புலிகள் எதிர்ப்பாளர்களே தங்களது நூலில் எழுதியுள்ள உண்மை!-6

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைகளை நடத்தியது புலிகள்தான் என்று பழிபோட்டது போல், அதற்கு முன்பே 1985 ஆம் ஆண்டில் இரண்டு நாடாளுமன்ற தலைவர்கள் கொல்லப்பட்டபோதும், புலிகள் மீதே வீண் பழி சுமத்தினர். கொல்லப்பட்ட வி.தர்மலிங்கம், எம்.ஆலால சுந்தரம் என்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்தனர். தர்மலிங்கம் 23 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, தமிழர்களுக்கு தொண்டு செய்தவர். அதேபோல் ஆலாலசுந்தரம் நியமன முறையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மிகவும் நயவஞ்சகமாக இவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். ஆலால சுந்தரம் வீட்டில் இருந்தபோது நன்னடத்தை சான்றிதழ் கேட்கச் சென்ற இரண்டு பேர், அவரை வீட்டிலிருந்து இழுத்து வந்து காரில் கடத்தினர். தர்மலிங்கம் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது, ஆலால சுந்தரம் அவரை அவசரமாக சந்திக்க விரும்புவதாகக் கூறி வெளியே அழைத்து வந்து காரில் பலவந்தமாக ஏற்றி கடத்தினர். அடுத்த நாள் – தர்மலிங்கம் சடலம் கல்லறை ஒன்றின் அருகே நெற்றியில் குண்டுக் காயங்களோடு கிடந்தது. அருகே கிடந்த ஒரு துண்டு காகிதத்தில், “தமிழினத்துக்கு துரோகமிழைத்தவருக்கு வழங்கப்பட்ட தண்டனை இது. ஈழத்தை அடகு வைப்பவர்களுக்கு குறிப்பாக தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணிக்கு – இப்படிக்கு தன்மானமுள்ள தமிழர்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

ஆலால சுந்தரத்தின் சடலம் மார்பில் குண்டு காயங்களோடு யாழ்ப்பாணம் நகரில் கைப்பற்றப்பட்டது. இந்த படுகொலைகள் யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. அதிலும் தர்மலிங்கம், டி.யு.எல்.எப். தலைவர் அமிர்தலிங்கம் போக்கு பிடிக்காமல் அதிலிருந்த விலகி, அதிருப்தியாளர்கள் உருவாக்கியிருந்த தமிழ் ஈழ விடுதலை முன்னணி அமைப்பில் இணைந்திருந்தார். பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். மற்றவர்களுக்கு உதவக் கூடியவர். பல ஏழைக் குழந்தைகளை தனது சொந்த செலவிலேயே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தவர். அவரிடமிருந்த ஒரே வாகனம் சைக்கிள் தான். ஆலால சுந்தரம் – வழக்கறிஞர்; ஆனாலும் மிகவும் ஏழ்மையாகவே வாழ்ந்தவர். தன்னுடைய மகள், ஒரு சைக்கிள் கேட்டபோது, மனைவியின் நகையை விற்றுத்தான் வாங்கித்தர வேண்டிய நிலையில் இருந்தார். இந்த இருவரின் கொடூரமான கொலையும் யாழ்ப்பான மக்களின் நெஞ்சை உலுக்கியது. விடுதலைப் புலிகள் தான் ஈவிரக்கமின்றி, இந்தக் கொலையை செய்தார்கள் என்ற பிரச்சாரம் திட்டமிட்டு பரப்பப்பட்டது. பழிகள் புலிகள் மீது விழுந்தது.

இந்த சம்பவம் நடந்த 1985 ஆம் ஆண்டு கால கட்டத்தைப் பார்க்க வேண்டும். 1984 ஆம் ஆண்டுகளில் இந்திரா பிரதமராக இருந்தபோது போராளிகளுக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சி தர முன் வந்தார். ‘ரா’ உளவு நிறுவனம், அதற்கான ஏற்பாடுகளை செய்தது. அப்படிப் பயிற்சி பெறுவதற்கு ‘ரா’முதலில் தேர்ந்தெடுத்த அமைப்பு சபாரத்தினம் தலைமையில் இயங்கிய ‘டெலோ’ தான்! காரணம். இந்தியா சொல்வதை அப்படியே நிறைவேற்றும் அமைப்பாக ‘டெலோ’ இருந்தது. பிறகு படிப்படியாக ஏனைய அமைப்புகளுக்கும் பயிற்சி தர ‘ரா’ முன் வந்தது. ‘விடுதலைப்புலிகள்’ மட்டும் தனித்து விடப்பட்டனர். விடுதலைப் புலிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வர மாட்டார்கள் என்ற உறுதியான முடிவில் உளவு நிறுவனம் இருந்ததே இதற்குக் காரணம். ஏனைய குழுக்கள் இந்தியாவின் பயிற்சி மற்றும் ராணுவ உதவிகளோடு பலம் பொருந்தியவைகளாக மாறும்போது விடுதலைப் புலிகள் அழிக்கப்படக்கூடிய ஆபத்தை உணர்ந்த பிரபாகரன், இந்தியாவின் ராணுவப் பயிற்சியில் புலிகள் இயக்கத்தையும் இணைக்கவேண்டும் என்று வற்புறுத்தி இணைத்தார்.

