தமிழரின் விரக்திக்கு நம்பிக்கை கொடுத்திருக்கின்றார்கள் திரைப்பட துறையினர்

கடந்த ஆண்டு இடம்பெற்ற நான்காம் ஈழப்போரின் போது ஏற்பட்ட அனர்த்தங்களினால் விரக்தியின் எல்லையையே தொட்டுவிட்டு ஆளாத துயரத்தில் இருக்கும் ஈழத்தமிழருக்கு நம்பிக்கைத் தீபத்தை இந்தியாவின் தமிழ்த்திரைப்பட துறையினர் அளித்துள்ளதானது தமிழனை அழிக்க எத்தனிக்கும் ஆதிக்கசக்திகளுக்கு ஒரு சாவுமணி அடித்தாற்போல் உள்ளது.

தாம் நினைத்ததையெல்லாம் செய்து தமிழனை மண்டியிட வைக்கலாம் என்று கங்கணம் கட்டி நிற்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு சமீபகாலமாக ஈழத் தமிழரின் விடுதலைக்கு ஆதரவளிக்கும் தமிழ்த்திரைத் துறையினர் ஒரு சவாலாக எழுச்சி பெற்றுள்ளார்கள் என்றால் அது மிகையாகாது. இந்த எழுச்சி மென்மேலும் தொடர்ந்து மடிந்த தமிழருக்கும் மரணத்தின் விளிம்பில் இருக்கும் தமிழருக்கும் மற்றும் அவர்களின் இருப்பிடங்களை அழித்து தமிழர் என்ற இனம் சிறிலங்காவில் இல்லை என்ற வக்கிரபுத்தியுடன் செயலாற்றும் மகிந்த ராஜபக்சாவுக்கும் நல்லதொரு பாடத்தை கொடுக்கவேண்டும் என்பது தான் அனைவரினதும் விருப்பம்.

கடந்த ஆண்டு ஈழப் போர் உக்கிரமடைந்து ஈழத் தமிழர் வகை தொகை இன்றி அழிக்கப்பட்ட பொழுது தமிழ் திரையுலகத்தினர் திரண்டு பல கண்டனக் கூட்டங்களையும் மற்றும் போராட்டங்களையும் ஏற்படுத்தி தமிழ் திரையுலகத்தினர் வரலாற்றின் முன் எப்பொழுதுமில்லாதவாறு நிகழ்ச்சிகளை நடாத்தி தமிழ்நாட்டு மக்களை ஓன்று திரட்டினார்கள். லட்சக்கணக்கில் தமிழர்கள் ஓன்று திரண்டார்கள். ஆனாலும் சிங்கள அரசு தமிழர்களை அழித்து பல லட்சம் மக்களை சிறைப்பிடித்து வதைமுகாம்களுக்குள் வைத்து சித்திரவதை செய்தார்கள். பல்லாயிரம் இளைஞர்களை புலி என்ற முத்திரை குத்தி இன்று இடம்தெரியாத வதைமுகாம்களில் வைத்து சித்திரவதை செய்கின்றார்கள்.

அத்துடன் கைது செய்த பல இளைஞர்களை ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோதபாய ராஜபக்சாவின் நேரடி உத்தரவில் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக அவரே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். இப்படியாக அராயகம் தமிழருக்கு எதிராக சிறிலங்காவில் நடக்க மும்பையை தலைமையாகக் கொண்ட இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி விருதுகள் (சர்வதேச இந்திய திரைப்படக் கழகம்) சிறிலங்காவில் இந்த மாதம் இந்த விழாவை நடாத்துவதாக 26 மார்ச் 2010 அன்று ஒரு அறிவிப்பைவிட்டது. இந்த அமைப்பின் அறிவிப்பானது எப்படி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருக்குமோ அதைப்போல உலகத் தமிழரின் நெஞ்சில் இடி விழுந்தது.

இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோள் என்னவென்றால் பாலிவூட்டின் சந்தைகளை உலகெங்கும் பிரபலப்படுத்துவது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டின் முக்கிய நகரில் குதூகலமாக கடந்த ஒரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றது. பாலிவுட்டின் அகாடமி (ஆஸ்கர்) விருது, கேன்ஸ் பட விழா ஆகியவற்றிற்குப் பிறகு உலக அளவில் பல கோடி மக்கள் ரசிக்கும் திரைப்பட விழாவாக இந்த சர்வதேச இந்தியப் பட விழா கொண்டாடப்படுகின்றது. இந்த விழாவை தொலைக்காட்சி மூலம் 100-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 50 கோடிக்கும் அதிகமான மக்கள் கண்டு ரசிப்பதாக கூறப்படுகின்றது. வட இந்திய நடிகர் நடிகைகள் முதற்கொண்டு தென்னிந்திய நட்சத்திரங்கள் வரை கலந்துகொண்டு சிறப்பிக்கும் விழாவாகவே இது இருந்து வந்துள்ளது.

இப்படியான இந்த சர்வதேச இந்தியப் பட விழாவை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து ஜப்பான் வரை போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பம் செய்யும் அளவிற்கு விளம்பர, வணிக முக்கியத்துவம் கொண்டது இவ்விழா. இந்த விழாவுக்கு இந்திய தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு வணிக ஆதரவு கொடுத்திருக்கின்றது. சிறிலங்கா ஒன்பது மில்லியன் (90-லட்சம்) டாலர்களை இந்த விழாவுக்கு செலவழிக்கிறது. ஆனால் 126 மில்லியன் (12 கோடி 60 லட்சம்) டாலர்கள் வருவாய் சிறிலங்காவிற்கு பெற்றுத்தருவதாக இந்த இந்திய வணிக நிறுவனங்கள் உத்தரவாதமளித்துள்ளது.

தமிழர் பிரதேசங்கள் துயரத்தில் சிங்களப் பகுதிகள் விழாக்கோலத்தில்

இப்படியாக பெரும் எடுப்பிலும் எதிர்பார்ப்புக்களுடனும் இந்த ஆண்டு இவ்விழா இந்த வாரம் வியாழன்இ வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் கொழும்பில் நடைபெறுகின்றது. இந்த விழாவிற்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் விளம்பரத் தூதராக இருக்கிறார். இந்த விழாவுக்கான வேலைகள் மும்மரமாக கடந்த சில வாரங்களாக நடைபெற்றன. சுகததாச உள்ளக அரங்கின் அலங்கார வேலைகளுக்காக 50 தொழில்நுட்பப் பணியாளர்கள் மும்பாயிலிருந்து கொழும்பு சென்று பணிகளைச் செய்தார்கள்.

இந்த விழாவில் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்கின்றனர். அத்துடன் கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியத் திரைப்பட விருது விழா தொடர்பான அலங்காரப் பணிகளை கொழும்பு மாநகரசபை மேற்கொண்டது. கொழும்பு விகாரமாதேவி பூங்கா உட்பட பல இடங்கள் வண்ணமயமாக காட்சியளிக்கின்றது. மொத்தத்தில் கொழும்பே விழாக்கோலம் பூண்டிருக்கின்றது. ஆனால் தமிழர் பிரதேசங்களில் இருந்து வரும் செய்திகள் மனதைப் புண்;படுத்துபவையாக உள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் ஐந்துக்கும் அதிகமான உடல்களை கிளிநொச்சி பகுதியில் கண்டெடுக்கபட்டதாக அறிவிப்பு வந்துள்ளது. இப்படியாக பல சோக செய்திகள் தமிழரின் மனங்களில் அன்றாடம் புண்;படுத்திக்கொண்டிருக்கையில் அவர்களை படுகொலை செய்த அரக்கர்களோ விழாக்களை நடாத்துகின்றார்கள்.

