உலகப் பந்தில் தமிழீழம் – பாகம் 3

உலகப்பரப்பில் அரசுகளின் அரசாள்கையையும் தமிழீழம் எனும் புதிய அரசு உருவாகுவதனை விரும்பாத உலகப்போக்கினைப் பற்றியும் கடந்த அங்கத்தில் நோக்கியிருந்தோம்.

அரசுகளை அரசாட்சி செய்யும் உயர்ந்தவர்கள் எவரும் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் இந்த அரசுகளுக்கிடையே உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாடு நிறையவே உண்டு.

அரசுகளுக்கிடையிலான ஆட்சிமுறையினை அரசுகளே தமக்கிடையே உருவாக்கிக் கொள்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் இவ் ஆட்சி முறை எவ்வாறு உருவாக்கப்படவேண்டும் என்பதனை பலம் மிக்க அரசுகளே தீர்மானிக்கின்றன.

சர்வதேச உறவுமுறைகளைத் தீர்மானித்து உலக ஒழுங்கை வடிவமைப்பதில் பலமுள்ள அரசுகளின் பாத்திரங்கள் மிகவும் தீர்க்கமானவையாக உள்ளன.

ஆரம்ப கால உலக ஒழுங்கில் அரசுகளுக்கிடையே சமத்துவம் என்பது கிடையாது. ஒன்றை ஒன்று சுரண்டிக் கொழுப்பதில் எவ்விதக் கூச்சங்களும் அரசுகள் அறியாதவை.

பெரிய மீன் சிறிய மீனை விழுங்குவது போல – அவ்வாறு விழுங்குவது இயற்கையின் நியதி எனக் கருதப்படுவதைப்போல – அரசுகளின் நடத்தையில் ஒருவித சமூக டார்வினிசம் (Social Darwinism) இயல்பாகவே கலந்திருக்கும். பெரிய அரசுகள் சிறிய அரசுகளை விழுங்கி ஏப்பமிட்டுக் கொள்ளும். பலமிக்க அரசுகள் பலவீனமானவர்களை அடிமைப்படுத்திக் கொள்ளும்

இவற்றை வெளிப்படையாவும் பச்சையாகவும் செய்து வந்த காலமாக காலனித்துவக் காலம் இருந்தது. கடலோடி வந்த ஜரோப்பியர் பெரிய இந்தியாவினையும் அடிமை கொண்டனர். சிறிய இலங்கைத் தீவினையும் விழுங்கிக் கொண்டனர். அவ்வாறு விழுங்கும் போது ஈழத் தமிழினத்தின் அரசினையும் விழுங்கிக் கொண்டனர்.

5 நூற்றாண்டுகளாகின்றன. சிறிய தேசமான ஈழத் தமிழர் தேசம் தான் இழந்த அரசினை இன்னும் மீளப்பெறவில்லை.

நீண்டகாலம் அரசற்ற இனமாக, ஆளப்படுகின்ற இனமாக இருந்தமையால் சர்வதேச உறவுகள் என்ற அரசுகளுக்கிடையிலான உறவுமுறை பற்றி எவ்வித பிரங்ஞைகளுமின்றி வாழப் பழகிவிட்ட இனமாக நாம் மாறிவிட்டோம்..

இவ்வாறு அரசுகளை வேறு அரசுகள் இலகுவாகவும் நேரடியாகவும் அடிமை கொண்ட காலம் கடந்துபோய் மறைமுகமாக தம்வசப்படுத்தும் அல்லது அடிமை கொள்ளும் நவகாலனித்துவம் நவீன முறையில் தற்போது வளர்ச்சி கண்டிருக்கிறது.

இவ் வளர்ச்சிக் காலப் போக்கில் அரசுகள் ஒருங்கிணைந்து தமக்கிடையிலான உறவுகளை ஒரு ஒழுங்குமுறைக்குட்படுத்தியபோது அவற்றைத் தமக்கிடையேயான சட்ட ஒழுங்குகளாகவும் உருவாக்கிக் கொண்டனர். இச் சட்ட ஒழுங்குகளுக்கு உட்பட்டுச் செயற்பட்டுக் கொண்டு தமது நலன்களுக்காக இயங்குவது என்பது அரசுகளின் நடத்தையாக மாறியிருக்கிறது.

எனினும் பலமிக்க அரசுகள் தமது நலனுக்காக இந் நடைமுறைகளைத் தாண்டியும் செயற்படும்.

உதாரணமாக 2003 ஆம் ஆண்டு அமெரிக்காவாலும் அதன் கூட்டு அணியினராலும் ஆரம்பிக்கப்பட்ட ஈராக் மீதான போர் சர்வதேச சட்டநடைமுறைகளை மீறிய செயல் என அன்றைய ஜக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கோபி அனான் குற்றம் கூறியிருந்ததும் இங்கு நோக்கத்தக்கது.

இவ்விடத்தில், 1965 ஆம் ஆண்டு தனி அரசான சிங்கப்பூரை உருவாக்கி கட்டி வளர்த்த பெருமைக்குரிய லீ குவான் யூ அவர்கள், 2007 ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் நம் கவனத்தை ஈர்க்கிறது.

‘நாம் உயிர் வாழ்வோமா? இக் கேள்வி இன்று வரை பதிலளிக்கப்படாமலே உள்ளது. இதுவரை 42 வருடங்கள் நாம் உயிர்வாழ்ந்து விட்டோம். எம்மால் இன்னும் 42 வருடங்கள் உயிர்வாழ முடியுமா? இது உலக நிலைமைகளைப் பொறுத்த விடயம். இது எம்மோடு மட்டும் தொடர்புபட்ட விடயம் அல்ல. சர்வதேச சட்டங்களும் விதிகளும் இல்லாதிருந்து பெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்குவதும் சிறியமீன்கள் இறால்களை விழுங்குவதுமான நிலைமை இருந்திருக்குமாயின் நாம் இதுவரை உயிர்வாழ்ந்திருக்க முடியாது. எமது ஆயுதப்படைகள் ஒரு தாக்குதலை எதிர்கொள்ளவும் இரண்டு மூன்று வாரங்களுக்கு இழப்பினை ஏற்படுத்தவும் முடியலாம். ஆனால் ஒரு முற்றுகையை ..? (சிரிக்கிறார்)’ (http://www.nytimes.com/2007/08/29/world/asia/29iht-lee-excerpts.html இணைப்பை இறுதியாகப் பார்வையிட்ட திகதி: 19.02.2010. மொழிபெயர்ப்பு கட்டுரையாளருடையது.)

லீ குவான் யூ அவர்களின் இக் கருத்து ஒரு விடயத்தைத் தெளிவாகக் கூறுகிறது. உலகப்பந்தில் சிறிய தேசங்கள் உயிர்வாழ்வது என்பது, அவை அரசுகளாக இருந்தால்கூட ஆயுதபலத்தால் மட்டுமே சாத்தியமாகாது என்பதே அது.

இவ்விடத்திலிருந்து ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்கள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புக்கள் உலக ஒழுங்கு மாறி வந்த போது எவ்வாறு மாற்றமடைந்து வந்துள்ளன என்பதனை நோக்குவோம்.

இதனை நோக்குவதற்கு இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர் தோற்றம் பெற்ற உலக ஒழுங்கிலிருந்து ஆரம்பிப்போம்.

இரண்டாம் உலகமகாயுத்தம் முடிவடைந்த பின்னர் தோற்றம் பெற்ற உலக ஒழுங்கு இருகுவிமையப்படுத்தப்பட்ட ஓர் உலக ஒழுங்காக (Bi-polar world order) வடிவம் பெற்றது.

அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ அணியும் சோவியத் யூனியன் தலைமையிலான சோசலிச அணியும் உலகைப் பங்கு போட கங்கணம் கட்டி நின்ற காலப்பகுதி அது.

காலனித்துவ ஆட்சிக்காலம் படிப்படியாக முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. காலனித்துவ ஆட்சிகளுக்கு எதிரான போராட்டங்களும் – காந்திய வழியிலும் ஆயுதம் தாங்கிய வடிவிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பல விடுதலை அமைப்புக்கள் சோசலிச தத்துவங்களின்பாற் பெரும் ஈர்ப்பும் கொண்டிருந்தன.

காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை அடையும் நாடுகள் சோசலிச அரசுகளாக அமைந்து விடக்கூடாது என்பதில் அமெரிக்கா கூடுதல் அக்கறையினைக் கொண்டிருந்த காலம் அது.

நாடுகள் சோசலிச அரசுகளாக மாற்றமடைந்து விடாது தடுப்பதற்கும், சோசலிச அரசுகளாகத் தோற்றம் பெற்றிருந்தவையினை வீழ்ச்சி அடையச் செய்வதற்குமான வழிவகைகளை மேற்குலகின் முதலாளித்தவ மூளை குடைந்து குடைந்து ஆராய்ந்து கொண்டிருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி Harry S. Truman, 1947 முன்வைத்த ‘உதவும் திட்டம்’ இவ் அடிப்படையினையே கொண்டிருந்தது.

