ராஜீவ் கொலை விடையளிக்கப்பட வேண்டிய கேள்விகள் ???

இல்லாததொரு இயக்கத்திற்கு எதற்காக இந்தியா தடை செய்ய வேண்டும்!
[rajiv.jpg]
கடந்த 1992-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை இந்திய நடுவண் அரசு நீடிப்புச் செய்து வருகின்றது. கடந்த வருடம் மே மாதத்துடன் விடுதலைப் புலிகளை அதன் தலைவர் பிரபாகரனுடன் அழித்துவிட்டதாகவும், சில ஆயிரம் புலிகளை கைது செய்து புனர்வாழ்வு அளிப்பதாகவும் கூறும் சிறிலங்காவின் கூற்றை ஏற்று அரசியல் காய்நகர்த்தும் இந்திய அரசோ, இல்லாததொரு இயக்கத்திற்கு தடையை நீடிக்கும் செயலானது இந்தியாவின் நயவஞ்சகப் போக்கையே காட்டுகின்றது.

புலிகள் இந்தியாவுக்கு எந்தவொரு கெடுதலையும் செய்ய மாட்டார்கள் தெரிந்தோ என்னவோ, அவர்கள் மீது தொடர்ந்து தடையை நீடிப்பதான செயல்மூலமாக ஒன்றை மட்டும் துல்லியமாக உணரக்கூடியதாக இருக்கின்றது. அதாவது, புலிகளின் தலைவர் பிரபாகரனும், அதன் உளவுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் மற்றும் மாவீரராகிய அகிலா ஆகிய மூன்று பேரையும் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாழிகளாக அறிவித்தது இந்தியா. அகிலா ஏற்கனவே போரில் இறந்துவிட்டார். ஆக, மிஞ்சியிருந்த இரு தலைவர்களான பிரபாகரன் மற்றும் பொட்டு ஆகியோர் தொடந்தும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள் மேலும் அவர்கள் இருவரும் பிணமாகவோ அல்லது உயிருடனோ இந்தியா கொண்டுவரப்பட வேண்டியவர்களாக இந்தியாவினால் கோரப்பட்டார்கள்.

கடந்த மே மாதத்துடன் புலிகளை அழித்துவிட்டதாகவும், அதன் தலைவர் பிரபாகரனின் உடலை கைப்பற்றிவிட்டதாகவும் சிறிலங்கா அரசு அறிவித்தது. இந்தியாவில் இருந்து வரவிக்கப்பட்ட சிறப்பு மருத்துவக் குழுவினர் உருக்குலைந்து கிடந்த அவ்வுடலுக்கு வண்ணம்பூசி அவரே பிரபாகரன் என்றும் உலக மற்றும் உள்ளோர் மக்கள் கண்டு மகிழும் முகமாக தொலைக்காட்சிகளில் ஒளிப்பதிவு செய்து காண்பித்தார்கள். இதுபோதாதென்று அவ்வுடலை வீதிவீதியாக கொண்டுசென்று சிங்கள மக்களின் ஆதரவை பெறும் முகமாக செயல்பட்டார்கள். அரசாங்க ஆதரவாளர்களும் போதாததற்கு பட்டாசு கொழுத்தி வெற்றிகொண்டாடினார்கள். இதில் வேடிக்கை என்னவெனில், ராஜீவ் கொலைசெய்யப்பட்டவுடன் இந்தியப் பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தது அதாவது ராஜீவின் கொலையின் பின்னர்தான் புலிகள் ஆனையிறவில் இருந்த சிங்கள இராணுவத்தின் முகாமை கைப்பற்ற போர் தொடுத்தார்கள் என்றும் அத்துடன் அவர்கள் பட்டாசு கொழுத்தி வடக்கு கிழக்கு பகுதிகளில் கொண்டாடினார்கள் எனவும் பரப்புரைகளை மேற்கொண்டார்கள்.

பலமில்லாதவனிடத்தில் கோழையும் தனது வீரத்தை காட்டும் என்ற பழமொழிக்கேற்ப தமது இனத்தையே நம்பி களம் கண்ட விடுதலைப்புலிகளை எப்படியேனும் தோற்கடித்து அவர்கள் மீது பொய்யான குற்றங்களை சுமத்துவதன் மூலமாக இந்திய உபகண்ட பூகோள அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளில் தானே முடிசூடா மன்னனாக திகழ வேண்டும் என்பது இந்தியாவின் கனவு. அதை நிறைவேற்ற வேண்டுமாயின், சில அரசியல் காய்நகர்த்தலை செய்ய வேண்டியதாய் இருந்தது இந்தியாவுக்கு. இதற்கு தேவைப்பட்ட கருவிதான் புலிகள் மற்றும் தமிழீழ தாயகக் கோட்பாடு.

