முத்துக்குமாரைக் கொத்திப் போட்டது யார்? திகில் கோட்டையாகும் புதுக்கோட்டை!

ந்தனக் கடத்தல் வீரப்பனின் செல்லப்பிள்ளையாக இருந்த புதுக்கோட்டை முத்துக்குமார் 'நாம் தமிழர்’ இயக்கத்தில் சேர்ந்து அந்தக் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆனார். சீமானின் தளபதியாக வலம்வந்த சுப.முத்துக்குமாரை கடந்த 15-ம் தேதி இரவு, பயங்கரமாக வெட்டிக் கூறுபோட்டுக் கொலை செய்துவிட்டது ஒரு கும்பல். தமிழகத்தைக் குலை நடுங்கவைத்த இந்த சம்பவத்தின் நாயகனான சுப.முத்துக்குமார் யார்?

இந்தக் கேள்விக்கு ஒரு ஃப்ளாஷ் பேக்!

மதுரை பசும்பொன் நகர் ஜீவா தெருவில் சுந்தரம், பார்வதி தம்பதியின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் முத்துக்குமார். ஐந்து வயது வரை மதுரையில் வசித்துவந்த குடும்பம், பிறகு பழநிக்குச் சென்றது. அங்கு ப்ளஸ் டூ படிப்பை முடித்த முத்துக்குமார், பிறகு கோயம்புத்தூர் சென்று ஏ.ஸி. மெக்கானிக், டெலிபோன் ஆபரேட்டர் கோர்ஸ் படித்து முடித்த கையோடு வீட்டைவிட்டு வெளியேறி விட்டார். ஆரம்பத்தில், 'என்ன ஏது?’ என கேட்ட பெற்றோரிடம், சரியாக பதில் சொல்லாமல் அவர் போக்கிலேயே போயிருக்கிறார். அந்த நேரம், தமிழீழ தாகம் முத்துக்குமாரை ஆட்படுத்த... இலங்கைக்கே சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்திருக்கிறார். முத்துக்குமாரின் ஆர்வமும், நடவடிக்கைகளும் பிரபாகர​னுக்குப் பிடித்துப்போக, அவரே இவரை 'தமிழ்த் தேசிய மீட்புப் படை’யின் தலைவராக இயங்குமாறு சொன்னாராம். அதன்படி, தமிழ​கத்துக்கு வந்த முத்துக்குமார், இங்கு இருந்தபடியே விடுதலைப் புலிக​ளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து இருக்கிறார். அப்போது இவரை சந்தேகப்பட்ட கடற்​கரையோர கிராமவாசிகள், காவல் துறைக்கு தகவல் கொடுக்க... முத்துக்குமார் முதன் முதலில் ஜெயிலுக்குப் போனார்.

அதன் பின், 1997-ல் சந்தனக் கடத்தல் வீரப்பனின் நடவடிக்கைகள் முத்துக்குமாரை ஈர்த்திருக்கிறது. தொடர்புகொள்ளத் துடித்திருக்கிறார். இதைத் தெரிந்துகொண்ட வீரப்பன், தன் இடத்துக்கே முத்துக்​குமாரை அழைத்திருக்கிறார். அங்கு வீரப்பனின் நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளப் பழகி இருக்கிறார். தனது கூட்டாளிகளையும் அழைத்துச் சென்று வீரப்பனிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இந்த நடவடிக்கைகளை மோப்பம் பிடித்த உளவுத் துறை இவர் கூட்டாளிகளை வைத்தே தஞ்சையில் முத்துக்குமாரை மடக்கியது.

ஆனால் அதில் இருந்து தப்பினார். அதற்குப் பின் ஒரு கட்டத்தில், காட்டைவிட்டு வெளியே வந்து, தமிழ்த் தேசிய மீட்புப் படையை செம்மையாக நடத்தி இருக்கிறார். 'இவர் பேச்சை யார் கேட்டாலும் சொக்கிப் போவார்கள்’ எனும் அளவுக்கு வசீகரமாகப் பேசக்கூடியவர் முத்துக்குமார். அவரது பேச்சுத்திறமையில் மயங்கிய சுமார் 100 மாண​வர்களைக்கொண்டு ஓர் இளைஞர் படையை உருவாக்கி வைத்திருந்தாராம் முத்துக்குமார்.

சீமானின் செயல்பாடுகளைப் பார்த்து இவருக்கு ஒரு ஈர்ப்பு வந்தது. உடனே சீமானைச் சந்தித்துப் பேசி, நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்திருக்கிறார். அதன் பின்பு, அந்த இயக்கத்தைக் கட்சியாக உருவெடுக்க இவரின் பங்கு அதிகம் என்று சொல்கிறார்​கள். இப்படித் தமிழ் உணர்வால் அடிக்கடி மதுரையில் இருந்து புதுக்கோட்டை வந்து போனதில், தி.க-வில் மாவட்டப் பொறுப்பில் இருந்த வடகாட்டைச் சேர்ந்த கரு.காளிமுத்துக்கு பழக்கமாகி, ஒரு கட்டத்தில் அந்தக் குடும்பத்​தின் மாப்பிள்ளையாகவும் ஆகியிருக்​கிறார் முத்துக்குமார். கடந்த ஆண்டு புதுக்கோட்டையில் சீமானே இவர் கல்யாணத்தை நடத்திவைத்து இருக்கிறார்.

கடந்த நாடாளு​மன்றத் தேர்தலில் தற்போதைய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருந்த முத்துக்குமார், 200 இளைஞர்​களோடு தொகுதி முழுதும் சூறாவளியாகச் சுழன்று சிதம்பரத்தின் வெற்றியை கேள்விக்குறியாக்கினார். கட்சியின் மேடைப் பேச்சாளர்கள் எதைப் பேச வேண்டும் என்பதை இவர்தான் சொல்வாராம். அந்த அளவுக்கு சீமான் இவருக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். எட்டு மாவட்டங்களைத் தன்​னுடைய கட்டுப்பாட்டில் வைத்​திருந்த முத்துக்குமாரைத்தான், கொலைவெறிக் கும்பல் போட்டுத் தள்ளியிருக்கிறது.

கடந்த 15-ம் தேதி இரவு எட்டரை மணியளவில் புதுக்கோட்டையில் இருக்கும் வடகாட்டைச் சேர்ந்த வக்கீல் போத்தியப்பனோடு பேசிக் கொண்டிருந்​தார் முத்துக்குமார். பிறகு இருவரும் டூ வீலரில் பழம் வாங்கச் சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்துள்ளது. போத்தியப்பனை மருத்துவமனையில் சந்தித்தோம். அதிர்ச்சி விலகாமல் இருக்கிறார் அவர். ''இரவு ஒன்பதரை மணிக்கு இருவரும் வடகாட்​டுக்குக் கிளம்பினோம். முத்துக்குமார் வண்டியை நான் ஓட்டினேன். புதுக்கோட்டை அண்ணாசிலை பக்கத்தில் வண்டியை நிறுத்திட்டு ஒரு பழக்கடைக்குள் போனோம். அப்போது திடீரென்று இரண்டு பேர் கண் இமைக்கிற நேரத்தில் முத்துக்குமாரை வெட்டி சாய்ச்சிட்டாங்க. சப்தம் போட்ட என் முகத்திலும் வெட்டிட்டு ஓடிட்​டாங்க. கடை வாசலிலும் ