் கண்டேன். ஆனால் அதுபோல 50,000 இற்கும் அதிகமான மக்களுக்கு நடந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

போரின் இறுதிக்கட்டத்தில் நான் கடைசியாக நுழைந்த போது புதுமாத்தளன் பகுதி முழுவதும் சடலங்களாக நிறைந்திருந்தது.

அவற்றை அழிப்பதற்கு அவர்களுக்கு பாரிய வாகனம் ஒன்றைப் பெற்றனர். சடலங்களின் மீது மண்ணைப் போட்டு நிரப்பினார்கள்.

சில இடங்களுக்கு நீங்கள் செல்ல முடியாதளவுக்கு அழிந்து போன உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசும்.

அவர்கள் வெறும் அப்பாவி குடிமக்கள். போரிடும் தரப்பினருடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள்.

அவர்களின் இறப்புக்காக தான் அழுகிறேன். இப்போது அதை வெளியே சொல்ல முடிவு செய்துள்ளேன்.

ஏனென்றால் 2009 மே மாதம் கடற்கரையின் ஒரு சிறு துண்டுப் பகுதிக்குள் நடந்த கொடூரமான குற்றங்கள் குறித்து உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் நன்றாக இருக்கிறேன்.நான் பல சடலங்களைப் பார்த்துள்ளேன். காயமடைந்தவர்கள் பலரைப் பார்த்துள்ளேன். பல வன்புணர்வுக் காட்சிகளைக் கண்டுள்ளேன்.

எனது இதயத்தை திறந்து வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் நன்றாக இருக்கிறேன்.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Comments