பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள நா.க.தமிழீழ அரசின் மீள் தேர்தல்

இக் கட்டுரையில் நாம் நாடுகடந்த அரசாங்கத்திற்கு பாதகமாக எதையும் எழுதவில்லை. மாறாக அங்கு நடைபெறும் சில தவறுகளையும், பலவீனங்களையும் மற்றும் ஒற்றுமையின்மை என்பனவற்றையே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். காலத்தின் தேவை கருதி இக் கட்டுரை எழுதப்படுகிறது.

கடந்த மே மாதம் 2ம் திகதி உலகளாவிய ரீதியில் நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல்கள் நடைபெற்றன. மே 18ம் திகதிக்கு முன்னதாக அதன் முதல் அமர்வு ஜெனீவாவில் நடைபெறும் எனவும் கூறப்பட்டது. இருப்பினும் தற்போது தேர்தல்களில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடாவில் உள்ள சில தொகுதிகளில் மீள் தேர்தல் நடைபெற உள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்குழு அறிவித்துள்ளது. பிரித்தானியாவைப் பொறுத்தவரை காலநிலை சீர்கேடு, பிரயாண இடைஞ்சல் மற்றும் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

தற்போது மீள் தேர்தலை வைக்க நாடுகடந்த அரசு முற்படுவதனால், மே 18க்கு முன்னதாக அதன் அமர்வு இடம்பெறாது, பெரும் பொருள் விரயம், மற்றும் பொதுமக்களுக்கு சிரமங்களைக் கொடுக்கவே ஏதுவாக இது அமையும். தேர்தலில் முறைகேடுகள் நடந்தது என்பது தேர்தல் ஆணையகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஒரு தேர்தல் நிலையத்தில் நடந்த முறைகேட்டிற்காக, அம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்தல் முடிவுகளையும் ரத்துச் செய்வது ஏன் என்ற கேள்விகள் மக்களால் முன்வைக்கப்படுகின்றன.

அத்தோடு விடுதலைப் புலிகளுக்கு அல்லது தமிழ் தேசியத்திற்கு ஆதரவான பலர் இத் தேர்தலில் தெரிவானதன் காரணமாகவே, நாடுகடந்த அரசானது சில இடங்களில் மீள் தேர்தல்களை நடாத்துகிறது என பலராலும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதன் மூலம் நாடுகடந்த அரசாங்கத்தின்மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இழக்கப்படக்கூடும். நடைபெற இருக்கும் மீள்தேர்தலில் மக்கள் அதிக நாட்டம் காட்டாமல் இருக்கும் நிலை தோன்றலாம்.

ஜனநாயக விழுமியங்களை மனதில் கொண்டு நடைபெற்ற முறைகேடுகளுக்காக திரும்பவும் ஒரு மீள் தேர்தலை தாம் வைப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசானது கூறிக்கொண்டாலும், கள்ள ஓட்டுகள் அல்லது, முறைகேடுகள் நடைபெறுவதை இவர்கள் முதலிலேயே தடுத்திருக்கவேண்டும். வாக்குச் சீட்டுகள் வேற்றின கண்காணிப்பாளர்களால் தேர்தல் நிலையங்களில் வழங்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயம். அப்படி இருக்கும்போது இதில் முறைகேடுகள் ஏதும் இடம்பெற்றிருப்பின் அதனைத் தவிர்த்து, மீதமுள்ள சரியான வாக்குகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவித்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாக அமைகிறது.

அத்தோடு இத் தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றன என்று தொடர்ந்தும் பரப்புரைகளை மேற்கொள்வது, சிங்கள அரசின் வாய்க்கு நாமே அவல்பொரி போடுவது போல அமைந்துள்ளது. இதை அவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சர்வதேச அரசுகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசின் நன்மதிப்பை குறைக்கமுடியும். முதலில் நாம் சுதந்திரத் தமிழீழம் மற்றும் சுயாட்சி, தமிழரின் இறையாண்மை என்பனவற்றிற்காகப் போராடுகிறோம் என்பதை நினைவுகூருங்கள். ஒற்றுமையாக நாம் செயல்பட, அதன் அவசியத்தை உணருங்கள்.

