தமிழர்களை இருதுருவப்படுத்த முயல்பவர்களின் அரங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசு


அந்த நாட்டு மனிதர்கள் கூடியிருந்த அந்த மைதானத்தில் அந்த அவதார மனிதருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அந்த மனிதர் சிலுவையில் அறையப்பட்டு, மரணம் அடையும்வரை தொங்க விடப்பட்டார். அவரது விலாவில் ஈட்டியால் குத்தி இறப்பை உறுதி செய்துகொண்ட பின்னர், அவரது உடலை குகை ஒன்றினுள் வைத்து, பாறையால் மூடிவிட்டார்கள்.

அந்த நாட்டு அரசு அவரது மரணத்தை அறிவித்தது. அந்தக் காலத்தில், தொலைக்காட்சி வசதியோ, கணனி வசதியோ இருந்திருந்தால் அந்தக் கொடூரமான காட்சி உலகம் முழுவதும் காண்பிக்கப்பட்டிருக்கும். தேவகுமாரனின் மரணத்தை அவரை விசுவசித்தவர்கள் நம்பவில்லை. அவர் மீண்டும் வருவார் என்று நம்பினார்கள். அவர் மீண்டு வந்தார் என்று அவரது சீடர்கள் உறுதிபடக் கூறினார்கள். அவரது போதனைகளை உலகம் முழுவதும் கொண்டு சென்று பரப்பினார்கள்.

2010 வருடங்கள் ஆகியும் அந்த மரணத்தை நிராகரித்த மக்களால் அவரது புனிதம் நிலை நிறுத்தப்பட்டது. இன்றுவரை அவரது போதனைகள் வேதமாகப் பல கோடி மக்களை நெறிப்படுத்துகின்றது. இது புராணக் கதையல்ல. நிகழ்ந்தும் முடியாத வரலாறு. கடந்த வருடம் அதே போன்று ஒரு படுகொலை அறிவிக்கப்பட்டது. அதனை யாரும் நேரடியாகப் பார்க்கவில்லை. கொலையாளிகளால் ஒரு மரணித்த உடலம் தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டது. அந்தக் காட்சிகள் கணனிக் காணொளி மூலமாக உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.

அந்தக் காட்சிகளின் உண்மைத் தன்மை கேள்விக்குரியதாக உள்ளதாக அறிவுசார் கருத்துக்கள் எழுந்தன. முதல் நாள் காண்பிக்கப்பட்ட காட்சிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் காண்பிக்கப்பட்டது. அவரை விசுவசித்த மக்கள் அந்தக் காட்சிகளை நம்ப மறுத்து நிராகரித்தார்கள். அவரது உடலம் எரியூட்டப்பட்டு, கடலில் வீசப்பட்டது என்ற கொலையாளிகளின் வார்த்தைகளையும் நம்ப மறுத்தார்கள். அவர் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது.

அவரது சிந்தனையும் இலட்சியமும் உலகம்வாழ் தமிழர்களின் உணர்வுகளை மேம்படுத்தியது. அவரது இலட்சியத்தை நெஞ்சில் நெருப்பாக்கிக்கொண்டு புதிய பல போர்க் களங்களில் புகுந்து போராடுகிறார்கள். ஆம், தமிழீழத் தேசியத் தலைவர் குறித்த எதிரிகளின் அந்தப் பரப்புரைகளால் தமிழர்களின் எழுச்சி எந்த விதத்திலும் குறைந்து செல்லவில்லை. தங்கள் சூரியத் தேவனுக்கு மரணம் என்பது கிடையாது என்றே தமிழர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையோடு தங்களிடம் தலைவர் சுமத்தியுள்ள பணியினைத் தொடருகிறார்கள். அந்த நம்பிக்கையே அவர்களது பலம். அந்த நம்பிக்கையே அவர்களது வாழ்தலின் சுவாசம். அந்த நம்பிக்கையே அவர்களது எதிர்கால வெளிச்சம்.

தேவகுமாரன் உயிரோடு இருப்பதாக உலகம் நம்புவது போல், தேசியத் தலைவர் அவர்களும் ஒரு நாள் வருவார் என்று தமிழர்கள் நம்புகிறார்கள். இத்தனை பேரழிவு யுத்தத்தை நடாத்தி, தமிழீழ மண்ணைத் தமிழர்களின் புதைகுழிகளாக மாற்றிய எதிரிகள் விட்டு விடுவார்களா? சிங்களத்தில் சொல்வதைத் தமிழர்கள் ஏற்க மறுப்பதால் அதனைத் தமிழில் சொல்லவும் ஏற்பாடுகள் செய்தார்கள். தமிழில் சொல்லியும் தமிழர்கள் அதை ஏற்க மறுத்தே விட்டார்கள்.

