இவற்றுக்கும் அப்பால் இவர் ஒரு திரைப்பட இயக்குநரும்கூட. (கர்நாடக) மாநில விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது படம், தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக புறமொதுக்கப்பட்டதை ஜீனியர் விகடன் இதழ்கூட பதிவு செய்திருந்தது.
அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் ஈழத் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு எதிரான கர்நாடகத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பதிவு செய்வதற்காக வந்திருந்தார். சிறீலங்காவின் இனவெறியன் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி கர்நாடகாவைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் கையப்பங்களையும் சேகரித்து எடுத்துவந்திருந்தார். ஜெனீவா செல்வதற்கு முன்பாக பரிஸ் வந்திருந்த அவர், பிரான்சில் நடைபெற்றுக்கொண்டிருந்த தமிழ் மொழிப் பரீட்சை குறித்துக் கேள்விப்பட்டு அதனைப் பார்வையிடுவதற்காக மண்டபத்திற்கு வந்திருந்தார்.
அருகில் தமிழகம் இருந்தும் கர்நாடாகாவில் தமிழ்ப் பாடசாலைகள் மெல்ல மெல்ல அழிந்துபோய்க் கொண்டிருக்கும் நிலையில் இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்துவந்து தாய் மொழியைப் பாதுகாக்கும் தமிழ் மக்களைப் பார்த்து தான் பெருமைப்படுவது மட்டுமல்ல, பொறாமைப் படுவதாகவும் தெரிவித்தார். இத்தனை ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட தமிழ் மொழிப் பரீட்சை குறித்து தனது வியப்பையும் வெளியிட்டார். ஜெனீவா பயணத்தின் பின்னர் அங்கிருந்து நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கும் சென்றும் இந்தக் கையப்பப் பிரதிகளின் நகலை ஐக்கிய நாடுகள் தலைமையகத்திலும் ஒப்படைக்கப்போவதாக கூறிய அவரை ஊடக இல்லத்திற்கு அழைத்துவந்து செவ்வி கண்டோம்.
கேள்வி:- உங்களின் வருகை பற்றி சொல்லுங்கள்....
பதில்:- நான் கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரில் பிறந்தவன். அங்கு திரைப்படத்துறையில் அதாவது கன்னடத் திரைப்பட இயக்குனராக இருக்கின்றேன். இதுவரைக்கும் ஆறு கன்னடத் திரைப்படங்கள் எடுத்துள்ளேன். தமிழீழத்திற்கு அடுத்தபடியாக அதிக துன்பங்களைச் சுமப்பவர்களாக இருப்பவர்கள் கர்நாடகத் தமிழர்களாகத்தான் இருக்கமுடியும். இன்னும் இரண்டாம் பட்சமாகத்தான் இந்த மாநிலத்தில் எங்களைப் பார்க்கிறாங்கள். இந்தியன்னு சொன்னாக்கூட தமிழன்னு சொல்லி பிரிச்சுப்பார்க்கின்ற பிரச்சினை நடந்துகொண்டுதான் இருக்கு. நான் இங்குவந்ததுக்கு முக்கியமான காரணம் கர்நாடகத் தமிழர்கள் ‘வோய்ஸ் ஒப் தமிழ் அலெயன்ஸ்’ என்ற ஒரு உணர்வுபூர்வமான இயக்கத்தை உருவாக்கி ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் நவநீதம்பிள்ளையைச் சந்தித்து மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 25 ஆயிரம் கர்நாடகத் தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய ஆவணத்தை ஒப்படைக்கவுள்ளேன்.
ஐ.நா. நிபுணர்குழுவினரின் போர்க்குற்ற அறிக்கைப்படி சர்வதேச நீதிமன்றத்தில் கண்டிப்பாக ராஜபக்சவுக்குத் தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டும். தமிழீழத்திற்கு ஒரு சரியான தீர்வை வழங்கவேண்டும். தமிழீழத்தை நாம் கண்டிப்பாக அடையவேண்டும் என்ற ஒரேயரு நோக்கத்திற்காக நான் இங்கு வந்திருக்கின்றேன். 6ம் திகதி திங்கட்கிழமை ஜெனீவாவில் கையளித்தபின்னர், அடுத்தபடியாக அமெரிக்கா சென்று நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் அதன் செயலாளர் பான் கீ மூனைச் சந்தித்து அதன் நகலை ஒப்படைக்கவுள்ளேன். கர்நாடகத் தமிழர்களைப் பொறுத்தளவில் ஒட்டுமொத்தமாகத் தமிழீழத்தை ஆதரிக்கின்றார்கள். தேசியத் தலைவரை நேசிக்கின்றார்கள். தேசியத் தலைவரின் வழியில் செல்கிறார்கள். நம்முடைய ஒற்றுமையும் நம்முடைய நேர்மையும் விடாமுயற்சியும் நிச்சயமாக நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும். அந்த நம்பிக்கையோடு நாம் இருப்போம்.
கேள்வி:- இங்கு வந்தபின்னர் உங்கள் உணர்வு எப்படி உள்ளது?
பதில்:- நான் ஈழமுரசுக்கு முதல் நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்றேன். காரணம் இங்குள்ள உணர்வாளர்களைப் பார்த்து பேசிய பின்னர் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நான் பிரான்சில் இரண்டு தினங்களாக பல உணர்வாளர்களைச் சந்தித்துள்ளேன். இன்னும் பலரைச் சந்திக்க ஆவலாக உள்ளேன். அவர்களின் உதவியுடன்தான் நான் ஜெனீவா மற்றும் நியூயோர்க் வரை செல்லவுள்ளேன். இன்னொரு விடயத்தை நான் இங்குகுறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். பிரான்சைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக உள்ளது. காரணம் இங்கு ஐரோப்பிய ஒன்றியம் வரை தமிழ் இன ஆதரவுவந்து மிகப்பெரிய அலையாக உள்ளது. இதைப் பார்க்கும்போது எங்களுக்கு உங்களை எல்லாம் பார்த்துப் பொறாமையாக இருக்கின்றது. இந்தச் செய்தியை நான்போகின்ற நாடுகளுக்கெல்லாம் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் வேறு மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துச் செல்வேன். இது எனக்கு மகிழ்ச்சியையும் சிறந்த ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது.
கேள்வி:- நீங்கள் கர்நாடகாவில் நடத்திய தமிழீழ ஆதரவு நிகழ்வுகள் பற்றி...?
பதில்:- இந்தியாவில் மத்திய அரசாலும் கருணாநிதி அரசாலும் தமிழர்கள் பொங்கி எழாமலும் போராட்டம் நடத்தாமலும் ஒடுங்கிக் கிடந்த நேரத்தில் நான் இந்தியாவில் முதன்முறையாக கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரில் ஒரு இலட்சம் தமிழர்களை தமிழ்ச்சங்கம் சார்பில் கூட்டினேன். அதற்கான முதற்படியை பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற நிலையில் ஆரம்பித்து விட்டு, இன்றைக்கு வரைக்கும் பல போராட்டங்களை முன்னெடுத்திட்டுப் போறோம்.
இதில முக்கியமாக இலங்கைக்கான தூதுவர் அம்சா 2009 பெப்ரவரி மாதம் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கொண்டாட பெங்களூர் வந்தாரு. ஏனென்றால், தமிழ்நாட்டில இடம்கொடுக்க மாட்டாங்கன்னுதான் எங்க இடத்துக்கு வந்தார். அங்கு ஒரு ஆயிரம் சிங்களவர்களை வைத்து சுதந்திர தினத்தைக் கொண்டாட திரண்டிருந்தாங்க. மூன்று கட்டப் பாதுகாப்புப்போட்டு யாருமே அங்கு நுழையாதவாறு அரசாங்கமே அந்த நிகழ்வுக்கு அனுமதி கொடுத்திருந்தது. அது எங்களுக்கு எப்படியோ கசிந்து வெளியில் தெரியவந்துவிட்டது.
அந்த சுதந்திரப் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக நாங்கள் பல அமைப்புக்களையும் சேர்ந்த உறுப்பினர்களைத் திரட்டி சிறு சிறு குழுக்களாக அந்த நிகழ்வு நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டோம். அப்போது நானும் மற்றொரு கன்னடப் பட துணை இயக்குனரும் யாருக்கும் தெரியாமல் மூன்று கட்டப் பாதுகாப்பையும் மீறி திரைப்பட இயக்குனர் என்ற பெயரில் உள்ளே போனோம்.
அப்போது அங்கு நின்ற இலங்கைத் தூதுவர் அம்சாவுக்கு எமது காலணியைக் காண்பித்தும் கறுப்புக்கொடியைக் காண்பித்தும் உங்களுக்கு சுதந்திரம் ஒரு கேடா என உணர்ச்சியுடன் கத்தினேன். உடனே காவல்துறையினர் எம்மைக் கைதுசெய்து சிறையில் வைத்தனர். இரண்டு நாட்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டோம். அன்று முதல் அங்கு நடக்கும் போராட்டங்களையெல்லாம் நாம்தான் முன்னெடுத்தோம்.
அதற்குப் பின்னர் காசி ஆனந்தன் ஐயா, பழநெடுமான் ஐயா, சீமான் அவர்கள் எனப் பலரும் எங்க பகுதிக்கு வந்தாங்க. அவங்க போராட்டங்களுக்கு நாங்க ஆதரவு வழங்கினோம். தொடர்ந்து தமிழ்நாட்டில நடைபெற்ற தேர்தல்ல காங்கிரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினோம்.
கேள்வி:- நீங்கள் ஒரு இயக்குனராக எமது தமிழீழம் சார்ந்த படங்கள் ஏதாவது உருவாக்கியுள்ளீர்களா?
பதில்:- நான் இதுவரை ஆறு கன்னடப் படங்களை இயக்கியுள்ளேன். ஆனால் சமூகப் பிரச்சினை சார்ந்ததாகவே அவை அமைந்தன. அவற்றில் இரண்டு படங்களில் நான் நடித்துமுள்ளேன். நான்கு படங்கள் தோல்வியைச் சந்தித்தன. சினிமாவுக்காக நான் கோடிக்கணக்கில் இந்தியப் பணத்தைக் கொட்டிச் செலவு செய்துள்ளேன். எனது நீண்ட நாள் கனவு தமிழீழம் பற்றி படம் பண்ணவேண்டும் என்று, அதற்கு கதையும் தயாராக வைத்துள்ளேன்.
