சிறீலங்காபடையினரால் வெட்டிக் கொலையான போராளி அடையாளம் காணப்பட்டார்

இணையத்தளங்களினூடாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் வெளிவந்த மற்றுமோர் போர்க்குற்ற ஆதாரமான போராளி ஒருவரை சிங்கள இராணுவத்தினர் வெட்டிக்கொலை செய்யும் காட்சியில் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட போராளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட விருந்தன் என்பவரே இவ்வாறு கொடூரமாக இனவெறி இராணுவத்தினரால் கதறக் கதற வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற கொடியபோரின் பின் காயமுற்ற நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அணியின் போராளி விருந்தன் என்பவரே இவ்வாறு இராணுவத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இறுதிக்கட்ட போரின் பின் விருந்தன் என்னானார் என்ற தகவல் தெரியாது தேடிக்கொண்டிருந்த வேளையில் ஓராண்டு கழித்து இத்தகவல் கிடைத்திருப்பதும், கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமையை இணையத்தளங்களினூடும், தொலைக்காட்சிவளியாகவும் பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாக விருந்தனின் மாமியார் கூறியுள்ளார்.

இவரின் தந்தை கூட விருந்தனை காணாத நாள் முதல் யோசித்து யோசித்துக்கொண்டிருந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரும் இறந்துவிட்டதாகவும் கூறினார்.

சுவிஸில் வசிக்கும் விருந்தனின் தந்தையின் இளைய சகோதரி இந்தக் கோரக்காட்சியை பார்க்கவா உயிரோடு இருந்தேன் என்று வேதனையோடு இத்தகவலை தெரிவித்தார்

Comments