இந்த சூழ்நிலையில் 1984இல் இந்திரா, தனது மெய்க் காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜீவ் பிரதமரானவுடன் இந்திராவின் ஈழத் தமிழர் ஆதரவு அணுகுறையில் அதிருப்தியுற்றிருந்த பார்ப்பன அதிகார வர்க்கம், ராஜீவை தங்கள் வழிக்கு திருப்பினர். அதுவரை ஈழத் தமிழர்ப் பிரச்சினைக்கு பொறுப்பேற்றிருந்த பார்த்தசாரதி என்ற அதிகாரி மாற்றப்பட்டு பண்டாரி என்ற அதிகாரி, அந்த பொறுப்புக்கு வந்தார். ஈழ விடுதலைப் போராட்டத்தில் சமரசத்துக்கு உட்படாத இந்தியாவின் வலையில் விழ மறுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி, அவர்களை பலவீனப்படுத்தும் திட்டங்களை உளவு நிறுவனம் உருவாக்கியது. தர்மலிங்கம், ஆலால சுந்தரம் படுகொலைகள் அந்த நேரத்தில்தான் நடந்தன. இந்தப் படுகொலைகளை விடுதலைப் புலிகள் மறுத்தாலும் எந்த ஆதாரமும் இன்றி புலிகள் மீது பழி போட்டே பிரச்சாரங்கள் நடந்தன.

ராஜீவ் சர்மாவும் இந்த நூலில், “1980-1990-க்கும் இடைப்பட்ட காலத்தில் சக தமிழ் இயக்கங்களைச் சார்ந்த 300 போராளிகளை மற்றும் எல்.டி.டி.ஈ. இயக்கத்திற்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பல முக்கிய தலைவர்களை பிரபாகரன் கொன்றார்” என்று எந்த ஒரு சிறு ஆதாரமும் இன்றி புலனாய்வுத் துறை பரப்பிய அதே பொய்களை அப்படியே வாந்தி எடுத்து எழுதுகிறார். இதிலிருந்தே இந்த நூல், எந்த ‘எஜமானருடைய’ குரலை எதிரொலிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். எதைச் சொன்னாலும் நம்ப வைத்து விடலாம் என்று தமிழினம் ஏமாந்து இருந்த காலம் இப்போது இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பொய் புனைவுகளை கிழித்தெறிந்து மக்கள் மன்றத்தில் நாம் உண்மைகளை அம்பலப்படுத்தியே தீருவோம்.

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் படுகொலைகளைப் போலவே, தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் படுகொலைகளும் புலிகள் மீது வீண்பழி சுமத்தவே அரங்கேற்றப்பட்டன. இதற்கு இரண்டு ஆதாரங்களை முன் வைக்க விரும்புகிறேன். ஒன்று – உளவு நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய ஆய்வாளர் நாராயணசாமி, விடுதலைப்புலிகளுக்கு எதிராக எழுதி, உளவுத் துறையால் போற்றப்படுகிற, அவரது நூலிலேயே இந்தக் கொலையில் டெலோ கண்டனத்துக்கு உள்ளானது என்று கூறுகிறார். ஆனால் உளவு நிறுவனங்கள் விடுதலைப் புலிகளையே குற்றம் சாட்டியதாக குறிப்பிடுகிறார். சுட்டுக் கொல்லப்பட்ட தர்மலிங்கத்தின் மகன் ‘புளோட்’ என்ற போராளிகள் குழுவில் சேர்ந்திருந்தார். அவரும் விடுதலைப் புலிகள் தான் இதைச் செய்தார்கள் என்று கூறவில்லை. அப்போது ‘எல்.டி.டி.ஈ – டெலோ – ஈரோஸ் – ஈ.பி.ஆர்.எஃப்.’ அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியிருந்தன. இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள ஏதோ ஓர் அமைப்பே தனது தந்தையை கொலை செய்ததாகவே கூறினார். ஆனால் உண்மையில் இந்தக் கொலையை செய்ய உத்தரவிட்டவர், இந்திய உளவு நிறுவனத்தின் உத்தரவுகளை ஏற்று செயல்பட்டு வந்த ‘டெலோ’ அமைப்பின் தலைவர் சிறீசபாரத்தினம் தான். இதற்கு சான்று விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்த்து எழுதப்பட்ட நூலான ‘முறிந்த பனை’ என்பதாகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ராஜன் ஹுல் உள்ளிட்ட 4 பேராசிரியர்கள் எழுதிய இந்த நூல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எழுதப்பட்ட நூலாகும். அந்த நூலே தர்மலிங்கம், ஆலால சுந்தரம் படுகொலைகளைச் செய்தவர்களை பற்றி இவ்வாறு எழுதியுள்ளது:

“தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணி, நாடாளுமன்ற உறுப்பினர்களுள் திருவாளர்கள் தர்மலிங்கமும், ஆலால சுந்தரமும், யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து வசித்து வந்தவர்கள். இந்தியாவில் வாழ்ந்து வந்த டெலோ, இயக்கத்தினருடன் பேசிய அநேகரின் சான்றாதாரங்களின்படி, இக் கொலைகள் பின் வருமாறு நடந்தனவென்று தெரிய வந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரான பிரபாகரன், தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியைக் கடுமையாக மிரட்டி உரையாற்றியபின், பிரபாகரன் இக் கொலைகள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு, மதிப்பிழக்கப்படுவார் என எதிர்பார்த்த டெலோ தலைவர் சிறீசபாரத்தினம், இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொலை செய்யுமாறு தனது ஆட்களுக்கு இரகசியமாக ஆணையிட்டார். எதிர்பார்த்ததுபோல், விடுதலைப் புலிகளே பெரும்பாலும் இக் கொலைகளுக்கு குற்றஞ்சாட்டப்பட்டனர். திரு.தர்மலிங்கத்தின் வீட்டுக்கு அண்மையில் காவல் நின்ற ஒரு புளோட் உறுப்பினர் கொலையாளிகள் வந்த வாகனம் ‘டெலோ’ வுக்குச் சொந்தமானதென இனங் கண்டார்.” – “முறிந்த பனை”, பக்.82

இதுதான் புலிகள் எதிர்ப்பாளர்களே தங்களது நூலில் எழுதியுள்ள உண்மை. இந்தியாவின் போராளிகளுக்கு பயிற்சி தரப்பட்ட காலகட்டங்களிலும் சரி, அதைத் தொடர்ந்து, ஈழத்தில் கொலைகள் நடந்த காலத்திலும், அவற்றில் இந்திய உளவு நிறுவனங்களின் பங்கு உண்டு என்பதற்கு, மற்றொரு முக்கிய தகவலை நாம் மக்கள் மன்றத்தில் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டில் பல்வேறு போராளிகள் குழுக்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு ராணுவப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்த தரவேண்டிய பொறுப்பு ‘ரா’ உளவு நிறுவனத்தின் கள அதிகாரியாக டி.அய்.ஜி. நிலையில் பணியாற்றிய உன்னிகிருஷ்ணன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த உன்னி கிருஷ்ணன்தான் பயிற்சிக்கு முதல் அணியாக ‘டெலோ’வை தேர்ந்தெடுத்தார். இந்த உன்னி கிருஷ்ணனின் பின்னணி என்ன என்பதையும் நாம் சொல்லியாக வேண்டும்.

