புலம்பெயர் தமிழீழ மக்கள் மீது சதிவலைப் பின்னல்- பகுதி 2

புலம்பெயர் தமிழீழ மக்கள் மீது சதிவலைப் பின்னல் பகுதி 1
தற்கால உலக ஒழுங்கை சரியாகப் புரிந்து கொள்ளத் தவறியதன் காரணமாகவும், ஆயுதப் போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட பலத்திற்கு அரசியல் வடிவம் கொடுக்கத் தவறியதன் காரணமாகவுமே நான்காம் கட்ட ஈழப்போரில் தமது நிழலரசை தமிழீழ விடுதலைப் புலிகள் இழந்ததாக, மே 18இற்குப் பின்னர் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில் தற்கால உலக ஒழுங்கு என்பது எவ்வகையான தன்மையைக் கொண்டுள்ளது?

இதற்கு இசைவாக எதனைப் புரிந்திருந்தால் தமிழீழ நிழலரசு பாதுகாக்கப்பட்டிருக்கும்? இக்கால உலக ஒழுங்கில் ஆயுதப் போராட்டம் என்பது சாத்தியமற்ற விடயமா? போன்ற கேள்விகள் எம்மவர்களிடையே எழுவது இயல்பானதே. இவற்றை நுணுகி ஆராயும் களமாக இக்கட்டுரையின் இரண்டாவது பகுதி அமைகின்றது.

பனிப்போருக்கு முன்னரான உலக ஒழுங்கு என்பது சோவியத் - அமெரிக்கா என்ற இருதுருவ முகாம்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வந்தது. இதில் ஏகாதிபத்திய – முதலாளித்துவ அடக்குமுறைகளின் முகமாக அமெரிக்காவும், புரட்சிகர சமவுடமைத்துவப் போராட்ட வடிவங்களின் முகமாக சோவியத் ஒன்றியமும் அடக்கப்பட்ட சமூகங்களாலும், தேசிய இனங்களாலும் அக்காலகட்டத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தன.

இதுவே சோசலிச (சமவுடமைத்துவ) சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய விடுதலைப் போராட்ட சித்தாந்தங்கள் வனையப்பட்டமைக்கான அடிப்படையாகவும் விளங்கியது. இவ்வாறான பின்புலத்தில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன் பொதுவுடமைத்துவப் புரட்சியும், பனிப்போரும் முடிவுக்கு வந்த பொழுது, புரட்சிகர சிந்தனைகளின் அடிப்படையில் வனையப்பட்டிருந்த தேசிய விடுதலைப் போராட்டங்களில் எதிர்காலம் தொடர்பாக கேள்விகள் அக்காலகட்டத்தில் எழத்தவறவில்லை.

அதாவது அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக தாராண்மைத்துவ – முதலாளித்துவ முகாமின் கைமேலோங்கும் சூழலில், புரட்சிகர சிந்தனைகளின் அடிப்படையில் எவ்வாறு தமது இருப்பை தேசிய விடுதலை இயக்கங்களால் தக்கவைக்க முடியும்? என்ற வாதத்தை மையப்படுத்தியே இவ்வாறான கேள்விகள் எழுந்திருந்தன.

மறுபுறத்தில் இவ்வாறான கேள்விகளுக்கு வலுவூட்டும் வகையில், பனிப்போர் முடிவுக்கு வந்த மறுகணவே தாராண்மைத்துவ உலக ஒழுங்கை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டத்துடன் உலக அரங்கில் அமெரிக்காவும், அதனை மையமாகக் கொண்ட மேற்குலகமும் களமிறங்கி உலக மயப்படுத்தலை வேகப்படுத்தத் தவறவில்லை.

இப்படியாகப் பனிப்போருக்குப் பின்னரான உலக ஒழுங்கு என்பது மேற்குலகின் தாராண்மைத்துவப் பொறிமுறையில் சுழலத் தொடங்கிய பொழுதும், தாராண்மைத்துவத்திற்கு சவால்விடுக்கக்கூடிய கருத்தியல் சக்திகளாக தேசியவாத எழுச்சிகளும், இஸ்லாமியத்தின் மறுமலர்ச்சியும் அக்காலகட்டத்தில் வீரியம்பெறத் தொடங்கியிருந்தன. இதனை நன்கு இனம்கண்டுகொண்ட மேற்குலகம், தேசியவாத அடிப்படையில் கிழக்கு ஐரோப்பாவில் தனியரசுகள் தோற்றம்பெறுவதற்கு இடமளித்த பொழுதும், மூன்றாம் உலகில் இவ்வாறான புதிய தேசிய அரசுகள் தோற்றம் பெறுவதற்கு இடமளிப்பதற்கான மனோநிலையைக் கொண்டிருக்கவில்லை.

சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த உப அரசுகள் பிரிந்து சென்று தனியரசை நிறுவுவது தமது நலன்களுக்கு அனுகூலமாக அமைந்தாலும், இவ்வாறான தேசிய அரசுகள் மூன்றாம் உலகிலோ அல்லது ஏனைய ஐரோப்பிய தேசங்களிலோ தோற்றம் பெறுவது உலக ஒழுங்கிலும், உலகின் இயல்புநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே தாராண்மைத்துவ மேற்குலகின் பார்வையாக விளங்கியது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரித்தானியா, ஸ்பெய்ன், கனடா போன்ற நாடுகளில் எழுச்சிபெற்ற ஸ்கொட்டிஸ், பாஸ்க், கியூபெக் போன்ற தேசங்களின் தனியரசுக் கோரிக்கைகள் அமைந்திருந்தன. இவற்றைவிட மேற்குலகிற்கு எதிராக இஸ்லாமிய உலகில் வலுவடைந்த அடிப்படைவாத சிந்தனைகளும், அவற்றின் அடிப்படையிலான அனைத்துலகப் பயங்கரவாதமும் தாராண்மைத்துவ உலக ஒழுங்கை நிறுவும் தமது நிகழ்ச்சித் திட்டத்தை சீர்குலைக்கக்கூடும் என்ற அச்சமும் மேற்குலகிற்கு ஏற்படத் தவறவில்லை.

இப்படியான பின்புலத்தில் நியூயோர்க் இரட்டைக் கோபுரங்களை பின்லாடனின் அல்கைடா பயங்கரவாதிகள் தகர்த்த பொழுது, ஆயுதவழி தழுவிய தேசிய விடுதலைப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதை இலக்காகக் கொண்டு நோர்வே, பின்லாந்து போன்ற சமாதான முகவர்களை மூன்றாம் உலகில் அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகம் வேகமாகக் களமிறக்கியது.

இதில் நகைமுரணான விடயம் என்னவென்றால், தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு அடிப்படையாக விளங்கும் தேசிய இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட, ஆயுதப் புரட்சிகள் இடம்பெறும் நாடுகளில் தாராண்மைத்துவ ஆட்சியமைப்புக்களை வலுப்படுத்துவதே 2001, செப்ரம்பர் 11 இற்குப் பின்னரான மேற்குலகின் மூலோபாயமாக அமைந்திருந்தது. இதன் பின்னணி என்பது ஏறத்தாள இருநூறு ஆண்டுகால வரலாற்றைக்
கொண்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

பதினெட்டாம் நூற்றாண்டின் கடைக்கூறில் யுத்தத்தால் ஐரோப்பிய தேசங்களில் சின்னாபின்னமாகியிருந்த வேளையில் வாழ்ந்துவந்த இம்மானுவேல் கான்ற் என்ற யேர்மனிய தத்துஞானியால் சனநாயக சமாதானக் கோட்பாடு என்ற திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது. அதாவது உலகளாவிய ரீதியில் சனநாயக ஆட்சியமைப்புக்களை ஏற்படுத்தும் பொழுது யுத்தங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்பதே இம்மானுவேல் கான்ற் அவர்களின் அப்போதைய அசையாத நம்பிக்கையாக விளங்கியது. பிற்காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் முதற்கூறில் சனநாயக ஆட்சியமைப்பை ஓரளவுக்கு தழுவிக்கொண்ட மேற்குலக நாடுகள் தமக்கிடையே மோதிக் கொள்வதைத் தவிர்த்துகொண்டமை அவரது கோட்பாட்டிற்கு வலுச்சேர்த்ததோடு, இதனைத் தழுவி முதலாம் உலக மகாயுத்தத்தின் முடிவில் புதிய உலக ஒழுங்கை அப்போதைய அமெரிக்க
அதிபர் ஹரோல்ட் வில்சன் அவர்களும் தரிசனம் செய்திருந்தார். இதுவே இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் ஐரோப்பிய தேசங்களில் சமாதானம் ஏற்படுவதற்கும் வழிகோலியிருந்தது.

இந்த வகையில், சனநாயக ஆட்சியைத் தழுவிக் கொண்ட மேற்குலக தேசங்களில் தம்மிடையே மோதிக்கொள்வதைத் தவிர்த்து, சமரச அடிப்படையில் செயற்படத் தொடங்கிய பொழுதும், இம்மானுவேல் கான்ற் அவர்களால் தரிசனம் செய்யப்பட்ட சனநாயக சமாதானக் கோட்பாடு என்பது மேற்குலக தேசங்களில் மட்டும் பொருந்தக்கூடிய விடயமாகத் திகழ்வதும் இங்கு மறுப்பதற்கில்லை.