சயனைட்(குப்பி) என்ற ஒரு படம் எடுத்தாரு ஒரு இயக்குனர். அவர் கன்னட இயக்குனர். நான் சொல்வதென்னவென்றால், தமிழ்மொழி தெரிந்தவர்கள் எமது தாயகம் சார்ந்ததாக எடுக்கவேண்டும். அவ்வாறான படம்தான் தமிழீழம் நோக்கிய பாதையை மக்களிடம் கொண்டுசெல்லும் என்பது எனது நம்பிக்கை. என்னிடம் கதையுள்ளது. அதற்கு யாராவது முதலீடு செய்ய முன்வரும் பட்சத்தில் ஒரு பைசா நட்டமடையாமல் அந்தப்படத்தில் வெற்றிபெறமுடியும். ஏனென்றால், அவ்வாறான படங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர்.
இன்றைக்கு பன்னிரண்டுகோடி மக்களுக்கு ஒரு தலைவரென்றால் அது நம்ம தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்தான் என்ற எண்ணம் மக்கள் மனங்களிலே பொதுவாகப் பதிந்துள்ளது. வெகுவிரைவில் தமிழீம் பற்றிய, தமிழுணர்வுமிக்க படங்களை இயக்குவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
கேள்வி:- உங்களின் இலட்சியப் பயணம் ஈடேற எங்கள் வாழ்த்துக்கள். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு எமது ஊடகத்தின் வாயிலாக என்ன சொல்ல விரும்புகின்
றீர்கள்?
பதில்:- தமிழர்கள் வந்து எந்தவிதமான கருத்து வேறுபாடுமில்லாமல், கருத்துவேறுபாடுகளைக் களைந்து, நேற்றுவரை, இந்த நிமிடம்வரை எங்களுக்கு கெடுதல் செய்பவர்களாக இருந்திருந்தால், எமக்குத் தொந்தரவு செய்தவர்களாக இருந்திருந்தால், எம்மைப் பிரிக்கக்கூடிய சக்திகளாக இருந்திருந்தால் அவர்கள் திருந்தி தமிழீழம் என்ற ஒரேயரு உறுதியோடு நாம ஒரு வழியில் நின்றோமென்றால் நிச்சயம் அந்தத் தமிழீழத்தை அடைவோம். கண்டிப்பாக எங்கள் தலைவர் நம்ம முன்னாடி வருவாரு அந்த வழியை உருவாக்க வேண்டிய கடமை நமது கையில்தான் இருக்கு. இந்த இலட்சியத்தை தன்னுடைய இலட்சியமாகக் கருதி ஒவ்வொரு தமிழனும் இந்தப் பயணத்தை முன்னெடுக்கவேண்டும் என்பதுதான் எனது பணிவான வேண்டுகோளாகும். அத்துடன் இன்னொரு முக்கியமான விடயத்தையும் இங்கு நான் சொல்கிறேன், இந்தியாவைச் சேர்ந்த உத்தம் சிங் என்கின்ற ஒரு 12 வயதுச் சிறுவன், ஜாலியன்வாலாவில் நடந்த ஒரு மிகப்பெரிய கலவரத்தில் குருவியைச்சுடுவது போல சுதந்திர போராட்ட வீரர்களைச் சுட்டாங்க. அகிம்சை வழியில, காந்திய வழியில போறவங்களை சுட்டாங்கள். 12 வயதில இதைப்பார்த்த உத்தம் சிங் 21 வருடங்கள் காத்திருந்து தனது 33 ஆவது வயதில் இந்தியாவில் இருந்து இலண்டன் சென்று அதற்குக் காரணமானவனைக் கொன்றான். இதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். தமது உள்ளத்திலை பதியவைக்கவேண்டும்.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தை அழித்தவனை, மூவாயிரம் மக்களைக் கொன்றவனை நாங்கள் சுட்டுக்கொன்னிட்டோம். எமக்கு நீதிகிடைச்சிட்டு என்று அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒபாமாசொன்னாரு. ஆனால், சிங்களவன் அறுபதாயிரம் மக்களைக் கொன்றிருக்கிறான். நமக்கு எப்போ நீதிகிடைக்கப் போகின்றது? அவனுக்கான தண்டனை எப்போ கிடைக்கும்? அதற்கு நாம என்னசெய்யவேண்டும்? உறங்காமல் நாம விடாமுயற்சியுடன் போராட்டங்களை முன்னெடுத்து நாம ஒற்றுமையாக செயற்பட்டோமென்றால், கண்டிப்பாக இது ஈடேறும். தமிழன் யாருக்கும் சளைத்தவனல்ல. அவன் கோழையல்ல என்ற உணர்வுடன் ஒவ்வொருவரும் செயற்படவேண்டும் என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நன்றி - ஈழமுரசு
Comments