விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர் - நேரில் பார்த்தவர் தகவல்

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான லோறன்ஸ் திலகர் அல்லது லோறன்ஸ் கிறிஸ்ரி, இளம்பருதி, யோகரட்ணம் யோகி, விடுதலைப்புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை, தங்கன், குட்டி, பாப்பா, பூவண்ணன் ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்ததற்கான சாட்சியங்கள் இருக்கின்றன என ’சிறிலங்கா காடியன்’ என்ற ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்திருப்பதாவது,

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டியு குணசேகர அவர்கள் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களான யோகரட்ணம் யோகியும் க.வே. பாலகுமாரனும் இறுதியாக நடந்த யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து படையினரிடம் சரணடைந்து இராணுவத்தின் பிடியிலிருந்த ஏனைய சில மூத்த உறுப்பினர்கள் தொடர்பாக அவர்களது உறவினர்கள் தகவல் தருமாறு கேட்கின்றனர்.

இந்தக் கட்டுரையில் வெளியிடப்படும் விபரங்கள் நம்பகமான வட்டாரங்களிலிருந்து கிடைத்த உண்மையான தகவலாகும்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த நபரின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

இங்கு குறிப்பிடப்படும் விபரங்கள் தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் அல்லது சர்வதேச சட்ட நிறுவனங்கள் தகவல் கோரும் பட்சத்தில் சிறிலங்கா கார்டியன் அவர்களுக்கு தொடர்புபட்ட நபரின் தொடர்பை ஏற்படுத்தித் தரும்.

இந்தத் தகவலின்படி, மே 18, 2009 காலை 8.00 மணிக்கு அதாவது உத்தியோகபூர்வமாக யுத்தம் முடிவடைந்துவிட்டததாக அறிவிக்கப்பட்டமைக்கு ஒரு நாள் முன்னர், வன்னியிலிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைவதற்கான ஒழுங்குகளை வண.பிதா. பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்.

இடைத்தங்கல் முகாம்களுக்கு கொண்டு செல்வதற்காக காத்துநின்ற மக்கள் முன்னிலையில், வட்டுவாகலிற்கு அண்மையிலுள்ள குறிப்பிட்ட இடத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பொதுமக்களிடமிருந்து புலி உறுப்பினர்களைப் பிரித்த இராணுவத்தினர் முழுமையான உடற் சோதனையை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் ஒவ்வொருவரும் ஒளிப்படம் எடுக்கப்பட்டு பேருந்து ஒன்றில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டனர்.

சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுள் லோறன்ஸ் திலகர் அல்லது லோறன்ஸ் கிறிஸ்ரி, இளம்பருதி, யோகரட்ணம் யோகி, விடுதலைப்புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை, தங்கன், குட்டி, பாப்பா, பூவண்ணன் ஆகியோரும் அடங்குவர் என இதனை நேரில்கண்ட பொதுமகன் ஒருவர் தெரிவித்தார். அவர்களுடன் வண.பிதா. பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரும் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் உறவினர்கள் அவர்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவிட்டனர்.

ஆனால் அவர்களால் எந்த தகவலையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. விரக்தியுற்ற சிலர் டக்ளஸ் தேவானந்தாவை அணுகியபோது, இவர்கள் இராணுவத்தின் தடுப்பில் இல்லை எனக்கூறி அவரும் அவர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

க.வே. பாலகுமாரன் அவர்கள் மே 16 அன்று இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் அவரும் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.

இராணுவத்திடம் சரணடைந்து அவர்களால் அழைத்துச்செல்லப்பட்டனர் என்பது ஒருபுறமிருக்க, யோகரட்ணம் யோகியும் க.வே. பாலகுமாரனும் போரில் கொல்லப்பட்டதாக அமைச்சர் டி.யு. குணசேகர உறுதி செய்வது அவர் கூறும் இக்கதியே சரணடைந்த ஏனைய புலி உறுப்பினர்களுக்கும் நேர்ந்திருக்கலாம் என அவர்களின் உறவினர்கள் அஞ்சுகின்றனர்.

இந்த இருவரும் போரில் இறக்கவில்லை எனவும் அவர்கள் போரில் கொல்லப்பட்டார்கள் என்ற அமைச்சரின் கூற்று பொய் எனவும் இந்த சாட்சி உறுதி செய்கிறது.

விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் இராணுவத்தால் சித்திரவதை செய்து கொல்லப்படும் காட்சி ஒன்றை சிறிலங்கா கார்டியன் வெளியிட்டுள்ளது.


இந்த காட்சி 'யுரியுப்' [youtube] இலும் உள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான சிறிலங்கா ஊடகவியலாளர்கள் குழு ஒன்றினாலேயே இது வெளியிடப்பட்டதாக தகவல்கள் பரவியுள்ளது. அவ்வாறு சித்திரவதை செய்து கொல்லப்பட்ட நபர் போரின் இறுதி நாட்களில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் ஒருவர்தானா என்பது தெளிவாகவில்லை.

Comments