தேசியத் தலைவரின் திட்டத்தினை சிங்களப் படைகள் உரிய நேரத்தில் கற்றுக்கொள்ளும்: மன்னார் கட்டளைத் தளபதி

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்தினை உரிய நேரத்தில் சிறிலங்காப் படையினர் கற்றுக்கொள்வார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள இலுப்பைக்கடவை கோட்டத்தில் நேற்று முன்நாள் சனிக்கிழமை நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மன்னார் மாவட்டத்தில் தமிழ் மக்களின் சொந்த இடங்களை சிறிலங்காப் படையினர் வல்வளைப்புச் செய்து இடம்பெயர்ந்த வேளையிலும் வெள்ளாங்குளப்பகுதியில் எழுச்சியுடன் முத்தமிழ் கலையரங்க நிகழ்வினைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

இது எமக்கு உணர்வெழுச்சியைத் தருகின்றது.

பல திறமை மிக்க கலைஞர்கள் இருக்கின்றனர் என்பதனை வெளிக்காட்டும் நிகழ்வாக புலிகளின் குரல் முத்தமிழ் கலையரங்க நிகழ்வு நடைபெறுகின்றது.

களமுனையில் போராளிகள் எதிரியுடன் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஒரு ஆண்டுக்கும் மேலாக மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் கடும் போர் நடைபெறுகின்றது.

சிறிலங்காப் படையால் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களின் இலக்கை அடைய முடியவில்லை என்றால் அதற்கு களத்தில் போராளிகள் நிகழ்த்திய அர்ப்பணிப்பும் சாதனைகளும்தான் காரணம்.

போராளிகளின் உளவுரணும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மதிநுட்பமான திட்டமிடலும்தான் சிறிலங்காப் படைக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தி அவர்களின் முன்நகர்வுகளை தாமதமாக்கியுள்ளன.

இக்களத்தில் சிறிலங்காப் படையினர் பாரிய இழப்பினைச் சந்தித்து வருகின்றனர். ஆனால் அதனை ஊடகங்கள் மூலம் சிறிலங்காப் படையினர் மூடிமறைத்து வருகின்றனர்.

விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு அண்மையில் தமிழ் மக்கள் நிற்கின்ற வேளையில் அனைவரும் ஒன்றிணைந்து விடுதலையை வென்றெடுக்க வேண்டிய தேவையுள்ளது.

பின்தள வேலைகளில் மக்கள் பக்கபலமாக உதவியைச் செய்து வருவது போராளிகளுக்கு உற்சாகத்தை கொடுக்கின்றது.

இவ்வாறான ஒன்றிணைவு மூலம் நாம் வெற்றிகொள்வோம் என்பது உண்மை.

சிறிலங்காப் படையினர் இப்போது அகலக்கால் ஊன்றி பெயர் சூட்டப்படாத படை நடவடிக்கையை நடத்தி வருகின்றனர்.

கடந்த காலத்தில் சிறிலங்காப் படையினர் எவ்வாறு எமது மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். எமது பகுதிகள் எவ்வாறு மீட்கப்பட்டன என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்களேயானால் அடுத்த கட்டம் என்ன நடைபெறும் என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.

போரின் மூலம் தான் தீர்வு என சிறிலங்கா நினைக்குமாக இருந்தால் அந்தப் போரில் நாம் வெல்வோம்.

சிறிலங்கா அரசுக்கு உலகளவில் பாரிய பின்னடைவு வந்துள்ளது.

புலம்பெயர்ந்த மக்கள் பொங்கு தமிழ் ஊடாக விடுதலைப் போராட்டத்தின் உண்மையை வெளியுலகிற்கு எடுத்துரைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

வெளியுலகில் அரசியல் மட்டத்தில் எமக்கு ஆதரவு உண்டு. படைவலுவில் விடுதலைப் புலிகள் பலமாக இருக்கின்றறனர் என்றார் அவர்.

Comments