கனடியத் தமிழர்களைப் பொறுத்த வரையில் ஜாக் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதையும் தாண்டி ஒரு நலன்விரும்பியாகவும் ஆதரவாளராகவும் அன்புக்குரிய நண்பராகவும் இருந்து வந்துள்ளார்.
எங்களின் சமூகம் துவண்டு நின்ற போதெல்லாம் எங்களுக்காக மீண்டும் மீண்டும் குரல் கொடுத்து ஆதரவளித்துள்ளார். எங்களைப் பாதித்த விடயங்கள் தொடர்பாக எங்களுடன் தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றத்தை ஜாக் மேற்கொண்டு வந்துள்ளார்.
கடந்த வருடம் கனடியத் தமிழர்கள் கனடிய புற்றுநோய் சங்கத்துக்காக நடாத்திய நிதி திரட்டும் நடையின்போதும் அவர் எங்களுடன் பங்கு பற்றி தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி அவசரகால விவாதம் ஒன்றை ஒழுங்கமைப்பதில் ஜாக்கும் அவரது கட்சியும் மிகவும் முக்கிய பங்காற்றியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கூட எமது சமூகத்தை சந்தித்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் நீதியையும் உண்மையையும் நிலைநாட்டுவதற்கு என தன்னிச்சையான பக்கச்சார்பற்ற விசாரணை நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என ஒரு தீர்மானத்தை வன்கூவரில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில புதிய ஜனநாயகக் கட்சி நிறைவேற்றியிருந்தது.
அத்துடன் மட்டுமல்லாமல் அரசியல் நீரோட்டத்தில் கனடியத் தமிழர்களின் பங்கு தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதையும் ஜக் டேய்டன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்த வருடம் பாராளுமன்றில் முதலாவது கனடியத் தமிழராக புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராதிகா சிற்சபேசன் வெற்றி பெற்றது தமிழ் சமூகத்துக்கே பெருமை சேர்ப்பதாக அமைந்தது. ஜாக்கின் ஊக்கமும் அறிவுரைகளும், ஆலோசனைகளும் இல்லாமல் இந்த வெற்றியை நாம் அடைந்திருக்க முடியாது.
நம்பிக்கை மற்றும் மனஉறுதி ஆகியவற்றின் வெளிப்பாடாக ஜாக் எங்களின் மத்தியில் இருந்து வந்துள்ளார். எங்களின் அன்பின் வெளிப்பாடாக நாங்கள் அவர் நலம்பெற வேண்டும் எனத் தொடர்ந்தும் வேண்டுகின்றோம். புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு இந்த நேரத்தில் உதவியையும் எமது சமூகத்தில் கோரி நிற்கின்றோம்.
இது தொடர்பாக பங்களிக்க விரும்புவர்கள் Canadian Cancer Society என்னும் பெயருக்கு உங்கள் காசோலைகளை எழுதி கனடியத் தமிழர் பேரவையின் ரொறன்ரோ அலுவலகத்தில் கொடுத்துவிடும் படியோ அல்லது ஆகஸ்ட் மாதம் 6ம் திகதிக்கு முன்னர் தபாலில் அனுப்பி விடுமாறோ கேட்டுக் கொள்கின்றோம்.
இதில் பெற்றுக் கொள்ளப்படும் அனைத்து நிதி உதவிகளும் ஜாக் லேய்டன் அவர்களின் பெயரால் கனடிய புற்றுநோய் ஆய்வு மையத்துக்கு வழங்கப்படும்.
ஜாக் நலம்பெற வாழ்த்த விரும்பும் எமது சமூகத்தினர் கனடியத் தமிழர் பேரவை அலுவலகத்துக்கு வந்து ஜாக் அவர்களுக்கு அனுப்ப இருக்கும் மடலில் ஆகஸ்ட் 6ம் திகதிக்கு முன்னர் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இயற்கையின் இந்த புதிய சவாலை எதிர்கொள்ளும் அவரின் மன உறுதி எங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. மீண்டும் அவர் விரைவில் இந்தக் கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் என வேண்டி நிற்கின்றோம்.
ஜாக் நீங்கள் எங்களுடன் தோளோடு தோள் நின்று எங்கள் சமூகத்துக்கு வழங்கிய ஆதரவை நாங்கள் வார்த்தையால் வடித்து விட இயலாது. உங்களைவிட மன உறுதி கொண்ட ஒருவரை நாம் அறிந்ததும் இல்லை. இந்த தற்காலிகத் தடையை உடைத்து கனடியர்களுக்காக பாராளுமன்றில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என எதிர்பார்த்து நிற்கின்றோம்.
கனடியத் தமிழர்கள்
Comments