மக்கள் மீதான சிறிலங்காப் படைகளின் எறிகணைத் தாக்குதல்கள்.

முல்லைத்தீவு பொதுவைத்தியசாலையை அண்டிய பகுதிகளிலேயே ஓகஸ்ட் 08 ம் திகதி அதிகாலை 1.00 மணியளவில் சிறிலங்காப்படையினர் சரமாரியான பல்குழல் உந்துகணை வீச்சை மேற்கொண்டுள்ளனர்.

இதில் குழந்தையொன்று கொல்லப்பட்டு மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுள் மாவட்ட அரசாங்க அதிபர் பொதுவைத்தியசாலை பொறுப்பதிகாரியின் மனைவி, ஒரு கர்ப்பிணித்தாயும் அவரது இரு குழந்தைகளும் ஒரு வயோதிபத் தாயும் மகளும், சில முதியவர்களும் அடங்குகின்றனர்.

தாக்குதலுக்கு இலக்கான இடங்களை பார்வையிட்டபோது அரசாங்க அதிபர் உட்பட்ட மாவட்டத்தின் அதியுயர் அதிகாரிகளின் உத்தியோக பூர்வ வதிவிடங்கள், மாவட்டப் பொதுவைத்தியசாலை, அரசகால்நடைவைத்தியர் அலுவலகம், கமநலசேவை நிலையம் ஆரம்பசுகாதார நிலையம் அரசாங்க களஞ்சியம், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளை, அசெம்பிளி ஒஃவ் கோட் தேவாலயம் என்பவற்றோடு மக்கள் காலங்காலமாக செறிவாக வாழும் குடியிருப்புப் பகுதியுமே இலக்குவைக்கப்பட்டிருந்தமை புலனாகியது.


இதனது அர்த்தம் தாக்குதல் தற்செயலானதோ அல்லது இலக்கற்றதோ அல்ல என்பதாகும்.


மாவட்டப் பொதுவைத்தியசாலையைச் சூழ பத்துவரையான உந்துகணைகள் வீழ்ந்துவெடித்துள்ளன. வைத்தியசாலை வளாகத்திற்குள்ளிருந்த மருத்துவ அத்தியட்சகரின் விடுதி சேதமடைந்துள்ளது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அத்தியட்சகரும் அவரது மனைவி, பிள்ளைகளும் தெய்வாதீனமாக உயிர்தப்பினர். அவர்களது படுக்கையறைக்கு வெகுசில மீற்றர்கள் தொலைவில் உந்துகணை வீழ்ந்து வெடித்திருந்தது. இந்தவிடுதி வைத்தியசாலையின் முன்முகப்பிலிருந்து 75 மீற்றர் தூரத்திற்குள் அமைந்துள்ளது.

வைத்தியசாலையின் சமையலறையில் கடமையாற்றும் சோழமுத்து (56) என்பவர் இத்தாக்குதல் குறித்து கூறுகையில், 'எங்களைச் சுத்தி அடுத்தடுத்து வந்து விழுந்ததுங்க. நான் அப்பிடியே குப்புறப் படுத்திட்டேன். அந்த இரவில திடீரெண்டு வெடிச்சத்தம்கேக்க ரொம்ப பயமா இருந்ததுங்க. ஜீ.ஏ அம்மாவும் டொக்டர் ஐயாவும் உயிர் தப்பினது தெய்வச்செயல்தானுங்க' எனக் குறிப்பிட்டார்.

வைத்தியசாலையை உடனடுத்திருக்கும் குமரபுரம் முருகன் ஆலயத்தில் பின்புற வீதி நெடுகிலும், இதைக்குறுக்கறுப்பதாக முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியிலும் உந்துகணைகள் சரமாரியாக வீழ்ந்திருந்தன. இவை மக்கள் குடியிருப்புக்களில் பெரும்சேதங்களை விளைவித்திருக்கின்றன. மக்களின் வீடுகள், கடைகள் தேவாலயம் பொதுக்கிணறு கால்நடைகள் என அனைத்துமே தாக்குதலுக்குள்ளாகியிருந்தன.

அசெம்பிளி ஒஃவ்கோட் தேவாலய வளாகத்துள் வீழ்ந்த உந்துகணை தேவாலயத்தின் பின்புறமாகவுள்ள பதினைந்திற்கும் மேற்பட்ட குடும்பங்களால் பாவிக்கப்படும் கிணற்றைத் துளைத்து வெடிக்காதநிலையில் காணப்படுகிறது. தேவாலய கூரை, கதவுகள் சிதைவடைந்து காணப்படுகின்றன. இச்சூழலில் மட்டும் மூன்று உந்துகணைகள் வீழ்ந்துள்ளன. இத்தேவாலயத்தைச் சேர்ந்த மரியா என்ற அருட்பணியாளர் எம்முடன் பேசினார். 'சம்பவவேளை விமானத்தாக்குதல் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த குடும்பமொன்று தேவாலயத்துள் உறங்கிக்கொண்டிருந்தது. பின்புறம் கிணற்றின் மீது வீழ்ந்த றொக்கற் வெடித்திருக்குமானால் அந்தக்குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். நல்லவேளையாக ஒருபேரனர்த்தம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இந்தக் கோடையில் பலகுடும்பங்களால் பாவிக்கப்படும் எங்களுடைய கிணறு தகர்ந்துபோய் விட்டது' என்றார் அருட்பணியாளர் மரியா. தேவாலயத்தில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த குடும்பம் மற்றுமொருமுறை இடம்பெயர்ந்து வற்றாப்பளை பகுதியைநோக்கி நகர்ந்துவிட்டதாக அறியமுடிந்தது.

