சிறிலங்காவை போர்க் குற்றத்தில் இருந்து காப்பாற்ற ருத்திரகுமாரன் கொழும்பு பயணம்?

சிறிலங்காவை போர்க் குற்றத்தில் இருந்து தப்பிக்க வைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் சில நாடுகள் மற்றும் அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனையும் தாண்டி சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் மிகவும் இறுக்கமான கட்டத்தை அடைந்துகொண்டிருக்கின்றன.


இந்த விடயத்தில் ஐ.நா பொதுச் செயலர்கூட ஒதுங்கிப்போக நினைத்தாலும் வெளிவந்திருக்கும் போர்க் குற்ற ஆதாரங்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மற்றும் தமிழ்க் கட்டமைப்புக்களின் தொடர்ச்சியான சிறிலங்கா அரசின் மீதான குற்றச்சாட்டுக்களும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வந்தன, வருகின்றன. இதனால், சிறிலங்கா மீது பெயரளவிற்கேனும் எதாவது ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஐ.நாவிற்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பான் கீ மூனினால் அமைக்கப்பட்டதுதான் நிபுணர்கள் குழு. இந்தக் குழு இத்தனை காலமாக எதனைச் செய்து முடித்துள்ளது என்பது தெரியவில்லை. எனினும், இந்தக் குழுவின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைய இருக்கின்றது. ஆனால், நிபுணர் குழுவின் பதவிக்காலம் நீடிக்குமா என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.

இதற்கிடையே, போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்தும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போர்க் குற்ற வழக்குகளில் இருந்தும் தங்களை விடுவித்துக்கொள்வதற்கு சிறிலங்கா தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு இந்தியா உட்பட்ட சில நாடுகள் பேருதவி புரியத் தொடங்கியுள்ளன. காரணம் சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும்போது, தமிழ் மக்கள் மீதான இன அழிப்பிற்கு உதவி புரிந்த ஏனைய நாடுகளும் குற்றவாளிகள் ஆக்கப்படலாம் என்ற அச்சமே. சிறீலங்கா அழிவு ஆயுதங்களை தமிழ் மக்களை அழிப்பதற்கு பாவித்தது நிரூபிக்கப்பட்டால், தடை செய்யப்பட்ட அந்த அழிவு ஆயுதங்களை விற்பனை செய்த நாடும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும்.

இந்நிலையில் தமிழ் இனப்படுகொலையை மூடிமறைத்து போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து சிறிலங்காவை தப்பிக்க வைக்கும் நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன. சிறீலங்காவில் உள்ள தமிழ் கட்சிகள் மகிந்தவுடன் ஆதரவாக, நெருக்கமாக உறவாடிக்கொண்டிருப்பதால் போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தமாட்டார்கள் என்பது உறுதி. எனினும், தமிழ்க் கூட்டமைப்பு போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தலாம் என்பதனாலேயே தமிழ்க் கூட்டமைப்பிற்கு சாதாரண அரசியல் சலுகைகளை வழங்கி, அவர்களை வழிக்கு கொண்டுவரும் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. கூட்மைப்பை வழிக்கு கொண்டுவரும் முயற்சி ஓரளவு சாதகமான நிலையை எட்டியுள்ளதாகவும், இதற்கு இந்தியாவும் உடந்தையாக இருப்பதாகவும் கொழும்பு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இவ்வேளையில் எஞ்சியிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை கட்டுப்படுத்தவதே தற்போது பிரதான பிரச்சினையாக எழுந்துள்ளது. ஏற்கனவே, முகாம்களில் இருக்கும் தமிழ் மக்களையும், தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் பணயமாக்கி புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தேசியத்திற்கு ஆதரவாக செயற்பட்ட ஊடகங்கள் சில விலைக்கு வாங்கப்பட்டு, எதிர்ப்பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டன. பல புதிய அமைப்புக்கள், அணிகள், ஊடகங்கள் தோற்றம் கொண்டன. கே.பி ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிகளில் சிறிதளவே சிறிலங்காவிற்கு வெற்றி கிடைத்தது.

