அதோ அந்தப் பறவை போல...

சிலவேளைகளில் மௌனத்தைப்போல ஆழமான மொழி வேறெதுவும் இல்லாமல்இருக்கும். ஆயிரம் வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வை ஒருசில நிமிட மௌனம் உயிர்ப்பாக வெளிப்படுத்திவிடும்.

இன்றைக்கு இருபத்திஏழு வருடங்களுக்கு முன்னர் 1983ம்ஆண்டின் இதே யூலை மாதத்து 15ம் நாளில் நீர்வேலியில் ஒருஆசிரியரின் வீட்டில் அமைந்திருந்த தங்குமிடம் ஒன்றின் அறையில் அமர்ந்திருந்த தேசிய தலைவருக்கும் சில போராளிகளுக்கும் முன்னால் இரத்தம் வடியும் கைகாயத்துடன் நின்றபடி ‘அருணா’ சொன்னதைக் கேட்டதும் சோகம், இழப்பு, பிரிவு, கவலை என்பவற்றைவிட நீண்ட மௌனமே நிலவியது. உயிரை உலுக்கும் மௌனமாக அது இருந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தாக்குதல் பிரிவுத் தளபதி ‘சீலன் வீரமரணம்’. எல்லோருடனும் அன்பாக நட்புடன் பழகும் சீலனின் மரணத்தை கேள்விப்பட்ட அந்தக் கணத்தினதும் அதன்பின் நீண்ட நிமிடங்களான மௌனமுமே அவனின் மரணத்தின் வலியை காட்டிநின்றது.

சீலன்.பார்க்கும் முதல்க்கணத்திலேயே மனதுக்கு அண்மித்து வரக்கூடிய பேச்சும் பழக்கமும் தோற்றமும் அவனுக்கு. எழுபதுகளின் இறுதியில் திருமலையில் இருந்து இயக்கத்துக்கு வந்தவன். ஆனால் சீலன் இயக்கத்துக்கு வர முன்னரேயே அவனின் சிங்களதேசக்கொடி எரிப்பு பற்றிய நுணுக்கமான திட்டமிடலும், வீரமும் அமைப்புக்குள் அதிகமாக பேசப்பட்டதாக இருந்தது.
சீலன் பற்றி தலைவர் காணொளில்



ஆதலால் சீலன் இயக்கத்துக்கு வரும்போதே அதிகம் அறியப்பட்டவனாகவே வந்து சேர்ந்தன். திருமலை பாடசாலையில் ஏற்றப்பட்ட சிங்களதேசகொடிக்குள் ‘பொசுபரசை’ எப்படி வைத்தது என்பதே அவனை முதலில் பார்த்து பழகும் இயக்க உறுப்பினர்கள் கேட்கும் கேள்வியாக இருந்தது. அவனும் சலிப்பு இல்லாமல் எல்லோருக்கும் அழகாக சொல்லியும் காட்டுவான்.

இயல்பாகவே சீலனுக்குள் உறுதியான இலட்சியப்பற்றும் மக்கள் மீதான புரிதலும் நிறைந்தே காணப்பட்டது. அவன் தனது பாதைபற்றியும் அதனிடையேயான பெரும் வலிகள் பற்றியும் மிகத்தெளிவாக புரிந்தவனாகவே இருந்தான். இதைவிட வேறு பாதை எதுவும் இல்லை என்பதிலும் அவன் குழப்பமின்றியே இருந்தான். அவன் எந்தப்பொழுதிலும் அறைக்குள் சுருண்டு கிடந்ததையோ விரக்தியுடன் பேசாமல் இருந்ததையோ எவருமே பார்த்திருக்க முடியாது. செயல் மட்டுமே அறிந்த ஒரு மறவன் அவன். அதிகாலை எழுந்து முதல் இரவு படுக்கபோகும் வரைக்கும் விடுதலைக்கான ஏதாவது ஒரு வேலைத்திட்டம் சம்பந்தமாகஅசைந்துகொண்டே இருந்தவன்.

