Skip to main content

தேசியத்தலைவரது உறுதிமிக்க வார்த்தைகள் உலகத் தமிழர்களுக்கு உணர்த்துவது என்ன?

கைது செய்யப்பட்ட தூதரக அதிகாரியை விடுவிக்காவிட்டால் பாக்கிஷ்தான் தூதரை வெளியேற்றுவதோடு பாக்கிஷ்தானில் உள்ள தூதரகத்தை உடனடியாக மூடிவிடுவோம் - அமெரிக்கா.


பக்கத்து நாடுகளால் ஆபத்து, எந்த நேரத்திலும் போரில் குதிக்க தயார் - சீனா.
அமெரிக்காவில் இந்திய மாணவர்களது கால்களில் இலத்திரணியல் கருவி பொருத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்.

இருபது நாட்களில் 78பேர் உயிரிழப்புடன் துனிசியா கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுதலையானது. 18 நாட்களில் 300 பேர் உயிரிழப்புடன் எகிப்து சர்வதிகார ஆட்சியின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளது.

இரண்டுவாரங்களை தாண்டி இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்களது உயிரிழப்புடன் 42 ஆண்டுகளாக தொடரும் மம்மர் கடாபியின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுபடும் தருணத்தை எதிர்பார்த்துள்ளது லிபியா.

விடுதலைவேண்டி யுகப்புரட்சி மேற்கொண்டு வரும் நாடுகளின் பட்டியலில் யேமன், யோர்தான், சிரியா, அல்சீரியா, லெபனான், பாலத்தீனம் போன்ற நாட்டு மக்களும் இனைந்து ஆட்சி மாற்றத்தினை வலியுறுத்தி வருகின்றனர்.

புலம்பெயர் ஈழத்தமிழ் அரசியல் தலைமைக்கும் சிறிலங்கா newsஅரசிற்கும் இடையில் நல்லெண்ண அடிப்படையில் உதவத் தயாராக உள்ளதாக எரிக் சொல்கெய்ம் அறிவித்துள்ளார்.

மேற்கூறிய நிகழ்வுகள் சில நாட்கள் இடைவெளியில் சர்வதேச அரங்கில் இடம்பெற்றுள்ளதுடன் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன் இவை எமக்கு சிலதெளிவுகளையும் ஏற்படுத்தி நிற்க தவறவில்லை.

அமெரிக்காவின் அடாவடி…

அமெரிக்க தூதரக அதிகாரியான ரேமண்ட் டேவிசு(வயது 36) கடந்த சனவரி 27ம் நாள் லாகூரில் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இரண்டு பாக்கிஷ்தானியர்களை சுட்டுக்கொன்றதற்காக குறித்த அமெரிக்க அதிகாரியை லாகூர் காவல்துறையினர் கைது செய்துள்ளமைக்கே அமெரிக்கா மேற்படி எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

காரில் சென்று கொண்டிருந்தபோது ஆயுதம் தாங்கிய இருவர் பின்தொடர்ந்து வந்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட முயன்றதாலேயே தான் தற்காப்பிற்காக சுட்டதாக டேவிசு கூறியுள்ள போதும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டியது அந்த பகுதி காவல்துறையினரது கடமையாகும். அதனையே லாகூர் காவல்துறையினரும் செய்துள்ளனர்.

ஆனால் இதற்காக கோபமடைந்த அமெரிக்கா அமெரிக்காவிற்கான பாக்கிஷ்தானிய தூதுவரை நேரில் அழைத்து கண்டித்துள்ளதுடன் டேவிசுவை விரைவாக விடுவிக்காதுவிட்டால் உங்கள் நாட்டில் உள்ள தூதரகத்தை உடனடியாக மூடிவிடுவோம், உங்கள் அதிபர் சர்தாரியின் வோசிங்டன் பயணத்தையும் நிறுத்திவிடுவோம் என்று எச்சரித்துள்ளது.

தனியே எச்சரிக்கையுடன் நிற்காது பாக்கிஷ்தானுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டது அமெரிக்கா. அத்துடன் நிதி உதவியை தொடர்ந்து வழங்குவதை பரிசீலிக்க வேண்டிவரும் எனவும் கலங்கடித்துள்ளது. ரேமண்ட் டேவிசு அமெரிக்க உளவாளியெனவும் பின்தொடர்ந்து சென்று டேவிசுவின் துப்பாக்கி சூட்டில் பலியாகிய இரண்டு பாக்கிஷ்தானியரும் டேவிசுவை கண்காணித்துவந்த பாக்கிஷ்தான் உளவாளிகள் எனவும் தெரியவருகின்றது.

சீனாவின் போர் பிரகடனம்.

அடுத்து, சுற்றியுள்ள அண்டை நாடுகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் எந்த நேரமும் போரில் குதிக்க சீனா தயாராக உள்ளதாக சீனாவை ஆளும் சீன கம்யூனிட்டு கட்சி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை பற்றவைத்துள்ளது.

சீன கம்யூனிட்டு கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘குவைசி யேர்னல்’ இல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையிலையே இந்த பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது.

போரை முதலில் தொடங்குவது இல்லை என்ற அடிப்படை கொள்கை சீனாவுக்கு உண்டு. ஆனால் பதில் தாக்குதல் நடாத்த தயாராகவே இருக்கின்றது. போரை கண்டு நாங்கள் அச்சப்படவில்லை என்ற தெளிவான எச்சரிக்கையினை அண்டைநாடுகளிற்கு நாங்கள்(சீனா) விடுக்கின்றோம். நாட்டின் நலனை காப்பதற்காக எந்த நேரத்திலும் போரில் குதிக்க தயாராக இருக்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சீனாவை சுற்றிலும் உள்ள யப்பான், இந்தியா,வியட்னாம், அவுத்ரேலியா, பிலிப்பைன்சு, இந்தோனேசியா, தென்கொரியா ஆகிய நாடுகள் அனைத்தும் சீனாவுக்கு எதிரான குழுவாக இணைந்துள்ளன. சீன நலனிற்கு எதிராக இவை போரிடவோ அல்லது மோதலை ஏற்படுத்தவோ முயற்சிக்கின்றன. சீனாவுக்கு எதிரான அண்டை நாடுகளை அமெரிக்கா ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட இந்த நாடுகள் சீனாவின் பொருளாதாரம் வர்த்தகத்தில் தங்கியுள்ள நிலமை இருப்பதால் அந்த நாடுகளை வழிக்கு கொண்டுவருவதற்கு பொருளாதார சக்தியை சீனா பயன்படுத்த வேண்டும் எனவும் ஆலோசனை கூறியுள்ளது.

ஒருவேளை அமெரிக்காவுடன் நேரடியாக மோதல் ஏற்பட்டால் கூட நாங்கள் தயங்கப் போவதில்லை. எங்களுடைய சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் போராடுவோம். சீனாவின் அன்நியச் செலவாணி 350 இலட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பதால் அதுவே சீனாவின் பலம்வாய்ந்த ஆயுதமாக இருக்கப்போகின்றது.

அமெரிக்கா யப்பானுடன் வலுவான பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்துள்ளது. அண்மையில் இந்தியாவுடனும் அணுசக்தி ஒப்பந்தத்தினை ஏற்படுத்தியிருப்பதுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்க இந்தியாவுக்கு ஆதரவளிப்பதாக ஒபாமா உறுதியளித்துள்ளமையானது மிக நெருக்கமான உறவை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளதையே புலப்படுத்துகின்றது.

இவ்வாறு சீனாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய உறவுவட்டத்தை அமெரிக்கா ஏற்படுத்தி வருவதால் கோபமடைந்துள்ள சீனா பொருளாதார யுத்தம் தொடுக்க ஆலோசித்து வருகின்றது. மற்ற நாடுகிளல் இருந்து பொருட்களை வாங்குவதை சீனா நிறுத்திவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும் அமெரிக்க டொலர் மதிப்பிழந்து போவதுடன் அமெரிக்கர்கள் செல்வத்தை இழந்து போவார்கள் என்றும் சர்வதேச பொருளியல் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனை நிரூபிப்பது போன்றே கடந்த ஆண்டு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐந்து மாதங்களுக்கு முன்னர் கடந்த செப்டெம்பர் மாதம் சரக்குகளை ஏற்றிய சீன படகு ஒன்று யப்பானிய ரோந்து படகின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. யப்பானிய கடலோரக் கால்படை அதிகாரிகள் சீனப்படகின் கப்டனை கைது செய்து சென்றது.

உடனே கொதித்தெழுந்த சீனா சரக்கு படகு கப்டனை கைது செய்ததை தேசியப்பிரச்சினையாக கருதி யப்பானிற்கு பொருளியல் ராசதந்திர நெருக்கடிகளை கொடுத்தது. யப்பானுடனான அனைத்துவிதமான தொடர்புகளையும் உடனடியாக நிறுத்தியதுடன் முக்கிய ஏற்றுமதியையும் நிறுத்திவிட்டது. தொழில்நுட்ப ஒத்துழைப்புகளையும் உடனடியாக நிறுத்தியிருந்தது சீனா.

