நாடு கடந்த மாயமான்

முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பெரும் பின்னடைவிலிருந்து மீண்டெழ முற்படும் உலகத் தமிழினத்தின் எழுச்சியை மழுங்கடிக்கும் நிகழ்ச்சித் திட்டம், கடந்த ஒன்றரை ஆண்டாக இந்திய-சிங்கள அரசுகளால் மிகவும் கனக்கச்சிதமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

உலகத் தமிழர்களின் ஆழ்மனதில் வேரூன்றிக்கிடக்கும் தமிழீழத் தனியரசுக் கருத்தியலைத் தடயமின்றித் துடைத்தழிக்கும் நோக்கத்துடன் பல்வேறு முனைகள் ஊடாக இதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மே 18 வரை ஒரு குடையின் கீழ் இயங்கிய புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களைப் பல்வேறு துருவங்களாகத் துண்டாடுவதில் கடந்த பதினேழு மாத காலப்பகுதியில் ஓரளவுக்கு இந்திய-சிங்கள அரசுகள் வெற்றி கண்டிருந்தாலும்கூட, தமிழீழத் தனியரசு என்ற அடிப்படைக் கருத்தியலை துடைத்தழிக்கும் முயற்சி என்பது இந்திய-சிங்கள அரசுகளைப் பொறுத்தவரை வெறும் பகற்கனவாகவே விளங்குகின்றது.

கடந்த பதினேழு மாத காலப்பகுதியில் புகலிட தேசங்களில் தமக்குள்ளே கருத்தியல் ரீதியில் ஈழத்தமிழர்கள் முட்டிமோதிக் கொண்டாலும், தமிழீழத் தனியரசு என்ற மையப்புள்ளியில் நின்று இவ்வாறான கருத்தியல் முரண்பாடுகள் நிகழ்ந்தேறுவது என்பது, தமிழீழக் கருத்தியலை உயிர்வாழ வைக்கும் முனைப்புக்களுக்கு சாதகமாகவே அமைகின்றன.

ஒருபுறம் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே எழுந்துள்ள வேற்றுமைகள், வெளிப்புறத்தில் தமிழீழ தேசம் ஒற்றுமையின்றி சிதறுண்டு கிடப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தினாலும்கூட, வேற்றுமையில் ஒற்றுமை என்ற எண்ணக்கருவிற்கு இணங்க, தமிழீழத் தனியரசு என்ற திசைநோக்கியதாகவே இவ்வேற்றுமைகள் மையம்கொண்டிருப்பதை எவருமே மறுக்க முடியாது.

அங்கிங்கென மீண்டும் மீண்டும் திசைமாறிப் பயணிக்க முற்படும் புரவிகளை ஒருங்கிணைத்து ஒரு திசைநோக்கி நகர்த்தும் சாரதி போன்று இன்று உலகத் தமிழர்களை ஒரேதிசையில் பிரபாகரன் என்ற மாபெரும் இயங்குசக்தி நகர்த்திச் செல்கின்றது.

ஒரு தனிமனிதன் என்ற நிலையில் இருந்து ஒரு தேசத்தின் தலைவன் என்ற நிலைக்கு உயர்ந்த அந்த மாபெரும் சூரியத்தேவனின் நாமம் என்பது, இன்று தமிழீழத் தனியரசுக்கான இயங்குசக்தியாக பிரவாகமெடுத்து நிற்பதே இந்திய-சிங்கள அரசுகளுக்கு மிகப்பெரும் சவாலாக விளங்குகின்றது. பிரபாகரனை அழித்து விட்டால் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட முடியும் என்பது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே இந்திய-சிங்கள அரசுகளால் நுணுகி ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட ஒரு முடிவு.

1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 10ஆம் நாளன்று யாழ் பிரம்படியில் இந்திய சிறப்புப் படைகள் களமிறக்கப்பட்டது தொடக்கம் முள்ளிவாய்க்காலில் சிங்கள சிறப்புப் படைகள் களமிறக்கப்பட்டது வரை நிகழ்ந்தேறிய ஒவ்வொரு படை நடவடிக்கைகளும், பிரபாகரன் என்ற தமிழீழத் தனியரசுக்கான இயங்கு சக்தியை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டிருந்தன.