அமெரிக்க முதலாளித்துவ அறிஞர் W.W. Rostow, 1960 ஆம் ஆண்டில் எழுதிய “Five Stages of Economic Growth: A non-communist manifesto” எனும் நூல் கொம்யூனிசச் சிந்தனைக்கு மாற்றான முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சித் திட்டத்திற்கான படிமுறையினை முன்வைத்தது.

சோவியத்யூனியனும் தன் பங்கிற்கு முதலாளித்துவ அரசுகளை சோசலிச அரசுகளாக மாற்றியமைத்து விடும் முயற்சியினைத் தீவிரமாக்கியிருந்தது.

இவ்விரு போக்குகளும் உலகில் முட்டி மோதிக் கொண்டிருந்தபோது – ஓரணியை மற்றைய அணி வீழ்த்திவிடத் துடித்துக் கொண்டிருந்தபோது – இக் கெடுபிடிப் போரின் (cold war) சூட்டில் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் உயிர் வாழ்வதற்கான சர்வதேசச் சூழலுக்கு வாய்ப்பு இருந்தது.

முதலாளித்துவ அரசுகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு சோவியத் அணியும் சோசலிச அரசுகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு அமெரிக்க அணியும் ஆதரவும் முண்டும் கொடுத்துக் கொண்டிருந்தன.

தம்மை அணிசாரா நாடுகள் எனக் கூறிக்கொண்டிருந்த அரசுகளும் நடைமுறையில் ஏதோ அணியின் பக்கம் கூடுதல் சார்புத்தன்மை கொண்டவையாகவே இருந்தன. இத்தகைய நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களில் அந்தந்த நாட்டு அரசுகளின் சார்புத் தன்மைக்கமைய இவ்விரு அணிகளும் தமது ஆதரவினை வழங்கி வந்தன.

நிலைமைகளில் மாற்றம் வந்த காலகட்டங்களில் அந் நிலைமைகளுக்கேற்ப எவ்வித கூச்சமும் இன்றி இவ் அணிகள் தமது ஆதரவினையும் மாற்றியமைத்துக் கொண்டன.

உதாரணமாக 77-78 ஆம் ஆண்டுகளில் ஒகாடன் (Ogadan) எல்லைத் தகராறு காரணமாக எதியோப்பியா – சோமாலியா போர் மூண்டபோது தனது நட்பு நாடாக விளங்கிய சோமாலியாவிற்கே சோவியத் அணி தனது ஆதரவினையும் உதவிகளையும் வழங்கி வந்தது. எதியோப்பியாவுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கி வந்தது. இடையில் எதியோப்பியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, புதிய ஆட்சியாளர் சோசலிச அரசாங்கத்தினை அமைத்தவுடன் சோவியத் உடனடியாகவே சோமாலியாவினைக் கைவிட்டுப் பக்கம் மாறிக் கொண்டது.

சோமாலியாவினை விட எதியோப்பியா பெரிய நாடாகவும் இப் பிராந்தியத்தின் தலைமை நாடாகவும் இருந்தமையே இதற்குக் காரணம். இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா சோமாலியாவினை ஆதரிக்கத் தொடங்கியது. எனினும் சோமாலியாவின் ஆயுத தளபாடங்களும் முறைமைகளும் சோவியத் மயப்படுத்தப்பட்டதாக இருந்தமையால் உடனடியாக அமெரிக்காவினால் சோமாலியாவுக்கு பெரியளவில் உதவிட முடியவில்லை. இதற்கிடையில் சோமாலியா போரில் தோல்வியடைந்தது.

இரு முகாம்களாக உலகம் பிரிந்திருந்த காலத்தில் ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்களும் அச் சூழலைப் பயன்படுத்தித் தம்மை வளர்த்துக் கொள்ளவும், கிடைக்கும் வெளிகளுக்கால் நுழைந்து தம்மைப் பலப்படுத்திக் கொள்ளவும் கூடுதல் வாய்ப்புக்கள் கிடைத்தன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இவ் இரு முகாம்களுக்கிடையிலான முரண்பாடுகள் 1980 களின் ஆரம்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

இந்தியாவும் சிறிலங்காவும் தம்மை அணிசாரா நாடுகள் என்று கூறிக் கொண்டாலும் இந்தியா சோவியத் அணிபக்கமும் சிறிலங்கா அமெரிக்க அணி பக்கமும் கூடுதல் சார்புத்தன்மை கொண்டிருந்த காலப்பகுதி அது.

