அன்புக்குரிய தமிழ்த்தேசிய உணர்வாளர்களே! தமிழீழ மக்களே!
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மிகக்கொடூரமான போரின் இறுதிக்கணம்வரை சகல விடயங்களையும் அறிந்தவன் என்ற வகையில் உங்களோடு சில விடயங்களை பகிர விரும்பும் போராளி.
காலமும் உலகமும் சேர்ந்து எமக்கெழுதிய தீர்ப்பு இன்றுவரை எமது மக்களுக்கு உண்டான அவலங்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவில்லை. இந்த மடலூடாக சில உண்மைகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
எதிரிகளின் கூட்டணி ஐந்தாம்கட்ட ஈழப்போரை மிகத் தந்திரமாக ஆரம்பித்துள்ளது. இது முற்றுமுழுதான உளவியற்போரும், புலனாய்வுப்போரும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டு உருவாகியுள்ள களமுனையாகும். இக்களமுனைகளை புலம்பெயர்தேசமெங்கும் இன்னும் உணர்வோடு விடுதலையை வேண்டிநிற்கும் மக்களை இலக்காகக் கொண்ட ஒரு சாணக்கிய நகர்வாகும். கடந்த நான்கு கட்ட ஈழப்போர்களோடு ஒப்பிடுமிடத்து இந்தப்போர் தாக்குதிறன் அதிகமானது.
முள்ளிவாய்க்காளோடு எமது சுதந்திரப்போராட்டம் மற்றுமொரு கட்டத்துக்குள் நுளைந்துள்ளதை எதிரி நன்கறிவான். இதனால், எமது விடுதலை வேட்கையை அழித்தொழிப்பதற்காக இன்று திறந்துள்ள புதிய களமுனைக்கு தேவையான தன்னாலான அனைத்து வளங்களையும் ஒன்றிணைத்து பெரும் உளவியற்போர் ஒன்றை தொடுப்பதற்கான தயாரிப்புப் பணிகளைத் எதிரி துரிதமாக முன்னெடுத்து வருகின்றான். அதற்கு முன்னோடியாக நான்காம் கட்ட ஈழப்போரில் இடம்பெற்ற சம்பவங்களை உண்மைக்குப் புறம்பாக திரிபுபடுத்தி வெளியிடு உளவுரணைத் தகர்ப்பதற்கான பாரிய முயற்சிகளை மேக்கொண்டுள்ளான்.
உளவுரனும், விடுதலை உணர்வும், மக்கள் ஆதரவும் உள்ளவரை தமிழ்மக்களின் சுதந்திரப்போராட்டத்தை அழிக்கமுடியாது என்றுணர்ந்த சிங்களப் பேரினவாதம், அவற்றை அழிப்பதற்குக் கங்கணம் கட்டியுள்ளது. அதற்கான தொடக்கச் செயற்பாடாகவே வதந்திகளைப் பரப்பி வருவதுடன், மக்களைக் குழப்பமடையச் செய்யும் செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றது.
அன்புக்குரிய மக்களே !
தேசியத் தலைவர் கூறியதுபோல, எமது ஆத்ம பலம் திடமாக உள்ளவரை, எம்மை எந்த சக்திகளாலும் அழிக்கமுடியாது. அந்த ஆத்மபலம் வலுப்பெற வேண்டுமானால் நாம் விழிப்புணர்வுள்ளவர்களாகவும், குழப்பமடையாதாவர்களாகவும், எமது இலட்சியத்தில் தெளிவும் தளராத உறுதியும் உடையவர்களாகவும் இருக்கவேண்டும்.
இதன் ஒரு படிக்கல்லாக வதந்திகளுக்கும், சிங்களத்தினதும் அதன் கூட்டணிகளினதும் வலைக்குள்ளும் சிக்காமல் இருக்கவேண்டும். ஏனெனில், தமிழ்மக்கள் குழப்பமடைவதே அவர்களுடைய திட்டத்தின் பாரிய வெற்றியாகும். அதனால் அதனை முறியடிப்பதற்காக இதுவரை காலமும் கட்டிக்காத்த இயக்கத்தின் சில உள்ளக நடைமுறைகளைக் கூறுகின்றேன். அதனை அறிவதனூடாக எமது போராட்டத்தின்மீது ஏவப்பட்டுள்ள உளவியற்போரை இனங்காணலாம். இதுவே, மீதமாதகவுள்ள எமது மக்களையும் சுதந்திரப்போராட்டத்தையும் பாதுகாத்து போராட்டத்தை அடுத்த கட்டத்துக்குள் நகர்த்தும்.
