இலங்கை தயாரிப்புகளை, கிரிக்கெட்டை‘நான் புறக்கணிக்கிறேன்… !’

‘நான் புறக்கணிக்கிறேன்… இலங்கை தயாரிப்புகளை, கிரிக்கெட்டை!’

boycott-sri-lanka-04-dollarந்தக் கட்டுரை சற்று பெரிதாக இருக்கக்கூடும். இருந்தாலும் முழுவதுமாகப் படியுங்கள்…

“விக்டோரியா சீக்ரெட்.. அமெரிக்காவின் மிகப் பிரபலமான ஆயத்த ஆடைக் கடைகளுள் ஒன்று அது. கடைக்கு வெளியே தமிழர்கள் சிலர் கைகளில் இலங்கைப் பொருட்களை வாங்காதீர்கள் என்ற தட்டிகளுடன் நிற்கிறார்கள். அதைப் படித்துவிட்டு உள்ளே சென்ற ஒரு பெண், தனக்குத் தேவையான ஆடையை வாங்கிக் கொண்டு, நேராக வந்து தட்டி வைத்திருந்த தமிழரிடம் இப்படிச் சொன்னார்: “ஆம்… நான் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டேன். மதிக்கிறேன். இதோ பாருங்கள்.. நான் வாங்கியவற்றில் எதுவும் இலங்கைத் தயாரிப்பு இல்லை!”

- எனக்கு கண்களில் மளுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது.

அடப் பாவிகளா… இந்த மனசு, இந்தியாவிலிருப்போருக்கும், இந்திய ஆட்சியாளர்களுக்கும் இல்லாமல் போய்விட்டதே என மனசு அழுதது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா… டெட்ராய்டுக்கு முதல் முதலில் நான் வந்தபோது, எல்லோரிடமும் என்னை இந்தியன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வேன். இப்போது நான் அப்படி சொல்லிக் கொள்வதில்லை. நான் ஒரு தமிழன் என்றுதான் சொல்லிக் கொள்கிறேன். அது ஈழமா, தாயகமா என்ற பேதம் எங்களுக்கானது. அதை நாங்களே பார்த்துக் கொள்வோம் என்ற உணர்வு வந்துவிட்டது. இன்னொன்று, தமிழன் என்று சொன்னால் என்னை கவுரவமாகத்தான் பார்க்கிறார்கள், இப்போது. தமிழன் என்ற அடையாளத்தை உலகமும் அங்கீகரிக்கிறது.

sawgrass2_08

என்வழி உள்ளிட்ட தளங்களில் இதுதொடர்பான செய்திகள் பார்த்தேன். இங்கே நண்பர்கள் நிறையப் பேர் பார்க்கிறார்கள். முடிந்த அளவு இந்த விஷயத்தை முதன்மைப்படுத்துங்கள். பலன் இருக்கும். பொருளாதார இழப்பின் வலி இலங்கைக்கு நன்கு தெரியும்…”

-இது அமெரிக்காவின் டெட்ராய்டில் முதலில் பணியாற்றி இப்போது பே ஏரியாவில் வசிக்கும் நண்பர் சக்திகுமார் நம்மிடம் சொன்னது.

நமது கட்டுரையைப் படித்தபிறகு அதற்கு பின்னூட்டமிட்டிருந்த நண்பர் கண்ணையா, இலங்கை பொருட்கள் புறக்கணிப்பு குறித்து மிகத் தீவிரமாக முன்மொழிந்திருந்தார். இந்தக் கட்டுரையை இத்தனை விரிவாக நாம் எழுதுவதற்கு அவரும்கூட ஒரு காரணம் என்பதை குறிப்பிடுவதில் தயக்கமில்லை. என்வழி என்பது எனக்கு மட்டுமே சொந்தமானதில்லை.. வழியில் பயணம் செய்யும் எல்லோருடையதும்தான்!

புறக்கணிப்பு ஏன்?

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு முன்பு பிரிட்டனில் துவங்கப்பட்டது இலங்கைப் பொருட்கள் பகிஷ்கரிப்பு போராட்டம். கார்டியன், டைம்ஸ் ஆன்லைன் உள்ளிட்ட பல பத்திரிகைகள் அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தன. பல கட்டுரைகளை தொடர்ச்சியாக வெளியிடவும் செய்தன. வழக்கம்போல தமிழ்ப் பத்திரிகைகள், சேனல்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. இணையதளங்கள் (அதுவும் ஈழ ஆதரவு), மக்கள் தொலைக்காட்சி தவிர வேறும் யாரும் இதுபற்றி ஒரு வார்த்தை எழுதவில்லை, பேசவில்லை.

