திமுக தொண்டர்கள் நிகழ்த்த வேண்டிய மௌனப்புரட்சி

இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் மே 13 அன்று நடக்க உள்ளது.

திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனன என்பது இன்று வரை உள்ள நிலைமை. காங்கிரஸ் கட்சி 15 இடங்கள் வரை கேட்பதாக தெரிகின்றது. பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இணையாதவிடத்து, 15 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம்.

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் அதனை தோற்கடிப்பது என்று தமிழினவுணர்வாளர்கள் உறுதி பூண்டுள்ளார்கள். “காங்கிரசுக்கு வோட்டுப் போட மாட்டேன்” என்று கையெழுத்து வாங்கும் பணிகள் கூட நடைபெறுகின்றன.

உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு என்று தமிழ்நாட்டில் எந்தப் பலமும் இல்லை. தொண்டர்கள் இல்லாது, வயதான சிலரை மட்டும் கொண்டிருக்கும் கட்சி அது. ஆனால் மத்தியில் ஆளக்கூடிய கட்சிகளில் ஒன்றாக இருப்பதால், தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுகவின் முதுகில் மாறி மாறி சவாரி செய்து வருகின்றது.

தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கரை சேர்ப்பது அதனுடைய கூட்டணிக் கட்சிகளே. அந்த வகையில் இந்தத் தேர்தலில் காங்கிரசின் தற்போதைய கூட்டணிக் கட்சியான திமுகவின் தொண்டர்களே காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைக்கப்போகின்றவர்களாக இருக்கின்றார்கள்.

ஆனால் தங்களுடைய உழைப்பின் மூலம் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்வது, தன்னுடைய தலையில் தானே மண்ணை அள்ளிப் போடுவதற்கு ஒப்பானது.

இன்றைக்கு கலைஞர் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள சங்கடங்கள், வேதனைகள் அனைத்திற்கும் மூல காரணமாக காங்கிரஸ் கட்சி இருக்கின்றது. மூதறிஞர் என்றும் சிறந்த ராஜதந்திரி என்றும் போற்றப்படும் கலைஞரின் இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது.

தங்களின் சொல்லுக்கு தலையாட்டும் பொம்மையாக கலைஞரை காங்கிரஸ் கட்சி மாற்றி விட்டது.

ஈழத் தமிழர்கள் மேல் கலைஞர் கொண்டிருக்கும் அன்பு உண்மையானது. பிரிகேடியர் தமிழ்செல்வன் வீரச்சாவடைந்த பொழுது கலைஞர் விட்ட கவிதைக் கண்ணீர் உண்மையானது. ஆனால் இன்றைக்கு “காங்கிரஸ் கட்சியினதும் திமுகவினதும் ஈழம் பற்றிய நிலைப்பாடு ஒன்றுதான்” என்று உளறகின்ற நிலைக்கு வந்து விட்டார்.

ஆட்சியினதும், கட்சியினதும் எதிர்காலம் பற்றிய பயம் கலைஞரை இப்படி எல்லாம் பேச வைக்கின்றது.

ஈழப் பிரச்சனையை தமிழ்நாட்டில் மீண்டும் பற்ற வைத்ததில் கலைஞருக்கு பங்கிருக்கின்றது. ஈழத் தமிழருக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் தன்னுடைய உணர்ச்சிகரமான உரையின் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் ஒரு உணர்வினை ஏற்படுத்தினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கு கெடு கொடுத்து, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு முதலில் சம்மதம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி அடுத்த நாளே பதவி விலக முடியாது என்று சொல்லி கலைஞரின் முதுகில் குத்தியது. தமது உறுப்பினர்கள் பதவி விலக மாட்டார்கள் என்று கூறியதோடு, திமுகவின் உறுப்பினர்கள் பதவி விலகினால், தாம் திமுகவுக்கான ஆதரவை விலக்கி, தமிழ்நாட்டில் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்றும் மிரட்டி மார்பிலும் குத்தியது.

இதற்கு கலைஞர் பணிய வேண்டி வந்தது. உலகின் பரிகாசத்திற்கும் ஆளாக வேண்டி வந்தது.

