நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனை மரணம் கொடுக்கக் காத்திருக்கும் போதும் எங்கள் உணர்வுகளை சாகடித்து விட்டு நடக்க முடியாது என்கிற உணர்ச்சி வெளிப்பாட்டை தமிழர்கள் நடந்து முடிந்திருக்கின்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
யாரெல்லாம் எமக்கு மரணம் கொடுத்தார்களோ அவர்களெல்லாம் புனிதர்களாகி வந்தபோதும், நாங்கள் சிந்திய இரத்தம் உறையும் முன்னர் தாய் மண்ணை முத்தமிடுவதாய் கூறிக்கொண்டு எங்கள் இரத்தத்தை சுவை பார்த்தவர்கள் மீட்பர்களாய் மாறி வந்தபோதும், எங்கள் உணர்வுகளை சாகடித்து விட்டு நடக்க முடியாது என்கிற உணர்ச்சி வெளிப்பாட்டை தமிழர்கள் நடந்து முடிந்திருக்கின்ற உள்ளுராட்சி சபைத்தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
குழந்தைக்கும், தாய்க்கும், தந்தைக்கும் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைக்கப்பட்டது. உங்கள் ஆட்சி முடிந்து விட்டது. இப்போது எங்கள் ஆட்சி நடக்கிறது. இப்போதும் ஆடினால் நாயைப்போல் சுடப்படுவாய் தெருவில், இதுதான் இப்படித்தான் அதிகாலை வேலிகளைப் பிரித்துக்கொண்டு முகமூடிகளுடன் ஏ.கே47 தாங்கி வந்தவர்கள் சொன்னார்களாம். எங்கேயோ…! எப்போதோ கேட்டது போன்றதொரு ஞாபகம் வருகிறது. இதுதான் இலங்கையில் முடிந்து விட்டதாய் சொன்னார்கள்.
ஆனால் இப்போதும் உயிரோடு இருக்கின்றது. ஆகவே தமிழர்கள் பிரிந்து வாழ தமிழீழம் கேட்டதில் என்ன தவறிருக்க முடியும்? தந்தையை, தாயை, மகளை நான்குபேர் பிடித்து வைத்திருக்க ஒரு பல்கலைக்கழக மாணவனை வீட்டு முற்றத்தில் போட்டு காட்டுமிராண்டித்தனமாக ஒரு கொலைகாரனைப் போல் சுற்றி நின்று அடித்தார்கள். இது இந்தியன் ஆமி காலத்தில் நடந்த சம்பவத்தின் கதையல்ல, கடந்த 22ம் திகதி கிளிநொச்சியில் நடந்த சம்பவம். நம்பமுடியவில்லைத்தான் எம்மாலும் முதலில், நம்பித்தான் ஆகவேண்டும் என்று உணர்ந்து கொண்டோம்.
சம்பவ இடத்திற்கு சென்று அந்த மக்களுடன் பேசியபோது, நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது வெறிநாய்களைப்போல் சிலர் அங்குமிங்கும் ஒடித்திரிந்து நாங்கள் யார்? என்ன செய்கிறோம் என அவதானித்துக் கொண்டிருந்தபோது. இதுதான் எல்லாம் முடிந்த தேசத்தில் நடந்து கொண்டிருக்கும் கதை.
25 அமைச்சர்கள் 325 கோடியுடன் கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் முகாமிட்டார்கள். தமிழர்களுடைய தன்மானம் என்ன விலை? முள்ளிவாய்க்காலில் நாங்கள் செய்த வெறித்தனத்தை மறப்பதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே.
ஒன்றை மட்டும் மறந்துபோனார்கள் அவர்கள். கொடுத்தது வலி மட்டுமல்ல, வடுவும்தான் அது தமிழன் என்றொரு இனம் வாழும் வரைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதை.
தாயை, தந்தையை, பிள்ளையை, மனைவியை, கணவனைப் பறிகொடுத்தவன் மறப்பானா? நடந்தது எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் என்ற வார்த்தையும், உயர்த்திய கைகளும், சிரித்த முகமும், நாங்கள் உங்கள் நண்பன் என்ற வார்தைகளும் முள்ளிவாய்க்காலில் தமிழன் சிந்திய இரத்ததிற்கு ஈடாகுமா?