வன்னிப் போரின் இறுதிக் கட்ட பேரவலங்களை கண்கொண்டு பார்த்து, அந்த துயரச் செய்திகள் கேட்டு உறைந்து போயிருந்த தமிழர்கள், கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பிறகு இந்தப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இன்று இந்த புறக்கணிப்பு குறித்த செய்திகள் பரவத் தொடங்கிய பிறகு, நியாயமாக இந்தியாவிலிருந்தல்லவா இந்தப் புறக்கணிப்பு தொடங்கியிருக்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது.

sawgrass2_06

அதற்கு முன் இந்திய – இலங்கை வணிகத்தின் அளவு என்ன என்பதையும் மிகச் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.

இலங்கையின் முக்கிய பொருளாதார ஆதாரம் இந்தியாதான். குறிப்பாக 2000 -ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதியில் 838 சதவிகித (ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லை… 838 சதவிகிதம்தான்!) அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது இலங்கை அரசின் வர்த்தகத் துறை அமைச்சகம்.

2000-ம் ஆண்டில் வெறும் 55 மில்லியன் டாலர் அளவுக்கு இலங்கையிலிருந்து இறக்குமதி செய்து வந்த இந்தியா, அடுத்த ஏழு ஆண்டுகளில் 600 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இறக்குமதியின் அளவை அதிகரித்தது.

இந்த நிதியாண்டில் அது இன்னும் பெருமளவு உயர்ந்திருக்கக் கூடும். ஆனால் தொடர்புடைய புள்ளி விவரங்களை இன்னும் வெளியிடவில்லை இலங்கை – இந்திய வர்த்தக அமைச்சகங்கள்.

அதேநேரம் அமெரிக்கா தனது இறக்குமதியைக் குறைத்துக் கொண்டுள்ளது. 2000-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு இலங்கையின் ஏற்றுமதி 2075 மில்லியன் டாலராக இருந்தது. அடுத்த சில ஆண்டுகளில் 10 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இன்று மேலும் குறைந்த வண்ணம் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதோ.. கடந்த செப்டம்பர் மாதம் மட்டுமே இலங்கை இந்தியாவுக்கு 3 மில்லியன் ஆயத்தை ஆடைகளை அனுப்பியுள்ளது. இந்த ஏற்றுமதிக்கு நயா பைசா வரிவிதிக்கவில்லை இந்தியா என்பது நம்மில் புத்திஜீவிகள் என்று பீற்றிக் கொள்ளும் பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இந்தப் பொருள்தான் என்றில்லை, தடையில்லா ஏற்றுமதி என்று சிறப்புத் திட்டத்தின் கீழ் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் எந்தப் பொருளுக்கும் வரி கிடையாது. இந்தியாவின் கொல்கத்தா, கொச்சி துறைமுகங்களும் இலங்கைக்கு இலவசமாகவே திறந்துவிடப்பட்டுள்ளன (Custom Notification, No. 75/2007).

இன்னொரு பக்கம் இலங்கைக்குத் தேவையான பெருமளவு பொருள்களை அனுப்பி வருவது இந்தியாதான். அதற்கடுத்த நிலையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளன.

இந்த மூன்று நாடுகளின் வாடிக்கையாளர்களும் முழுவதுமாகப் புறக்கணிக்க ஆரம்பித்தால் இலங்கை ஏற்றுமதி வர்த்தகம் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்பதைக் காட்டவே இத்தனை விவரங்களும்.

இலங்கையைச் சுற்றிப்பார்க்க மிக அதிக அளவில் செல்லும் சுற்றுலாப் பயணிகளும் இந்தியர்களே. இவர்கள் பெருமளவு பயன்படுத்துவது இலங்கை விமான சேவையான சிறிலங்கா ஏர்லைன்ஸைத்தான். இந்தியர்கள் கைவிட்டால், இலங்கை விமான சேவை படுத்துக் கொள்ளும்!

பொருட்கள் கொடுக்கல் – வாங்கல் ஒரு பக்கம் இருந்தாலும், சேவைப் பிரிவு பெருமளவு சார்ந்திருப்பது இந்தியாவைத்தான்.

இப்போதைக்கு சேவைப் பிரிவை விட்டுவிடலாம். காரணம் அதில் அரசின் பங்களிப்பே அதிகம்! தனியார் துறையின் பெரிய நிறுவனங்கள் பங்களிப்பு இருந்தாலும் அவர்களின் தமிழுணர்வு அல்லது தமிழர்கள் மீதான பாசம் நமக்குத் தெரிந்ததே. எனவே இதில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.

எப்படி நாம் புறக்கணிப்பது… என்னென்ன பொருட்களைப் புறக்கணிப்பது… இது இலங்கைத் தயாரிப்பு என எப்படித் தெரிந்து கொள்வது?