எமது விடுதலை அமைப்பென்பது உலகிலேயே மிகச்சிறந்த ஒழுக்கநெறியை தொடர்ச்சியாகப்பேணும் அமைப்பென்று சர்வதேசமும், சிங்களப்பேரினவாதமும் கூட ஏற்றுக்கொண்டுள்ளன. அந்த மரபை கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மிக இறுக்கத்துடன் நாம் பின்பற்றி வருகின்றோம். இதன் ஒரு அங்கமாகவே, துரோகங்களை இனம்கண்டதோடு அதனை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டோம். போராட்டத்துக்கு மிகச் சவாலாக துரோகங்கள் காலத்துக்குக் காலம் முளைவிட்டன. அது எமது அமைப்பிலிருந்த மாத்தையா மற்றும் கருணா போன்ற தளபதிகளாக இருந்தவர்களிடமும் ஒட்டிக்கொண்டது.
இதன்காரணமாக எமது போராட்டம் பல வருடங்களுக்கு முன்னர் அழிந்திருக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகின. ஆனால் எமது தேசியத்தலைவரின் மதிநுட்பத்தினாலும், புலனாய்வுத்துறையின் உரிய செயற்பாட்டினாலும் அது தடுக்கப்பட்டது. 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 03ம் திகதிக்குப் பிறகு அவ்வாறான துரோகங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கான திட்டமிடலும், அதற்கான அமுலாக்கல் பணிகளும் பொருத்தமான வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதற்குப் பிற்பாடு துரோகங்கள் தொடருவதற்கான சாத்தியப்பாடு இல்லாமற்போனது.
அதேவேளை சிங்கள தேசத்தின் முப்படைகள், சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினரின் தீவிர பக்கபலத்துடன் எமது தாயக நிலப்பரப்பை முற்றுகையிட்டு பெரும் ஆக்கிரமிப்புப் போர் ஒன்றை நடத்தினார்கள். நாமும் சளைக்காமல் அர்ப்பணிப்புடன் களமாடினோம். மன்னார் மாவட்டத்தில் சண்டை மூண்டது. சண்டை மூண்ட பகுதியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் இருந்த மடுப்பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காக சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக சிங்களப்படைகள் பெரும்போரை மூர்க்கமாக நடத்தினார்கள். தளபதிகளும் போராளிகளும் தமது உயிரைத்துறக்கத் துணிந்தார்கள், ஆனால் ஒரு அங்குல நிலத்தைக்கூட இழக்கத்தயாராக இருக்கவில்லை. எமது தாக்குதலைச் சமாளிக்க முடியாத சிங்களப்படைகள் ஒரு கட்டத்தில் பின்வாங்குவதற்கு முடிவெடுத்தனர். இதனை அன்றைய இராணுவத்தளபதியாக இருந்த சரத்பொன்சேகா கூட சிங்கள ஊடகவியளார்களிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே எம்மை சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் நிர்மூலமாக்க முனைந்த இந்தியாவும் தனது பூரண ஆதரவை சிறீலங்காவிற்கு வழங்க முன்வந்தது. சிறீலங்கா தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை, பொருளாதார நலன்களுக்காக துரதிஷ்டவசமாக பின்பற்றி மேற்குலகும் அமெரிக்காவும் எம்மை அழிப்பதற்கு துணை நின்றன. சீனா, ஈரான் போன்ற சக்திகளும் தமது பாரிய ஒத்துழைப்பை தொடர்ச்சியாக வழங்கின.
சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டதுபோல ஆகக்குறைந்தது இருபது நாடுகள் எமது போராட்டத்தையும் மக்களையும் கொன்றொழிப்பதற்கான அனைத்து வளங்களையும் வழங்கின.
இருகூறுகளாகப் பிளவுபட்டுப்போயுள்ள சர்வதேச சக்திகள் தத்தமது பொருளாதார நலன்களுக்காக எம்மை அழிப்பதற்காக ஓரணியில் திரண்டன.
இதன் ஒருகட்டமாக வல்லாதிக்க சக்திகளின் சிரேஷட தளபதிகள் வவுனியாவில் அமைந்திருந்த இராணுவக் கட்டளைத் தளத்துக்கு வந்து சிறீலங்கா இராணுவத்துக்குத் தேவையான தாக்குதற் திட்டங்களை மேற்கொண்டார்கள்.
இதன் பிற்பாடு பெரும்சண்டை மூண்டது. அதில் ஒரு அங்கமாகவே புதுமுறிப்புப் பகுதியில் பெரும் முறியடிப்புப் போர் ஒன்றை நடாத்தி சிங்களப் படைகளை நிலைகுலைய வைத்திருந்தோம். இதனால் தென்மேற்குப் பகுதியால் கிளிநொச்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையை சிங்களப் படைகள் கைவிட்டன.