ஒன்றில் தாக்குதலுக்கான தரவுகள் எடுக்கும் பணியில் அலைவான். இல்லையென்றால் தாக்குதலில் எடுத்த ஆயுதத்தை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக வைப்பதில் திரிவான். அதுவும் இல்லையென்றால் யாராவது ஒருவருடன் விடுதலைப்போராட்டத்தின் அவசியம் பற்றி பேசிக்கொண்டு நிற்பான். அவனின் பேச்சும் முழுமூச்சும் தாயக விடுதலையே என்று இருந்தது.

இரண்டு முறை பெரிய காயங்களை அவன் போராட்ட வாழ்வில் பெற்று சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த காலத்தைத் தவிர்ந்த அனைத்து தாக்குதல்களிலும் தலைமையாளனாக நின்றவன் சீலன். விடுதலைப் போராட்டத்தின் வளைவுகளில் இருந்து வேகம் பெறவும் தடைகளை நீக்கவும் பின்னர் வந்த காலங்களில் தலைவரால் அறிமுகம் செய்யப்பட்ட ‘தற்கொடை’ முறையை முதலில் அமைப்புக்குள் ஒரு திட்டமாக வெளிப்படுத்தியவன் லெப்.சீலன் ஆகும்.


1982ம் ஆண்டில் சென்னையில் தலைவருக்கும் உமாமகேஸ்வரனுக்குமான
பாண்டிபஜார் துப்பாக்கி மோதலில் தலைவர் கைதுசெய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். விடுதலைப்புலிகளின் தலைவரும் மற்றவர்களும் கைது
செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டது அறிந்து அந்நேரத்து சிங்கள சனாதிபதி ஜெயவர்த்தனா தனது சகோதரனை இந்தியாவுக்கு அனுப்பி போராளிகளை சிறீலங்காவுக்கு நாடு கடத்தும் கோரிக்கையை முன்வைத்தார். இந்தியாவும் அதை பரிசீலிப்பதாக சொல்லி இருந்தநேரம் அது. அந்த நேரம் மதுரையில் இருந்த சீலன் சிறையில் இருந்த தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினான்.

’தலைவரை சிறீலங்காவுக்கு அனுப்பும் முடிவை இந்தியா எடுத்தால் அதை எதிர்த்து கடிதங்களையும், துண்டுப் பிரசுரங்களையும் எடுத்துச்சென்று சென்னையின் மிக உயர்ந்த கட்டிடமான ‘எல்.ஐ.சி’ க்கு மேல் இருந்து குதிக்ப்போவதாக அதில் குறிப்பிட்டு இருந்தான். போராட்டத்தை தேக்கநிலையில் இருந்து மேல் தள்ளும் கரும்புலிகளின் போர்முறை போலவே முதலில் இது சீலனால் வெளிப்பட்டது. தமிழர்கள் பலமற்று இருப்பதால்தான் எதிரி எம்மீது கொடும் வெறியாட்டத்தை ஏவிவிடுகிறான். பலமான இனமாக எமது இனம் மாறவேண்டுமானால் ஆயுதங்களை எதிரியிடம் இருந்து பறிக்கவேண்டும் என்று பாடுபட்டவன்.


பொன்னாலை பாலத்தில் கடற்படை வாகன அணிமீதான தாக்குதல் முயற்சி,
நெல்லியடி சந்தியில் சிறீலங்காகாவல்துறை வாகனம்மீது தாக்குதல், சாவகச்சேரிகாவல் நிலையம் மீதான தாக்குதலும் தகர்ப்பும், முதன் முதலில் சிங்கள ராணுவம் மீது விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதல், கந்தர்மடம் வாக்குசாவடி மீதான தாக்குதலும் ராணுவ அழிப்பும்... என்று மிகநீளமானது அவனின் களவரிசை.

தாக்குதலுக்கான அனைத்து வளங்களையும் அவனே முன்னின்று செயற்படுத்துவான். தாக்குதலுக்கான நாள் முடிவானது முதல் நித்திரை இல்லாமலும் ஓய்வு இல்லாமலும் சீலனும் அவனின் சைக்கிளும் இயங்கிக்கொண்டே இருக்கும். எல்லா நடவடிக்கைகளிலும் ஒப்புவமை இல்லாத வீரத்தையும் நுண்அறிவையும் வேகத்தையும் காட்டிவன் சீலன். எமது மக்கள் அனைவருக்கும் போராட்டத்தின் அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்படவேண்டும் என்பதில் மிகவும் விடாப்பிடியாக செயற்பட்டவன்.

