தேசத்தின் அன்னை பார்வதி அம்மாக்கு உலக தமிழ் அமைப்புக்களின் இரங்கல் செய்திகள்





தமிழீழத் தாயாருக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியும், வீர வணக்கமும்! - பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை

தமிழீழ தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மா அவர்கள் இன்று காலை காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்தோடு அறியத் தருகின்றோம்.

81 அகவையுடைய திருமதி வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை (பார்வதியம்மா) அவர்கள் கடந்த பல மாதங்களாக பக்கவாத நோய் காரணமாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். எங்கள் தமிழீழத் தாயின் வயதும், இடியெனத் தாக்கிய மனதும் ஆரோக்கியத்தை மீட்டுக் கொடுக்காத நிலையில், இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமானார்.

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், சிங்கள இனவாத அரசுகூட அந்தத் தாயார் மீது மனம் இரங்கி, அவர் மலேசியாவில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதி வழங்கியிருந்தது. மலேசியாவில் கிடைத்த மருத்துவம் பலனளிக்காத நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியா சென்ற அவரை, விமான நிலையத்தில் வைத்தே தமிழக அரசு அவரை அதே விமானத்தில் மலேசியாவிற்கே திருப்பியனுப்பியது. இதன் மூலம், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திருமதி சோனியா காந்தி அவர்களிடம் தனது எசமான விசுவாசத்தை மீண்டும் நிரூபித்துக்கொண்டார்.

பலத்த கண்டனங்களுக்குள்ளான நிலையில், தமிழக - இந்திய அரசுகளின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராகப் பலர் நீதி மன்றக் கதவுகளைத் தட்டிய காரணத்தால், தமது மனிதாபிமான சிந்தனைகளை மீள் தூசு தட்டிய இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையில் கிகிச்சைக்கான அனுமதி அளித்தது. தமிழக முதல்வர் கருணாநிதி தமழீழத் தாயாருக்கு வீட்டுக் காவல் போன்ற நிலையை ஒத்த நிபந்தனைகளை முன் வைத்த காரணத்தால், மனம் நொருங்கிப்போன அவரது குடும்பத்தினர் அதற்கு உடன்படாமையாலும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் விரும்பாத காரணத்தாலும் இந்திய - தமிழக அரசுகளின் போலி நாடகங்களை நிராகரித்தனர்.

இதனால், பார்வதி அம்மாள், அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச் அழைத்து செல்லப்பட்டு, வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சற்று உடல் நலம் தேறிய நிலையில் அவர் மீண்டும் வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. கடந்த சில வாரங்களாக அவர் சுய நினைவை இழந்து அவதியுற்றார். இந்நிலையில் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று காலமானார்.

ஈழத்தாயின் பூவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அளவில் ஈழமக்களின் அஞ்சலிக்குப்பின்னர் விதைக்கப்படலாம் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பல நுறு வருடங்களாக முகவரி இழந்த நிலையில், அந்நியர் ஆட்சிக்குள் அடிமைப்பட்டுக் கிடந்த நாடற்ற தமிழினத்திற்கானதொரு நாடாக தமிழீழத்தை மீட்டு எடுக்கும் வீர வரலாற்றைப் படைத்த எங்கள் தேசியத் தலைவரைப் பெற்றெடுத்த அந்த வீரத் தாயாருக்கு உலகத் தமிழினம் வீர வணக்கம் செலுத்தும் இந்த வேளையில், பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களுடன் இணைந்து, தமிழீழ மக்கள் பேரவையும் தனது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றது.

வரலாறு கொடுத்த வரமாக, எங்கள் தேசியத் தலைவரைப் பெற்றெடுத்த இந்த வீரத் தாய்க்கு கண்ணீரஞ்சலி செலுத்துவதுடன், எங்கள் தேசத்தை மீட்டெடுக்கும் எமக்கான வரலாற்றுக் கடமையினையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தின் விடுதலைக்கான பெரு நெருப்பைக் கருவிலே சுமந்த அந்த வீரத் தாயின் புகழுடல் தீயினுள் சங்கமிக்கப்போகும் இந்தத் தருணத்தில், புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் நாம் அனைவரும் தமிழீழ மண்ணை மீட்கும் விடுதலைப் போராட்டத்தில் நாம் ஒன்றாக இணைந்து, வேகமாகப் பயணிப்பதே இந்த வரலாற்றுத் தாயாருக்கு நாம் செலுத்தும் இறுதி மரியாதையாக இருக்கும்.