தலையைத் துண்டாடினால் உடலை செயலிக்க வைக்க முடியும் என்ற உயிரியல் கோட்பாட்டிற்கிணங்க, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமையைத் துண்டாடுவதை மூலோபாயமாகக் கொண்டு கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்திய-சிங்கள அரசுகளால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் தற்பொழுது கருத்தியல் போர் என்ற பரிமாணத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளன.

இதன் முதற்படியாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு மாற்றீடான கைப்பொம்மைத் தலைமைகளை உருவாக்கும் முயற்சிகளில் மும்முரமாக இந்திய-சிங்கள அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. ஒருபுறம் பகிரங்கமாகவே தமது தாளத்திற்கு ஆடும் டக்ளஸ், கருணா, பிள்ளையான், கே.பி போன்ற கைப்பாவைகளை தமிழ் மக்களின் தலைமைகளாக சித்தரித்து வரும் இந்திய-சிங்கள அரசுகள், மறுபுறம் மிதவாதிகள் என்ற போர்வையில் தமிழீழ தேசிய அரசியலில் மறைந்திருக்கும் தமது கைப்பாவைகளை தற்பொழுது முன்னரங்கிற்குக் கொண்டுவருவதற்கான பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழீழத் தனியரசுக்கு மாற்றீடாக அதிகாரப்பகிர்வு என்ற அரசியல்தீர்வு மாயைக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முடக்கி இந்தியப் பேரரசின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு சம்பந்தர் செயல்வடிவம் கொடுத்து வரும் நிலையில், புகலிட தேசங்களில் அணையாத தீயாகக் கொழுந்துவிட்டெரியும் தமிழீழத் தனியரசுக் கருத்தியல் மீதான நம்பிக்கையை சிதறடிப்பதற்கான பகடைக் காயாக நாடுகடந்த அரசாங்கத்தை வி.உருத்திரகுமாரன் கையாள்வதுது அண்மைக் காலங்களில் பட்டவர்த்தனமாகி வருகின்றது.

ஒருபுறம் தமிழீழம் என்பது சாத்தியமில்லை என்று தனது உள்வட்டங்களில் கூறிக்கொள்ளும் வி.உருத்திரகுமாரன், மறுபுறம் நாடுகடந்த அரசாங்கத்தின் ஏகோபித்த அதிபதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான பிரயத்தனங்களில் ஈடுபடுவது தொடர்பான தகவல்கள் அண்மைக் காலமாக ஊடகங்களில் அரசல்புரசலாகக் கசிந்த வண்ணமுள்ளன.

நாடுகடந்த அரசாங்கத்தின் யாப்பில் தனது அதிகாரத்தை தக்க வைக்கும் சரத்துக்களை வி.உருத்திரகுமாரன் இணைத்துக் கொண்டிருப்பதும், ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைப்பதற்கான எதிரணி என்ற பேச்சுக்கே இடமின்றி நாடுகடந்த அரசமைப்புக் குழு செயற்படுவதும், வி.உருத்திரகுமாரன் தொடர்பாகவும், அவருக்கு உறுதுணையாக விளங்கும் மதியுரைக் குழு குறித்தும் ஏற்கனவே உலகத் தமிழர்களிடையே நிலவிய பல்வேறு சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழீழத் தனியரசு என்ற இலட்சியப் பாதையில் நாடுகடந்த அரசாங்கம் சாதிக்கப் போவது என்ன? என்ற கேள்வியும் உலகத் தமிழர்களிடையே இயல்பாகவே எழுகின்றது.

அடுத்த தேர்தல் தமிழீழத்தில் என்று சூளுரைத்து 1977ஆம் ஆண்டு சிங்கள தேசத்தின் நாடாளுமன்றம் சென்று எதிர்க்கட்சித் தலைவராகிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு ஒப்பாகவே, தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான பூகோள-அரசியல் புறச்சூழல் நிலவுவதாகக் கடந்த ஆண்டு யேர்மனியில் முழங்கித் தற்பொழுது நாடுகடந்த அரசாங்கத்திற்குள் தனது அதிகாரத்தைத் தக்கவைப்பதில் மும்முரமாக ஈடுபடும் வி.உருத்திரகுமாரனின் செயற்பாடுகள் அமைகின்றன.