இதனால் ஆடிப்போன யப்பான் சரக்கு படகு கப்டனை உடனடியாக நிபந்தனையின்றி விடுவித்து பொருளியல் ராசதந்திர ரீதியில் ஏற்பட இருந்த பாரிய இக்கட்டில் இருந்து தப்பித்துக் கொண்டது. இன்று உலக பொருளாதார வல்லரசாக பலம்பெற்றிருக்கும் சீனாவின் பிடிக்குள் உலக இயக்கம் சென்று கொண்டிருப்பதனையே இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது.

இந்தியா அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை.

முறைகேடான முறையில் மாணவ விசா அனுமதி பெற்று அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவந்த 1550 இந்திய மாணவர்களை சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளது அமெரிக்கா.

போலி மாணவ விசா மூலம் அமெரிக்கா வந்த இந்திய மாணவர்களது காலில் இலத்திரனியல் வளையத்தை இணைத்துள்ள அமரிக்காவின் செயற்பாட்டால் விசனமடைந்த இந்திய வெளிவிவகாரத் துறை பலத்த கண்டனங்களை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த செயற்பாடானது வன்மையாக கண்டிக்கத் தக்கதுடன் அதிபயங்கர குற்றவாளிகளைப்போல் 24 மணிநேரமும் கண்காணிப்பில் இந்திய மாணவர்களை வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என உறுதியாக தெரிவித்துள்ளது இந்தியா.

அமெரிக்கா மாத்திரமல்ல பல்வேறு மேற்கத்தைய நாடுகளிலும் இந்த வகையான இலத்திரணியல் வளையத்தை காலில் இணைத்து அவர்களது நடமாட்டத்தை கண்காணிப்பது வளமையான ஒரு நடவடிக்கையாக இருக்கின்ற போதும் இந்தியா அதிமுக்கியத்துவம் கொடுத்து அமெரிக்காவுடன் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளது.

வட இந்தியர்கள் நியாய தர்மத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டாலோ அன்றி சட்டவிரோதமான செயற்பாட்டில் ஈடுபட்டு அதன் விளைவாக தாக்குதலுக்குள்ளானாலோ தண்டிக்கப்பட்டாலோ பதறித் துடித்தெழும் இந்திய அதிகார வர்க்கம் தமிழர்களது விடயத்தில் ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பும் தடவும் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.

தமிழக மீனவர்கள் காக்கை குருவி சுடுவது போல் சிங்களத்தால் சுட்டுக் கொல்லபடும் போதெல்லாம் சிறிலங்காவுடனான உறவு கெட்டுவிடக் கூடாது என்ற சப்பை காரணத்தை கூறி கண்டு கொள்ளாது இருப்பதும் மத்திய கிழக்கு நாடுகளிற்கு வருமானத்தை தேடிச் செல்லும் தமிழகத்து உறவுகள் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகும் போதும் உயிரிழக்கும் சந்தர்ப்பங்களிலும் எவ்வித உடனடி நடவடிக்கையும் எடுக்காது அசமந்த போக்கில் செயற்படுவதும் தொடரத்தான் செய்கின்றது.

இந்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையை தமிழக தமிழர்கள் உணர்ந்து கொள்ள மறுத்துவருவதுடன் தொடர்ந்தும் எத்தனை அவமானங்களையும் அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்தாலும் இந்தியனாகவே இருக்க விரும்புகின்றமையே இந்த இழி நிலை தொடர்வதற்கு வழியேற்படுத்தி நிற்கின்றது. தமிழக சகோதரர்கள் இந்த நிலையினை உணர்வார்களா…?

வல்லாதிக்க நாடுகளின் ஆதிக்கத்தினையும் மீறி ஏற்பட்டுள்ள யுகப்புரட்சி!

இவ்வாறு வல்லாதிக்க நாடுகள் தத்தமது வல்லமையினை காட்டுவதற்கும் வல்லாதிக்க போக்கை நிலைநிறுத்துவதற்குமாக முறுகல் போக்கில் நிற்க தமது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அடக்குமுறையாட்சிக்கு உட்பட்டிருக்கும் மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

newsதுனிசியாவில் முகமது என்ற இளைஞனது தற்கொலை மரணம் ஏற்படுத்திய மக்கள் போராட்டத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் வீதிகளில் இறங்கிய இருபது நாட்களில் துனிசிய மக்களை அடக்கியாண்ட சர்வதிகாரி நாட்டைவிட்டு ஓடியிருந்ததையடுத்து கொடுங்கோல் ஆட்சியில் இருந்து துனிசிய மக்கள் விடுதலை பெற்றுள்ளனர்.

துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் போராட்டம் கண்டுள்ள வெற்றியால் ஈர்க்கப்பட்ட எகிப்து மக்களும் புரட்சிக் கோலம் பூண்டுள்ளனர். ஒரு குடும்பம் செழிக்க ஒரு நாடே அழிவதா? என்ற கோசத்துடன் வீதிகளில் இறங்கி போராடிய எகிப்திய மக்களது புரட்சி 18 நாட்களில் வெற்றிபெற்றுள்ளது. 32 ஆண்டுகள் தனது குடும்பத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சியதிகாரத்தை வளைத்துப் போட்டு நாட்டின் வளர்ச்சியை தடுத்து வந்த முபாரக் ஆட்சியைவிட்டு தப்பியோட வழிகோலாக இருந்த ஒப்பற்ற மக்கள் புரட்சியில் 300பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

துனிசியா எகிப்தில் வெற்றிகண்ட மக்கள் புரட்சியின் அதிர்வுகள் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் வேகமாக பரவிவருகின்றது. மத்திய கிழக்கு ஆபிரிக்க நாடுகள் பெரும்பாலானவை ஏகபோக ஆட்சியாளர்களின் பிடியில் சிக்குண்டுள்ளது.

விலைமதிப்பற்ற எண்ணெய் வளங்கள் கனிம வளங்களை அளவிற்கதிகமாக கொண்ட இந்த நாடுகளில் இருந்து பயணடைவதையே முக்கிய குறிக்கோளாக கொண்டு வல்லாதிக்க நாடுகள் தாம் சார்ந்த அரசுகளை ஆதரித்து வருகின்றன.

தமது சொல்லிற்கு கட்டுப்பட்டு நடக்க சம்மதிக்கும் அரசுகள் எவ்வித மக்கள் விரோதப் போக்கில் நடந்து கொண்டாலும் அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாது ஆதரித்து வருகின்றன இந்த வல்லாதிக்க நாடுகள்.

அமெரிக்க சார்புடையவராக பகிரங்கமாக செயற்பட்டு வந்ததனாலேயே எகிப்தை 32 ஆண்டுகள் கோத்னி முபாரக் ஏகபோகமாக ஆட்சி செய்ய முடிந்தது. இருந்தும் மக்கள் புரட்சி வலுவடைந்ததோடு எகிப்து இராணுவமே மக்களது உரிமைப் போராட்டத்திற்கு தலைசாய்த்து ஒதுங்கி நின்றமையும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளது ஆதரவுநிலை தொடர முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாகும்.

கோடி கோடியாக அள்ளினாலும் குறையாத கனிம வளத்தை கொண்ட சூடானை சீனா தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்ததனால் ஒரு கட்டத்தில் அமெரிக்கா சார்பான மேற்குலகு சூடானிற்கு எதிர் நிலைப்பாடு எடுத்து நின்றது.

இதன் விளைவாக சூடான் அதிபர் போர்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இன்று தெற்கு சூடான் சுதந்திர நாடாக பிரிந்து சென்றுள்ளது என்றால் இந்த வல்லரசுகளின் போட்டித் தன்மையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

newsதுனிசியா எகிப்தில் வித்திடப்பட்ட யுகப்புரட்சி சுழன்றடித்து லிபியாவை கரையேற்ற காத்திருக்கின்றது. 42 ஆண்டுகளாக ஏகபோக ஆட்சி நடாத்திக் கொண்டிருந்த மம்மர் கடாபியின் பாசிச ஆட்சியில் இருந்து விடுபடவேண்டும் என்று கடந்த மாதம்(10-02-2011) முதல் வீதிகளில் இறங்கி போராடிவருகின்றனர் லிபிய மக்கள்.

தமது அரசை எதிர்க்கும் கடைசி ஆணும் பெண்ணும் உயிரோடு இருக்கும் வரையிலும் அவர்கள் மீது வீசுவதற்கு கடைசி குண்டு இருக்கும் வரையிலும் நாம் போராடுவோம் என காடாபியின் மகன் கொக்கரித்துள்ளமையும் அதனை தொடர்ந்து விமானங்கள் டாங்கிகள் மூலமாக புரட்சியில் ஈடுபட்டுவரும் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடாத்திவருகின்றமையும் கடாபியின் ஆட்சியின் சிறப்பை எடுத்துக் காட்டிநிற்கின்றன.