“1981 இல் உன்னிகிருஷ்ணன் கொழும்பில் ‘ரா’வுக்காக வேலை செய்த போது – அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவருடன் நட்பு கொண்டார். இருவரும் நெருக்கமாகி, பல ‘ஒழுக்கக் கேடான’ செயல்களில் ஈடுபட்டனர். பல பெண்களுடன், பாலியல் உறவுகளை வைத்திருந்தனர். அப்போது – அமெரிக்க தூதரக அதிகாரி வழியாக – இந்திய உளவுத் துறையின் செய்திகளை அமெரிக்க உளவு நிறுவனமான ‘சி.அய்.ஏ.’க்கு அனுப்பி வந்தார். 1983 களில் தமிழ்ப் போராளிக் குழுக்களுடன் – நேரடி தொடர்பு கொண்டிருந்த காலத்தில், உன்னிகிருஷ்ணன், ‘ரா’வின் அதிகாரி மட்டுமல்ல; ‘சி.அய்.ஏ.’வுக்கும் உளவாளி! தமிழ்ப் போராளிக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்ற பிறகு, அவர் – சிறீலங்கா உளவுத் துறைக்கும் நெருக்கமானார். கொழும்பில் – அவருக்கு பல பெண்களுடன் இருந்த உறவை சிறீலங்கா உளவுத் துறைப் பயன்படுத்திக் கொண்டு, மிரட்டி, உன்னிகிருஷ்ணனை தனது வலையில் சிக்க வைத்தது.

ஒரே கட்டத்தில் ‘ரா’ – ‘சி.அய்.ஏ.’ – சிறீலங்கா உளவுத் துறைகளுடன், ரகசியமாக செயல்பட்டுக் கொண்டும், அதே காலத்தில் ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுடனும் நேரடி தொடர்பு கொண்டும் உன்னிகிருஷ்ணன் செயல்பட்டுள்ளார். 1985 இல் சென்னையில். இவர் தமிழ் ஈழப் போராளிக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தபோது – பம்பாயில் – அமெரிக்காவின் ‘பான் விமான சேவை’யில் வேலை செய்த ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்பை ஏற்படுத்தித் தந்தவரும் உன்னி கிருஷ்ணனின் நண்பரான கொழும்பில் இருந்த அமெரிக்க தூதரக அதே அதிகாரிதான். சென்னையிலிருந்து – பம்பாய்க்குப் பறந்து கொண்டு, விமானப் பணிப் பெண்ணுடன், அடிக்கடி சிங்கப்பூருக்குப் போய், உல்லாசமாக இருந்தார், உன்னி கிருஷ்ணன். ஆனால் எப்படியோ இவர்கள் இருவரும் ‘இணைந்த நிலையில்’ இருந்த படங்கள் ரகசியமாக எடுக்கப்பட்டன. ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள்; இந்தியாவின் வெளியுறவுத் துறை முடிவுகள்; ‘ரா’வின் திட்டங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் – உன்னிகிருஷ்ணன் வழியாக – சிறீலங்கா அரசுக்குக் கிடைத்து வந்தன.

கொழும்பில் இந்திய தூதராகவிருந்த ஜே.என்.தீட்சித் இதை ஒப்புக் கொண்டு தனது நூலில் பதிவு செய்துள்ளார். தீட்சித் எழுதியிருப்பதைப் படிக்கிறேன்.

“1986 ஆம் ஆண்டுகளில் – முதல் 6 மாதங்களில் – நான் லலித் அதுலத் முதலியுடன் (இவர் இலங்கையில் செல்வாக்குள்ள அமைச்சர்) நடத்திய உரையாடல்களில் – அவர் தெரிவித்த கருத்துக்கள் – என்னை வியப்பில் ஆழ்த்தின. இந்தியாவின் வெளிநாட்டுத் துறை அதிகாரிகள்; உளவு நிறுவன அதிகாரிகள்; இவர்களின் செயல்பாடுகள் பற்றி, ஏராளமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டது. என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டது. உடனே நான், இதுபற்றி டெல்லிக்கு தகவல் கொடுத்தேன்” - என்று எழுதியுள்ளார். (நூல்: Assignment Colombo) இப்படி – இந்திய உளவுத்துறை ரகசியங்களை சிறிலங்காவுக்கு கொடுத்தது யார் என்பதையும் – ஜே.என்.தீட்சித் குறிப்பிடுகிறார்.

“சிறீலங்காவுக்கு, இந்தத் தகவல்களைத் தந்தது, எங்களது உளவு அமைப்பில் பணிபுரிந்த அதிகாரி உன்னி கிருஷ்ணன்தான் அவர். அமெரிக்க விமானப்பணிப்பெண் ஒருவர் மூலமாக, அமெரிக்கர் வலையில் வீழ்ந்து விட்டார். அவரது ‘எதிர்மறையான’ நடவடிக்கைகள் 1986 மத்தியில் தெரிய வந்தது. தொடர்ந்து – அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உன்னிகிருஷ்ணன் “அமைதியாக்கப்பட்ட” பிறகு, சிறீலங்காவுக்கு இந்தியா பற்றி கிடைத்து வந்த தகவல்கள் கடுமையாகக் குறைந்துவிட்டன. சிறீலங்காவுக்கு உன்னி கிருஷ்ணன்தான் ரகசியத் தகவல்களைத் தந்தார் என்பது இதன் மூலம் உறுதியானது” – என்று மேலோட்டமாக – விரிவாக உண்மைகளை வெளியிடாமல், ஆனால் உண்மைகளை ஒப்புக் கொண்டு எழுதியுள்ளார், ஜே.என். தீட்சித்.

