எழுச்சி கொண்ட இனம்தான் விடுதலை அடையும்.

ஈழத் தமிழினம் வரலாறு காணாத ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. தினமும் மரணத்திற்குள் வாழும் வன்னி மக்களை மீட்டெடுக்க புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் முழு அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.ஆனாலும் இந்தப் போராட்டங்களின் வீச்சு இன்னும் ஒரு எல்லையைத் தொடவில்லை என்றே தோன்றுகின்றது. ஒரு சில அமைச்சர்களை உலக நாடுகளுக்கு அனுப்பி தனது இனப்படுகொலையை சிறிலங்கா நியாயப்படுத்த மேற்கொள்ளும் வேகத்தைவிட, அந்ததந்த நாடுகளில் வாழ்ந்துகொண்டும் தமிழ் மக்களால் தங்கள் இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை ஏன் தடுத்து நிறுத்தி தமது பக்க நியாயத்தை வலுப்படுத்த முடியவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

புலம்பெயர்ந்த மக்கள் தாங்கள் வாழுகின்ற நாடுகளில், அந்தந்த நாடுகளின் வளர்ச்சியில் இன்று ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றார்கள். தமிழ் மக்களின் வளர்ச்சி இன்று புலம்பெயர்ந்த மண்ணில் தடுக்க முடியாத ஒரு சக்தியாக உருமாறியிருக்கின்றது. இந்த சக்தியை முழுமையாகப் பயன்படுத்த முனையாமையே, சிறிலங்காவின் இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் போராட்டங்கள் இந்தப் புகலிட நாடுகளில் இன்னும் வீச்சாக்கப்படும் போதே இந்தப் படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியும். அதுவரையும் இந்த உலகம் தமிழ் மக்களின் நியாயங்களைப் புரிந்துகொண்டு காத்திரமான பங்களிப்பை புரியும் என்று எதிர்பார்க்க முடியாது. இங்கு நடைபெறும் போராட்டங்கள் இதனையே உணர்த்தி நிற்கின்றன.

இலங்கைப் பிரச்சினை ஒரு ஒரு உள்நாட்டுப் பிரச்சினை, அதில் தலையிட்டு தங்களால் ஒரு முடிவினைக் காண முடியாது என்று தப்பிக்க முனைகின்றன சில நாடுகள். அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகளை தடை செய்துள்ள நாடுகள் இதனை இன்னும் அழுத்திக் கூறுவதைக் காணமுடிகின்றது.

இலங்கையில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சினை என்றால், உங்களுக்கு எந்தவிதத்திலேயுமே பாதிப்பை ஏற்படுத்தாத தமிழ் மக்களின் ஒரே பாதுகாவலர்களான விடுதலைப் புலிகளை ஏன் தடை செய்தீர்கள் என பதில் கேள்வி எழுப்பாதனாலேயே அவர்கள் உள்நாட்டுப் பிரச்சினை என்று தட்டிக்கழிக்கப் பார்க்கின்றார்கள்.

புலம்யெர்ந்த நாடுகள் எங்கும் 33 நாட்களாக தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வருகின்றது. ஆனால், இந்தப் போராட்டத்தில் அந்ததந்த நாடுகளில் வாழும் எத்தனை விகிதமான மக்கள் கலந்துகொள்கின்றார்கள். இது ஒரு இறுதியான யுத்தம். இந்த யுத்தத்தின் மூலம் தமிழ் மக்கள் நிரந்தரமாக விடுதலையை அடைய வேண்டும் இல்லையேல் முழுமையாக அழிய வேண்டும் என்பதே இதன் நிலை.

இப்போதைய நிலையில் உயிர் வாழ்தலுக்கான போராட்டம் இது. இறுதியான போராட்டம் இது. இந்தப் போராட்டத்தை வெற்றி கொள்ளாவிட்டால் என்றுமே தமிழினம் வெற்றி பெறமுடியாது. எனவே, அனைத்து மக்களும் தங்களது அவசர தேவைகளை தவிர ஏனைய நேரங்கள் அனைத்தும் இந்த எழுச்சிப் போராட்டங்களில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டால் வேற்றியை விரைந்து நமதாக்கிக் கொள்ள முடியும்.

இன்றைக்கு எட்டுக்கும் மேற்பட்ட நாடுகளில் 12ற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருக்கின்றார்கள். இந்த இளைஞர்களுக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்கவேண்டியது ஒவ்வொரு தமிழ் மக்களின் கடமை. எங்களுக்காக அவர்கள் தங்களை வருத்தி உருக்கிகக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொண்டு இந்தப் போராட்டத்திற்கு அனைவரும் தமது ஆதரவினை வழங்க வேண்டும்.

