பொறுப்புள்ள ஊடகங்கள் அவற்றுக்குரித்தான ஊடக அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்: உருத்திரகுமாரன்
- பொறுப்புள்ள ஊடகங்கள் அவற்றுக்குரித்தான ஊடக அறத்தைக் கடைப்பிடித்தொழுக வேண்டுமெனவும் இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுமிடங்களில் இரு தரப்பினரது கருத்துக்களுக்கும் இடமளிக்க வேண்டுமெனவும் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரமாவது:
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வளர்த்தெடுக்க முன் வருக! அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் வேண்டாம்!!
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாக மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை தைத்திருநாள் அன்று வெளியிட்டிருந்தோம்.
இவ் அறிக்கை மக்கள் கருத்துக்களைப் பெறுவதற்காக பெப்ரவரி மாதம் 5ம் திகதிவரை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கை தொடர்பான மக்கள் கருத்துக்களை உள்வாங்கி பெப்ரவரி மாதம் 10 திகதி வரையில் அறிக்கையினை முழுமைப்படுத்தவுமுள்ளோம்.
எமது வேண்டுகோளுக்கிணங்க பல தமிழ்ச்சமூக நிறுவனங்களும் மக்கள் பலரும் தமது ஆதரவினை வெளிப்படுத்தியும் தமது கருத்துக்களை எமக்குத் தெரிவித்தும் வருகின்றனர்.
ஊடகங்களும் இவ் அறிக்கையினை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து வருகின்றன.
பலர் தொண்டர்களாகத் தம்மைப் பதிவு செய்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கும் பணியில் தம்மை இணைத்துக் கொண்டும் வருகின்றனர்.
இவையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சிக்கு உற்சாகம் தருவதாக அமைகின்றன. இதற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
- இருந்த போதும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய தமிழ் ஊடகங்கள் சில பொறுப்பற்ற வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்க முயற்சியினை சிறுமைப்படுத்த முயல்வது கண்டு நாம் வேதனையடைகிறோம். எமக்குக் கிடைக்கும் தகவல்களை ஆராய்ந்து பார்க்கும் போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கும் முயற்சியினைத் தடம் புரள வைக்க தேசியத்தின் பெயரால் சிலர் முயல்கின்றனரோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
உண்மை இவ்வாறு இருப்பின் இது எமது கண்களை நாமே குருடாக்கும் முயற்சியாகும்.
ஓரிரு இணையத் தள ஊடகங்கள் குற்றஞ்சாட்டுவது போல நாம் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரு வேறு அறிக்கைகளை வெளியிடவில்லை.
- தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தோளோடு தோள் கொடுத்து நின்று வரும் பேராசிரியர் பீற்றர் சால்க், பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல், சட்ட அறிஞர் கரன் பார்க்கர் போன்ற அனைத்துலகத் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மதியுரைக்குழு உறுப்பினர்களாக இருந்தமையால் அறிக்கை முதலில் ஆங்கிலத்திலேயே தயார் செய்யப்பட்டது.
ஆங்கில மூலமே பின்னர் தமிழ்ப்படுத்தப்பட்டது. மொழிமாற்றம் செய்யப்படும் போது மூலத்தின் பொருள் மாறுபடாத வகையில் மொழிமாற்றம் செய்தலே முறையானது.
இந்த அணுகுமுறையே எமது அறிக்கையினை மொழிமாற்றம் செய்த போதும் பின்பற்றப்பட்டது. இதனை இரண்டு அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்போர் இலகுவாகப் புரிந்து கொள்வர்.
இரு மொழிப் பிரதிகட்குமிடையே கருத்து வேறுபாடுகளெதுவுமிருப்பின் அவை சுட்டிக் காட்டப்பட்டிருக்க வேண்டுமேயொழிய அபாண்டமான குற்றச்சாட்டாக வெளிப்பட்டிருக்கக்கூடாது.
எமது அறிக்கை தொடர்பாக பின்வரும் விடயங்களை மக்கள் முன் தெளிவாக வெளிப்படுத்த விரும்புகிறோம்.
- இவ் அறிக்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலக்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட மதசார்பற்ற தமிழீழ அரசு அமைத்தலாக இருக்கும் என ஆங்கிலத்திலும் தமிழிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
- இது வெறும் நிலைப்பாடாக மட்டும் முன்வைக்கப்படாமல் இவ் இலக்கினை அடைவதற்கான ஒரு மூலோபாயத்தை அறிக்கை முன் மொழிகிறது.
தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படைக்கோட்பாடுகளுக்கு அங்கீகாரம் பெறுவது முதற்படி எனவும் இவ் அங்கீகாரம் கிடைக்கும் போது ஈழத் தமிழர் தேசம் தமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பது அடுத்தபடி எனவும் அறிக்கை கூறுகிறது.
இங்கு சுயநிர்ணய உரிமை என்பது அதன் முழுமையான அர்த்தத்திலேயே குறிப்பிடப்படுகிறது.
அதாவது பிரிந்து போகும் உரிமை உள்ளடங்கலாக தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் ஈழத் தமிழர் தேசத்தின் உரிமைக்கான அங்கீகாரத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போராடும் என்பது இதன் அர்த்தமாகும்.
