மனிதன் , லங்காசிறி , தமிழ்வின் இவை எல்லாம் ஒரே நிர்வாகம் தான் மனிதனில் ஒட்டுக்குழுக்களுக்கு இணைப்பு கொடுத்ததிலிருந்து யாருடைய கூட்டம் என்று இவ்வளவு நாளும் தெரியாமலா இருந்தார்கள்ஊடகங்களை ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என்று சொல்வார்கள். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றும் பணியில் நேர்மையோடு பணியாற்றிய எத்தனையோ ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும், சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. தொடர்ந்தும் நடந்து வருகின்றன.
இவர்களுக்கு விளம்பரம் கொடுக்கும் எம்மக்களும் வியாபார நிறுவனங்களும் சிந்திக்க வேண்டும் முற்று முழுதாக மரண அறிவித்தலிலேயே இவர்கள் உழைக்கின்றார்கள்
சிங்கள தேசத்தின் இனவாதத் தீயில் கருகிப்போன ஊடகவியலாளர்களையும் நாம் கண்ணீரோடு நினைவு கூரவேண்டிய கட்டாயத்திலும் தமிழீழ சமூகம் உள்ளது. நிமலராஜனில் ஆரம்பித்த இந்த ஊடகப் படுகொலைகள் நடேசன், சிவராமன் போன்ற பல தமிழூடக ஜம்பவான்கள் எனத் தொடர்ந்து, மகிந்த சகோதரர்களின் ஜனநாயக விரோத செயற்பாடுகளைக் கண்டித்த சண்டே லீடர் என்ற கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க என்ற சிங்கள ஊடகவியலாளரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
விநாயகத்தின் விபரீத வலை- கறுப்பு சிங்கள ஊடகவியலாளர்கள் பல ஊடகவியலாளர்கள் தமது உயிர்ப் பாதுகாப்பிற்காக சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்று வெளி நாடுகளில் வாழ்கிறார்கள். சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்ற மனச்சாட்சி மிக்க சில சிங்கள ஊடகவியலாளர்கள் அம்பலப்படுத்திய தமிழ் இளைஞர்கள் படுகொலை குறித்த ஒளித் தகடே மகிந்த ஆட்சியாளர்கள் மீதான போர்க் குற்ற சாட்சியாக மாறி அவர்களது தூக்கத்தைக் கெடுத்து வருகின்றது.
இத்னை பொறுப்பான ஊடகத் துறை தற்போது தடுமாறும் தமிழ் ஊடகவியலாளாகளால் சிதைவடைந்து வருவதை நாம் கவலையோடு சுட்டிக் காட்ட வேண்டிய கட்டாயமும் உள்ளதை அனைத்து ஊடகங்களினதும், குறிப்பாக இணைய ஊடகங்களின் கவனத்திற்குத் தர வேண்டிய தார்மிகக் கடமையின் நிமித்தம் இந்தக் கட்டுரை பிரசுரமாகின்றது.
இலங்கைத் தீவு அமைதியாக இருந்த ஒரு காலத்தில், 'தினகரன்' பத்திரிகை யாழ்ப்பாணத்தில் கொடி கட்டிப் பறந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்த தினகரன் விளையாட்டு விழாவின் சிறப்பு அந்தப் பத்திரிகையின் வரலாற்றைப் பதிவு செய்திருந்தது. அதே தினகரன் பத்திரிகை சிங்கள அரச தரப்பின் ஊதுகுழலாக மாற்றம் பெற்ற பின்னர் அதைக் கையில் தொடுவதற்கே ஈழத் தமிழர்கள் அருவருப்படைந்தனர்.
யாழ்ப்பாணத்துப் பத்திரிகை வாசகர்களில் பெரும் பகுதியினரை 'ஈழநாடு' பத்திரிகை வளைத்துப் பிடித்தபோதும், இரண்டாவது இடத்தில் இருந்த 'வீரகேசரி' முதல் இடத்தைப் பிடித்து வேகமாகத் தன்னைத் தமிழ் மக்கள் மத்தியில் பலப்படுத்திக் கொண்டது. இந்தியாவால் போஷாக்கு ஊட்டப்பட்டு, கொழும்பில் இருந்து வெளியிடப்பட்டு வந்தாலும், ஈழத் தமிழர்களின் நாடித் துடிப்பறிந்து நெருக்கடிகள் மத்தியிலும் பத்திரிகைத் தர்மத்தை ஓரளவாகினும் நேர்மையுடன் கடைப்பிடிக்கத் துணிந்த காரணத்தால், தற்போதுத் தனது இடத்தைத் தமிழ் மக்களது இதயங்களில் தக்க வைத்து வருகின்றது.