அத்துடன் இன்று பல ஆயிரம் தமிழ் குடும்பங்களோ தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்ததோ என்று இரவும் பகலும் சோகத்தில் கிடக்கின்றார்கள். ஏன் பலர் மன அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர். தமது பிள்ளைகள் மற்றும் சொந்தங்கள் என்ன நிலையில் இன்று சிறையிலும் மற்றும் திறந்த வெளி வதைமுகாம்களில் இருக்கின்றார்கள் என்று ஒவ்வொரு கணமும் அழுது புலம்புகின்றார்கள். இப்படியாக ஈழத் தமிழரின் வாழ்வு இருள்படிந்து இருக்கையில் சிங்கள தேசம் களியாட்டங்களை நடாத்தி தாம் செய்த அனியாயங்களுக்கு அங்கீகாரம் தேட முனைகின்றார்கள்.

சிங்கள தேசத்தின் தேடலுக்கு மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த சர்வதேச இந்திய திரைப்பட கழகம் துணைபோகின்றது. இதனைக் கேள்விப்பட்ட இந்திய தமிழ் அரசியல் வாதிகள் முதல் தமிழ் திரையுலகினர் வரை பல போராட்டங்களை நடாத்தினார்கள். இதற்கிடையில் தென்னிந்திய திரைப்படத்துறையினர் மற்றும் தென்னிந்திய திரையுலகத்தினர் சென்னையில் அவசர கூட்டம் நடத்தி இதுபற்றி விவாதித்தனர். இக்கூட்டத்தில் இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவை நடத்தக்கூடாது என்றும் இவ்விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகையர் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் திரையிடப்படமாட்டாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர். மேலும் சிறிலங்காவில் படம் எடுப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.

இப்படியாக தமிழ் திரையுலகத்தினர் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க சிறிலங்காவோ ஒருபடிமேல் சென்று தென்னிந்திய திரைப்படங்களுக்கு இலங்கையில் தடை விதிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை நடாத்திவருவதாக அறியமுடிகின்றது. இப்படியானதொரு நிகழ்வு ஏற்படுமாயின் தமிழ் திரையுலகத்தினர் மீது நேரடியாக ஒரு போரை திணித்துள்ளதாகவே கருதப்படும். அத்துடன் இந்தியாவின் குறிப்பாக தமிழக அரசுடனான உறவிலும் அது பாதிப்பைக் கொண்டு வரும்.

மேலும் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் மீதும் அசம்பாவிதங்களை ஏற்படித்தி நேரடியானதொரு போரை தமிழ் திரைப்படங்களுக்கு எதிராக செயலாற்ற அரசாங்கம் ஈடுபட சந்தர்ப்பம் உள்ளதென்று அவதானிகள் கூறுகின்றார்கள். இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரையும் எப்படியாயினும் இந்த விழாமேடையில் பங்குபற்றச் செய்வதன்மூலமாக பல கோடி மக்களின் இதயங்களில் சிறிலங்கா மீது ஒரு நட்பெயரை எப்படியாயினும் உருவாக்கிவிடவேண்டும் என்ற கங்கணத்தில் இருக்கின்றார் மகிந்த ராஜபக்ச.

இப்படியாக சிங்கள மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து அவர்களின் ஆதரவையும் அத்துடன் சிறிலங்கா மீதான உலகத்தில் இருக்கும் அவப்பெயரை எப்படியாயினும் அகற்றி உல்லாசப் பிரயாணிகளை சிறிலங்கா வரவழைத்து அழிந்துபோயிருக்கும் பொருளாதாரத்தை தக்கவைத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றார் ராஜபக்ச. பாவம் தமிழரின் இருள் கலந்த வாழ்நாட்களில் சிங்கள மக்களை மகிழ்ச்சி கடலில் விட்டு தான் செய்த பாவத்திற்கு புண்ணியம் தேட முயல்கின்றார் ராஜபக்ச.

தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்

தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்ற பழமொழிக்கேட்ப தமிழ் திரையுலகத்தினரையும் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஈழத் தமிழருக்கெதிரான யுத்தம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகத்தினர் மட்டுமல்ல அனைத்து தென்னிந்திய திராவிடரும் ஓர் குடையின்கீழ் வரும் செய்திகள் இனியவையாகவுள்ளன. அனைத்து திராவிடரையும் ஒரு குடையின்கீழ் வந்தால் எமக்கென்ற ஒரு எதிரி இவ்வுலகில் இருக்கமுடியாது. இதனை மனதில் கொண்டு செயலாற்றினால் திராவிட இனத்துக்கே மாபெரும் எதிர்காலம் உண்டு.
கேரளாவைச் சேர்ந்த மம்முட்டி இந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்:

“இந்த விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். ஆனால் இது தமிழரின் உணர்வுகளுக்கு எதிரானதாக ஏற்கனவே எனக்குத் தெரிந்திருந்தது. எனவே இந்த விழாவுக்குப் போவதில்லை என முடிவெடுத்து அறிவித்துள்ளேன்... தமிழர்கள் எனக்கு முக்கியம். சென்னை எனக்கும் சொந்த நகரம்தான். தமிழர்களோடு இரண்டறக் கலந்த நான் அவர்களைப் புண்படுத்தும் ஒரு நிகழ்வில் பங்கேற்பேன் என எதிர்ப்பார்ப்பது தவறு என்றார்." ரஜினி, கமல் மற்றும் பல தமிழ் திரையுலகத்தினர் இந்த விழாவில் பங்கேற்கமாட்டார்கள் என ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள்.

அத்துடன் தென்னிந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் மம்முட்டி, மோகன்லால், புனித் ராஜ்குமார், வெங்கடேஷ் போன்றவர்கள் கூட இந்த விழாவில் பங்கேற்கமாட்டோம் என ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். அத்துடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வேண்டுகோளை ஏற்று அனைத்து கன்னட, ஆந்திரா, மலையாள திரை உலகினர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இப்படியாக திராவிட திரைத்துறையினர் ஒட்டுமொத்தமாக தமிழ் திரையுலகத்தினரின் மாபெரும் புறக்கணிப்பு போருக்கு ஒத்தாசை வழங்கியுள்ளார்கள். தமிழ் திரையுலகத்தினரின் வேண்டுதலுக்கிணங்க சில முன்னணி வடஇந்திய திரையுலகத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

அமிதாப்பச்சனும் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை. மேலும் வட இந்தியாவின் முன்னணி நட்ச்சத்திரமான ஷாரூக்கான் தானும் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்தார். தென்னிந்திய திரையுலகத்தினரின் ஒட்டுமொத்த புறக்கணிப்பு போரை செவிமடுத்து சில முன்னணி வட இந்திய திரையுலகத்தினர் பங்குபற்றாவிட்டாலும் பல இரண்டாம் தர நட்சத்திரங்;கள் கலந்துகொள்கின்றார்கள்.

விரக்தியின் எல்லைக்கே சென்று இன்று என்னசெய்வதறியாது வழிதவறிப்போய் இருக்கும் ஈழத் தமிழருக்கு உலகத் தமிழர் தான் மருந்து கொடுத்து அவர்களை வீழ்ச்சியில் இருந்து எழுப்பிவிடவேண்டும். அத்துடன் உலகத் தமிழருக்கு புரிந்துணர்வை ஏற்படுத்த திரையுலகம் என்ற மாபெரும் ஊடகம் உலகத் தமிழரின் மனக்கதவைத் தட்டி ஈழத் தமிழரின் போராட்டத்தின் தார்ப்பரியத்தை புரியவைத்து ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளை பெற்றுத் தர உறுதிபேணவேண்டும். அத்துடன் தமிழ் திரையுலகத்தினர் எடுத்திருக்கும் போர்வாள் ஈழத் தமிழரின் விடுதலையை பெற்றுத் தர ஒரு புதிய பாதையை திறந்து உலகத் தமிழரை வழி நடத்தவேண்டும் என்பது தான் பேரவா.

அனலை நிதிஸ் ச. குமாரன்

Comments