சுதந்திர வாழ்வு வேண்டி புரட்சியில் ஈடுபட்டுள்ள லிபிய மக்கள் மீது கடாபியின் பாசிச இராணுவத்தினரும் கூலிப்படையினரும் மேற்கொண்டுவரும் கொலைவெறித் தாக்குதலையடுத்து அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பொருளியல் அரசியல் தடைகளை விதித்துள்ளதுடன் கடாபி மற்றம் குடும்பத்தவர்களது பெயர்களில் அந்தந்த நாடுகளில் உள்ள சொத்துக்களையும் முடக்கி அதிரடிகாட்டியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் லிபியா மீது அனைத்துவித தடைகளையும் விதிப்பதற்கு ஆலோசித்து வருகின்றது. இதற்கு லிபியாவை அண்மித்ததாக உள்ள பல ஐரோப்பிய நாடுகள் ஆதரவு கொடுப்ப்தற்கு தயங்கிவருகின்றனர். ஏன் என்றபல் தடைகளை விதித்த பின்னர் லிபியாவில் இருந்து அகதிகள் தங்களது நாட்டிற்குள் பெருமளவில் உள்நுழைந்துவிட்டால் என்ன செய்வது என்ற தன்னலமே காரணமாகும்.

எல்லாவற்றையும்விட ஐக்கிய நாடுகள் சபையின் வேகமான நடவடிக்கைகளும் பான் கீ மூனின் சுறுசுறுப்பான செயற்பாடுகளும் அவரது பதவிக்காலத்தில் முதல் முறையாக என்று கூறுமளவிற்கு அமைந்துள்ளது. முள்ளிவாய்க்காளில் தமிழினம் மூச்சடக்கி ஓய்ந்த போது யாவற்றையும் பார்த்துக் கொண்டு விழிதிறந்த உறக்க நிலையில் செயலற்று இருந்த பான் கீ மூனும் ஐக்கிய நாடுகள் சபையும் வெறும் இரண்டாயிரம் லிபியர்களது பினங்கள் வீதிகளில் சரிந்ததற்கு துடியாய் துடித்து பஞ்சாயத்து பண்ணி நிற்கின்றதை என்னவென்று சொல்வது…?

லிபிய மக்களது தியாகத்தை போராட்டத்தை விடுதலையை நாமும் உளமார மதிக்கின்றோம். இலட்சத்திற்கு மேல் நாம் அழிந்த போது இவர்கள் காட்டிய கள்ளமௌணம்தான் எங்களை இன்று இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது.

உலகமகா சபையா ஐக்கிய நாடுகள் சபையின் இருப்பு தேவையா…?

இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட பாரிய மனித அழிவிற்கு பின்னர் இனிமேல் இதுபோன்றதொரு நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையும் இன்று செயலற்று வல்லரசுகளின் பிடியில் சிக்கி சிதைந்து போயுள்ளது.

32 ஆண்டுகள் எகிப்தை நிர்மூலமாக்கிய முபாரக்கின் ஆட்சி தொடர்வதற்கும் மக்கள் தன்னெழுச்சியாக உரிமை வேண்டி ஆட்சிமாற்றத்தினை வலியுறுத்தி வீதிகளில் இறங்கி செத்து மடிந்தபோதும் வெறுமனே வேடிக்கை பார்த்த ஐக்கிய நாடுகள் சபை மக்கள் தாமாகவே தமது தலைவிதியை தீர்மாணிக்கும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இன்றைய சூழலில் நேர்மையான அரசு அமைய உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளமை உலகமகா சபையான ஐக்கிய நாடுகள் சபை தேவையா என்ற ஐய்யப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

புரட்சி மூலம் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நாடுகளில் இனி பஞ்சாயத்து செய்ய இந்த ஐக்கிய நாடுகள் சபைக்கு வேலையிருக்காது. இதனையே புரட்சிக்கு பின்னர் இடைக்கால அரசை பொறுப்பேற்றுக் கொண்ட அரசு மக்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் செயற்படாததால் மீண்டும் வீதிகளில் இறங்கி போரட முற்பட்டுள்ளனர் துனிசிய மக்கள். இந்த மறு புரடசியில் நான்கு பேர் பலியானதோடு மக்கள் விரும்பும் விதத்தில் அரசை அமைக்க வழிவிடுவதாக இடைக்கால பிரதமர் தனது பதவியை துறந்துள்ளார்.

அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் இனியும் அடங்கி கிடக்க மாட்டோம் என்று திமிறிஎழுந்து யுகப்புரட்சி செய்ய துணிந்துவிட்டார்கள். அத்துடன் கொள்கைப்பற்றுடன் உறுதிமிக்க போராட்டத்தின் வலிமை என்ன என்பதனையும் அனுபவரீதியாக உணர்ந்துவிட்டார்கள். அதனால் இனியும் உங்களது பஞ்சாயத்து வேலை தேவைப்படாது. நிலையான உண்மையான ஆட்சி அமைக்கும்வரை ஓயமாட்டாது இந்த யுகப்புரட்சி.

வல்லரசுகளின் சுயநலப் போக்கும் உலகமகா சபையின் உயிரற்ற தன்மையும் வெட்டவெளிச்சமாகி வரும் இன்றைய சூழலில் நாம் இவர்களை நம்பி ஓய்ந்து போகலாமா…? என்பதனை ஒவ்வொரு தமிழனும் தன்னைத்தானே கேட்க்க வேண்டிய கேள்வியாகும்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு இந்த உயிரற்ற ஐக்கிய நாடுகள் சபை ஒரு குழுவை அமைத்திருந்தமையும் புலம் பெயர் ஈழத்தமிழ் அரசியல் தலைமைக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையே நல்லெண்ண அடிப்படையில் உதவத் தயாராக இருப்பதாக முன்னால் வெள்ளைப் புலி எரிக்சொல்கெய்ம் வலியவந்து தூண்டில் போடுவதும் எம்மை வீழ்த்துவதற்காகவே என்பதனை எம்மவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

news240வருட ஆக்கிரமிப்பில் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த எக்காலத்திலும் வீழ்த்த முடியாத ஆனையிறவை வெற்றிகொண்டு தீச்சுவாலையாக புறப்பட்டவர்களை வந்த வேகத்திலேயே புறமுதுகிட்டு ஓடச்செய்து சிங்களத்தின் கோட்டைக்குள் சென்று கட்டுநாயக்கா விமானத் தளத்தை நிர்மூலமாக்கி பல்லாயிரம் கோடிகள் இழப்பினை ஏற்படுத்தி சிங்களத்தை மட்டுமன்றி இந்தியா உள்ளிட்ட உலக பிராந்திய வல்லரசு நாடுகளையே ஆச்சரியத்திற்குள்ளாக்கி போர்வலுச் சமநிலையில் உச்சம்பெற்று மேலோங்கி நின்ற புலிகள் படையினை முள்ளிவாய்காக்ளில் வீழ்த்திய விதமும் இவ்வாறுதான்.

தமிழர்களது வீரம் எழுச்சி வெற்றி கலை கலாச்சாரம் பண்பாடு என ஒட்டுமொத்தமாக முள்ளிவாய்க்காள் மண்ணில் புதைக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் சமாதானம் பேசி வந்த உலக நாடுகளது சதி விளையாட்டும் ஒரு காரணம் என்பதனை யாவரும் அறிவீர்கள்.

இராணுவப் பலத்தினை முள்ளிவாய்க்காலில் முடித்துவிட்டோம் என்று சிங்களத்துடன் சேர்ந்து மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள் அரசியல் ரீதியாகவும் நாம் தலை எடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே நம்மை நெருங்கி வருகின்றனர்.

முள்ளிவாய்காலில் எமது இனத்தை பறிகொடுத்து புலம்பெயர் தேசங்களின் வீதிகளில் அலைந்து திரிந்து நாம் கதறித்துடித்த போது உலக மனிதநேய அமைப்புகளும் சபைகளும் மானிட குலத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதிகேட்டு எம்முடன் கரம்கோர்த்து உலக வல்லரசுகளிற்கும் உலகமகா சபையான ஐக்கிய நாடுகள் சபைக்கும் நெருக்கடிகளை கொடுத்துவந்தன.

2009 மே-18ற்கு பின்னர் அரசியல் அனாதைகளாக்கப்பட்ட உலகத் தமிழர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொண்டுவரும் முயற்சியின் பயனாக ஓர் அரசியல் கட்டமைப்பு பலம்பெற்று வருகின்றது. இத்தருணத்தில் நாம் உச்சக்கட்ட விழிப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழு விசாரித்து தீர்ப்பினை வழங்கும் அமெரிக்கா வந்து தலையிடும் அவுஷ்ரேலியா ஆதரிக்கும் என எம்மை நம்பவைத்து அதாள பாதாளத்தில் வீழ்த்துவதே இவர்களது நோக்கமாகும்.