இன்றும் கூட தமிழர்கள் மீது புரிந்த வெறித்தனத்திற்க்கு மன்னிப்புக்கோர முடியாதவர்கள், வாழவேண்டிய பிள்ளைகள் கண்கள் கட்டப்பட்டு கோழைகள் கைகளில் உள்ள துப்பாக்கிகளால் கொல்லப்படுவது கண்டு மனம்வருந்த முடியாதவர்கள், எப்படி எங்கள் நண்பனாகமுடியும்? எப்படி எங்கள் சகோதரனாக முடியும்? இதைக்கூட உணர்ந்து கொள்ள முடியாத மடையர்களாக தமிழர்கள் இருந்து விடுவார்கள் என்ற மமதைக்குத்தான் தமிழர்கள் சொல்லிக் கொடுத்தார்கள் சரியான பாடம்.
தேர்தலுக்கு முதல்நாள் இரவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன, ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டது, மதுப் போத்தல்கள், தீப்பெட்டிகள், இராணுவத்தினரால் கொடுக்கப்பட்டது, ஒரு வாக்குச் சீட்டு 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரைக்கும் விலை பேசப்பட்டது.
வாக்குச் சாவடிக்கு மிக அருகில் புலனாய்வாளர்களும், சிவில் உடையில் இராணுவத்தினரும் நின்று கொண்டு வெற்றிலைக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டு நின்றார்கள்,
நள்ளிரவு கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி, மாயவனூர், சம்புக்குளம், மலையாளபுரம், பராதிபுரம், கோணாவில், கனகாம்பிகைக்குளம், போன்ற பகுதிகளுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் சுமார் 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுக்களைப் பறித்தார்கள்.
வீட்டில் தனித்திருந்த பெண்ணின் தலைமுடியை ஜன்னலால் பிடித்து இழுத்து தங்கள் வெறித்தனத்தைக் காட்டினார்கள். வீடுகளுக்கு அலவாங்குகளால் குத்தி வீட்டில் இருந்த பொருட்களைக் கொள்ளையடித்து அடக்குமுறையின் உச்சத்திற்கே போனார்கள், ஆனால் அடக்குமுறைக்கும் உங்கள் வெறித்தனத்திற்க்கும் அடங்கி அழுத தமிழன் இதே நாளில் (23ம்திகதி) 1983ம் ஆண்டு இறந்துபோய்விட்டான். பின்னர் தமிழன் யார்? எப்படியானவன் என்று சொல்ல நீங்கள் இடித்தாலும் மாவீரர் துயிலுமில்லங்கள் சாட்சி.
இப்போது நாமும் சாட்சி. தமிழ்த் தேசியம் தமிழரின் தாயகத்தில் பெரு வெற்றி பெற்றிருக்கின்றது. தமிழன் சுதந்திரமாக வாழ விரும்புகிறான் என்பதற்கு இதுவொரு சிறந்த சமிக்ஞை. இதில் எங்கள் மக்களும் பலர் விரும்பியோ விரும்பாமலோ அரசிற்கு வாக்களித்திருக்கிறார்கள். இவர்களுக்காக பரிதாபப்பட மட்டும்தான் நம்மால் முடியும்,
வாக்குப் பெட்டிக்கு அண்மையில் செல்லும்போது கண்முன்னே துடித்துத் துடித்து இறந்தவர்கள், இறந்த பிள்ளையை தூக்கிப் புதைக்க முடியாமல் மணல்தரையில் விட்டு வந்தது, உடல் சிதறிப்போய் கிடந்த பிள்ளை என எமக்கு நடந்த கொடுரங்கள் கண்முன்னே வராதுபோனது துன்பம்தான்.
ஆனால் இந்தத்தேர்தல் மூலம் நாம் ஒரு யதார்த்ததை உணர்ந்த்தியிருக்கின்றோம். புலம்பெயர் மக்களே, தமிழக சொந்தங்களே, நாங்கள் முள்ளிவாய்க்காலில் சிந்திய இரத்தம் இன்னமும் உறையாமலிருக்கின்றது. நீங்கள் உறையும் பனியிலும், கொழுத்தும் வெயிலிலும் நின்று எமக்காக போராடிக் கொண்டிருப்பதால். தாயகத்தை நேசிப்பவன் தாயகத்திற்க்காக வாழ்பவன் இன்னமும் உயிரோடு இருக்கிறான்.
புலம்பெயர் சொந்தங்களே, தமிழக உறவுகளே உரத்துக் குரல் கொடுங்கள். விதி வெல்ல வாக்களித்தோம் வலி தந்தாரை தோற்கடித்தோம்….!
தாயத்திலிருந்து…
சுதந்திரன்.
suthanthiran86@gmail.com
Comments