சிங்களபடைகளால் மிகவும் தேடப்பட்டவனாக அவன் விளங்கிய காலத்தில்கூட தினமும் பல்கலைகழகத்தினுள் சென்று அங்கும் யாருனாவது போராட்ட நடைமுறை பற்றியும் நகர்வு பற்றியும் கதைத்துக்கொண்டிருந்தவன் சீலன். அவன் மரணிப்பதற்கு ஆறு ஏழு மாதங்களுக்கு முன்னர் தலைவருக்கு இந்தியாவுக்கு எழுதிய கடிதத்தில் ‘போராளிகளை பார்த்து ஒதுங்கிய மக்கள் எல்லோரும் இப்போது போராளிகளாக மாறிவருகின்றனர்’ என்று எழுதிய கடிதத்தில் எமது மக்களின் தெளிவுபற்றிய அவனின் பார்வை புலப்படுகின்றது.

அவனின் போராட்ட வாழ்வில் அவன் மிகவும் அலைக்கழிந்தது அறைகள் எடுப்பதற்காகத்தான். தேடப்படும் போராளிகள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஏதாவது தங்குமிடம் தேவை. வீடுகளை வாடகைக்கு எடுக்க முடியாத பொருளாதார நிலை அமைப்புக்கு அப்போது. அறைகள்தான் எடுக்க முடியும். அதுவும் பல்கலைக்கழகத்தில் படிப்பதுபோன்று, அல்லது வேறு படிப்பு படிப்பது போன்றுதான் எடுக்கக்கூடிய நிலை. எடுக்கும் அறையில் எந்த நேரமும் இருந்தால் வீட்டு உரிமையாளனுக்கு சந்தேகம் வரும். வேறு யாரும் அடிக்கடி வந்து போனாலும் பிரச்சனைதான். இதனால் எந்த இடத்திலும் தொடர்ச்சியாக நீண்டகாலம் தங்கி இருக்க முடிந்ததில்லை.

அப்பையா அண்ணை இயக்கத்துக்கு வந்த பின்னர் அவரை ‘சித்தப்பா’,பெரியப்பா என்று உறவுசொல்லி அறைகளை வாடைக்கு எடுக்க முடிந்தது. இப்படித்தான் ஒருமுறை தேங்காய் வியாபாரம் செய்பவர்கள் என்று சொல்லி அரியாலைப்பகுதியில் ஒரு வீட்டின் அறைகளை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். ஒரு சிறிய பச்சைநிற வாகனத்தில் தேங்காய்களை வாங்கி
உரித்து சந்தையில் விற்பவர்கள்போல சீலனும், அப்பையா அண்ணையும், சங்கரும் வேறும் ஓரிரண்டு போராளிகளும் அங்கு இருந்தார்கள். ஆனாலும் வீட்டு உரிமையாளரின் பையனுக்கு இவர்கள்மேல் ஏதோ ஒரு சந்தேகம் அல்லது ஈர்ப்பு. அவனின் கண்ணுக்கு எதுவும் தவறாக தெரியாது வண்ணமே சீலன் தனது நடவடிக்கைகளை தினமும் மேற்கொண்டிருந்தான்.

வீட்டு உரிமையாளரின் பையனுக்கு இவர்கள் யாரொன்ற விபரம் தெரிந்துவிட்டால் அதன் பின்னர் அங்கு தொடர்ந்து இருப்பது சாத்தியமில்லை. பாதுகாப்பானதுமில்லைதான். இதனால் சீலனும் தோழர்களும் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் மிகஅவதானமாக இருந்தார்கள். எந்த நேரமும் அறையின் ஜன்னல்கள் திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கும். ஒருநாள் சீலனும்
தோழர்களும் துப்பாக்கிகளை கழற்றிப்பூட்டும்போது திரைச்சீலை விலகிவிட வீட்டு உரிமையாளரின் பையன் பார்த்துவிட்டான். சீலன் இதை கவனிக்கவில்லை. ஆனால் மறுநாள் சீலனும் நண்பர்களும் கிணற்றடியில் துணிதுவைத்துக்கொண்டு இருக்கும்போது அந்தப் பையன் ‘நீங்கள் இயக்கமா..?’ என்று கேட்டுவிட்டபோது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