தண்ணீர்ஊற்று ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பக்கவாட்டு வீதியில் உந்துகணையொன்று வெடிக்காமல் நடுத்தெருவில்புதைந்து கிடக்கிறது. இச்சுற்றாடலில் ஐந்திற்குமேற்பட்ட எறிகணைகள் பொதுமக்களின் வீடுகளின் மீது வீழ்ந்து அவற்றை நாசமாக்கியுள்ளன.

தேவாலயத்திற்கு சிலநூறு மீற்றர்கள் தூரத்தில் நீராவிப்பிட்டியில் தாயிடம் பால்குடித்துக்கொண்டிருந்த குழந்தையொன்று தலையிலே பாய்ந்த உந்துகணைச் சிதறலினால் மூளை சிதைந்து ஸ்தலத்தில் பலியாகியுள்ளது. சொந்தவீட்டில் நள்ளிரவில் படுக்கையில் வைத்து தன்குழந்தையை பறிகொடுத்துவிட்டு அந்ததாய் அரற்றிக்கொண்டிருக்கிறார்.

முல்லைத்தீவு உப்புமாலடிப் பகுதியிலிருந்து விமானத்தாக்குதல் அச்சம் காரணமாக நீராவிப்பிட்டிக்கு வந்து மகளின்வீட்டில் தங்கியிருந்த தாயார் இடதுகையை இழந்து கால்களிலும் காயமடைந்துள்ளார். அவரது 23 வயதான வலிப்புநோய்க்கு ஆளான மகளும் காயங்களுக்கு இலக்கானார்.
தண்ணீரூற்று சந்தியில் தேவாலயத்திற்கு எதிராக இருந்த வீட்டில் உறக்கத்திலிருந்த ஐந்துமாத கர்பிணிப் பெண் வயிற்றிலே காயமடைந்தார் அவரதுஇரண்டு பிள்ளைகளுக்கும் காயங்கள் ஏற்பட்டன. அவரது கணவர் இரண்டு காயமடைந்தகுழந்தைகளையும் ஏந்தியபடி வைத்தியசாலையில் காணப்பட்டார்.

மக்கள் இடம்பெயர்ந்து செறிவாக வாழும் இக்காலத்தில் முல்லைத்தீவு பொதுவைத்தியசாலை வளாகம் 08 ஆம் திகதி வெறிச்சோடிக்காணப்பட்டது. வைத்தியசாலை இலக்குவைக்கப்பட்டதன் காரணமாக நம்பிக்கை இழந்துபோன மக்கள் அங்கே வருவதற்கு அஞ்சுகின்ற நிலைமையை இது சுட்டிக்காட்டுகிறது.

இந்ததாக்குதல் சொல்லுகின்ற செய்தி என்ன?

தாங்கள் இப்பகுதிமீது எவ்வகையான எறிகணைத் தாக்குதல்களையும் நடத்தவில்லையென சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவிப்பதன் அர்த்தம் என்ன?

வைத்தியசாலைச் சூழல் என்பது இராணுவத்தாக்குதல்களுக்கு தவிர்க்கப்பட்ட பகுதியென்பது சர்வதேச நியமமாக காணப்படுவதால் இடம்பெயர்வுகளின்போது பொதுமக்கள் இவற்றையண்டிய பகுதிகளில் நெரிசலாக குடியிருக்க விழைவர். இது கடந்தகாலங்களில் ஒவ்வொரு இடப்பெயர்வுகளின்போதும் நிகழ்ந்த ஒன்றே. மறுவளமாக மருத்துவமனைவளாகமே தாக்கப்படுகின்றபோது, அரசாங்க அதியுயர் அதிகாரியான மாவட்ட அரசாங்க அதிபரே தாக்குதலில் காயமடையும்போது பொதுமக்கள் மிகஆழமாக அச்சமடைவதோடு நம்பிக்கை இழப்பிற்கும் ஆளாகிறார்கள். இது அவர்களை மீளவும் இடம்பெயர தூண்டுகின்ற ஒரு நாசகார நடவடிக்கையாகும்.

எந்த சர்வதேச நியமங்களையோ அல்லது பன்னாட்டு அரசுகள், மனிதஉரிமை அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் கண்டனங்கள் கோரிக்கைகளுக்கோ அரசாங்கம் செவிசாய்க்கப்போவதில்லை என்பதே நேற்றைய தாக்குதலின் பச்சையான செய்தியாகும்.