கே.பியின் திட்டங்களுக்கு அமைவாகவே ஏற்கனவே நாடு கடந்த தமிழீழ அரசு புலம்பெயர்ந்த நாடுகளில் தோற்றம் கொண்டது. தமிழீழம் என்ற சொற்பதத்துடனேயே புலம்பெயர்ந்த தமிழ் மக்களை அணுக முடியும் என்பதாலேயே இவ்வாறானதொரு அமைப்பு ஏற்கனவே கே.பியின் திட்டமிடலின் கீழ் உருவாக்கப்பட்டது என முன்னர் கருத்துக்கள் வெளியாகியிருந்ததும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழீழம் என்ற தனிநாட்டிற்கான ஒரு அமைப்பாக இதன் தோற்றம் இருந்தாலும், இதன் செயற்பாடுகள் சிறிலங்காவிற்கு சாதகமாகவே இருந்து வருவதை இந்த அமைப்பின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வந்தவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இந்தியா, சிறிலங்காவிற்கு பயணம் செய்யமுடியாத நிலை இருக்கும்போது, இதன் பிரதிநிதிகள் அந்நாடுகளுக்கு போய்வரக்கூடியதாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த நாடு கடந்த தமிழீழ அரசின் ஊடாக, புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிறிலங்கா மீது சுமத்திவரும் போர்க் குற்றச்சாட்டுக்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் மகிந்த அரசு வெளிப்படையாக இறங்கியுள்ளமையை அறியக்கூடியதாக உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்தியுள்ளதாகவும் சிறிலங்கா அரச தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்குலக நாடுகள் சிறீலங்கா தொடர்பாகக் கொண்டிருக்கும் எண்ணக்கருவை மாற்றுவதற்காக புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும் எனவும் அந்த அரச தரப்பு பேச்சாளர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை நாடு கடந்த தமிழீழ அரசுடனேயே இடம்பெறவுள்ளதாகவும் இதன் பிரதமர் எனக் கூறப்படும் ருத்திரகுமாரன் இந்தப் பேச்சுவார்த்தைக்காக அடுத்த சில வாரங்களில் கொழும்பிற்கு பயணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளிக்கசிந்துள்ளன. .

அதற்கு முன்பாக, தேசியத்தில் உறுதியாக நிற்பவர்களும், சிறிலங்காவின் மீதான போர்க் குற்றச்சாட்டினை கைவிட மறுப்பவர்களும் நாடு கடந்த அரசில் இருந்து வெளியேற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் அடிப்படையிலேயே நாடு கடந்த அரசில் உள்ள இன்னொரு அணியினர் கழற்றிவிடப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஒரே சக்தியாக நாடு கடந்த அரசினை கட்டமைத்து தற்போது அதனுடன் பேசுவதன் ஊடாக தமிழ் மக்களுக்கான ஒரு சிறு அரசியல் தீர்வை வழங்குவதுபோல் காட்டிவிட்டு போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்வதே சிறிலங்காவின் தற்போதைய திட்டம் என்று தெரியவருகின்றது. சிறிலங்காவின் இந்தத் திட்டத்திற்கு எதிராக நிற்பவர்களையும் செயற்படுபவர்களையும் அடையாளம் கண்டுகொள்ளவும், அவர்களை அச்சுறுத்துவதற்கும் ஏற்கனவே கோத்தபாய ராஜபக்சவினால் திட்டங்கள் வகுக்கப்பட்டு பலர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனை இலங்கையில் இருந்து வெளிவரும் ஊடகங்களே உறுதிப்படுத்தி செய்திகளும் வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, சிறிலங்காவின் அற்ப சலுகைகளுக்காக பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களை இந்த நாடு கடந்த தமிழீழ அரசு பேரம்பேசி விற்கப்போகின்றார்களா? அல்லது சிறிலங்காவை போர்க் குற்றவாளியாக்கி, இனப்படுகொலையாளிகள் என்பதை நிரூபித்து தனித் தமிழீழத்திற்கு அழைத்துக் கொண்டு செல்லப்போகின்றார்களா என்ற கேள்வியே எழுகின்றது.

- தமிழ்க்கதிருக்காக விவேகன்

Comments