அதாவது ஒருபுறம் தமக்கிடையே சமாதானத்தை மேற்குலக அரசுகள் பேணிக்கொண்டாலும், சனநாயக ஆட்சியமைப்பைக் கொண்டிராத மூன்றாம் உலக தேசங்கள் மீது போர் தொடுப்பதற்கு அவை ஒருபொழுதும் பின்னடித்ததில்லை. இதற்கு மிகச் சமீபத்திய உதாரணமாக 2003ஆம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்கா நிகழ்த்திய படையெடுப்புத் திகழ்கின்றது.

இங்கு ஒரு விடயத்தை நாம் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். அதாவது உலகளாவிய ரீதியில் சனநாயக ஆட்சியமைப்புக்களை ஏற்படுத்துவதைவிட, அவற்றின் ஊடாகத் தமது தேசிய நலன்களைப் பேணுவதிலேயே மேற்குலகம் அதீத அக்கறை கொண்டுள்ளது. இந்த வகையில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இம்மானுவேல் கான்ற் தரிசனம் செய்த சனநாயக சமாதானக் கோட்பாடு என்பது மேற்குலக அரசுகளின் தேசிய நலன்களை உலக அரங்கில் முன்னிறுத்திச் செல்வதற்கான கருவியாகவே மாறியுள்ளது.

இதனை தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்துடன் நாம் பொருத்திக் கூர்மையாக ஆராயும் பொழுது ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்து தமிழீழ மக்களுக்கு நீதி வழங்குவதை விட, ஒரு ஆயுதப் புரட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே ஈழப்பிரச்சினையில் மேற்குலகின் தலையீட்டுக்கான அடிப்படை மூலோபாயமாகத் திகழ்ந்திருப்பது புலனாகின்றது.

இவ்வாறான மூலோபாயத்தின் அடிப்படையிலேயே ஈழப்பிரச்சினையில் 2001ஆம் ஆண்டின் கடைக்கூறில் சமாதான அனுசரணையாளராக ஈழப்பிரச்சினையில் நோர்வே களமிறங்கியதோடு, உதவி வழங்கும் கொடையாளி - இணைத்தலைமை நாடுகளாக வேடமிட்டு 2002ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக சக்திகளின் தலையீடும் அமைந்திருந்தது.

படைய – அரசியல் அமைப்பாக இயங்கி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்வலிமையை மழுங்கடிக்கச் செய்து, ஆயுதக் களைவுக்கு இட்டுச்செல்வதற்கான புறச்சூழலைத் தோற்றுவித்து, இறுதியில் சிறீலங்காவின் இறையாண்மைக்கும், நில ஒருமைப்பாட்டிற்கும் கட்டுப்படக்கூடிய ஒரு அரசியல் கட்சியாகத் தமிழீழ விடுதலைப் புலிகளை மாற்றியமைப்பதே தாராண்மைத்துவ மேற்குலகின் அப்போதைய மூலோபாயமாக விளங்கியது.

அதுவே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான மேற்குலகின் வழிகாட்டியாகவும் அமைந்தது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், மேற்குலகின் மூலோபாயத்தை ஆரம்பத்தில் இருந்தே தமிழீழ விடுதலைப் புலிகளும் நன்கு புரிந்துகொண்டிருந்தார்கள்.

மேற்குலகின் தவறான அணுகுமுறைக்காக அதனைப் பகைத்துக் கொள்வதைவிட, அதனால் வகுக்கப்படும் பொறியை எதிர்கொண்டு, அதனூடாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை மேற்குலக சக்திகளுக்கு எடுத்துரைத்து, ஈற்றில் தமிழீழ தனியரசுக்கான இராசரீக அங்கீகாரத்தைப் பெறுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்மூலோபாயமாக அன்றைய காலகட்டத்தில் அமைந்திருந்தது.
அதனை அடிப்படையாகக் கொண்டே சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்கேற்பும், ஒத்துழைப்பும் அமைந்திருந்தது. இவ்வாறாக, சமாதான காலத்தில் கிடைக்கப்பெற்ற சகல விதமான வாய்ப்புக்களையும் பயன்படுத்தி, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெறுவதற்கான சகல முயற்சிகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்திருந்தார்கள் என்பதே மெய்யுண்மையாகும்.

இதுவே, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் பின்னடைவுக்கு ஆளாகியமைக்கு எந்த வகையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமாக இருக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்வதற்குப் போதுமானதாகும்.

(தொடரும்)
-சேரமான் -

Comments