அதனால் அமெரிக்காவினாலோ ஏனைய உலக நாடுகளாலோ ஐக்கிய நாடுகள் சபையினாலோ எமக்கான நீதியை வழங்க முடியாது என்றில்லை. அவர்களிற்கான வாய்ப்பான சூழல் வரவேண்டும் என்பதே உண்மை நிலையாகும். அதுவரை காத்திருக்கப் போகின்றோமா…? அல்லது துனிசியா எகிப்திய மக்களைப் போன்று வல்லரசு நாடுகளிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி பணியவைக்கப் போகின்றோமா…? என்பதே இன்றுள்ள நிலையாகும்.

புலம்பெயர் தேசங்களின் வரலாற்றையே புரட்டிப்போட்ட எமது போராட்டங்கள் ஏன் இலக்கை அடையவில்லை…?

வெறும் 20 நாள் 18 நாட்களில் துனிசியாவிலும் எகிப்திலும் ஆட்சி மாற்றங்களை கொண்டுவர முடிந்தது என்றால் பல ஆண்டுகளாக புலம்பெயர் தேசங்களில் போராடிவரும் எம்மால் ஏன் இன்னும் இலக்கை நெருங்கக் கூட முடியவில்லை என்பதனை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

புலம்பெயர் தேசங்களின் வரலாற்றையே புரட்டிப் போடும் அளவிற்கு நாம் இலட்சக்கணக்கில் வீதிகளில் இறங்கி போராடி இருக்கின்றோம். ஆனால் என்ன பயன்? அவ்வப்போது கூடிக்கலைவதாகவல்லவா எமது போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதிலும்

ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களும் பங்கேற்றமோ என்றால் இல்லையே! குறிக்கப்பட்டவர்களே மீண்டும் மீண்டும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றார்கள்.


முள்ளிவாய்க்காலில் யுத்தம் கோரவிளைவுகளை ஏற்படுத்த முன்னர் தலையிட்டு தடுத்து நிறுத்துங்கள் என்று லண்டனில் சகோதரர் பரமேஷ்வரன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தபோது எத்தனைபேர் ஆதரவாக உடனிருந்தீர்கள்? இலட்சக்கணக்கில் எம்மவர்கள் வாழ்ந்துவரும் லண்டனில் சில நூறுபேர்தானே உடனிருந்து வலுச்சேர்தார்கள்.

பரமேஷ்வரன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சிங்களத்தின் கையூட்டுப் பெற்ற லண்டன் பத்திரிகை களங்கப்படுத்திய போது எத்தனை பேர் துணைநின்று போராடிநீர்கள்? தனி ஒருவராக நின்றுதானே நீதியை வென்றிருந்தார் பரமேஷ்வரன்.

துனிசிய எகிப்திய மக்கள் போன்று இறுதி முடிவு காணும்வரை நாம் வீதிகளில் தொடர்ந்து போராடவில்லையே.. சிவந்தனின் கால்கள் நீதி வேண்டி நடைபோட்ட போதும் அந்த தடம்பற்றி அடுத்தடுத்த முயற்சியாக நடைபயணங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் நம்மில் எத்தனைபேர் அணிவகுத்து ஆதரவு கொடுத்தோம்…?

எண்ணிப்பாருங்கள் உறவுகளே! சிங்களம் பிரச்சாரம் செய்தது போல் சிறிலங்காவில் நடைபெறுவது இனப்போர் கிடையாது. குறிக்கப்பட்ட குழுவினருக்கு எதிரான போர் என்பதனை நிரூபிப்பது போலல்லவா எமது கூடிக்கலையும் போராட்டங்கள் அமைந்துள்ளன. துனிசியாவிலும் எகிப்திலும் லிபியாவிலும் இலட்சக்கணக்கில் அடக்குமுறையினை எதிர்த்து விதிகளில் நின்றதனால்தானே ஆட்சிக்கு முன்டு கொடுத்துவந்த அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகளே பின்வாங்க வேண்டி ஏற்பட்டது.

