மகிந்தவுடன் நெருங்குகிறார் ரணில்- வடக்கில் எதிர் பரப்புரை இல்லை, நம்பிக்கையில்லா பிரேரணையும் கைவிடப்பட்டது

சிறிலங்கா அரசின் இரண்டு முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கைவிட ஐதேக தீர்மானித்துள்ளது.

சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த் மற்றும் மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு எதிராகவே ஐதேக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தது.

20 ஆயிரம் தொன் தரமற்ற பெற்றோலை டுபாயில் இருந்து இறக்குமதி செய்த விவகாரத்தினால் ஆயிரக்கணக்கான வாகனங்களின் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன.
அத்துடன் இதனால் பாரிய பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இதற்குப் பொறுப்பான பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரவும்,- மின்விநியோகத்தை சீர்படுத்தத் தவறிய மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராகவும் ஐதேக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரவும் ஐதேக முடிவு செய்திருந்தது.

ஆனால் திடீரென இந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ள ஐதேக சிறிலங்கா அரசின் அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

எனினும் இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான காரணத்தை ஐதேக அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

பின்னர் இதுதொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று ஐதேக வட்டாரங்கள் கூறியுள்ளன.

அனைத்துலக நெருக்கடிகளில் இருந்த நாட்டை மீட்கவும், தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் சிறிலங்கா அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.

இதன் ஒரு கட்டமாகவே சிறிலங்காவின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கைவிடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அத்துடன் வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவதில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளார்.

கரு ஜெயசூரிய தலைமையிலான குழுவொன்றிடமே வடக்கில் பரப்புரைகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெறுவது அனைத்துலக அளவில் சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் குறைக்க உதவும் என்று ரணில் விக்கிரமசிங்க கருதுகிறார்.

இததால் தான் அங்கு ஐதேகவின் வெற்றி குறித்து அவர் அக்கறைப்படவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பலப்படுத்தும் நோக்கில் எதிர்ப் பரப்புரைகள் கைவிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ன.

Comments