சிறிலங்கா இராணுவப்பேச்சாளர் தெரிவிக்கும்போது தங்களது படையினர் ஜனகபுரவிற்கு வடக்கே முல்லைத்தீவிற்கு தெற்காக 15 கிலோமீற்றர் தூரத்தில் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். இத்தூரம் சிறிலங்கா இராணுவத்தினர் பாவிக்கின்ற பல்குழல் உந்துகணை செலுத்திகளினதும் ஆட்டிலறிகளினதும் வீச்செல்லைக்குள் அடங்குகின்றது. அப்படியெனில் தனது மறுப்புச்செய்தியை இந்த தூரம்பற்றிய தகவலை அவர் இணைத்திருப்பதன் அர்த்தம் குறிப்பிட்ட பகுதிகளை சிறிலங்காப் படைகள் எவ்வேளையும் தாக்கக்கூடும் என்பதேயாகும்.
ஆனால் நாங்கள் தாக்குதலுக்கு இலக்கான பகுதிகளை பார்வையிட்டபோது கவனித்தவொரு விடயம் பலவீடுகளில் மக்கள் பதுங்குகுழிகளை அமைத்துக்கொண்டிருந்தமையாகும். இது சிறிலங்காப் படைகளின் நடவடிக்கைக்கான மக்களின் பதிலிறுப்பு என கொள்ளமுடியும்.

முல்லைத்தீவில் மட்டுமன்றி வன்னிமேற்கில் இடம்பெயர்ந்து பெருத்த அவலங்களிற்கு மத்தியில் தவித்துக்கொண்டிருக்கும் மக்களை மேலும் இடம்பெயர நிர்ப்பந்திக்கும் முகமாக 08ஆம் திகதி மாலை, முன்னிரவுப்பொழுதுகளில் சிறிலங்காப் படைகள் எறிகணைகளை பரவலாக வீசியுள்ளன.

முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் மா.தேவேந்திரன், ' 08ஆம் திகதி பரீட்சைக்கு (க.பொ.த(உயர்தரம்) சில மாணவர்கள் பரீட்சை நிலையங்களிற்கு வரவில்லையென அதிகாரிகளால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. முள்ளியவளை வித்தியானந்தாக்கல்லூரி பரீட்சை நிலைய இணைப்பதிகாரிக்கு அப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படுமாயின் சற்றுத்தொலைவிலுள்ள கலைமகள் வித்தியாலயத்திற்கு பரீட்சை நிலையத்தை மாற்றுவதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ளோம்' எனத் தெரிவித்தார்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பார்த்தீபன் அவர்கள், 'மக்கள் நாளுக்குநாள் இடம்பெயர்ந்துவருகிறார்கள். இதுதொடர்பான புள்ளிவிபரங்கள் தினமும் மாறிக்கொண்டிருக்கின்றன. நேற்றைய தாக்குதல்கள் இந்த இடம்பெயர்வுகளை மேலும் தூண்டக்கூடும். ஆனால் அரசகளஞ்சியங்கள் வெறுமையாகவுள்ளன. எங்களிடம் காப்பு இருப்பு என்று எதுவும்கிடையாது. அரசசார்பற்ற நிறுவனங்களின் நிலைமையும் ஏறக்குறைய இதுதான். இடம்பெயர்ந்த மக்களிற்கு மாதத்தில் இரண்டுவாரங்களுக்கான நிவாரணம் மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது. மீதிக்காலத்திற்கான பொருட்கள் இல்லாததனால் வழங்கப்படாமலே விடப்படுகிறது. இந்நிலையில் அதிகரிக்கக்கூடிய இடப்பெயர்வு என்பது பெரும்நெருக்கடியையே ஏற்படுத்தும்' எனக்குறிப்பிட்டார்.

இவை அனைத்தையும் தொகுத்துப்பார்க்கின்ற பொழுது சிறிலங்கா அரசினது தந்திரோபாயம் நன்குபுலப்படுகிறது. மக்களை தொடர்ச்சியாக அல்லலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளாக்கி நம்பிக்கை இழந்த ஒரு சூழலுக்குள் கொண்டுவரும் அதேவேளை ஒமந்தை சோதனைச் சாவடியூடாக அத்தியாவசியப்பொருட்களினுடைய உள்வருகையை தொடர்ந்து கட்டுப்படுத்துவதன் மூலம் வன்னியில் அரசகளஞ்சியங்களையும் வணிகநிலையங்களையும் வெறுமையாக்குகின்ற கொடூரஉத்தியை சிறிலங்கா நடைமுறைப்படுத்துகிறது என்பதே அதுவாகும்.

ஆனால் பொதுமக்கள் இலக்குவைத்து தாக்கப்படுவதோ அவர்களிற்கான அத்தியாவசிய விநியோகங்கள் நலச்சேவைகள் திட்டமிட்டு தடுக்கப்படுவதோ சர்வதேச சட்டங்களையே ஜெனீவா உடன்படிக்கையையும் மீறும் செயற்பாடுகளாகும்.

இராவணன்.

Comments