இத்தகைய அங்கீகாரம் கிடைக்கும் போது தாயகத்திலும் புலத்திலும் ஜனநாயக வழிமுறைக்கூடாக ஈழத் தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையினைப் பிரயோகிக்கும்.
சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டிருந்தாலும், அந்நிய ஆட்சிக்கு உட்பட்டிருக்கும் மக்கள் தமது சுதந்திரத்தையும் இறையாண்மையையும்; கோருவதற்கான சட்ட அந்தஸ்தை அனைத்துலகச் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் எமக்குத் தருகிறது. இதனாலேயே இக் கோட்பாட்டிற்கு அறிக்கை முக்கியத்துவம் கொடுக்கிறது.
சட்ட அறிஞர் கரன் பார்க்கர் அவர்கள் அடிக்கடி கூறுவதுபோல சுயநிர்ணய உரிமையும் சுதந்திரத் தமிழீழமும்; ஒரு குதிரையும் வண்டியும் போன்றவை.
சுயநிர்ணய உரிமையென்ற குதிரையினைப் பூட்டித்தான் சுதந்திரத் தமிழீழமென்ற வண்டியை நாம் இழுத்தாக வேண்டும்.
இந்த விடயம் தொடர்பாக எம்மால் முன்வைக்கப்பட்ட மூலோபாயத்தினை விட மாற்று மூலோபாயங்கள் முன்வைக்கப்படுமாயின் அதனை மதியுரைக்குழு பரிசீலனை செய்யவும் தயாராக உள்ளது. - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படும் முதன்மை நோக்கங்களில் ஒன்று அனைத்துலக சமூகத்தினை எமது பக்கம் வென்றெடுத்தலாகும்.
நலன்கள் என்ற அச்சில் இயங்கும் உலக ஒழுங்கில் இது ஒரு இலகுவான விடயமாக இருக்க மாட்டாது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஒரு வலு மையமாக மாற்றவது இதற்கு அவசியம்.
இதற்கான எமது முயற்சியில் நாம் ஒன்றிணைந்த தேசமாக இயங்குவது முக்கியமானதாகும். - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கான அறிக்கையினை தயார் செய்த மதியுரைக்குழு உறுப்பினர்கள் மிக நீண்டகாலமாகத் தமிழீழ விடுதலை இலட்சியத்தோடு தம்மைப் பிணைத்துக் கொண்டவர்கள்.
தமிழீழத் தனியரசினை வென்றெடுப்பதற்கான பெருவிருப்புக் கொண்டவர்கள். தமது பெயர்களை வெளிப்படையாக வெளிப்படுத்தி இம் முயற்சியினை மேற்கொண்டவர்கள்.
இவர்களால் தயார் செய்யப்பட்ட அறிக்கையும் பகிரங்கமாக மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமல்ல, நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டே உருவாக்கப்படவுள்ளது.
விசுவாசத்தோடும் வெளிப்படைத் தன்மையாகவும் மேற்கொள்ளப்படும் இம் முயற்சியின் நோக்கம் குறித்து விசமத்தனமான பரப்புரைகள் மேற்கொள்வதும், குறுகிய நோக்கத்துடன் சந்தேக விதைகளைத் தூவுவதும் ஈழத் தமிழர் தேசத்தைப் பலவீனப்படுத்தத்தான் வழி கோலும். - நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பான இவ் அறிக்கை இன்னும் முழுமைப்படுத்தப்படவில்லை.
இவ் அறிக்கையினை முழுமையாக வாசியுங்கள். இவ் அறிக்கை தொடர்பான கருத்துப்பரிமாற்ற நிகழ்வுகளை நாம் ஒழுங்கு செய்து வருகிறோம். அவற்றிலும் கலந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் கூடி விவாதியுங்கள்.
ஆரோக்கியமான உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். நிச்சயமாக உங்கள் கருத்துக்களை உள்வாங்கி அறிக்கையில் தேவையான மாற்றங்களைச் செய்ய நாம் தயாராக உள்ளோம்.
பொறுப்புள்ள ஊடகங்கள் அவற்றுக்குரித்தான ஊடக தர்மத்தைக் கடைப்பிடித்தொழுக வேண்டுமெனவும் இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுமிடங்களில் இரு தரப்பினரது கருத்துக்களுக்கும் இடமளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனும் குழந்தை கருத்தரித்துள்ளதே தவிர இன்னும் அதன் பிரசவம் நடைபெறவில்லை.
- இதனைக் கருவிலேயே கருக்கி விடும் முயற்சியில் ஈடுபட வேண்டாமென அபாண்டமான அவதூறு பரப்ப முனைவோரிடம் நாம் வேண்டிக் கொள்கிறோம்.
இக் குழந்தையைத் தாய்மை உணர்வுடன் அணுகி வளர்த்தெடுக்க முன்வருமாறும் இவர்களை நாம் கோருகிறோம்.
தொடர்ந்தும் இத்தயை அவதூறுகளைப் பரப்புவதும், விசமத்தனங் கொண்ட சந்தேக விதைகளைத் தூவுவதும், இம் முயற்சிக்கு இடையூறு விளைவிக்க முனைவதும் தொடருமாயின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் உருவாகும் இக் குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு தமிழ் பேசும் மக்களதும்; பொறுப்புணர்வுள்ள ஊடகங்களினதும் கையில் தான் வந்துசேரும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TGTE Report Tamil 14 Jan
TGTE Report English 14 Jan
Comments