ஆனால் அதற்குப் பிற்பாடு சிங்கள தேசத்தின் இனப்படுகொலைப் போருக்கு தேவையான சகல வசதிகளையும் மேலும் தீவிரமாக சர்வதேச சக்திகள் வழங்கத் தொடங்கின. இந்த இன அழிப்புப் போரினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பாதுகாப்பு வலயமென அறிவித்துவிட்டு அதற்குள் மக்கள் நுழைந்தபின் மக்களைக் கொன்றொழிப்பதற்கான தாக்குதல்களை சிங்கள இராணுவம் மிலேச்சத்தனமாக நடத்தியது.
சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் எல்லாம் மிகமோசமாகவும் தொடர்ச்சியாகவும் சிறீங்காவின் ஆயுத படைகளால் மீறப்பட்டது. சர்வதேச சமூகம் பொறுப்புடன் செயற்பட்டு எமது மக்களின் அழிவைத் தடுக்குமென எதிர்பார்த்தோம். ஆனால் சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியின் கண்கள் இறுக மூடிக்கொண்டன. மனிதாபிமானம் அற்ற சமுதாயமாக உலகம் செயற்பட்டது.
இதன் விளைவாக, எந்த மக்களின் பாதுகாப்பிற்காகவும் விடுதலைக்காகவும் ஆயுதம் ஏந்தினோமோ, அந்த மக்களின் அவலங்களை நிறுத்துவதற்காகவும் அவர்களின் எதிர்காலம் கருதியும் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை மௌனிக்க முடிவெடுத்ததுடன், எமது போராட்டத்தின் வடிவத்தையும் மாற்றினோம்.
புது வடிவமெடுத்துள்ள போராட்டத்தை சில வருட காலங்களின் பின்னர் நீங்கள் எல்லோரும் உணரக்கூடியதாக இருக்கும்.
இத்தைகைய நிலையிலேயே உலக ஒழுங்கிலும் மாற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளன. இந்த மாற்றம் சிறீலங்கா, இழைத்த குற்றங்களுக்கு பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகத் தொடங்கியுள்ளது. இது சிறீலங்காவையும், சிறீலங்காவின் இன அழிப்புப் போருக்கு அனைத்து வசதிகளையும் செய்த இந்தியாவையும் மிரளச் செய்துள்ளது.
அதேவேளை, தமிழகத்து உறவுகள் உணர்வுபூர்வமாக மேற்கொள்கின்ற அரசியற் செயற்பாடுகள் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கடும் அழுத்தத்தையும், அவர்களின் அரசியல் எதிர்காலத்துக்கும் ஆபத்தை உண்டாக்கத் தொடங்கியுள்ளது. அத்துடன் எமதியக்கம் மீண்டும் பெரும்பலம் பெறுவதை உலக நாடுகளில் சில விரும்பவில்லை.
அதன் காரணமாகவே
தமிழ்மக்கள் மீதான இன அழிப்புப்போருக்கு காரணமான நாடுகள், தாம் உதவி செய்யவில்லையென்றும், விடுதலைப்புலிகளுக்குள் இடம்பெற்ற காட்டிக்கொடுப்புக்களாலேயே விடுதலைப்போராட்டம் ஒரு நெருக்கடி நிலையை சந்தித்துள்ளது என்ற கருத்துக்களை முக்கியமாக,
இந்தியா உட்பட எமக்கெதிரன நாடுகளின் அதிகார வர்க்கமும் அதன் புலனாய்வு அமைப்புக்களும் திட்டமிட்டுப் பரப்புகின்றன.
இதன் ஒரு அங்கமாகவே தமது படைகளின் நேரடியான செயற்பாடுகளாலேயே விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததாக மார்தட்டும் சிங்களம்,ஒரு சில தளபதிகள், போராளிகள் காட்டிக்கொடுப்புக்களைச் செய்ததாகவும், ஏனைய துரோகச் செயற்பாடுகள் இலாவகமாக அரங்கேறியதாகவும் எமது மக்களைக் குழப்பபமடையச் செய்யக்கூடிய செய்திகளை இணையத்தளங்கள் ஊடாக திட்டமிட்டுப் பரப்பி வருகின்றார்கள்.
அடுத்தகட்டப் போராட்டத்தைச் சிதைப்பதற்காக அவ்வாறான செய்திகளை வேகமாகப் பரப்பி வருகின்றது.