'ஈழநாடு' பத்திரிகை இந்திய, சிங்கள படையினரின் தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர் கொண்டதுடன், களநிலை சாதகமில்லாத நிலையில் அங்கு வெளிவருவது தடைபட்டுப் போக, புலம்பெயர் தேசங்கள் அந்தப் பெயரைச் சுவீகரித்து இன்றுவரை அதனை உயிர்ப்பித்து வருகின்றனர். இந்த இடையூறான காலப் பகுதியில் யாழ். மக்களுக்கான பத்திரிகையாக உருவான 'உதயன்' நாளிதழ் சிங்கள அரச பயங்கரவாதத்தினதும், தமிழ் ஒட்டுக் குழுக்களதும் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்களையும், இழப்புக்களையும் எதிர் கொண்ட போதும் இன்றுவரை தனது ஜளநாயகக் கடமையினைத் தொடர்வதாகவே உணரப்படுகின்றது.
'உதயன்' நாளிதழின் நிர்வாக இயக்குனர் திரு. சரவணபவன் அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையிலும், அதன் ஆசிரியரும், நிர்வாக இயக்குனரின் மைத்துனருமான திரு. வித்தியாதரன் அவர்கள் பத்திரிகா தர்மத்தைப் பேணிவருவதாகவே நம்பப்படுகின்றது. ஆட்சி தம் கையில் கிடைத்துவிட்டது என்பதற்காக அரசியலாளர்களும், பதவி தம் கையில் கிடைத்துவிட்டது எனபதற்காக சட்டவாளர்களும் எப்படி ஜனநாயக கடமைகளிலிருந்து தவறுவதை மக்கள் (சிங்கள மக்களை இதில் சேர்க்க முடியவில்லை) அனுமதிக்க மாட்டார்களோ, அப்படியே ஊடகங்களும் தமக்கு வழங்கப்பட்ட ஜனநாயக கடமைகளை மீறும்போது அதையும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அது மாறாத பட்சத்தில், அந்த ஊடகங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுவிடும் என்பதையும் அத்தனை ஊடகங்களும் கவனத்தில் கொள்வது அதன் நிலைப்பிற்கு வகை செய்யும். தற்போது, இணைய ஊடகங்களில் வெளிவரும் உரிமை கோரப்படாத அல்லது முகவரியற்ற கட்டுரைகள் மக்களைக் குழப்புவதாகவே உள்ளது. ஆண்மைத்தனமில்லாத அந்த எழுத்துக்கள் ஊடக நிர்வாகத்தினால் புறக்கணிக்கப்பட வேண்டும். ஒருவர் சரியான கருத்தைத் தெரிவிப்பவராக இருந்தால், தனது கருத்து சரியானதுதான் என்ற எண்ணம் அவரிடத்தில் நிச்சயமாக இருந்தால், அவர் புலை பெயருக்குப் பின்னால் ஒளிந்திருந்தோ, அறியப்படாத அமைப்புக்களின் பெயரால் அறிக்கை விடுவதோ ஊடக தர்மமாக அமையாது.
ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்க விரும்பும் ஒருவர், அதனால் வரக்கூடிய எந்த விமர்சனங்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஆண்மைத்தனம் உள்ளவராக இருக்க வேண்டும். (தமிழீழ விடுதலைப் போரை நேரில் தரிசித்த எவரும் ஆண்மைத்தனம், பெண்மைத்தனம் என்று வீரத்தைப் பிரித்துணர முடியாது எனினும் வழக்கிலிருக்கும் வார்த்தையாகவே இந்தச் சொல் கையாடப்படுகின்றது) அதைப் பிரசுரம் செய்யும் ஊடகங்களும் அத்தகைய தவறுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
அண்மைக் காலங்களில் பெருகிவரும் இணையத்தளத் தொழில் நுட்ப வளர்ச்சி எம்மில் சிலருக்கு 'மஞ்சள் பத்திரிகை' வடிவங்களை உருவாக்கி உலாவ விடும் தைரியத்தையும் கொடுத்துள்ளது. அத்தகைய இணையத்தளங்கள் யாரைப்பற்றி எதை வேண்டுமானாலும் எழுதலாம். அந்த இணையத்தளம் யாரால் இயக்கப்படுகிறது என்பதற்கான உரிமை விபரங்களும் அதில் வெளியிடப்படுவதில்லை.
அண்மைக் காலமாக வெளிவரும் உரிமைகோரப்படாத இணைய ஊடகங்களைப் பார்வையிட்டபோது இந்த அதிர்ச்சிகளை உணர முடிந்தது. முன்பெல்லாம் அசிங்கங்களையும், தனிநபர் தாக்குதல்களையும் ரசிப்பவர்கள் ஒட்டுக் குழுக்களின் இணையத் தளங்களைப் பார்த்தோ, ரி.பி.சி. போன்ற வானொலிகளையோ கேட்டோ தங்கள் வக்கிரகங்களைத் தணித்துக் கொள்வார்கள். தற்போது அந்தப் பஞ்சங்கள் போக்க இப்படியான புதிய இணையத்தளங்களும் செய்தி வக்கிரகாரர்களுக்கு நிறையவே தீனி போட்டு வருகின்றன.