கலைஞரை மீண்டும் தலைநிமிரச் செய்ய வேண்டிய பொறுப்பு திமுகவின் தொண்டர்களுக்கு இருக்கின்றது. திமுகவின் தொண்டர்கள் கொள்கைப் பிடிப்பு மிக்கவர்கள். அவர்கள் ஒரு போதும் கலைஞரின் இன்றைய நிலைப்பாட்டை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கலைஞரை மிரட்டி அடக்கி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டிய கடமை திமுக தொண்டர்கள் முன்னால் இருக்கின்றது.

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் கோரதாண்டவம் ஆடினார்கள். திமுக அலுவலகங்கள் மீதும் தொண்டர்கள் மீதும் வன்முறைகளை கட்டவிழ்;த்து விட்டார்கள். அதிமுக கட்சியினரோடு சேர்ந்து திமுக தொண்டர்களை காணும் இடமெல்லாம் அடித்து உதைத்தனர்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் கொடிக் கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி படங்கள் தீயிலிடப்படுகின்றன. காங்கிரஸ் அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. நிலைமை அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது.

அன்றைக்கு ஈழத் தமிழர்களை காரணம் காட்டி திமுக அரசை காங்கிரஸ் கட்சி கலைத்தது. ராஜீவ்காந்தி கொலையை அடுத்து திமுக மீது பெரும் வெறியாட்டத்தையும் நடத்தியது. அன்றைக்கு நடந்த தேர்தலில் திமுக பெரும் தோல்வியையும் சந்தித்தது.

எந்த ஈழத் தமிழர்களின் பெயரால் காங்கிரஸ் கட்சி திமுகவை தோற்கடித்ததோ, அதே ஈழத் தமிழர்களின் பெயரால் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டை விட்டே துடைத்தழித்து கணக்கு தீர்க்கின்ற காலம் கனிந்திருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை திமுக தவற விட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகள் இதை நினைத்து வேதனைப்பட வேண்டிய நிலை திமுகவிற்கு ஏற்படும்.

இன்றைக்கு கலைஞரின் அரசுக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. காங்கிரஸ் கட்சியின் தயவிலேயே கலைஞரின் அரசு நடந்து கொண்டிருக்கின்றது. இதை வைத்து கலைஞரை தங்கள் சொற்படி ஆட வைத்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை திமுக தொண்டர்கள் வெற்றி பெறச் செய்தால், அது மேலும் மோசமான நிலையை உருவாக்கும்.

இன்னும் இரண்டு ஆண்டுகள் கலைஞரின் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளும் காங்கிரஸ் கட்சி கலைஞரை தினமும் “அன்பாக” மிரட்டிக் கொண்டே .இருக்கம். தும்முவதற்கும் காங்கிரஸ் கட்சியின் அனுமதி தேவைப்படும் கலைஞரும் “சொக்கத் தங்கம்” என்றும், “தூயவர்” என்றும் வழிந்து கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

ஆனால் தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டால், திமுகவிற்கு அடங்கி நடக்க வேண்டிய நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும். நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படும் தோல்வியினால் தமிழ்நாட்டில் இன்னும் ஒரு தேர்தலை உடனடியாகச் சந்திப்பதற்கு காங்கிரஸ் கட்சி அஞ்சும். அந்த வகையில் திமுக அரசுக்கான ஆதரவை விலக்குவதற்கு காங்கிரஸ் கட்சி துணியாது. கலைஞரும் தன்னுடைய தனித்துவத்தையும், திமுகவின் அடையாளத்தையும் இழக்காது இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆளலாம்.

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்படுவது ஈழத் தமிழர்களுக்கு மட்டும் அன்றி திமுகவிற்கும் நன்மையாகவே அமையும்.

இந்த நிலையில் திமுக தொண்டர்கள் செய்யக் கூடிய மௌனப் புரட்சி, காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்கு தமிழின உணர்வாளர்கள் மேற்கொண்டுள்ள பணியை மேலும் இலகுவாக்கும். திமுக தொண்டர்கள் ஒரு மௌனப்புரட்சியை நிகழ்த்த வேண்டும் என்பதே கலைஞர் மீதும் திமுக மீதும் அன்பு கொண்டவர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.

- வி.சபேசன் (06.03.09)

உரக்கச் சொல்வோம். காங்கிரசுக்கோ, திமுகவுக்கோ , அதிமுகவுக்கோ, ஒட்டு போடக்கூடாது; போட மாட்டோம்.

Comments