'தாயே! எங்கள் தமிழே!! நீங்கள் எங்களுக்கு வரமாக வழங்கிய தேசியத் தலைவர் அவர்களது பாதையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக அணி திரண்டு, தமிழீழத்தை மீட்கும் மனோ பலத்தை எங்களுக்குத் தந்தருளும்' என்று எங்கள் அன்னையிடம் வேண்டி நிற்கின்றோம்.

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!

....................................


பார்வதியம்மாவுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் இரங்கல்

தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மா 20.பெப்ரவரி 2011 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு தமிழீழம் வல்வெட்டித்துறையில் தனது 81 வது அகவையில் காலமானார் என்பதனை மிகவும் வேதனையுடன் உலகத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

உலகத் தமிழரை உலகிலே தலை நிமிர வைத்த எங்கள் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை இத்தரணியிலே ஈன்றெடுத்த புனிதத்தாயின் உயிர் இன்று உலகைவிட்டுச் சென்றாலும் தமிழினம் உள்ளவரை எல்லோருடைய நெஞ்சங்களிலும் என்றுமே வாழ்ந்துகொண்டிருப்பார்.

அன்னாரது குடும்பத்தினருக்கும் பார்வதியம்மாவின் மறைவுச் செய்தி கேட்டுத் தாங்கொணாத் துயரில் ஆழ்ந்திருக்கும் உலகத் தமிழர்களுக்கும் கனடியத் தமிழர் தேசிய அவையினர் தங்களது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் தாங்களும் இத்துயரில் பங்குகொள்கின்றனர்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.

கனடியத் தமிழர் தேசிய அவை
............................................

தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் மறைந்ததையிட்டு கனடா இளையோர் அமைப்பினரின் இரங்கல்.

பெரும் மதிப்புக்குரிய தமிழீழத் தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் அவர்கள் மறைந்ததையிட்டு கனடா தமிழ் இளையோர் அமைப்பு ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றது.

தமிழீழ விடுதலைப் பயணத்தை தலைமை தாங்க ஓரு சூரியத்தேவனைப் பெற்றெடுத்த தேசத்தின் தாய் அமரர் பார்வதி அம்மாள் அவர்களுக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு தனது இதய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ஈழத் தமிழரை அடிமையின் பிடியிலிருந்து விடுவிக்க போராடும் தமிழ் தானைத் தலைவனை பெற்றெடுத்து அவருக்கு வீரமும் விவேகமும் உட்டி வளர்த்த பார்வதி அம்மள் அவர்கள் தேசியத்தலைவரின் இலட்சியப் பயணத்துக்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றது.

தேசியத்தலைவரின் பெற்றோர் என்ற காரணத்துக்காக இவரும் இவரது கணவரான அமரர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் சிறிலங்கா அரசின் துன்புறுத்தல்களுக்கு பல ஆண்டுகளாக ஆளாகி வந்திருக்கின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின் 7 மாதங்காக முதியவர்கள் என்றும் பாராமல் தேசியத்தலைவரின் பெற்றோராகவும் தமிழர்களாகவும் இருந்த காரணங்களுக்காக சிறிலங்கா அரசின் வதைமுகாமில் வெளித் தொடர்புகளுக்கோஇ மருத்துவ வசதிகளுக்கோ அனுமதிக்கப்படவில்லை.

தேசியத் தாய் அண்மையில் தமிழ் நாட்டில் சிகிற்சையளிக்க அனுமதி மறுக்கப்பட்டு பின்பு தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரான கரணநிதியால் நிபந்தனைகளுடன் அளித்த பெற்ற அனுமதியை மறுத்தழித்து தனது சொந்த மண்ணான வல்வெட்டித்துறையிலேயே சிகிட்சை பெற்றுவந்தார். இத்தோடு இவரது கணவர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அண்மையினிலேயே இறைவனடி சேர்ந்தார்.

பாரிசவாத நோயினால் கடுமையான உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் துன்புறுத்தல்களுக்கு ஆளான நிலையில் இவரது மறைவுச் செய்தி குறிப்பாக உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இவரது பிரிவால் துயரால் வாடும் தேசியத் தலைவருக்கும் அவரது உறவினர்களுக்கும் மற்றும் தமிழீழ மக்களுக்கும் எமது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அத் துயரத்தில் கனடா இளையோர் அமைப்பும் பங்கெடுத்துக் கொள்கின்றது.