ஆனாலும், பாலூற்றிக் கதை முடிக்கப் புறப்பட்டவர்கள் அதனை விட்டு விடுவதாக இல்லை. தலைவர் குறித்த நம்பிக்கை தமிழர்களிடம் இருக்கும்வரை தமக்கு இடம் கிடைக்கப் போவதில்லை என்பதால், முள்ளிவாய்க்கால் பேரவலம் முடியும்வரை முகம் காட்ட மறுத்தவர்கள் மீண்டும்... மீண்டும்... அதே வசனங்களோடு அரங்கிற்கு வரத் தவிக்கிறார்கள். அதற்காகத் தமிழ் மக்களை இரு துருவப்படுத்தும் முயற்சியிலும் சளைக்காமல் ஈடுபடுகிறார்கள்.

தற்போது அவர்களுக்கான அரங்கமாகவே 'நாடு கடந்த தமிழீழ அரசு' உருவாகி வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ், பாரிஸ் புறநகரான சார்சேலில் நடைபெற்ற 'நாடு கடந்த தமிழீழ அரசு' அரங்கத்தில் இடம்பெற்ற உரையாடல்களும் இதையே உணர்த்தியது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இறந்துவிட்டார் என்று நிரூபிக்கும் முயற்சிகளும் அங்கே மேற்கொள்ளப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தலைவராக கே.பி. அவர்களே நியமிக்கப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே 'நாடு கடந்த தமிழீழ அரசு' உருவாக்கப்படுகின்றது என்றும் கூறப்பட்டது. விடுதலைப் புலிகளின் தற்போதைய புலம்பெயர் கட்டமைப்புக்களும் விமர்சனப்படுத்தப்பட்டது. மக்கள் பேரவைகளும் அவர்களது விமர்சனங்களிலிருந்து தப்பவில்லை.

திரு. விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் மிகப் பெரிய தமிழீழ உணர்வாளர். தேசியத் தலைவர் அவர்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவர். தமிழீழ மீட்பிற்கான அவரது முயற்சியும், பணியும் புனிதமானது என நாம் நம்புகின்றோம். ஆனாலும், அவரது பக்கத்தில் அமர முற்படுபவர்களது செயற்பாடுகள் அவரையும் தாழ்தும் அபாயங்கள் கொண்டதாகவே உள்ளன.

தேசியத் தலைவர் அவர்களுக்குப் பாலூற்றிக் கதை முடிக்க முயற்சிப்பது, வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒரு வரலாற்று அவமானம் எனப் பிரகடனப்படுத்துவது, விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களை விமர்சிப்பது, மக்கள் பேரவைகள் மீது அவதூறான தாக்குதல்களைக் தொடுப்பது என்று அவரது அணியிலிருந்து சகதிகள் மட்டுமே வெளிவந்துகொண்டுள்ளன. மிகப் பெரிய தேசியக் கடமையினை நிறைவேற்றத் துடிக்கும் திரு உருத்திரகுமார் அவர்கள் காலம் தாழ்த்தாது இத்தகைய சேறடிப்புக்களை தடுத்து நிறுத்தாதுவிட்டால், அவரது முயற்சியே அதில் மூழ்கடிக்கப்பட்டுவிடும்.

முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்புப் பேரவலம் நடாத்தி முடிக்கப்பட்டு எட்டு மாதங்களாகிவிட்ட நிலையில், தமிழீழ மக்கள் அசைவியக்கமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அபாயகரமான தளத்தில் நின்றுகொண்டு தம்மால் முடிந்த நகர்வுகளைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. ஆக்கபூர்வமாக இயங்கக் கூடிய நிலையில் பலமாக உள்ளவர்கள் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமே.

ஈழத் தமிழர்களின் எதிர்காலத்துக்கான போராடும் பொறுப்பும் தேசியத் தலைவர் அவர்களால் புலம்பெயர் தமிழர்களிடமே கையளிக்கப்பட்டது. அந்தப் பலத்தைச் சிதைப்பதற்கு முயலும் எவரையும் தமிழீழ மக்கள் மன்னிக்கமாட்டார்கள். புலம்பெயர் தேசங்களில் உருவாகும் தமிழீழ அரசியல் சார்ந்த எந்த அமைப்பும் தனித்த பாதையில் பயணிக்க முடியாது.

இது எமது இன விடுதலை சார்ந்த போராட்டம். இதில் சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமே இல்லை. புலம்பெயர் தமிழ் மக்களைப் பிளவு படுத்தி இரு துருவப்படுத்தி இலாபம் பார்ப்பதற்கு யாரும் முற்றபட முடியாது. அதற்கான அங்கீகாரத்தை புலம்பெயர் தமிழினம் வழங்கும் என்ற கற்பனாவாதம் செல்லுபடியாகாது.

ஏனென்றால், தமிழீழ மக்கள் முட்டாள்கள் அல்ல!

நன்றி: பரிஸ் ஈழநாடு



Comments