தவறு செய்பவர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல, தவறைத் தட்டிக் கேட்கும், திருத்தும் கடமையிலிருக்கும், தகுதியிலிருக்கும் அனைவரும் தமக்கான கடமைகளை நிறைவேற்றத் தவறுவார்களானால் அவர்களும் குற்றவாளிகளே. அந்த வகையில், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதிக் கணங்கள் வரை உலகத் தமிழர்களின் நம்பிக்கைக்குரிய தேசிய ஊடகமாகப் பணியாற்றிக்கொண்டிருந்த 'தமிழ்நாதம்', 'புதினம்' போன்ற ஊடகங்கள் பின்னால் ஏற்பட்ட நிர்ப்பந்தங்கள் காரணமாக இடை நிறுத்தப்பட்டதில் அதற்குரியவர்கள் பெரும் வரலாற்றுத் தவறைச் செய்தவர்களாகவே தமிழ் மக்களால் நோக்கப்படுகின்றது.
குறைந்தபட்சம், அதை நேர்மையோடு தமிழ்த் தேசியத்திற்காக செயல்படுத்த விரும்புபவர்களிடமாவது கையளித்து இருக்கலாம் என்ற ஆதங்கம் அத்தனை தமிழர்களிடமும் உள்ளது. ஊடகம் ஒன்று உருவாகுவதற்கு ஒருவர் அல்லது சிலர் காரண கர்த்தாக்களாக இருந்தாலும், அது மக்களிடம் சென்றடைந்த பின்னர் அது மக்கள் பயன்பாட்டிற்கான மக்கள் சொத்தாகவே நோக்கப்பட வேண்டும். அதைத் தடுக்கும், நிறுத்தும் முடிவுகளை எடுக்குமுன்னர் மக்கள் அபிப்பிராயங்களையும் கேட்டே முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை இது சம்மந்தப்பட்ட அனைவரும் உணர்வார்கள் என்றே நம்புகின்றோம்.
'தமிழ்நாதம்', 'புதினம்' இணையத்தளங்களின் மூடுவிழாவிற்குப் பின்னர், ரஷ்யா சிதறுண்டு போனபின்னர் உலகின் கேள்வி கேட்க முடியாத சக்தியாக அமெரிக்கா வளர்ந்தது போலவே 'லங்காசிறி' இணையத்தளமும் ஏகபோக உரிமையுடன் பெரு வளர்ச்சி கண்டது. அபாரமான அதன் வளர்ச்சி தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய கவர்ச்சி அதன் செய்திகளின் நடுநிலையிலும் வெளிப்பட்டது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் முன்நின்று செய்திகளை வழங்கி ஈழத் தமிழர்களின் இதயங்களையும் வென்றெடுத்தது.
அதன் அபரிதமான வளர்ச்சிக்கு கண்திருஷ்டி வந்தது போலவே, சிங்கள தேசத்தின் நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கே வந்துள்ளது. 'லங்காசிறி' இணையத்தளம் இந்தத் தேர்தலில் தவிர்க்க முடியாத ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய உறவுமுறை அழுத்தம் அதன் நடுநிலையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அதன் இயக்குனரின் சகோதரரான சிவஞானம் சிறிதரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து அதன் பக்கசார்பு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.
புலம்பெயர் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் வழங்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் நிலை குறித்த விசனக் கட்டுரைகள் 'லங்காசிறி' இணையத்தளத்தால் திட்டமிட்டு தணிக்கை செய்யப்படுகிறது. பிரசுரமாகாமல் தடுக்கப்படுகிறது. இது ஊடக தர்மம் என்று அந்த இணையத்தளம் கருதுமானால் காலம் அதனைத் தண்டிக்கும் என்பதை வரலாறு எமக்குக் கற்றுத் தந்துள்ளது. அவலப்பட்டு, நொந்துபோயுள்ள ஈழத் தமிழ் மக்களை உறவின் பெயரால் அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்வது அபாயகரமானது. நியாயமான அச்சங்கள் தீர்க்கப்பட வேண்டும். கேள்விகளுக்குப் பதில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
அதை விடுத்து அச்சங்களையும், கேள்விகளையும் மறைத்து விடுவது, அந்த நீதிக்காகப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை இணையத்தளம்அந்தமக்கள் மத்தியில் இயல்பாகவே உருவாகிவிடும். இது தனி நபர்கள் மீதான குற்றச்சாட்டு என்றோ, அச்சுறுத்தல் என்றோ உதாசீனம் செய்யாமல் ஊடக தர்மத்தோடு சீர் செய்ய வேண்டியது அனைத்து ஊடகங்களின் கடமை என்பதால் இந்தக் கட்டுரை அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்படுகின்றது.
இந்தத் தகவல்களை மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்வீர்களானால், தமிழ் ஊடகங்களைத் தூய்மைப்படுத்தும் பணியின் பயன் உங்களுக்கும் வந்து சேரும்.
«நாங்கள் வீழ மாட்டோம்! நீங்கள் வீழ விடவும் மாட்டோம்!!»
அன்புடன்
சி. பாலச்சந்திரன்
ஆசிரியர் - ஈழநாடு
Comments