தனது கொல்லைக்குள் இருக்கும் சிறிலங்கா தனது விருப்பினை மீறிச் செயற்படும் போக்கை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடன் அப்போதய இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் ஈழத் தமிழரின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது.

ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் மூலம் சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து, சிறிலங்கா அரசினைத் தனது கட்டுக்குள் கொண்டு வந்து, நாடு பிரியாத ஒரு தீர்வுத் திட்டத்துடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இந்தியாவின் திட்டமாக இருந்தது.

இந்தியாவின் திட்டம் எதுவாக இருந்தாலும் இந்தியா கொடுத்த ஆயுதப் பயிற்சியினை விடுதலைப்புலிகள் உட்பட போராட்ட இயக்கங்கள் தம்மை வளர்ப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டன. இது குறித்த விபரங்கள் கூறவரும் விடயத்திற்கு அவசியமின்மையால் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளன.

இரு குவிமையப்பட்ட உலக ஒழுங்கில் ‘உனக்குப் பயங்கரவாதி எனக்கு விடுதலைப் போராளி’ எனும் சூத்திரம் நடைமுறை அர்த்தம் பொதிந்ததாக இருந்தது.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போராட்ட இயக்கங்களுக்கு இவ்விரு அணிகளில் ஏதோ ஒன்றுடன் இணைந்தோ அல்லது இவ்விரு உலகப் போக்குகள் ஏற்படுத்திய வாய்ப்புக்கள் மூலமாகவோ அனைத்துலக அரங்கிலிருந்து முற்றிலும் தனிமைப்பட்டுப் போகாத வாய்ப்பு இருந்தது.

இவ்வாறு இரு குவிமையப்பட்ட உலக ஒழுங்கு ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கு கொடுத்திருந்த வாய்ப்பு, சோவியத்தின் வீழ்ச்சியுடன் உலகம் ஒருகுவிமையப்படுத்தப்பட்ட உலக ஒழுங்கினுள் (Uni-polar world order) நுழையத் தொடங்கியதுடன் ஆட்டம் காணத் தொடங்கியது.

சோவியத் சிதறியுதும், முதலாளித்துவ அணி சோசலிச அணி என இருந்த உலக ஒழுங்கு அமெரிக்கா தலைமையிலான ஒரு குவிமையப்படுத்தப்பட்ட உலக ஒழுங்காக மாறத் தொடங்கியது.

இந் நிலைமை விடுதலைப் போராட்டங்களுக்கு இருந்த சர்வதேச வெளியைச் சுருக்கியது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் அடுத்த எதிரியை நோக்கிக் குறி வைத்தது.

1992 ஆம் ஆண்டில் Samuel Huntington எனும் அமெரிக்க அறிஞர் Clashes of Civilisation எனும் கருத்தை முன்வைக்கிறார். பின்னர் அதனை ஒரு விரிவான புத்தகமாக 1996 இல் வெளியிடுகிறார்.

உலக நாகரீகங்களை எட்டாகப் பிரித்த இவர் கெடுபிடி யுத்தத்தின் பின் உலக முரண்பாடுகள் நாகரிகங்களுக்கிடையிலானதாக அமையும் என எதிர்வு கூறினார். சில நாகரிகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் கூர்மையடையும் எனவும், அதில் மேற்குலக நாகரிகத்துடன் இஸ்லாமிய நாகரிகமும் சீன நாகரீகமும் கூடுதல் முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் எனவும் வெளிப்படுத்தினார்.

Samuel Huntington இன் கோட்பாடு உலகமட்டத்தில் மிகுந்த வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்தது. அறிஞர் பலர் அவரது கோட்பாட்டை மறுதலித்து வருகின்றனர். ஆனால் அரசுகள் இதனை உன்னிப்பாகக் கவனத்திற் கொண்டுள்ளன.

இப் பின்னணியில், மேற்குலகம் தனது அடுத்தகட்ட எதிரியைக் கையாள்வதற்கான வியூகங்களை விரிக்கத் தொடங்கியது. பெரும் போரினை விட சிறு போர்களும் ஒரு சிலரால் நடத்தப்படக்கூடிய கெரில்லாப்பாணித் தாக்குதல்களும் ஆபத்தானவை எனக் கணிப்பிட்டுக் கொண்டது. இஸ்லாமிய தீவிரவாதம் இவ்வடிவத்தில் பெரும் அச்சுறுத்தலைத் தரும் எனவும் மதிப்பிட்டுக் கொண்டது.

இதற்கிடையில் மேற்குலகம் எதிர்பார்த்தவாறு, ஒரு சிலர் பங்கு கொண்ட, தாக்கத்தைத் தரக்கூடிய வகையிலான தாக்குதல்களை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தினை எதிர்த்து இஸ்லாமியத் தீவிரவாதிகள் மேற்கொள்கின்றனர்.