இந்தக் கேள்விகள் மிக முக்கியமானவை. இலங்கையின் பிரதான ஏற்றுமதி கார்மெண்ட்ஸ், தேயிலை, நறுமணப் பொருட்கள், தோல் பைகள் மற்றும் தென்னை சார்ந்த பொருட்களே. இவற்றுக்கு நிச்சயம் நம்நாட்டிலேயே மாற்று தயாரிப்புகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த மாற்றுப் பொருட்கள் தாராளாமாகக் கிடைக்கின்றன.

எனவே எந்தப் பொருளிலெல்லாம் மேட் இன் சிறிலங்கா என எழுதப்பட்டுள்ளதோ, அவற்றை முற்றாகப் புறக்கணிப்போம். அந்தப் பொருளில் நமது தமிழ் சகோதர – சகோதரிகளின் ரத்த வாடை வீசுவதை மானசீகமாக உணருங்கள்!

இன்னும் ரப்பர், புகையிலை, உலர் பழங்கள், கடல் உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி என பல வகைப் பொருட்களில் இலங்கைத் தயாரிப்புகளை நீங்கள் பார்க்கலாம்.

தங்க நகை வாங்கும் தாய்மார்களே… நீங்கள் கல் வைத்த நகைகளை வாங்காதீர்கள். காரணம் பெருமளவு கற்கள் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சிங்களர்கள் சார்ந்த அல்லது சிங்களர்கள் நடத்தும் வர்த்தக நிறுவனங்களைப் புறக்கணிப்பதன் மூலம் – அங்கே இந்தியப் பொருள்களே விற்றாலும் கூட -நமது உணர்வைக் காட்டலாம்.

நமது சகோதரர்கள் புலத்தில் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்துக்கு, சிறிய அளவிலாவது நமது பங்களிப்பை இதய சுத்தியோடு தருவோம்.

ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் அல்லது வேறு ஏதேனும் நாட்டு விமான சேவைகளை மட்டுமே பயன்படுத்துவோம்.

அடுத்து – விளையாட்டுத் துறையில் இலங்கை தொடர்பான அனைத்தையும் உடனடியாகப் புறக்கணிக்கத் துவங்கலாம்.

இப்போது இந்திய – இலங்கை கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இந்தப் போட்டித் தொடரை முழுமையாகப் புறக்கணிக்கலாம். நான் இலங்கை – இந்திய போட்டித் தொடரைப் பார்க்க மாட்டேன் என்ற உறுதி நிச்சயம் உங்களுக்கு நன்மையையே தரும். மதிப்புமிக்க உங்கள் நேரம் மிச்சமாகும். உங்களையும் அறியாமல் ஏதேனும் ஒரு உருப்படியான காரியத்தைச் செய்ய அது உதவக்கூடும்.

நண்பர் கண்ணையா பின்னூட்டத்தில் அனுப்பியதையே புறக்கணிப்பின் தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாம்…

“இலங்கை தயாரிப்புகள் என்று தெரியும் எதையும் நாம் முழுமையாக புறக்கணிப்போம். பயணத்துக்கு பிறநாட்டு விமானங்களையே உபயோகிப்போம்.

இலங்கை தொடர்பான அனைத்து விளையாட்டுக்களையும் புறக்கணிப்போம். இந்திய – இலங்கை கிரிக்கெட் போட்டியை முற்றுமுழுதாக பார்க்காமல் தவிர்ப்போம். அது தொடர்பான செய்திகளையோ, விவரங்களையோ யாருடனும் பகிர்ந்து கொள்ளவும் மாட்டோம்.

எமது ஈழத்து உறவுகளுக்கு நிம்மதியான, பாதுகாப்பான வாழ்க்கை அங்கே அமையும் வரை இந்தப் புறக்கணிப்பைத் தொடர்வோம்!

ஒரு தமிழனாக மட்டுமல்ல, மனித நேயத்தை வலியுறுத்தும், உணர்வுகளுக்குக் குரல் எழுப்பும் அனைவரும் இதனைப் பின்பற்றுமாறும் தங்களால் முடிந்த அளவு பரப்புமாறும் வேண்டுகிறோம். இது யாரையும் கட்டாயப்படுத்தும் நிர்பந்தமல்ல. உணர்வுகளைச் சொல்கிறோம்.. மனிதத்தை மதிப்பவர்கள் மதிப்பளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!”

நன்றி.

-வினோ

என்வழி.காம்

Comments

Thamizhan said…
இலங்கைப் பொருட்களைப் புறக்கணியுங்கள்.



www.NoToSriLanka.com