எல்லாம் பிழைச்சுப்போட்டுது. இனிமேல் இவன் போய் தகப்பனுக்கு சொல்லுவான். அவர் வந்து
வீட்டால் எழுந்துபோய்விடும்படி கேட்கபோகிறார் என்றே சீலன் பயந்தான். அந்த நேரம் அரியாலைப்பகுதியில் இயக்கத்துக்கு அனுசரணையாக இருந்த கராட்டிமாஸ்ரர் ஒருவரிடம்தான் வீட்டு உரிமையாளரின் பையனும் கராட்டி பழகிக்கொண்டு இருந்தான். சீலன் அவரிடம்போய் அந்த பையனிடம் மெதுவாக பேசும்படி கேட்டுக்கொண்டான். மறுநாள் அந்த கராட்டிமாஸ்ரர் வந்து சீலனிடம் அந்தப்பையன் இயக்கத்தில் இணைந்துகொள்ள ஆர்வமாக இருப்பதை சொல்லியபோது தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனதுபோலவே அனைவரும் மகிழ்ந்தனர்.

அந்த வீட்டு உரிமையாளரின் பையன்தான் பின்வந்த நாட்களில் ‘பொட்டு’ என்றும் பொட்டு அம்மான் என்றும் அழைக்கப்பட்ட பெருவீரன் ஆவாhர். வாடகைக்கு இருக்கப்போன இடத்தில் ஒரு வரலாற்றுப்பெருவீரனை உள்வாங்கிய அந்த சம்பவத்தை போன்ற நிறைய சம்பவங்கள் இருக்கும் இடங்களில் சீலனுக்கு ஏற்பட்டது. சீலனின் தனித்த இயல்புகளில் மிகச்சிறப்பானது என்னவென்றால் எதையும் ஆழமாக முழு ஈடுபாட்டுடன் செய்வது ஆகும். இதனை அவன் தனது தாக்குதல்களின்போது மட்டும் இல்லாமல் எல்லாவிடங்களிலும் வெளிப்படுத்தியவன்.

ஒருமுறை தாக்குதல் ஒன்றின் போது மக்களுக்கு கொடுப்பட இருந்த துண்டுப்பிரசுரத்தை வடிவமைக்கவும் அதில்வரும் வசனங்களை தெரிவுசெய்வதிலும் மிக நீண்டபொழுதுகளை செலவழித்தவன். சிங்கள ராணுவவீரனுக்கு ஒரு விடுதலைப்புலி வீரனின் கடிதம் என்ற துண்டுப்பிரத்தின் ஒவ்வொரு வசனமும் சீலனின் தெரிவாகும். மக்களை தெளிவானவர்கள் ஆக்கவேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டு இருப்பான். நிறைய புத்தகங்களை வாசித்தான். அவனின் இருப்பிடம் எப்போதும் புத்தகங்களால் நிறைந்தே காணப்பட்டன.

சில வேளைகளில் ஆயுத நடவடிக்கைகளின்போதும் தாக்குதல் நடவடிக்கைகளின் போதும்கூட சீலன் அங்கு நிற்கும் பொதுமக்களுக்கு போராட்ட நோக்கம் பற்றியும் விடுதலைப்புலிகள் பற்றியும் உரத்தகுரலில் கூறத்தொடங்கிவிடுவான். ஒரு கையில் இயந்திரத் துப்பாக்கியுடன் நின்றுகொண்டு அவன் சொல்லும்போது மக்களும் ஆர்வமாக கேட்டார்கள். ஒருமுறை பருத்தித்துறையில் 1983ம் ஆண்டுப்பகுதியில் சிங்களகட்சி ஒன்றின் பொறுப்பாளர் மீதான நடவடிக்கையின்போது அருகில் இருந்த பொதுமகன் ஒருவரும் தவறுதலாக காயமடைந்தபோது நடுத்தெருவில் வீழ்ந்துகிடந்த அந்த பொதுமகனிடம் பல நூறு மக்கள் பார்த்துநிற்க சீலன் மன்னிப்புக்கேட்டதுடன் தனக்கும் போராட்டத்தின்போது
இப்படியாக தவறுதலான வெடிக்காயங்கள் ஏற்பட்டன என்று தனது காயம்பட்ட நெஞ்சை திறந்துகாட்டி விளக்கமும் சொன்னான்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒவ்வொரு சிறிய அசைவையும் வளர்ச்சியையும் அவன் மிக அவதானமாக திட்டமிட்டு செயற்படுத்தினான். தலைவருக்கு அடுத்தபடியாக இந்த அமைப்பின் வளர்ச்சியை செப்படினிட்டவன் சீலன் ஆகும். அந்த இறுதி நேரத்திலும் தமிழினத்தின் விடுதலைக்கான ஆயுதம் எதிரியின் கையில் வீழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக ‘தன்னை சுட்டுவிட்டு ஆயுதத்துடன் தப்பும்படி’ அருணாவுக்கு உத்தரவிட்டு வீரமரணத்தை மிகத்தெளிவுடன் ஏற்றுக்கொண்டவன்.

