இந்திய ஆட்சியாளர் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ள 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்'

இந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டுள்ள சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் வெளியீடு செய்யப்பட்ட 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப் படத்தை பார்வையிட்ட இந்திய மக்கள் மிகவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதுடன், சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த இழி செயற்பாட்டிற்கு எதிராக இந்திய அரசாங்கம் உடனடியாக பெரும் அழுத்தம் ஒன்றைப் பிரயோகித்து சிறிலங்காத் தீவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிப்பாக சென்னையிலிருந்தே சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தன. சென்னையில் காண்பிக்கப்பட்ட இவ் ஆவணப்படம் தொடர்பாக பல்வேறு தரப்பு மக்களிடமிருந்தும் கருத்துக்கள் அறியப்பட்டு அவை அத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.

இதில் நன்கறியப்பட்ட பலர் இவ்வாவணப்படம் தொடர்பான பல சூடான விவாதங்களையும் மேற்கொண்டனர். இது தொடர்பாக செய்மதி வழித் தொடர்பை மேற்கொண்டு கொழும்பிலுள்ள சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபாய மெடவலவிடம் வினவியபோது "இவ் ஆவணப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள காட்சிகள் போலியனவை" என அவர் பதிலளித்தார்.

"நான் சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்ற இந்த ஆவணப்படத்தை முழுமையாகப் பார்த்தேன். ஈவிரக்கமற்ற முறையில் தமிழ்ப் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சித்திரவதைகளைப் பார்த்தபோது இவை என் மனதை மிகவும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளன. இவற்றைப் பார்த்த பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்துலக அமைப்புக்கள் தமிழர் விடயத்தில் ஏன் மௌனம் சாதிக்கின்றன? கொல்லப்பட்ட இந்த ஆன்மாக்களிற்காக இவ்வாறு உரத்துக் குரல் கொடுக்க மட்டுமே என்னால் முடியும்" என ஜோதி என்பவர் தெரிவித்துள்ளார்.

"இவ்வாறான மிருகத்தனமான செயல்களிற்காக சிறிலங்கா அரசாங்கம் ஏதோ ஒரு வழியில் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளுமா? இவ்வாறான அட்டூழியங்களை நான் எனது வாழ்க்கையில் ஒருபோதும் பார்த்திருக்கவில்லை. இந்தக் காட்சிகளிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை" என சென்னையிலுள்ள மூத்த கல்வித்துறை ஆலோசகரான சுவரூப் [Swaroop] தெரிவித்துள்ளார்.

இவரது கருத்தே வெள்ளி இரவன்று 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' என்ற இவ் ஆவணப்படத்தைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான இந்திய மக்களின் உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடாகும்.

ஐக்கியநாடுகள் சபை மற்றும் ஏனைய பிரதான நாடுகள், சிறிலங்கா அரசாங்கத்தில் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்கான ஒரு அழுத்தமாகவே தற்போது ஒரே நேரத்தில் உலகின் பல நகரங்களிலும் 'சிறிலங்காவின் கொலைக் களங்கள்' என்ற இத்திரைப்படமானது புலம்பெயர் உறவுகளின் ஒரு புதிய பரப்புரை வடிவமாக காண்பிக்கப்பட்டு வருகின்றது.

"பயங்கரமான காட்சிகளைக் கொண்டுள்ள இத்திரைப்படம் தொடர்பாக பெரும்பாலான பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள் என்பன தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றன. தற்போது அனைத்துலக சமூகமானது என்ன செய்யப் போகின்றது என ஊடகங்கள் மிகத் தெளிவாக உரத்த குரலில் கேட்டு நிற்கின்றன" என அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து ஒலிபரப்பப்படும் இன்பத் தமிழ் வானொலியைச் சேர்ந்த பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

"தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலம் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு சார்பான பல நடவடிக்கைகளை எடுப்பதற்காக தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

சிறிலங்காத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதுடன், யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் இவ்வாறு இவை நடைமுறைப்படுத்தத் தவறும் பட்சத்தில் சிறிலங்கா மீது இந்தியா பொருளாதாரத் தடையை அமுல்ப்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாட்டு சட்டமன்றில் ஏகமனதான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு நீதி வேண்டி இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்ற நடவடிக்கைகளை ஜெயலலிதா தலைமையேற்று நடாத்த வேண்டும் என புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றது" எனவும் உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சாள்ஸ் அந்தோனிதாஸ் கோரியுள்ளார்.

யூலை 05 அன்று இடம்பெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாடானது, பிரிட்டனின் உயர் மட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் தி.மு.க தலைவர் எம்.கருணாநிதி ஈழத் தமிழர்கள் தொடர்பான தனது கரிசனையைக் காட்டத் தவறிவிட்டார். ஆனால் தற்போது தமிழ் நாட்டு முதலமைச்சரான ஜெயலலிதா, தமிழ் மக்களுக்கு ஆதரவளிப்பார் என புலம்பெயர் வாழ் தமிழ்ச் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்திய மத்திய அரசாங்கம் மீதான அழுத்தமானது இடம்பெயர் வாழ் தமிழ் மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவதுடன் தமிழ் மக்களுக்கு எதிராகக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறிலங்கா ஆட்சியாளர்களைத் தண்டிப்பதற்கும் வழிவகுக்கும்.

"இந்த வகையில் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் வெகு விரைவில் சந்தித்து அவருக்கு நன்றி தெரிவிப்போம் என நாம் நம்புகின்றோம்" என அந்தோனிதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

நித்தியபாரதி
செய்தி வழிமூலம் : Deccan Chronicle

Comments