கரடியனாறு - இந்தியா – துணைஇராணுவக்குழு - இது ஒரு சமகால அரசியல் ஆய்வு

நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பிரதேசத்தில், சிறீலங்கா காவல்துறையினரின்; நிலையத்திற்கு அண்மையில் வெடித்துள்ள பல தொன் எடை கொண்ட டைனமைற் என்ற வெடிபொருள் பூகோள பிராந்திய அரசியலில் ஒரு வெடிப்பதிர்வை ஏற்படுத்தி உள்ளது.


சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அமெரிக்காவில் நிற்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா சீனாவுடன் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நாவின் கொழும்பு வதிவிட பிரதிநிதிகள் கிழக்கு சென்றுள்ள நிலையில் சீனா நிறுவனத்திற்கு சொத்தமான வெடிபொருள் கொள்கலன் வெடித்துச் சிதறியுள்ளது.

சீனா நாட்டு பிரஜைகளும், பெருமளவான சிறீலங்கா காவல்துறையினரும் கொல்லப்பட்டுள்ளனர். வெடிமருத்து நிரம்பிய மூன்று பார ஊர்திகள் வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை ஒரு விபத்தாக சிறீலங்கா அரசு அவசர அவசரமாக தெரிவித்துள்ளபோதும், அது தற்போது ஒரு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மகிந்தாவின் ராசி எண்ணான 8 ஆம் இலகத்தில் (17) இந்த வெடிப்பு நிகழந்தது துரதிஸ்ட்டத்தின் ஆரம்பமாகலாம் என அரசு அஞ்சுகின்றது.

அரசுக்கு தற்போது உள்ள ஒரே சந்தேகம் இந்தியா மீது தான் என தனது பெயரை குறிப்பிடவிரும்பாத கொழும்பை தளமாக கொண்ட அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர்.

சிறீலங்காவை ஒரு இராணுவ நெருக்கடிக்குள் வைத்திருக்க புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளிடம் வேண்டுகோள் விடுத்த இந்திய தரப்பு, அது கைகூடாத நிலையில் சிறீலங்காவில் இயங்கும் ஒட்டுக்குழுக்களை கையகப்படுத்தி உள்ளதாக அரசு சந்தேகம் கொண்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் பிள்ளையான் குழு என்ற துணைஇராணுவக் குழுவினருக்கும், அரசுக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட முறுகல் நிலை, கடத்தல் வரை சென்றிருந்தது. பிள்ளையான் குழுவின் நகரசபை உறுப்பினர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தார்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமா ராவுக்கும், பிள்ளையானுக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கமே இந்த முறுகல் நிலைக்கு காரணம். துணை இராணுவக்குழுக்களின் மூலம் சிறீலங்காவில் பல நாசவேலைகளை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளதாக சிறீலங்கா அரசு அஞ்சுகின்றது. சிறீலங்காவுக்குள் ஊடுருவியிருந்த இந்திய புலனாய்வுப்பிரிவின் (றோ) அதிகாரிகளை அண்மையில் சிறீலங்கா அரசு நாடுகடத்தியிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.
சிறீலங்காவில் சீனாவின் பிரசன்னம் என்பது வெளிப்படையானது, அம்பாந்தோட்டை, கொழும்புத் துறைமுகம் என அதன் அபிவிருத்திப் பணிகள் விரிவடைந்து செல்கையில் தென்னிலங்கையிலும், வடக்கிலும் அது பல வீதி அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

அம்பாந்தோட்டையில் நிலத்தடி எண்ணை சேமிப்பு கிடங்குகளை அமைப்பதற்காக பல தொன் வெடிபொருட்களை சீனா பயன்படுத்தியபோது ஏற்படாத வெடிவிபத்து மட்டக்களப்பில் ஏற்பட்டது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

2006 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து சிறீலங்காவுக்கான பாகிஸ்த்தான் தூதுவர் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலும் இந்தியாவின் கைவரிசை எனவே பேசப்பட்டது.

எனவே மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற சம்பவம், சிறீலங்காவில் ஏற்படப்போகும் பிராந்திய அரசியல் போட்டிகளின் ஆரம்பமாக இருக்கலாம் என்ற ஊகங்கள் ஒருபுறம் இருந்தாலும், இதுவரை காலமும் சிறீலங்கா அரசு எறிந்த எலும்புத் துண்டுகளுக்கு அலைந்தவர்கள் மீது, வருங்காலத்தில் சிறீலங்கா அரசு தனது துப்பாக்கியை திருப்பும் நிலையும் ஏற்படலாம் என்றால் அது மிகையாகாது.

ஈழம் ஈ நியூஸ் இன் அரசியல் ஆய்வு.

நன்றி: ஈ நியூஸ்

Comments