இன்றைய பொழுதும் அப்போது சீலன் போராடி யகாலத்தைப் போன்றே எதிரியால் முழுதுமாக சூழப்பட்டு உள்ளது. அன்றையபொழுதைவிட குழப்பமானதாக இன்றையநிலை இருக்கின்றது. ஆனாலும் சீலன் இப்போது இருந்தால் அன்றைய நாட்களைப் போலவே அதே உறுதியுடனும்
தெளிவுடனும் எல்லோருக்கும் வழிகாட்டி முன்னுக்கு சென்றுகொண்டிருப்பான். இன்றுவரை சீலனின் ஏதாவதுஒரு நினைவு இந்த போராட்டத்தின் ஏதாவது ஒரு அசைவில் இருந்துகொண்டே இருக்கிறது. ஏனென்றால் அவன் மிக ஆழமாகவும் உண்மையாகவும் இந்த தாயக விடுதலையை நேசித்தவன். அவனுடைய விடுதலை மீதான விருப்புத்தான் அவனை ஓய்வில்லாமல் போராடவைத்தது. அவனுக்கு நாங்கள் ஆயிரம் ஞாபகக்குறிப்புகளை பெரும் புத்தகங்களாக எழுதலாம். அதைவிடசெறிவான கவிதைகளை வடித்து அவனின் தியாகத்தை போற்றலாம். இவை எல்லாவற்றையும்விட தேசியத் தலைவர் தனது முதன் முதலான பத்திரிகைப் பேட்டியான ‘SUNDAY’ க்கு 1984ம் ஆண்டில் கொடுத்த பேட்டியில் 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி திருநெல்வேலியில் சிங்களராணுவ அணி மீது தொடுக்கப்பட்ட தாக்குலானது சீலனது மரணத்துக்கு பதிலடியா? என்று கேட்கப்பட்டபோது மிகத்தெளிவாக தலைவர் கூறுகிறார்.

‘எங்களைப் பொறுத்தவரையில் சார்ல்ஸ் அன்ரனி (சீலன்) போன்ற உன்னதப் புரட்சிவாதியின், விடுதலை வீரனின் உயிருக்கு ஒருபோதும் பன்னிரண்டு ராணுவ வீரர்களின் உயிர்கள் ஒருபோதும் ஈடாகாது’ என்று. எக்காலத்திலும் ஈடும் இணையும் இல்லா பெரும் போராளியாகவே சீலன் திகழுவான். எங்களின் மக்களுக்கு சுதந்திரவாழ்வை பெற்றுத்தரப் போராடிய அந்த வீரன் தனது பெருவிருப்ப பாடலாக எந்நேரமும் பாடிய பாடலைப்போன்றே
அவனும்..

‘அதோ அந்த பறவை போல...’

திருமலையின் ஒரு வறிய குடும்பத்தில் இருந்து சிறகுவிரித்து தாயகவிடுதலைக்காக களமாடி மீசாலை-கச்சாய் வெளியில் மரணித்த அந்த விடுதலைப் பறவையின் சிறகசைப்புகள் இன்றும் ஏதோ ஒரு வடிவில் அதிர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தாயகம் மீட்கப்படும்வரை அந்த பறவை ஓயாது.

அதோ அந்தப் பறவைபோல பாடவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம்’
- ச.ச.முத்து

Comments