தளபதிகள் போராளிகள் மீது அவதூறுகளைப் பரப்புவதன் ஊடாக ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இல்லாமல் செய்வதுடன், ஒருவரை ஒருவர் சந்தேகப்படவேண்டிய சூழலையும் உருவாக்கும்.
தாக்குதற் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் தலைவருக்கும், சம்பந்தப்பட்ட தளபதிகளுக்கும் மட்டுமே இறுதிவரை தெரிந்திருக்கும். இதில் உச்சக்கட்ட இரகசியம் பேணப்படும்.
சிறீலங்காவும், அதன் நேச சக்திகளும் கூறுவதுபோல எமது இயக்கத்துக்குள் உயர் மட்டங்களில் ஊடுருவல்கள் நிகழவில்லை. அத்தகைய ஊடுருவல்களும் காட்டிக்கொடுப்புக்களும் நடைபெறாமல் இருப்பதற்கான அனைத்துச் செயற்பாடுகளும், முழமையாகச் செய்யப்பட்டிருந்தது.
இது இயக்கத்தின் ஒரு முக்கிய மரபாகப் பேணப்படுகிறது. ஊதாரணமாகக் கூறப்போனால், அனுராதபுர விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் தலைவர் அவர்களால் நேரடியாகச் செய்யப்பட்டது.
இது விடயமாக புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களுக்கே தெரியப்படுத்தப்படவில்லை. தாக்குதல் அணி நகர்ந்து தாக்குதலுக்குத் தயாரான நிலையில், தலைவர் அவர்கள் வழிநடத்தத் தயாரான நேரத்தில்தான் பொட்டு அம்மான் அவர்களை அழைத்துத் தன்னுடன் வைத்திருந்தார்.
இரானுவ முகாம் மீதான தாக்குதலாக இருந்தாலும், இரானுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் தாக்குதல் திட்டமாக இருந்தாலும் அல்லது புலனாய்வு ரீதியிலான இரகசிய நடவடிக்கையாக இருந்தாலும் பலதரப்பட்ட வேலைக்காக பல போராளிகள், பொதுமக்கள் தொடர்புபடுவார்கள். இதில் ஒருவருக்கு வழங்கப்படவேண்டிய வேலைகள் வரையறுக்கப்பட்டு அவருக்கு அவ்வேலையுடன் அடுத்தகட்டம் என்ன எனத் தெரியாமல் வேலைகள் வழங்கப்படும்.
உதாரணமாக வவுனியாவில் தாக்குதல் திட்டத்துக்காக ஆயுதங்கள் நகர்த்தப்படும்போது இதில் சம்பந்தப்பட்டவர் ஆயுதங்களை நகர்த்திக் கொடுப்பதுமட்டும்தான் வேலை. அடுத்த கட்டமாக எதற்கு எங்கு என அவருக்குத் தெரிவதில்லை.
ஒரு தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் அதற்குரிய தயாரிப்புப் பணிகள் இடம்பெறும். இதில் ஒத்திகைப் பயிற்சிகள், மாதிரிப் பயிற்சிகளும் உள்ளடங்கும். இந்த மாதிரிப் பயிற்களின்போது, எந்த முகாம் தாக்கப்படப்போகின்றது என்ற விடயம் கூறப்படுவதில்லை. முகாமின் முழு மாதிரியும் முதலில் கூறப்படுவதில்லை. அந்தந்தப் பிரிவுகளுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை வைத்துப் பயிற்சிகள் கொடுக்கப்படும்.
உதாரணமாக கடலால் சென்று தாக்குதல் தொடுக்க வேண்டியவர்களுக்கு அந்தப் பயிற்சி மட்டுமே கொடுக்கப்படும். தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்னரே தாக்குதல் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் தாக்கப்போகின்ற முகாம் மற்றும் தாக்குதற் திட்டம் தொடர்பான முழுமையான விபரங்கள் விபரிக்கப்படும். அதன் பிறகு குறித்த சண்டை முடிவடையும்வரை போராளிகளுக்கும் தளபதிகளுக்குமான வெளித் தொடர்புகள் அறவே இருக்காது.
மற்றுமொரு முக்கியமான விடயம், விடுதலைப்புலிகளின் வான்புலிகளின் முகாம்கள் இருந்த இடங்கள் தலைவருக்கும் மற்றும் ஒரு சிலருக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. தலைவர் அவர்களால் நேரடியாக வான்புலிகள் வழிநடத்தப்பட்டார்கள்.
வான் புலிகளின் தாக்குதலுக்கு முன்னர் அந்தந்த விமானத்தை பரீட்சித்துப் பார்ப்பதில் இருந்து, குண்டுகளைப் பொருத்துவதுவரை அனைத்தையுமே குறித்த வானோடிகள் முழுநேரமாக நின்று கவனித்துச் செயற்படுவார்கள்.