தமிழருக்கு நீதி கிடைக்கக்;கூடாது என்ற முனைப்புடனே இந்தியா இதுவரை காலமும் செயல்பட்டது என்றால் மிகையாகாது. அதற்கான தேவையும் இந்தியாவுக்கு தேவைப்பட்டது காரணம் தமிழகத் தமிழர்கள் எவ்விதத்திலும் உயர்வடைந்து விடக்கூடாது என்பதே நியூ டெல்லியின் அவா. பொருளாதாரத்தில் உயந்துவிட்டால் அவர்கள் சுயநிர்ணய கோரிக்கையை முன்வைப்பார்கள். அதன்மூலமாக, இந்தியாவின் அரசியல் இஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு வந்துவிடும் என்பது ஒரு வாதம். இன்னொரு வாதம் என்னவென்றால், வட இந்தியர்கள் குறிப்பாக ஆரியர்கள் தாமே இனத்தால் மேலானவர்கள் என்றும் தென்னிந்தியர்கள் குறிப்பாக திராவிடர்கள் சூத்திரர்கள் என்றும் கடவுள் ஆரியரையே ஆளும்வர்க்கமாக படைத்தார்கள் என்றொரு கருத்தும் இன்றுவரை வட இந்தியரிடத்தே குறிப்பாக மத்திய ஆளும் வர்க்கத்தினரிடத்தே உள்ளது.

ஆகவேதான் புலிகளை ஒரு கருவியாக பாவித்து திராவிடரின் வளர்ச்சியை ஒடுக்கிவிடலாம் என்ற முனைப்பில் செயல்படுகின்றது நியூ டெல்லி. இதனை அறிந்தும் அறியாதவர்களாக வெறும் பதவி ஆசைக்காக இருக்கும் தமிழக தலைவர்களும் மற்றும் தென்னிந்திய மக்களும் நியூ டெல்லி சொல்வதையெல்லாம் ஏற்று புலிகள் ஏதோ தமது பரம எதிரி என்றும் தமிழீழம் மலர்ந்தால் இந்தியாவுக்கே ஆபத்தென்ற உணர்வுடன் இருக்கின்றார்கள். இதன் ஒரு செயல்பாடே இல்லாததாக தாமே அறிவித்துவிட்டு பின்னர் தாமே இந்த வருடம் மீண்டும் புலிகளின் தடையை நீடித்திருக்கும் செயல். பாவம் இந்தியாவின் சட்டத்துறை. விடுதலைப்புலிகள் மற்றும் அதன் தலைவர்கள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று அறிந்த பின்னரும், அந்தத் தடையை எதிர்க்கிறீர்களா என்று கேட்டு விடுதலைப்புலிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அந்த இயக்கத்தின் தலைவரோ, செயலாளரோ நிர்வாகியோ இல்லாத வைகோ, வாதாட முடியாது என்று தமிழக அரசு வழக்கறிஞர் தனஞ்ஜெயன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் சந்திஹோக் ஆகியோர் வாதிட்டார்கள். இவர்களின் வாதம் சரியானதே என்று தீர்ப்பளித்தார் நீதிபதி. இப்படியானதொரு நிலையில் இருக்கின்றது இந்தியச் சட்டப் பிரிவு.

நடந்தது என்ன?

1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என அறிவித்தார்கள். குறிப்பாகச் சொல்லப்போனால், இந்திய மூத்த அதிகாரிகளே விடுதலைப்புலிகள் தான் இந்த படுகொலையை செய்தார்கள் என்று ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரத்திற்குள்ளேயே திடமான முடிவுக்கு வந்தார்கள். அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரை புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். படுகொலைசெய்யப்பட்டு சில மணி நேரத்திற்குள்ளேயே துண்டுப்பிரசுரங்களும், சுவரொட்டிகளும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக பரப்பபட்டது. ஏன், காட்டுக்குள் இருந்த புலிகளை நாட்டுக்குள் நடமாட விட்ட விளைவுதான் ராஜீவ் மரணம் என்ற சுவரொட்டிகள் தமிழகமெங்கும் ஓட்டப்பட்டு புலிகளுக்கு எதிரான மாபெரும் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

