உறுதி மொழிகளை மீறியது சிறீலங்கா: வாய்மூடி நிற்கின்றது அனைத்துலகம்

கடந்த 16 ஆம் நாள் சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா கிளிநொச்சிக்கு மேற்கொண்ட விஜயம், அதற்கு முன்னர் மகிந்த ராஜபக்சா மற்றும் பாதுகாப்புதுறை செயலாளர் ஆகியோர் படையினர் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைகளுக்கு மேற்கொண்ட விஜயம் என்பன தொடர்ச்சியான மோதல்களினாலும், இழப்புக்களினாலும் களைப்படைந்த படையினரின் உளவுரனை உயர்த்தும் முயற்சிகளாகவே நோக்கப்படுகின்றது.

படையினரை முன்தள்ளும் அரசின் இந்த முயற்சிகளிற்கிடையில் கடந்த 15 ஆம் நாள் அதிகாலை அதாவது போர் நிறுத்தம் நிறைவு பெற்ற இரு மணிநேரங்களில் படைத்தரப்பு தனது நடவடிக்கைகளை இரட்டைவாய்க்கால் பகுதி ஊடாக ஆரம்பித்திருந்தது. 53 ஆவது படையணியின் வான்நகர்வு பிரிகேட், 5 ஆவது கெமுனுவோச் பற்றலியன், 1 ஆவது கெமுனுவோச் பற்றயின் என்பனவும் நந்திக்கடலின் வடமுனையில் அதற்கு சமாந்தரமாக பரந்தன்- முல்லைத்தீவு (ஏ-35) வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு அரண்களை கைப்பற்றி முன்நகர முற்பட்டிருந்தன.

இதன் போது இரட்டைவாய்க்கால் பகுதியில் கடுமையான சமர் நடைபெற்றிருந்தது. இராணுவம் விடுதலைப் புலிகளின் மண் பாதுகாப்பு அரண்களை உடைத்து முன்நகர முற்பட்ட போதும் அங்கு விடுதலைப் புலிகள் அதிகளவில் மிதி வெடிகளையும், பொறி வெடிகளையும் புதைத்திருந்ததனால் படைத்தரப்பு அதிக இழப்புக்களை சந்தித்துள்ளதாக படை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

15 ஆம் நாளில் இருந்து 17 ஆம் நாள் வரையில் அங்கு நடைபெற்ற மோதல்களில் 500 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். இதன் போது 600 மேற்பட்ட படையினர் படுகாயமடைந்திருந்தனர். விடுதலைப் புலிகள் 14 போராளிகளை இழந்திருந்தனர்.

வலைஞர்மடம் பகுதி ஊடாக ஒரு ஊடறுப்பை மேற்கொண்டு பாதுகாப்பு வலையத்தை இரு கூறுகளாக பிரிப்பதன் மூலம் அங்கு வாழும் மக்களை சிறைப்பிடிக்க படையினர் முயன்றிருந்தனர். ஆனால் படையினாரின் இந்த திட்டம் விடுதலைப் புலிகளின் உக்கிரமான எதிர்த்தாக்குதல்களினால் கைகூடவில்லை. இந்த நிலையில் இராணுவம் நேற்று (20) அம்பலவான்பொக்கனை பகுதியின் ஊடாக மற்றுமொரு பாரிய படை நகர்வை மேற்கொண்டுள்ளது.

300,000 மேற்பட்ட மக்கள் தங்கியுள்ள 18 சதுர கி.மீ பரப்பளவுள்ள பாதுகாப்பான பிரதேசத்தின் மீது கனரக ஆயுதங்கள் சகிதம் படைத்தரப்பு தாக்குதலை தீவிரப்படுத்தியிருந்தது. இந்த தாக்குதலுக்கு ஏதுவாக தியத்தலாவை பகுதியில் இருந்து அதிகளிவிலான குறிபார்த்து சுடும் படையினரும், சிறப்பு படையணிகளை சேர்ந்த ஐந்து கொம்பனி துருப்புக்களும் கடந்த வராத்தின் இறுதிப்பகுதியில் வன்னிக்கு நகர்த்தப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 2.00 மணியளவில் இராணுவத்தின் 58 ஆவது படையணியினர் அம்பலவான்பொக்கனை ஊடகாக பாரிய தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். அம்பலவான்பொக்கனை பகுதியை ஊடறுத்து கடல் பகுதியுடன் ஒரு தொடுப்பை ஏற்படுத்துவதன் மூலம் அம்பலவான்பொக்கனை பகுதிக்கும் புதுமாத்தளன் பகுதிக்கும் இடையில் உள்ள மக்களை ஒரு பெட்டி வடிவ முற்றுகைக்குள் கொண்டு வந்து சிறைப்பிடிப்பதே படையினரின் திட்டம்.

தாக்குதல் ஆரம்பமாகிய சில மணிநேரங்களில் படையினர் மேற்கொண்ட செறிவான எறிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் தாக்குதலில் சிக்கி 1500 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், 3000 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களில் 476 பேர் சிறுவர்கள் என்பதுடன், காயமடைந்தவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்களும் அடக்கம்.

சில மணிநேரங்களில் ஒரு குறுகிய பரப்பளவினுள் சிறீலங்கா இராணுவம் 3000 இற்கு மேற்பட்ட எறிகணைகளை ஏவியிருந்ததாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த எறிகணைகளில் கணிசமான அளவு எறிகணைகள் வெள்ளை பொஸ்பரஸ் (White phosphorus shells) எனப்படும் இரசாயணம் சேர்க்கப்பட்ட அதிஉயர் வெடிமருந்து கொண்டவை.

அவை வீழந்து வெடிக்கும் போது பொருட்களும், பொதுமக்களின் உடல்களும் தீப்பற்றி எரிந்ததுடன், சிறுவர்களும், மதியவர்களும் மூச்சுத்திணறியும் இறந்துள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன. வெள்ளை பொஸ்பரஸ் எறிகணைகள் வெடிக்கும் போது பாரிய புகைமண்டலங்களையும், தீயையும் உருவாக்கும் தன்மை கொண்டவை. இதன் போது ஏற்படும் எறிகணை சிதறல்கள் மனிதர்களின் தோல்களில் ஒட்டி எரிவதுடன், அதன் இரசாயணப் பொருள் உடலினுள் பரவும் தன்மையும் கொண்டது. அவை ஈரல், இதயம், சிறுநீரகம் போன்ற அங்கங்களையும் செயலிழக்க செய்யும் தன்மையும் கொண்டவை.

மேலும் வளிமண்டலத்தில் ஒக்சிசன் போதியளவில் இருக்கும் வரையிலும் பொஸ்பரஸ் துகள்கள் தொடர்ந்து எரியும் தன்மை கொண்டது. இதனால் வளிமண்டலத்தில் உள்ள ஒட்சிசனின் அளவு குறைவதனால் அதன் சுற்றாடலில் இருக்கும் உயிரினங்கள் மூச்சுத்திணறி இறக்கும் நிலை உருவாகின்றது. இதனால் தான் சிறுவர்களும், முதியவர்களும் மூச்சுத்திணறி இறந்துள்ளனர்.

இராணுவம் இந்த வகை எறிகணைகளை பீரங்கிகள் மூலம் ஏவிவருவதனால் இந்த பேரனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. அனைத்துல விதிகளின் அடிப்படையில் பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் இந்த வகை எறிகணைகள் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. பொஸ்பரஸ் எறிகணைகள் பொதுமக்களுக்கு பாரிய எரிகாயங்களை ஏற்படுத்துவதனால் 1980 களில் உருவாக்கப்பட்ட ஜெனிவா சட்டவிதிகளிலும் (Under the Geneva Treaty of 1980) இந்த ஆயுதங்கள் பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பும் இதனை இராசாயண ஆயுதங்களின் பட்டியலில் சேர்த்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் கனரக ஆயுதங்களை மக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பான பிரதேசத்தின் மீது பயன்படுத்த மாட்டோம் என சிறீலங்கா அரசு ஐ.நாவுக்கும், ஏனைய மேற்குலக நாடுகளுக்கும் உறுதி அளித்திருந்தது. இதனை ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் கடந்த வாரமும் சிறீலங்கா அரசிற்கு நினைவுபடுத்தியிருந்த நிலையில் கனரக ஆயுதங்களை மட்டுமல்லாது இரசாயண ஆயுதங்களையும் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது சிறீலங்கா அரசு பயன்படுத்தியுள்ளது.

இதனை ஒரு போரியில் பெரும் குற்றமாக நாம் உலகிற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் எடுத்து கூற வேண்டும். இரண்டாம் உலகப்போரின் போது நடைபெற்ற படுகொலைகளையும், அவை மேற்கொள்ளப்பட்ட முறைகளையும் மனிதாபிமானத்தின் கொடூரமாகவே உலகம் பார்த்தது. எனவே தான் அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றது. தற்போது ஐக்கிய நாடுகள் சபை மட்டுமல்லாது, மனித உரிமைகள் சபை, மனித உரிமைகள் கண்காணிப்கம் என ஒரு நீண்ட பட்டியலை கொண்ட மனிதாபிமான அமைப்புக்கள் உலகில் இயங்கி வருகையில் மீண்டும் இரண்டாம் உலகப்போரின் போது மனிதகுலம் கண்ட பேரவலத்தை விட அதிக பயங்கரமான அழிவுகளை தமிழ் சமுதாயம் சந்தித்து வருகின்றது என்றால் அதன் அர்த்தம் என்ன?

நாம் எத்தனையாம் நூற்றாண்டில் வாழ்கின்றோம்? தனது படை நடவடிக்கையினால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பான கருத்துருவாக்கங்களை மறைப்பதற்காக சிறீலங்கா அரசு விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டதாக பொய்யான பரப்புரைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. சிறீலங்கா அரச தலைவரின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்சாவினால் நடத்தப்படும் பாதுகாப்பு இணையத்தளமே இந்த பொய்யான பிரச்சாரங்களில் முன்னனி வகிக்கின்றது.

சுதந்திரமான ஊடகவியலாளர்களோ அல்லது கண்காணிப்பளர்களோ அற்ற நிலையில் வன்னியில் ஏற்பட்டுவரும் மனிதப்பேரவலத்தை உலகின் கண்கணில் இருந்து மறைக்கப்படும் முயற்சியே இது. இந்த பிரச்சார வலையமைப்பை எதிர் பிரச்சாரம் மூலம் நாம் உடைக்க வேண்டும். எமது தரப்பு இழப்புக்களையும், நியாயங்களையும் உலகிற்கு எடுத்து கூறவேண்டும்.

அதற்காக உலகத்தின் வீதிகளில் தான் நாம் இறங்கி போராட வேண்டும் என்றாலும் எல்லோரும் இறங்குவோம். நாளை (21) மதியம் 12.00 மணிக்கிடையில் பாதுகாப்பான பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களை சரணடைய சொல்லி சிறீலங்கா அரசு தொடர்ந்து தெரிவித்து வருவதால் அங்கு பாரியதொரு இனஅழிப்பு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சங்கள் எழுந்துள்ளன.