“The Sri Lanka source of information was a senior operative of our own intelligence agency, Unnikrishnan, who had been subverted most probably by the Americans through a foreign lady working for Pan-American Airlines. His negative activities were discovered sometime towards the middle of 1986, which was followed by appropriate procedural action against him. The fact that the Sri Lankan Government’s advance knowledge about Indian policies and intentions clearly diminished after Unnikrishnan was neutralized proved that he was a major source of information to the Sri Lankans. (Assignment Colombo-(1998) pg. 61)”

உண்மைகளை மறைக்க முடியாமல் – மென்மையான வடிவில் ஜே.என்.தீட்சித் தந்துள்ளார் என்றாலும், கே.வி.உன்னி கிருஷ்ணனின் நடவடிக்கைகளை அவரால் மறைக்க முடியவில்லை.

- ஆக அமெரிக்கா, இந்தியா, இலங்கை என்று மூன்று நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் உளவு வேலை பார்த்த ஒரு ‘ஒழுக்கசீலரிடம்’ தான், போராளி குழுக்களுக்கு பயிற்சி தரும் பொறுப்புகள் தரப்பட்டன. இந்த ‘தர்மபுத்திரர்களுக்கு’ தலைமையேற்று சென்னையில் செயல்பட்டவர் பார்த்தசாரதி என்ற வெளியுறவுத் துறையைச் சார்ந்த பார்ப்பன அதிகாரி! இந்திய ராணுவம் ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த காலத்தில், இவர், உளவுத் துறையினருடன் இணைந்து ஒவ்வொரு நாளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு தந்து வந்தார். அரசு கட்டுப்பாட்டிலிருந்த தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒவ்வொரு நாளும் புலிகளுக்கு எதிரான செய்திகளைப் பரப்பி வந்தன. (குறிப்பு : இந்த பார்த்தசாரதி என்ற பார்ப்பன அதிகாரி இப்போது ஓய்வு பெற்று விட்டார். கடந்த வாரம் ‘சேனல் 4’ தொலைக்காட்சி சிங்கள ராணுவத்தின் இனப்படுகொலை காட்சிகளை ஒட்டி ‘ஹெட்லைன்ஸ் டுடே’ நடத்திய விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது, ‘பிரபாகரன் கோழை; அவர், மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தி யதால் தான், இலங்கை ராணுவத் தாக்குதலில் மக்கள் பலியாக நேர்ந்தது’ என்று இறுமாப்போடு கூறி இலங்கை ராணுவத்தை நியாயப்படுத்தி பேசினார்.)

இப்படிப்பட்ட ‘உன்னிகிருஷ்ணன்களைக்’ கொண்ட நயவஞ்சக இந்திய உளவு நிறுவனத்தின் பார்ப்பன முகத்தை ராஜீவ் சர்மா தனது நூலில் எழுதாமல் எல்லா கொலைகளுக்குமான பழியையும் விடுதலைப் புலிகள் மீதே போடுவது என்ன நியாயம்? எது எவரின் குரல்?

• தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் என்ற மக்கள் செல்வாக்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வஞ்சகமாகக் கொன்று பழியை புலிகள் மீது போட்டது – ‘டெலோ’ என்ற அமைப்பு.

• புலிகளை எதிர்ப்பவர்களே இந்த உண்மைகளை பதிவு செய்து விட்டனர்.

• அந்த ‘டெலோ’ உளவுத் துறையின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கிய அமைப்பு.

• இந்தியா, இலங்கை அமெரிக்கா என்று ஒரே நேரத்தில் 3 நாடுகளின் உளவாளியாகவும், அதே நேரத்தில் பல்வேறு போராளி குழுக்களுடனும் நெருக்கமாக உறவாடி, விடுதலைப் புலிகளுக்கு எதிராக திட்டங்களை வகுத்த உன்னி கிருஷ்ணன் தான் கொலைகளின் பின்னணியாக செயல்பட்டிருக்கிறார்.

- தொடரும்

விடுதலை இராசேந்திரன்

நன்றி கீற்று இணையம்

Comments