நாமும் எத்தனை காலத்திற்குத்தான் புலம்பெயர் தேசங்களில் எதிர்காலத்தினை தொலைத்துவிட்டு வாழ்வது? எமக்கென்றொரு தாயகமுன்டு. அதனை எல்லோருமாக சேர்ந்து மீட்டெடுத்து எமது நாடு, எமது மண், எமது மக்கள், எமது வீடு, எமது சூழல், எமது சுற்றம், எமது உறவுகள் என்று மகிழ்ச்சியான வாழ்வை வென்றெடுப்பதற்கு சபதமேற்போம்.

எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் தமிழீழத்தை வெல்வோம் - தமிழீழத் தேசியத் தலைவர்.

முள்ளிவாய்க்கால் துயரம் மீள முடியாததாக இருந்தாலும் அந்த மண்ணோடு பலமர்மங்களும் விடைகான முடியாது புதையண்டு போயுள்ள நிலையில் நான்காம் கட்ட ஈழப்போர் உக்கிரம் பெற்றிருந்த வேளை 2008ம் ஆண்டு மாவீரர்நாள் உரையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உறுதியோடு உரைத்த வரிகளை உற்றுநோக்குவது சரியாக இருக்கும்.

“இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. உலகின் எந்த ஒரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை பல திருப்பங்களை பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்ற ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கின்றோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளை எல்லாம் நாம் எதிர்கொண்டு நேரடியாக மோதி இருக்கின்றோம். அலை அலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கின்றோம். பெரும் நம்பிக்கைத் துரோகங்கள் பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராக பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களையெல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கின்றோம்.

புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம். இவற்றோடு ஒப்பு நோக்குகையில் இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்த சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.”

உலகத்தமிழர்கள் துணைகொண்டு இந்த சவால்களை முறியடிக்க முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்தான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் புலம்பெயர் இளையோர் கையில் போராட்டத்தை ஒப்படைத்து மறைவாக காத்திருக்கின்றார்.

இளைஞர் சக்திதான் இனிவரும் காலங்களில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது என்பதனை தீர்க்கதரிசனமாக முன் உணர்ந்தே தலைவர் போராட்டக் களத்தை புலம்பெயர் இளைஞர் களத்திற்கு மாற்றியிருந்தார்.

இன்று சுமார் இரண்டு ஆண்டுகள் சென்றுள்ள நிலையில் துனிசிய எகிப்தில் வல்லரசு நாடுகளின் நலன்களையும் மீறி ஆட்சி மாற்றத்தை சாத்தியப் படுத்தியது அந்த நாடுகளில் உள்ள இளைஞர்களது இடைவிடாத உறுதி மிக்க போராட்டம் தானே!

உலகத் தமிழர்களாய் நாம் ஒன்றுபட்டு எமது சுதந்திர தாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தை விரைந்து முன்னெடுப்போம்.

புலத்திலே தயாராகுது புலிகள் படை! புயலென பாயத் துடிக்குது கரிகாலன் படை!
உலகத் தமிழினமே கலக்கம் விட்டிடு! ஈழம் அமைத்து கொண்டாடும் நாள் விரைந்து வரப்போகுது.
அதுவரை உறக்கம் தொலைத்திடு தமிழா!

அறப்போரில் வீழ்த்தப்பட்ட நாம் வீழ்ந்துதான் கிடந்தோமா தமிழா…?
புலிகள் படையாக தலைவன் வழியில் புதுயுகம் படைத்தெழுந்தோமல்லவா…?
ஆயுதப்போரில் அடக்கப்பட்ட போதுமாத்திரம் என்ன நாம் அடங்கித்தான் போய்விடுவோமா…?
இல்லை அடங்கித்தான் விடலாமா!?

சிங்களத்தின் ஆயுதகிடங்குகள் தன்பாட்டிலே வெடித்து சிதறுதாம்..!
சிங்கள வான்பரப்பினில் மர்ம விமானங்கள் பறக்குதாம்!
சிங்களக் காட்டுக்குள் வேற்றுக் கிரகவாசிகள் தரை இறங்க கண்டார்களாம்..!
வன்னி கடற்கரை எங்கும் வெற்றுப் படகுகள் நிற்குதாம்..!
இவை அனைத்தும் சிங்களத்தை சித்தம் கலங்க வைக்குதாம்.

வன்னிகாடுகள் மீண்டும் புலிகளின் கால்தடம் காணுது!
சிங்களத்தை சிதறடிக்க தாகம் கொண்டு புலிகள் வனவாசம் செய்யுது!
தானைத்தலைவன் படை கொண்டு வருவான்!
தமிழீழம் அமைத்திட உறிதியோடு களமாடடாட தமிழா!

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ் (02-03-2011)

Comments