TYO Media - Canada

............................................

அவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு


அனைவருக்கும் வணக்கம்,

தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் திருவேங்கடம் பார்வதி அம்மா அவர்கள் இன்று (20 - 02 -2011) அதிகாலை சாவடைந்துள்ளார் என்பதனை வருத்தத்துடன் அறியதருகின்றோம்.

உலகத்தமிழ் மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள இவ்வேளையில் அவரது பிரிவால் வாடும் அவரது பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய எம் தேசத்தின் மகா அன்னையை அனைவரும் நினைவு கூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

உலகத்தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பார்வதி அம்மாவிற்கான வணக்கநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல்கள் விரைவில் அறியதரப்படும்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
அவுஸ்திரேலியா

------------------------------------------

பிரித்தானிய தமிழர் பேரவை
20/02/2011

சகல ஊடகங்களுக்கும்
அன்புடையீர்
ஈழத் தாயின் அக வணக்க பிரசுரமான இவ் பிரதியினை உணர்வு பூர்வமாக அனைத்து ஊடகங்களையும் பிரசுரிக்குமாறும், ஒலி, ஒளி பரப்புமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

பிரித்தானிய தமிழர் பேரவை


ஈழத்தாய் பார்வதியம்மாள் அவர்களுக்கு பிரித்தானியத் தமிழர் பேரவையின் கண்ணீர் அஞ்சலி

திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மா அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 630 மணிக்கு காலமானார் என்பதனை அறிந்து மிகவும் தாங்கொணா வேதனையில் ஆழ்ந்துள்ளோம்.

தரணியில் தமிழரை தலை நிமிர வைத்த வீரப் புதல்வனைத் தந்த ஈழத்; தாய்க்கு பிரித்தானிய தமிழ் மக்கள் சார்பில் பிரித்தானியத் தமிழர் பேரவை சிரம் தாழ்த்தி வணங்குகின்றது.

பார்வதியம்மா அவர்கள் இந்த பூமிப்பந்தில் தமிழினம் உள்ள வரை எல்லோருடைய நெஞ்சங்களிலும் தமிழினத்தின் வீரனைப்புதல்வனைப் பெற்ற வீரத்தாயாகவும், எமது விடுதலையை என்றுமே நினைவு படுத்தும் தேசியச் சின்னமாகவும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

அன்னையின் குடும்பத்தினருக்கும் மறைவுச் செய்தி கேட்டுத் தாங்கொணத் துயரில் ஆழ்ந்திருக்கும் உலகத் தமிழர்களுக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிரித்தானியத் தமிழர் பேரவை

அன்னை பார்வதி அம்மாவின் பிரிவுக்கு கண்ணீர் அஞ்சலி - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தலைவர் வே.பிரபாகரன் அவர்களது தயார் அன்னை வேலுப்பிள்ளை பார்வதிஅம்மா அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20-02-2011) அன்று எம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.
அவரது பிரிவுச் செய்தி உலகத் தமிழ் மக்களை ஆறாத் துயரில் ஆழ்தியுள்ளது. அன்னையின் பிரிவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.

அடிமை வாழ்வில் சிக்கியிருந்த தமிழ் மக்கள் அடிமை வாழ்வு நீங்கி சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக அன்னையின் மகன் தன்னை அற்பணித்தார். அதனால் அவர் தனது தாய்க்குரிய கடமைகளை ஆற்ற முடியவில்லை. அவரது சகோதரர்களும் தமது தாய்க்குரிய கடமைகளை ஆற்ற முடியாத நிலையிலுள்ளனர்.

இந்நிலையில் அன்னைக்குரிய கடமைகளை ஆற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. தமிழ்த் தேசத்து மக்கள் அனைவரும் தங்களது அன்னையாகக் கருதி பார்வதி அம்மாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அன்னைக்கு இறுதி வணக்கம் செலுத்துமாறு வேண்டுகின்றோம்
---------------------
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரனைத் தன் மணி வயிற்றில் சுமந்த அந்த வீரத்தாயின் மரணச் செய்தி, இதயத்தில் ஈட்டியாகப் பாய்ந்தது. தமிழ் ஈழத்தின் தவப்புதல்வனைப் பெற்ற அந்தத் தாய்க்கு, அவரது வாழ்நாளில் ஏற்பட்ட துயரம், விவரிக்கவே இயலாத கொடுந்துன்பம் ஆகும். தன் வீர மைந்தனைத் தங்கள் நெஞ்சங்களிலே பூசித்த கோடானு கோடித் தமிழர்களை எண்ணி அவர் பெருமிதம் கொண்டு இருந்தாலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வீரப்பிள்ளைகளும், வீராங்கனைகளும் வெஞ்சமரில் மடிந்த போது, வேதனைத்தீயில் துடித்தார்.