நாடுகடந்த அரசாங்கம் என்ற மாயமானுக்குள் உலகத் தமிழர்களை திசைதிருப்பும் முயற்சியில் கடந்த ஓராண்டாக ஈடுபட்ட வந்த கே.பி-உருத்திரகுமாரன் குழுவினர், தற்பொழுது ‘தமிழீழத் தனியரசு என்பது சாத்தியமற்றது’ என்ற எண்ணக்கருத்தை மிகவும் நயவஞ்சகமான முறையில் உலகத் தமிழர்களின் இதயங்களில் விதைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.


நாடுகடந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரகடனத்தை கடந்த பதினாறு மாதங்களுக்கு முன்னர் கே.பி மேற்கொண்டதில் இருந்து, தமிழீழத் தனியரசுக்கான பாதையில் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் வி.உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த குழுவினர் ஈடுபடவில்லை என்பது ஒவ்வொரு உலகத் தமிழரும் அறிந்த உண்மை. அதேநேரத்தில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை இலக்காகக் கொண்டு தமது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நாடுகடந்த குழுவினர் செயற்படுத்தி வருவது வெள்ளிடைமலையாக விளங்கும் மற்றுமோர் உண்மை.

பொதுவாக உலக வரலாற்றில் ஒரு அரசு இன்னொரு அரசின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகும் பொழுது, ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிய அரசின் பிரதிநிதிகள் வெளிநாட்டிற்குத் தப்பிச்சென்று அங்கு அஞ்ஞாதவாச அரசாங்கத்தை அமைத்து, அதனூடாகத் தமது படைய-பொருண்மிய-அரசியல் வலுவைக் கட்டியெழுப்பி மீண்டும் தாயகம் திரும்பித் தமது தனியரசை அமைப்பதே வழமையான நடைமுறையாகும். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பொழுது இவ்வாறான நடைமுறையையே பிரான்ஸ் உள்ளடங்கலான ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கையாண்டிருந்தார்கள்.

எனினும் இந்நடைமுறையை நாடுகடந்த அரசாங்கத்தின் கடந்த ஒன்றரை ஆண்டுகால செயற்பாடுகளுடன் ஒப்புநோக்கும் பொழுது, நீண்டெதாரு அரசியல் சூன்யநிலையை அவதானிக்க முடியும். பல இலட்சம் டொலர்களையும், யூரோக்களையும், பவுண்களையும் செலவிட்டு நிகழ்த்தப்பட்ட நாடுகடந்த அரசாங்கத்தின் தேர்தல்களும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்தேறிய அமர்வுகளும் தமிழீழத் தனியரசு என்ற இலக்கு நோக்கிய பாதையில் இற்றவரை எதனையுமே சாதிக்கவில்லை என்று எவ்வித தயக்கமும் இன்றி உறுதியாகக் கூற முடியும்.

அதேநேரத்தில் தேர்தல் திருவிழாக்களுக்குள் தம்மை முடக்கிக் கொள்ளாது நீண்டதூர பரப்புரை நடைப்பயணங்கள் உட்பட பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடும் தேசிய செயற்பாட்டாளர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இந்த வகையில், தேர்தல்களிலும், வாக்கு வங்கிகளிலும், நாடுகடந்த அரசாங்கம் என்ற மாயமானுக்குள் தமது ஆசனங்களை தக்கவைப்பதிலும் கவனம் செலுத்துபவர்கள், தமது கவனத்தை சிறிது காலத்திற்காகவது ஆக்கபூர்வமான பணிகளின் பக்கம் திருப்பிக் கொள்வது தமிழீழ தேசிய அரசியல் ஓரளவுக்காக காத்திரமான மாற்றங்களைக் கொண்டுவரும்.

உரியவர்கள் புரிந்து கொள்வார்களா?

-சேரமான்-
நன்றி: ஈழமுரசு (01/10/2010)

Comments