மூன்று தொடக்கம் ஐந்து பேரே இந்தப்பணிகளை மேற்கொள்வார்கள்.அவர்களே தாக்குதலையும் மேற்கொள்வார்கள் அவர்களுக்கு வெளித் தொடர்புகள் இருக்காது.
அதற்குள் ஊடுருவதற்கான வழிகள் அறவே இல்லை. அதனாலேயே தொடர்ச்சியாக வெற்றிகரமாக எட்டுத் தாக்குதல்களை வான்புலிகளால் செய்ய முடிந்தது.
வேவுப்பணிகள் ஒரே நேரத்தில் பல இடங்களில் நடக்கும். எல்லாத் தகவல்களும் திரட்டப்பட்ட பின்னர் அதில் பொருத்தமான களம் ஒன்று தெரிவு செய்யப்படும். வேவுத் தகவல்களை வழங்கிய பின்னர் வேவுப்போராளிகளுக்கான பணி முடிவடைந்துவிடும். அதற்குப் பிறகு தாக்குதல் தொடங்கிய பின்பே தாம் தகவல் திரட்டிய பகுதியில்தான் தாக்குதல் நடைபெறுகின்றது என்பதை வேவுப்போராளிளே உணர்வார்கள். சிறப்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஐ; அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்ட இத்தாவில் தரையிறக்கச்சமர் இதற்கான சிறந்த உதாரணமாகும்.
அந்தளவுக்கு உயர்ந்தபட்ச இரகசியம் எமது விடுதலைப்போராட்டத்தில் பேணப்பட்டது. இத்தகைய ஒரு உயர்ந்தபட்ச இரகசியம்பேணும் மரபைக்கொண்ட இயக்கத்திற்குள் நான்காவது ஈழப்போரின் இறுதியில் ஊடுருவல்களும் காட்டிக்கொடுப்புக்களும் நடந்தது என்று பரப்பப்படும், திட்டமிட்டுக் கசிய விடப்படும் தகவல்களில் உண்மையில்லை. அவ்வாறான ஊடுருவல்களும் காட்டிக்கொடுப்புக்களும் நடப்பதற்கான களமாக நான்காவது ஈழப்போரின் இறுதிப்போர் இருக்கவில்லை.
சிங்கள இனம், எம்மை அழிப்பதற்காக கட்சி பேதங்களை மறந்து ஒன்றாகின்றான். போராட்டத்தில் அர்ப்பணிப்புச் செய்தவர்களைத் தவிர ஏனையவர்கள் நாட்டுக்காக என்ன செய்தோம் எனச் சிந்திக்க வேண்டும்.
மக்களே ! எதிரிகளின் வலை வீச்சுக்குள் சிக்காதீர்கள். அதிதீவிர விழிப்போடு இருங்கள். வதந்திகளால் குழப்பம் அடையாதீர்கள். எமது அடுத்தகட்டப் போராட்டத்தைத் தடுப்பதற்காகவே சிங்களப் பேரினவாதமும், அதன் கூட்டணிகளும் இந்தத் தீவிர உளவியற்போரைத் தொடுத்துள்ளார்கள்.
அவர்களின் இலக்கிற்குப் பலியாகாமல் எமது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்காக உங்களுடைய தார்மீகப் பங்களிப்பை உணர்வு பூர்வமாகவும், இதய சுத்தியுடனும் வழங்குங்கள். அதுவே அழிவை நோக்கிச் செல்லும் தமிழினத்தை தடுத்தி நிறுத்தி எதிர்கால வாழ்வை உறுதிப்படுத்தும்.
அன்பார்ந்த ஊடகவியலாளர்களே !
எதிரியானவன் எமது போராட்டத்தின் பின்னடைவிற்கு எம்மினமே காரணமென நிரூபிக்க முயற்சிக்கும் இச்சதிவேலைக்கு எமது ஊடகங்களே காரணமாகிவிடக்கூடாது என்பதால், அமைப்புச் சார்ந்த செய்திகளை ஆதாரமின்றி வெளியிடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
எமது ஆத்ம பலம் திடமாக உள்ளவரை, எம்மை எந்த சக்திகளாலும் அழிக்கமுடியாது
எம் தேசத்திற்காய் எங்கெங்கும்.
இப்படிக்கு,
புலனாய்வுத்துறைப் போராளி.
நரேந்திரன்.
naren.vanni@yahoo.com
Comments
Ippadikku.
LTTE.Tamil Nadu Branch