உலகளாவிய ரீதியில், குறிப்பாக மேற்குலகில் பரந்து குடியமர்ந்திருக்கும் முஸ்லீம்களையும் ஏனைய வெளிநாட்டவர்களையும் இத்தகைய ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் தம்வசப்படுத்தி தமக்கெதிரான நடவடிக்கைகளை தமது மண்ணிலேயே மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என மேற்குலகம் அச்சம் கொண்டது.

இதனால் தனது கட்டுப்பாட்டினுள் இல்லாத ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்துக்கும் உலகப் பரப்பில் இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் அனைத்தையும் சுருக்க அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு திட்டமிட்டது. இப் போராட்ட இயக்கங்களுக்கு இருக்கக்கூடிய ஏற்புடைமையினை (Legitimacy) இல்லாதொழிக்க உபாயம் வகுத்தது.

இது தான் ‘பயங்கரவாதம்’ ‘பயங்கரவாதிகள்’ எனும் எண்ணக் கருவாகத் திரட்சியடைந்து பட்டங்களாகச் சூட்டப்பட்டது.

1997 ஆம் ஆண்டு அமெரிக்கா பயங்கரவாத் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி பல ஆயுதம் தாங்கிய வெளிநாட்டு போராட்ட இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்களாகப் பிரகடனப்படுத்தித் தடை செய்தது. விடுதலைப்புலிகள் இயக்கமும் தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் ஒன்றாகிற்று.

2000 ஆம் ஆண்டில் பிரித்தானியாவும் பயங்கரவாத் தடைச்சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இச் சட்டம் அமெரிக்க சட்டத்திற்கு ஒருபடி மேலே போய் மத, இன மற்றும் ஏனைய காரணிகளின் அடிப்படையில் தமது இலக்கினை அடைந்து கொள்வதற்காக அரசுகளை எதிர்த்து ஆயுதம் தாங்கிப் போராடுதல் பயங்கரவாதம் என வரையறை செய்தது. இத்தகைய பயங்கரவாதத்திற்கு ஆதரவாக அரசியல் ரீதியாக செயற்படுவதனையும் பிரித்தானியச் சட்டம் தடை செய்தது. விடுதலைப்புலிகள் அமைப்பும் இத் தடைக்குள் அகப்பட்டுக் கொண்டது.

இவை எல்லாம் 2001 செப்டம்பர் மாதம் 11ம் திகதி அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்கு முன்னர்தான் நடைபெறுகின்றன என்பதனை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும்.

மேற்குலகம் தன்னைத் தயார் செய்து வருகையில் அதன் கணிப்பிற்கு சற்று முந்தியதாகவும் அளவில் பெரியதாகவும் அமெரிக்காவின் மீதான இரட்டைக் கோபுரத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இவை உலகை அதிர வைக்கின்றன.

பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அத் தாக்குதல்கள் ஒரு வகையில் உலகளாவிய அமெரிக்க வியூகத்திற்கு வாய்ப்பான சூழலை உருவாக்கியது. ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நேரடிப் போராகவும், பயங்கரவாதத்திற்கெதிரான உலகம் பரந்த நடவடிக்கைகளாகவும் அமெரிக்கா தனது காலை அகல விரித்தது.

‘உனக்குப் பயங்கரவாதி எனக்கு விடுதலைப் போராளி’ எனும் சூத்திரம்’ அர்த்தம் இழந்து போய் ‘எனக்குப் பயங்கரவாதி உனக்கும் பயங்கரவாதியே’ எனும் புதிய சூத்திரம் நடைமுறைக்கு வந்தது.

இது ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்களை தனிமைப்படுத்தி அழித்து விடுவதற்கு வாய்ப்பான சூழலை ஏற்படுத்தியது.

தமிழீழம் தனி அரசாக அமைவதனை உலக ஒழுங்கு விரும்பாத காரணத்தால் தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகின் மிகக் கடினமான போரட்டங்களில் ஒன்றாகிற்று எனக் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம்.

இக் கடினமான போராட்டம் ஆயுதம் தாங்கிய போராட்டமாகவும் இருந்தமையால் உலகில் ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக ஏற்பட்ட மாற்றங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மிகப் பெரியளவில் பாதிக்கலாயிற்று.

இதன் அடுத்த பகுதி வரும் திங்கட்க்கிழமை (22.03.10) தொடரும்…

- தாமரை காருண்யன்

Comments