சிறிலங்கா இரானுவத்தின் திட்டத்தில் மீண்டும் ஒரு இனப்படுகொலையா..?காணொளிகள்

வன்னிப் போரின் பின், சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட, சரணடைந்த , முன்னாள் போராளிகளை, இரகசிய முகாம்களில் தடுத்துவைத்திருக்கிறது சிறிலங்கா அரசு. இவ்வாறு தடுத்து வைத்திருக்கும் முன்னாள் போராளிகள் பலரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரினால், மனித உரிமை ஆர்வலர் ஒருவருக்குத் தெரிவிக்கபட்ட இரகசியத் தகவலாகவே இச் செய்தி வெளிவந்துள்ளது. இராணுவத்தை அரசாங்கம் தவறாக வழிநடத்துவதாகக் கருதும் இராணுவ அதிகாரிகள் சிலர், தங்கள் உயரதிகாரிகளுக்குத் தெரியாமல் இரகசியமாக இத்தகைய தகவல்களை, மனித உரிமை ஆர்வலர்களுக்குத் தெரிவித்து வருகிறார்களாம். அத்தகைய ஒரு அதிகாரியினாலே இத்தகவல் வெளிவந்திருப்பதாக நம்பப்படுகிறது.

இந்தச் செய்தியை அறியும் போது, இது சாத்தியமா எனக்கேள்வி எழுந்தாலும், இது போன்ற வேறு பல உத்திகள் வன்னிச் சமர்க்களத்திலும் பாவிக்கப்பட்டிருப்பதாகவே தெரியவருகிறது. மிக நுட்பமாகவும், அரசாங்கம் மீது பழி வராதவகையிலும் இப் படுகொலையினை நிகழ்த்த திட்டமிட்டிருப்பதாக அச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

இதன்படி சிறைப்படுத்தப்பட்டுள்ள போராளிகளை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி ஒன்றினை போலியாக நடைபெற வைக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்துக்கு முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம் மீது, இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் மற்றுமொரு முன்னால் போராளிகளைப் பாவிக்கவும், இந்த நடவடிக்கையின் போது, தம்முடன் சேர்ந்தியங்கும் போராளிகளையும், இராணுவத்தினர் போட்டுத் தள்ளத் திட்ட மிட்டிருப்பதாகவும் அத் தகவல்கள் தெரிவிப்பதாக அறியப்படுகிறது.

சிறிலங்கா அரசு, வன்னிப்போர் முடிந்து ஆறு மாதகாலத்துக்கு மேலாகிய பின்னும், தடுத்து வைத்திருக்கும் இப் போராளிகளை எந்தவொரு மனித உரிமை அமைப்புக்களும் சந்திக்கவோ, அல்லது இவர்கள் குறித்த பெயர் விபரங்களை வெளியிடவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தனது தேர்தற் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில், அரச தரப்பின் மீதான பல போர்க்குற்றச்சாட்டுக்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற போராளிகளில் பலர் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது, வன்னிச் சமர்க்களத்தில் நின்றவர்கள். சரத் பொன்சேகா தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு சாட்சிகளாக அமையக் கூடியவர்கள் என அரச தரப்பு அஞ்சுவதும், தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போராளிகளை முழுமையாக விசாரித்து அடையாளங் காணமுடியாதிருப்பதும், இதற்குக் காரணமாக இருக்கலாமெனவும் அச் செய்திகள் ஊகந் தெரிவிக்கின்றன.

சீறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டிருக்கும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டால், அது மற்றுமொரு இனப்படுகொலையாகஇருக்கும் எனக் கருதப்படுகிறது.

11,000 முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் வெளித் தொடர்புகள் ஏதுமின்றி "இரகசிய முகாம்"களில் அடைப்பு: நிலைமை கேள்விக் குறி












Comments