யாரை அச்சுறுத்தியது சங்கிலியன் வாள்?

அதுபோலவே, அவ்வப்போது வரலாற்று நாயகர்களின் வரலாற்றை அழிப்பதற்கு சிலைகளை இடித்து அழிக்கும் நிகழ்வுகளும் நடந்தேறி வந்துள்ளன.

சென்னை மெனா கடற்கரையில் காந்தி, கண்ணகி, வள்ளுவர் என்று வசையாக 14 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இரவோடு இரவாக கண்ணகி சிலை அகற்றப்பட்டது.

சிலம்போடு நீதி கேட்கும் கண்ணகி சிலை அங்கு இருப்பது, தமிழ்நாட்டு ஆட்சிக்கு ஆபத்து என்ற சோதிட நம்பிக்கை தான் இதற்குக் காரணமாக அமைந்தது. பின்னர் கருணாநிதி ஆட்சியின் போது கண்ணகி சிலை புதிதாக நிறுவப்பட்டது. கண்ணகிக்கு சென்னையில் நேர்ந்த அவலம், இப்போது யாழ்ப்பாணத்தில் சங்கிலியனுக்கு ஏற்பட்டுள்ளது.



நல்லூர்தான் சங்கிலிய மன்னனின் இராசதானி. யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னனான சங்கிலியனின் ஆட்சியின் எச்சங்களாக இப்போது இருப்பவை மந்திமனை, சங்கிலியன் வளைவு, யமுனா ஏமரி ஆகியவை தான்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் முத்திரைச் சந்தியை உள்ளடக்கிய “நல்லூர் பிரதேசத்தின் அபிவிருத்தி' என்ற பெயரில் பண்டைய வர லாற்றுப் பெருமையை சீரழிக்கும் முயற்சிகள் இடம்பெற்றன. இதற்கு, யாழ்.மாநகரசபையும் துணை போவதாக குற்றச்சாட்டு இருந்து வந்துள்ளது.

குறிப்பாக, நல்லூர் ஆலய சூழலில் சுற்றுலா விடுதியை அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதி அதில் முக்கியமானது. இந்த விவகாரம் பெரும் பிரச்சினையான நிலையில் அந்தத் திட்டம் கிடப்பில் உள்ளது. இந்த நிலையில் தான், கடந்த புதன்கிழமை திடீரென முத்திரைச் சந்தியில் இருந்த சங்கிலியன் சிலை திரைபோட்டு மறைக்கப்பட்டு இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனின் வீரத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்த இந்தச் சிலை எந்த முன்னறிவிப்பும் இன்றி இடித்து அழிக்கப்பட்டது பலரையும் விசனத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்தச் சிலையை எதற்காக மாநகரசபை அவசரமாக இடித்து அழித்தது என்ற கேள்விக்குப் பல்வேறு பதில்களும் வரத்தொடங்கியுள்ளன.

சங்கிலிய மன்னன் வாளேந்தியபடி குதிரையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் காட்சிதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. வாளேந்தியபடி நிற்கும் சங்கிலியன் ஒரு வேளை தமிழர்கள் மத்தியில் வீரத்தை விளைவித்து விடுவானோ? மற்றொரு போரைத் தூண்டி விட்டு விடுவானோ என்ற அச்சம் அரசுக்கு வந்திருக்கலாம். அல்லது போரை வென்றவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வாளேந்தியபடி நிற்கும் தமிழ் மன்னனின் சிலை அருவருப்பாகத் தெரிந்திருக்கலாம். இல்லை, மெரினாவில் இருந்த கண்ணகி சிலையை உடைக்குமாறு ஆலோசனை கூறப்பட்டதுபோல எங்கோ உள்ள ஒரு ஜோதிடர் சங்கிலியனால் ஆட்சிக்கு ஆபத்து என்று அபாயமணி அடித்திருக்கலாம்.

எது எப்படியோ, சங்கிலிய மன்னனின் வாளேந்திய கம்பீரமான தோற்றத்துக்கு கடந்த வாரத்துடன் முடிவு கட்டப்பட்டுவிட்டது. யாழ்.மாநகரசபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றின் அடிப்படையில்தான், இந்தச் சிலை இடிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார் மாநகர ஆணையாளர். புதிய சிலையை உயிரோட்டத்துடன் இந்தியச் சிற்பி ஒருவரைக் கொண்டு அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்.மாநகரசபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றால், அதுபற்றிய தகவல்கள் எதற்காக இரகசியமாக வைக்கப்பட்டன?

இதுபற்றி பொதுமக்களின் கருத்துகளை அறிய ஏன் முயற்சிக்கவில்லை? என்று தெயரிவில்லை. ஆனால், இது சங்கிலியன் சிலையை புனரமைப்பதற்கான ஒரு திட்டமாகத் தெரியவில்லை. அது மிகவும் பழைமையான சிலைதான் என்பதை ஏற்றேயாக வேண்டும். உலகில் பழைமையான நினைவுச் சின்னங்களைப் பேணிப் பாதுகாக்கும் மரபு வளர்ச்சியடைந்து வருகிறது.

