தமிழன் மானம் காக்க படுமா.... காற்றில் பறக்க விடப்படுமா? சரத்குமார் அவர்களே ?

தமிழர்கள் மேல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றுக்கும் பாசத்திற்கும் மிக்க மகிழ்ச்சி. தமிழ் மக்களை பகைத்து கொண்டு உங்கள் குடும்பத்தின் மூத்தவர் அய்யா சி.பா.அதித்தனார் அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள்.


நடிகர்களாகிய நீங்கள் இலங்கை செல்லுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கு முன் சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.





1.இராமேசுவரம் மண்டபம் முகாமுக்கு முதலில் போய் அங்குள்ள ஈழத்தமிழர்கள் இலங்கையின் நிலை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கேட்க முடியுமே? அதை விட்டுவிட்டு ஊமையாக்கப்பட்டிருக்கும் மக்களிடம் போய் என்ன கேட்க போறீங்க ?


2.இலங்கை அதிபர் நவீன இடி அமீன் ராசபக்சாவை சந்தித்து ஐ.நா குழுவை(UN panel) இலங்கையில் அனுமதிக்கும் படி வற்புறுத்துவீர்களா?

3.எந்த பத்திரிக்கையாளாரையும் தொண்டு நிறுவனத்தையும் அனுமதிக்காத இலங்கைஅரசு, முகாமில் இருக்கும் மக்களை சந்திப்பதற்கும் வடக்கில் எந்த இடத்திற்கு போவதற்கும் சுதந்திரமாக மக்களிடம் கருத்து கேட்கவும் அனுமதிக்குமா?

4.அவர்களை சந்திக்கும் பட்சத்தில் அவர்கள் சொல்லும் எல்லா உண்மைகளையும் இந்த உலகிற்கு நீங்கள் சொல்ல முடியுமா? அதற்கு இலங்கை இந்திய அரசுகள் ஒத்து கொள்ளுமா?

5.உங்களிடம் இலங்கை அரசுக்கு எதிராக கருத்து சொல்லும் தமிழ் மக்களின் உயிருக்கு நீங்கள் உத்திரவாதம் தரமுடியுமா?

6.தமிழகத்தில் இருந்து தமிழுணர்வு கொண்ட பத்திரிக்கையாளர்களை உங்களுடன் கூட்டி செல்ல அனுமதி கிடைக்குமா?

7.ஏற்கனவே தமிழ்நாட்டு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை சென்று வந்ததது, பின்னர் புது தில்லியிலும் இலங்கை அதிபர் நவீன இடி அமீன் ராசபக்சாவை சந்தித்தார்கள் .அவர்கள் வைத்த எந்த கோரிக்கையும் அவர் நிறைவேற்றவில்லை. உங்களுடைய கோரிக்கை என்ன?

8.தமிழினத்தை அழிக்க உதவிய தன் கூட்டாளி சரத்பொன்சேகாவையே உள்ளே தள்ளி தான் மிகப் பெரியகொடுங்கோலன் என்று மார்தட்டி கொண்டிருக்கும் ராசபக்சாவிடம் என்ன நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?

9.தமிழ் மக்கள் மேல் உங்களுக்கு உண்மையிலேயே பற்றும் பாசமும் இருந்திருக்குமானால் கடந்த ஆண்டு போர் நடைபெறும் போது ராச பக்சாவை சந்தித்து போர் நிறுத்தம் வேண்டும் என்று சொலியிருக்கலாமே? பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாமே?

10.இலங்கை இனவெறி அரசால் சுட்டுகொல்லப்பட்ட மீனவர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்? சுட்டு கொல்லப்பட்ட மீனவர்களுக்காக ராசபக்சாவிடம் கண்டனம் தெரிவிப்பிர்களா? இதற்காக இந்திய அரசை எதிர்த்து போரடுவீர்களா?

இதையெல்லாம் நீங்கள் செய்ய நினைத்தால் அங்கு உங்களுக்கு செல்ல நிச்சயம் அனுமதி கிடைக்காது. இதையெல்லாம் செய்ய முடியவிலையென்றால் அங்கு போவது அந்த மக்களுக்கு எந்த பயனும் தாராது.