இந்த மனிதப்பேரவலத்தை அனைத்துல சமூகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்க சிறீலங்கா அரசு இந்திய மத்திய அரசின் வழிநடத்தலுடன் மிகவும் திட்டமிட்ட முறையில் தமிழின அழிப்பை முன்னெடுத்து வருகின்றது. அனைத்துலகத்தில் ஏற்பட்டுவரும் அழுத்தங்களில் இருந்து தப்பித்து கொள்ளவும், எதிர்வரும் 29 ஆம் நாள் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்படவுள்ள சிறீலங்கா தொடர்பான விவாதத்தினை முறியடிக்கவுமே சிறீலங்கா அரசு தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியாவில் தற்போது தேர்தல் காலம் என்பதனால் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையினால் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புக்களை குறைக்கும் நோக்கமும் இந்த நடவடிக்கையின் பின்னனியில் உள்ளது. அனைத்துலகத்தின் வேண்டுகோள்களை புறம்தள்ளியவாறு சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் இந்த இனஅழிப்பை நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உடனடியாக மேற்கொள்ளப் போகும் பதில் நடவடிக்கை என்ன என்பதில் தான் பல பத்தாயிரம் மக்களின் உயிர்களின் இருப்பு தங்கியுள்ளது.

புதுக்குடியிருப்பு நகர் மீதான இராணுவத்தின் முற்றுகை இறுக்கமடைந்த நாள் முதல் நேற்று முன்தினம் (19) வரையிலும் அங்கு 8,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், 12,000 மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் உள்ள நிலையில் நேற்று (20) நடைபெற்ற தாக்குதலால் ஒரே நாளில் 1500 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், 3000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் பல ஆயிரம் மக்கள் குறுகிய நேரத்தில் தமது உயிர்களை இழக்கலாம் என்ற அச்சங்களும் அங்கு தோன்றியுள்ளன.

நேற்றைய தாக்குதலில் பாதுகாப்பு வலையத்தில் இயங்கிவந்த ஒரே ஒரு மருத்துவமனையும் சேதமடைந்துள்ளதனால் காயமடையும் மக்களும் கொத்து கொத்தாக மரணிக்கும் நிலையை அடைந்துள்ளனர். மக்களை வெளியேற்றுகின்றோம் என்ற போர்வையில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளை நிறுத்தவதற்கு அனைத்துலகமும், இந்தியாவும் விரைவான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என நாம் அணிதிரண்டு வலியுறுத்த வேண்டும்.

தற்போது உலகத்தின் ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒன்று சேர்ந்து நடத்தும் போராட்டங்களினால் உலகத்தின் அசைவில் சில மாற்றங்கள் தோன்றியுள்ளன. அதற்கு ஆதாரமாக பல சான்றுகளை முன்வைக்கலாம். எனவே எமது போராட்டங்கள் வீண்போகவில்லை, வீண்போகவும் மாட்டாது. எமது போராட்டங்கள் பயனை தராது என யாரும் கூறுவார்களாக இருந்தால் அவர்கள் எங்களின் உளவுரனை உடைக்க முற்படுகின்றனர் என்பதே அதன் அர்த்தம்.

தற்போதைய இந்த நெருக்கடியான நிலையில் அனைத்துலகத்திலும், தமிழகத்திலும் மேற்கொள்ளப்படும் போராட்டங்களும், சிறீலங்கா அரசின் போலியான பிரச்சாரங்களை முறியடிப்பதில் உள்ள உத்திகளுமே பேரழிவின் விழிம்பில் உள்ள எம் மக்களை காப்பாற்றும் ஆயுதங்களில் முதன்மையானவை. உலகம் நாம் சொல்வதை கேட்கவில்லையே என நாம் சோர்ந்து போக வேண்டாம், உலகத்தின் மனச்சாட்சி உள்ள மக்களுடன் பேசுவோம், மனித நேயம் கொண்டவர்களுடன் பேசுவோம், எமது போராட்டங்களின் உக்கிரத்தை அதிகப்படுத்துவோம் நிச்சயமாக உலகம் எமக்காக திரும்பும். தற்போதைய பேரவலத்தை தடுக்கும் சக்தியும் அவர்களுக்கு உண்டு.


Comments