அழிக்கப்பட்ட யாழ்.கோட்டை கூட அதன் பழைமை மாறாத வகையில் மீளப் புனரமைக்கப்படுகிறது. ஆனால், சங்கிலியன் சிலைக்கு மட்டும் ஏன் இந்த அவலம்? அதே பழைய சிலையை பழைமை மாறாமல் புனரமைப்புச் செய்திருக்கலாம். அல்லது அந்தச் சிலையை வரலாற்றுத் தடயமாக வைத்துக் கொண்டு புதிய சிலையொன்றை அமைத்திருக்கலாம். இன்று சங்கிலியனுக்கு ஏற்பட்டது போன்றதொரு அவலம், தெற்கேயுள்ள துட்டகெனுவின் சிலைக்கு ஒருபோதும் ஏற்பட்டுவிடாது. துட்டகெனு வாளேந்தி நிற்கலாம் ஆனால், வடக்கே சங்கிலியனிடம் வாள் கூட இல்லாமல் பிடுங்கப்பட வேண்டும் என்ற கொள்கையே இங்கு பின்பற்றப்பட்டுள்ளது.

தமிழர் எவராயினும், அது சிலையானாலும் கூட, அவரது கையில் வாளோ அல்லது பிற ஆயுதங்களோ இருக்கக் கூடாது என்று எண்ணும் அளவுக்கு சிந்தனையோட்டம் வற்றத் தொடங்கியுள்ளது. மாநகரசபையில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும், அங்கு ஆட்சியில் இருப்பது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிதான்.

கொழும்பு எதை நினைக்கிறதோ அதை யாழ்ப்பாணத்தில் உடனடியாகவே நிறைவேற்றுகின்ற நிலைதான் இன்று உள்ளது. அரசாங்கம் எள் என்பதற்குள் இவர்கள் எண்ணெய்யுடன் வந்து நிற்கிறார்கள். எனவே, இந்தச் சிலை இடிப்புக்கான ழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்.

சங்கிலியன் சிலை உயிரோட்டமாக இல்லை என்பது போன்று மாநகர ஆணையாளன் கருத்து அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக இருந்த இந்தச் சிலையில் உயிரோட்டம் இல்லை என்று கண்டுபிடிக்க இத்தனை காலம் சென்றிருக்கிறதா?

ஏற்கனவே தமிழன் ஆயுதப் போராட்ட வரலாற்றுச் சுவடுகளை ஒன்று கூட இல்லாமல் அழித்து விட்ட அரசாங்கம் அந்த வசையில் தான் கடைசியாக சங்கிலியன் சிலை மீதும் கைவைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்னரே நெல்லியடி மத்திய மாகா வித்தியாலயத்தில் நினைவுச் சின்னமாகப் பேணப்பட்டு வந்த, முதல் கரும்புலி மில்லர் தாக்குதலில் சேதமான கட்டடத்தின் சிதைவுகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார் வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி. அத்துடன், வடக்கில் எந்தப் போர் நினைவுச் சின்னம் இருக்கக் கூடாது என்றும் அவர் பணித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகக் கூட இந்த இடிப்பு நடந்தேறியிருக்கலாம்.

சங்கிலியனை நிராயுதபாணியாக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு யாழ்.மாநகரசபை நிர்வாகம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்றில் இப்படிப் பல சிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. 1991இல் சோவியத் ஒன்றியம் உடைந்தபோது, அங்கிருந்த ஆயிரக்கணக்கான லெனின் சிலைகளும் தகர்க்கப்பட் டன. சதாமின் வீழ்ச்சியின் பின்னர் ஈராக்கில் இருந்த அவரது சிலைகள் இடிக்கப்பட்டன.

ஏன் ஆப்கானிஸ்தானில் வரலாற்றுப் புகழ்பெற்ற புத்தர் சிலைகளை தலிபான்கள் குண்டு வைத்து அழித்தனர். இப்படியாக வரலாற்றில் பல நாயகர்களின் சிலைகளுக்கு இதுபோன்ற அழிவுகள் ஏற்பட்டன. ஆனால், அதன் மூலம் லெனின், புத்தர் போன்றவர்களின் நினைவுகள் அழிக்கப்படவில்லை.

சதாம் பற்றிய பலமோசமான பக்கங்கள் இருந்தாலும், அவரைக் கொண்டாடுகின்ற நிலையில் தான் அரபுலக மக்களில் பெரும் பாலானோர் உள்ளனர். அதுபோலவே, முத்திரைச்சந்தியில் உள்ள சங்கிலியன் சிலையை உடைத்து அதன் கம்பீரத்தைச் சிதைத்து, அவரது ஆயுதத்தை அகற்றி விட, எடுக்கப்பட்டுள்ள முயற்சியும் கூட வரலாற்றில் வெற்றிபெறாது.

புதிதாக அமைக்கப்படும் சங்கிலியன் சிலைக்கு இருக்கப்போகும் புகழைவிட, இடிக்கப்பட்ட அந்த பழைய சிலையே புகழ்பெற்று விளங்கும். எத்தனையோ போர்களுக்கு மத்தியில் சிதையாமல் இருந்த சங்கிலியன் சிலை அமைதி யின் காலத்தில் அழிக்கப்பட்டு விட்டாலும், அதற்குக் காரணம் என்னவென்ற உண்மை விரைவில் வெளிவரவே செய்யும்.

இதில் ஒன்றும் அரசியல் கிடையாது, உள் நோக்கம் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்றால், சங்கிலியனின் பழைய தோற்றத்தில் புதிய சிலையும் மீண்டும் அமைய வேண்டும். அப்போதுதான், இதற்குப் பின்னணியில் எந்தச் சதியும் இல்லை, சூழ்ச்சியும் இல்லை என்பதை தமிழ்மக்கள் உறுதி செய்து கொள்வார்கள்.
- கபில்

Comments