அதையும் மீறீ சென்றால் ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிவிட்டு அதன் பின் அவர் காண்பிக்கும் ஈழ மக்களை பார்த்து விட்டு அவர்கள் முன்னாலும் ராஜபக்சே முன்பும் கலை நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு ராஜபக்சே ஒரு குற்றமும் அறியாதவர் என்று நடிகர் சங்கம் சார்பாக அறிக்கை விடுவீர்கள்

வேண்டாம் பாவம் உங்கள் சுயலாபத்திற்க்காக உலக தமிழர்கள் ஒன்றினைந்து இலங்கை அரசு மேல் கொண்டு வந்திருக்கிற போர்குற்றங்கள் இந்த உலகிற்கு எடுத்து செல்லபட்டிருக்கும் இந்த வேளையில் நீங்கள் அவர்களுக்கு எதிராக திரும்பாதீர்கள்.

போருக்கு உதவி செய்த நாடுகளே இன்று இலங்கைக்கு எதிராக வாக்களிக்க தாயாராகி விட்டார்கள். நம் வீட்டில் ஒருவர் இறந்து போனாலே நாம் அதை மறக்க பல வருடங்கள் ஆகிறது. ஆனால் ஒரு லட்சத்திற்கும் மேல் நம் உறவுகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.எவ்வளவு வேதனை இருக்கும் அந்த மக்களுக்கு?

இன்று புலம்பெயர் நாடுகளில் தமிழ் சினிமாவுக்கு கொடுக்கப்படும் பணமும் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கப்படும் பணமும் பல ஆயிரம் கோடிகள்.அவர்களை வைத்துத்தான் இன்று நீங்கள் உங்கள் வசதி வாய்ப்புகளை பெருக்கியுள்ளீர்கள். உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது என்று ஒரு பழமொழி உண்டு அதற்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.

எமது ஈழமக்களின் இன்றைய தேவை விடுதலையும் மறுக்கப்படும் உரிமைகளும், மழுங்கடிக்கப்படும் நியாயங்களுமே ஆகும். தமது உறவுகளின் கொலைகளுக்கான நீதியே ஆகும் அதன் ஆரம்ப ஐ நா விசாரணைகளை தமிழர்களை வைத்தே சிதறடிக்க இலங்கை இந்திய அரசுகள் முயலும். இவ்வேளையில் திரைத்துறையினர் தவறு செய்யக்கூடாது.தமிழர்கள் மீதான அபிமானத்தை அவர்களே குறைத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை வந்துவிடும். அதற்கு தமிழ் திரைபட உலகம் துணை போகுமானால் மிகபெரிய துரோகம் ஆகும்.

அப்படி திரை உலகம் போவதாக முடிவெடுத்தால் அதற்கு முற்றிலும் காரணம் சரத்குமார் என்கிற தமிழன் தான். மேலும் உங்களுக்கு தமிழின தூரோகி என்கிற பட்டமும் உறுதி.

தமிழக மக்களின் கோரிக்கைகளை ஏற்று இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் புறக்கணித்த இந்தி திரைப்பட நடிகர்கள் நீங்கள் அங்கு செல்வதை பார்த்து தமிழ் மக்களை ஏளனம் செய்வது உறுதி. அடுத்து எந்த ஒரு விடயத்திற்கும் அவர்களிடம் செல்ல முடியாது. சென்றால் எப்படி இருக்கும் என்பதை நீங்களே சற்று சிந்தியுங்கள்.

தமிழன் மானம் காக்க படுமா.... காற்றில் பறக்க விடப்படுமா? திரு. சரத்குமார் அவர்களே?

மானம் ஒன்றே பிரதானம் என்று வாழ்ந்த இனம் இன்று மானம் காக்க சக தமிழனிடம் மண்டியிட்டு கொண்டிருக்கிறது.


தமிழ்முரசு

Comments