தனி நபர் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை விடுத்து, எமது இலக்கை அடைய பாடுபடுங்கள். தேர்தல் காலங்களில் சில இணையத்தளங்கள், தவிர்க்கப்படவேண்டிய வேட்பாளர்கள், ஆதரிக்கப்படவேண்டிய வேட்பாளர்கள் இவர் இவர் என படத்துடன் செய்திகளை வெளியிட்டன. அந்த இணையங்கள் யார் இதைச் சொல்ல? மக்கள் தான் முடிவெடுக்கவேண்டும் யாருக்கு வாக்களிப்பது என்று. அதனை தமிழ் மக்கள் செவ்வனவே செய்து முடித்துள்ளார்கள். சில இணையங்கள் தவிர்க்கப்படவேண்டிய வேட்பாளர்கள் என்று பட்டியலிட்ட அனைவரும் இத் தேர்தலில் வெற்றியடைந்துள்ளனர். இதில் இருந்து ஒன்று தெளிவாகப் புலப்படுகிறது. மக்கள் தெளிவாக உள்ளார்கள்.

பிரான்ஸ் மீள் தேர்தல், மற்றும் கனடாவில் மீள் தேர்தல் என்பன குறித்து நன்கு ஆராய்வது நல்லது. பிரித்தானியாவில் தென் மேற்கு தொகுதி, மற்றும் வெளிமாவட்ட தொகுதியில் மீள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்குழு நல்லதொரு முடிவை எடுக்கவேண்டும். விடுதலைப் புலிகள் குறித்து பல விமர்சனங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் உள்ள மக்களால் முன்வைக்கப்பட்டாலும், அவர்களின் ஒழுக்கம் குறித்தும் கட்டுப்பாடுகள் குறித்து பல வெளிநாட்டவர்களே வியந்துள்ளார்கள். குறிப்பாக மதுபானம், சிகரெட் போன்ற பழக்கவழக்கங்கள் முற்றாகத் தடைசெய்யப்பட்டிருந்தன. அவர்கள் வழியில் வந்த நாம், அதன் தலைமையை ஏற்றுச் செயல்படும் நாம் எவ்வாறு கட்டுக்கோப்போடு இருக்கவேண்டும் என்பதை ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

தேசிய தலைவரது கனவும், மாவீரரின் எண்ணங்கள் என்பனவும் செயல்வடிவம் பெறவேண்டும். குறுகிய மனப்போக்கை கைவிட்டு, புலம்பெயர் மக்களின் பலம் நிரூபிக்கப்படவேண்டும். நாடுகடந்த அரசாங்கம் உருவாகி அது போர்க்குற்ற விசாரணைகளை முடக்கிவிடவும், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச அரசாங்கங்களுக்கு அழுத்தத்தை கொடுக்கவேண்டும். தமிழர்களின் ஒரு அதி உச்ச அரசியல் பீடமாக உள்ள நாடுகடந்த தமிழீழ அரசு, தனது பணியைச் செவ்வனவே செய்யவேண்டும். அனைத்துத் தரப்பினரும் உள்வாங்கப்படவேண்டும். இதன் மூலமே ஒரு ஜனநாயக நீரோட்டத்தில் நாம் இணைந்து எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். மக்கள் ஆணை மதிக்கப்படவேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாகும் என்ற சொல்லுக்கமைவாகச் செயல்பட்டு வெற்றியடையவேண்டும்.


அதிர்வின் ஆரிசியபீடம்

இக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்பவர்கள் , கருப்பொருள் மாறாது மாற்றங்கள் ஏதும் செய்யாது பிரசுரிக்கவும்.

------------------------------

Comments