அரசியல் ஆதிக்கம் இல்லாமல் சட்டத்தை மதிக்கும் எந்தவொரு நிகழ்வுகளை பார்ப்போமேயானால், ஒரு கொலைகாரனையும் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முன்னர் ஒருபோதும் குற்றவாளி என்ற பதத்தை பாவிக்கக்கூடாது. மாறாக, அந்த நபரை குற்றம் சாட்டப்பட்டவர் என்றே அழைக்க வேண்டும். ஆனால், குற்ற விசாரணை ஆரம்பிக்கு முன்னரே புலிகள்தான் குற்றவாளிகள் என்று அறிவித்த பின்னர் விசாரணை குழுவை நியமித்து குற்றவாளிகளை இனம்காணுவதென்பது இந்த விசாரணை குழு வெறுமனே அரசியல் காரணங்களுக்காகவே நியமிக்கப்பட்ட குழுவாகவேதான் பார்க்கவேண்டும். காரணம், ஏற்கனவே புலிகள்தான் கொலைகாரர்கள் என்று அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த விசாரணைக் குழுவினர் புலிகள் தான் கொலைகாரர்கள் என்ற கண்ணோட்டத்துடனேதான் விசாரணையை தொடங்கும். ஆகவே, விசாரணையின் முடிவில் எப்படியாவது புலிகள்தான் இதைச் செய்தார்கள் என்று குற்றம்சாட்டுவதற்கு தேவையான ஆதாரங்களை திரட்டத்தான் இந்த குழு உதவுமே தவிர, உண்மையான கொலைகாரர்களை கண்டுபிடிக்க ஒரு பொழுதும் முனையாது.

1993-ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத் துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில் தான் நடந்தது.

பெங்களூரு ரங்கநாத் என்பவர் ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் 99;-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டவர். விடுதலை செய்யப்பட்ட பின்னர் இவரை நேரில் சந்திக்க நியூ டெல்லி அழைத்துப் பேசினார் ராஜிவின் மனைவி சோனியா காந்தி.

ரங்கநாத் கூறுகையில்: “99-ம் ஆண்டு ஜனவரி மாதம், பத்தாண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் என்னை விடுதலை செய்தது. பிறகு ஜூன் மாத வாக்கில், சோனியாகாந்தி என்னைச் சந்திக்க விரும்பும் தகவல் எனக்குக் கிடைத்தது. அதன்பேரில் சென்னையில் வசிக்கும் புலிகளின் ஆதரவுத் தலைவர் ஒருவர் வீட்டில் நான் இருந்தபோது, தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் உயர் பொறுப்பில் இருக்கும் “முக்கியமான” நபர் அங்கு வந்தார். அவர் என்னை டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். கூடவே மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளும் வந்தனர்.

“டெல்லி மவுரியா ஓட்டலில் என்னைத் தங்க வைத்தனர். உளவுப் பிரிவு அதிகாரிகள் எனக்குப் புதுத்துணி வாங்கித் தந்தனர். மறுநாள் காலை ஜன்பத் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அம்பாசிடர் காரில் நான் சென்றபோது, பின்னால் பதினைந்து செக்யூரிட்டி வாகனங்கள் எனக்குப் பாதுகாப்பாக வந்தன. காலை 7.45 மணிக்கு சோனியா வீட்டுக்குப் போனபோது கடுமையாகச் சோதனை செய்தனர். சோனியாவின் செயலாளர் வின்சென்ட் என்னிடம், அருகில் இருந்த பிங்கி என்பவரை அறிமுகப்படுத்தி, “இவர் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் பேத்தி. நன்றாக மொழி பெயர்ப்பார்” என்றார். நான் அவருக்கு வணக்கம் வைத்தேன். பிறகு சோனியாகாந்தி வந்து அமர்ந்தார். அவர் என்னிடம் ஏழு கேள்விகள்தான் கேட்டார்.

முதல் கேள்வியாக, “என் கணவருக்கும், உங்களுக்கும் ஏதாவது பிரச்சனை இருந்ததா?” என்றார். நான், “அப்படி எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் பெங்களூரில் இளைஞர் காங்கிரஸில் இருந்தவன். கூட்டத்தோடு கூட்டமாக டெல்லி வந்து இந்திராகாந்தியைச் சந்தித்திருக்கிறேன். ராஜீவ் மீதும் பெரிய மதிப்பு வைத்திருக்கிறேன்” என்றேன்.

இரண்டாவதாக, “உங்கள் வீட்டில் சிவராசன், சுபா உள்ளிட்ட குற்றவாளிகள் தங்கியிருந்தபோது, படுகொலை செய்வதற்கான காரணம் பற்றி ஏதாவது பேசினார்களா?” எனக் கேட்க, நானும், “அவர்கள் என்னிடம் பேசியவரை ஐ.பி.கே.எஃப். (அமைதிப்படை) இலங்கையில் செய்த அட்டூழியங்களைப் பற்றிப் பேசினார்கள். அதன் எதிரொலியாகத்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்றனர். சந்திராசாமிக்கும் இதில் தொடர்பிருக்கிறது என அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து தெரிந்து கொண்டேன்' என்றேன்.

மூன்றாவதாக, “இதைப் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சொன்னீர்களா?” என்றார். “அவர்களிடம் இந்த உண்மைகளை விரிவாக எடுத்துரைத்தேன். அதற்காக அடிதான் விழுந்தது. இயக்குனர் கார்த்திகேயன் எனது பல்லை உடைத்தார். சுட்டுக் கொல்வதாகவும் மிரட்டினார்” என்றேன்.