உத்தமர் வேலுப்பிள்ளையும் அன்னை பார்வதி அம்மையாரும் என் இல்லத்துக்கு வந்து, என் பேரனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டியதும் என் மகனின் திருமணத்துக்கு இருவரும் வந்து வாழ்த்தியதும், என் வாழ்வில் நான் பெற்ற பேறுகள் ஆகும். பார்வதி அம்மையாருக்குப் புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து, இரங்கல் ஊர்வலங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்துமாறும் வேண்டுகிறேன்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணி அளவில், தியாகராயநகர், வெங்கட் ரமணா சாலையில் உள்ள செ.த. நாயகம் மேனிலைப்பள்ளி வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடக்கிறது. பழ.நெடுமாறன், தலைமை ஏற்க, நானும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்கிறோம். புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் அனைவரும் திரளாகப் பங்கேற்கும்படி வேண்டுகிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:- ஈழத் தமிழர்களின் சன நாயக உரிமைகளுக்காகவும், சொந்தமண்ணில் சம உரிமைகளுடனும், சுயமரியாதையுடனும் வாழவும் போராடிய போராளி பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் காலமானார் என்ற துயரச் செய்தி ஈழத் தமிழர்களை மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்களையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது.

கடந்த ஓர் ஆண்டு காலமாக கடும் நோயினால் அவதிப்பட்டு மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வந்த பார்வதியம்மாள், சிகிச்சை பலனின்றி காலமானதைத் தொடர்ந்து துயரத்திற்கும், அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிற அவரது குடும்பத்தினருக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறப்பு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பெற்ற பிள்ளைகளைப் பிரிந்து உற்ற துணைவரை இழந்து தாள முடியாத் துக்கத்தில் விழுந்து தனிமையில் வாடிய தாய் பார்வதி அம்மாள் பத்து கோடித் தமிழர்களுக்கும் தாய் என்னும் பெருமையைப் பெற்றிருந்தாலும் அவர்களின் கடைசிப் பொழுதுகளில் உடனிருக்க ஒருவருமே இல்லை எனும் அவலத்திற்கு ஆளான நிலையை எண்ணி விம்முவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை. அவரது இழப்பு ஒட்டு மொத்தத் தமிழினத்திற்கே பேரிழப்பாகும். அவரது இழப்பால் உள்ளம் வருந்தும் ஒவ்வொரு தமிழனும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி ஆறுதல் தேடும் நிலையே உள்ளது.

அந்த வகையில் தமிழக மெங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகள் 3 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு வீர வணக்கம் செலுத்தப்படும். நாளை மறுநாள் (22-ந் தேதி) மாலை 3 மணியளவில் வல்வெட்டித்துறையில் நடைபெறும் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல். திருமாவளவன் கலந்து கொள்கிறார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அன்னை பார்வதி அம்மையார் காலமான செய்தியை அறிந்து உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். சிறையில் தனது கணவரை பறி கொடுத்தத் துயரம் அவரது உடல் நிலையையும் மனநிலையையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டது. அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தும் வகையில் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கருப்புக்கொடி ஊர்வலங்கள், இரங்கல் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்ட செய்தி:- எங்கள் தேசியத் தலைவரை இந்த மண்ணுக்கு தந்த என் தாயார் இன்று நம்மிடடையே இல்லை. தமிழ் தேசத்தின் தியாகச் சுடராக அவர் இன்று உலகமெங்கும் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் அனைவரின் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அவர் தியாகம் வரலாற்றில் என்றும் நினைவுக் கூறப்படும்.

அன்னைக்கு நாம் தமிழர் கட்சி தனது புரட்சிகர வீரவணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்னையின் நினைவை போற்றும் வகையில் நெடுமாறன் நடத்தும் அமைதிப் பேரணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அதில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன். இன்று மாலை கோவையில் அன்னையின் நினைவைப் போற்றும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது.


---------------------------------

Comments