ஜேர்மனியில் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு வருகைதந்த இளைஞர்களைச் சந்தித்து உரையாடிய சகோதரன் கிரி அவர்கள் கூறும்போது, இதுவரை காலமும் எமது விடுதலைக்காக தமிழீழத்தில் வாழும் உறவுகளால் எத்தனையோ தியாகங்கள் புரியப்படிருக்கிறது. ஆனால் புலம்பெயர்தேசத்திலிருந்து முருகதாசனைத் தவிர ஏன் வேறு எவரும் எமது விடுதலைக்காகத் தியாகங்கள் புரிவதற்கு முன்வரவில்லை எனக்கேள்வி எழுப்பினார். நாமும் தமிழர்களாக இருக்கும் போது எதற்காக ஒதுங்கி வாழ்கிறோம், என்றும் நாமெல்லாம் இதுவரைகாலமும் எமது நாட்களை வீணடித்திருக்கிறோம் என்று தான் மிகவும் வேதனையடைவதாகவும் கூறினார்.

பிரான்சில் கடந்த 32 நாட்களாக தங்களையே உருக்கிக்கொண்டிருக்கும் இரு இளைஞர்களின் உடல்நிலை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துகொண்டிருக்கின்றது. நேற்யை தினம் அவர்களில் ஒரு இளைஞர் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்தச் செல்லவேண்டும் என வலியுறுத்தியபோதும் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.

80 ஆயிரம் தமிழ் மக்கள் வாழும் இந்த பிரான்ஸ்சில் மூன்று நாட்களுக்கு ஒருவர் வந்தாலேயே நாளொன்றுறுக்கு 25 ஆயிரம் மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கமுடியும். இந்தப் போராட்டத்திற்கு வலுவான எழுச்சியினைக் காட்டினாலேயே தமிழ் மக்களின் இலக்கை எட்ட முடியும். தங்களுக்கு எதாவது நடந்ததன் பின்னர் பெருந் தொகையில் கூடுவதிலும் பார்க்க இப்போதே இந்தப் போராட்டத்தில் இணைந்து மக்கள் ஆதரவு வழங்கினால் விரைவாக வெற்றியை அடையலாம் என்று இளைஞர்கள் நம்பிக்கையினை வெளியிட்டபோது நெஞ்சம் கனத்தது.

ஒரு உயிரினம் நீடித்து நிலைத்து வாழவேண்டும் என்றால் அந்த இனம் பலமுள்ள இனமாக இருக்க வேண்டும் என்பது டாவின்சியின் கோட்பாட்டுத் தத்துவம். ஒரு மனித இனம் நிலைத்து வாழவேண்டும் என்றால் பலம் மட்டும் போதாது, அது எழுச்சிகொண்ட இனமாகவும் இருக்க வேண்டும் என்பதே புதிய பூகோள தத்துவம். எழுச்சி கொண்ட இனம்தான் விடுதலை அடையும் எனபதே வரலாறு கூறும் தத்துவம்.

எழுச்சி கொள்வோம். விடுதலை அடைவோம்.

  • வடக்கு, கிழக்கில் இருக்கும் தமிழர்களைக் கொன்றார்கள் நான் ஏன் என்று கேட்கவில்லை,
  • ஏனெனில் நான் வடக்கு, கிழக்கில் வாழ்வதில்லை
  • பின்னர் தென்னிலங்கையில் இருக்கும் தமிழர்களைக் கொன்றார்கள் நான் ஏன் என்று கேட்கவில்லை,
  • ஏனெனில் நான் தென்னிலங்கையிலும் வாழ்வதில்லை
  • பின்னர் தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்களையும் கொன்றார்கள் நான் ஏன் என்று கேட்கவில்லை,
  • ஏனெனில் நான் தமிழ்நாட்டிலும் வாழ்வதில்லை
  • இப்போது புலம்பெயர்ந்த மண்ணில் தமிழர்களைக் கொல்கிறார்கள்.
  • இப்போது என்னைக் காப்பாற்ற யாருமில்லை

என்று சொல்லும் நிலையை வைக்காமல் இப்போதே விடுதலைக்காக வீதியில் இறங்குவோம்.

விடுதலை நமதாகும்!

Comments

Muthuselvan said…
ஐயா, நான் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு ஈழ போராட்ட ஆதரவாளன். எதுகை மோனைக்காக எதை வேண்டுமானாலும் எழுதாதீர்கள். "தமிழ்நாட்டில் இருக்கும் ஈழ தமிழர்களை கொன்றார்கள். நான் தமிழ்நாட்டில் வாழவில்லை." என்று நீங்கள் எழுதி இருப்பது வார்த்தை அலங்காரங்களுக்கு நன்றாக இருக்கலாம். ஆனால், அர்த்தம் நன்றாக இல்லை. ஆகவே, சகோதர உரிமையுடன் கூறுகிறேன்.. இப்படி எழுதாதீர்கள். மனதுக்கு வருத்தமாக உள்ளது. - முத்துசெல்வன் தமிழ்நாட்டிலிருந்து....