நான்காவதாக, “தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பிருக்கிறதா?” என்றார். “எனக்குத் தெரியாது. நான் கவனித்த வரையில் அப்படிப்பட்ட தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை” என்றேன்.

ஐந்தாவது கேள்வியாக, “பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்ப்பதைவிட்டுவிட்டு ஏன் படுகொலை செய்தார்கள்?” என்றார். “அதுதான் எனக்கும் தெரியவில்லை” என்று நான் சொன்னபோது, சோனியாவின் முகம் சுருங்கியிருந்தது. பின்னர் நிதானமாக, “என் மீது அவர்களுக்கு ஏதாவது கோபம் இருக்கிறதா?” என்றார். “நான் பேசியது வரை உங்கள் மீது நூற்றுக்கு நூறு சதவிகிதம் அவர்களுக்கு எந்தவித கோபமும் இல்லை” என்றேன்.

இறுதியாக, “சிவராசன், சுபா இவர்களெல்லாம் யார்?” எனக் கேட்டார். நானும், “இவர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் என்பது உண்மைதான். விடுதலைப்புலிகள் அமைப்பில் பயிற்சி எடுத்தவர்கள் என்பதும் உண்மைதான். அதன்பின் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டார்கள். சந்திராசாமியோடு சேர்ந்து இந்தப் படுகொலைகளைச் செய்திருக்க வேண்டும்” என ஆணித்தரமாகக் கூறினேன். நான் கூறிய விவரங்களை ரேப்பில் பதிவு செய்தார் சோனியா. வெளியே வருவதற்கு முன் சோனியா என்னிடம், “இந்த வழக்கை விசாரிக்க மல்டி டிசிப்ளினரி மானிட்டரிங் ஏஜென்சி (பல் நோக்குப் புலனாய்வு அமைப்பு) ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்களிடம் இதைப் பற்றிக் கூறுங்கள். நானும் அவர்களிடம் பேசுகிறேன்” என என்னை அனுப்பி வைத்தார்.

பிறகு, சென்னை மல்லிகை விருந்தினர் இல்லத்தில் வைத்து இந்த ஏஜென்சியின் எஸ்.பி. தியாகராஜன் விசாரித்தார். நான் அவரைக் கூட்டிப் போய் பெங்களூரில் சுரேஷ் மாஸ்டர் மறைத்து வைத்திருந்த பெல்ட்பாம், துப்பாக்கி ஆகியவை இருக்கும் இடத்தைக் காட்டினேன். சில பொருட்களை போலீஸார் கைப்பற்றினார்கள். இந்த விவகாரத்தில் உண்மையை மறைத்து, பொய்யான குற்றவாளிகளை ஆஜர்படுத்திப் பெரும் தவறு செய்துவிட்டார்கள்."

விடை கிடைக்காத வினாக்கள்

எந்தவொரு நீதிமன்றமும் இரு தரப்பு வாத பிரதி வாதங்களை கேட்டு தெளிவுபடுத்திய பின்னர்தான் தீர்ப்பை வழங்குவார்கள். ஆனால், ராஜீவ் காந்தி கொலை தீர்ப்போ வெறும் அரச சார்பு வாக்குவாதங்களை உள்வாங்கி, எதிர்த்தரப்பினரின் வினாக்களுக்கு விடையளிக்க தவறியிருந்தும், நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது இந்த கொலை விசாரணை மற்றும் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் எவ்வளவு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை உணர முடியும்.

இதோ அந்த ஐம்பது நாட்கள் நடந்த எதிர்தரப்பு வாதங்கள் பல வினாக்களை எழுப்பியிருந்தும் அதற்கான விடையளிக்கப்படாத கேள்விகள்:

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத சிறிபெரும்புதூரில்; நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?

2. சிறிபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?

3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?

4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸ{க்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் த. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?

11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.

13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?

14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், 'ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். 'அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?' என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?

16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.

17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?

18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப்படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். 'வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.

20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?

21. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?

22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?

23. பிரபாகரனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத்துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

24. விசேஷ இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?

27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

28. புலிகளின் 'இந்துத்துவா” அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?

29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் சிறிபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?

30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?

31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் 'கியூ’ பிராஞ்ச், பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.

32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? 'ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை” என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?

33. இந்தியா மற்றும் தமிழகத்தில்தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?

34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத்துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

35. சிறிபெரும்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. சிறிபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?

36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?

37. தனு, சுபா, சிவராசன் மூவரையும் சிறிபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?

38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?

39. தனு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?

40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?

42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?

43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு?

---------இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த வாரம்-----------

nithiskumaaran@yahoo.com
ஆதாரம்!http://rajivgandhi-assassination.blogspot.com/

Comments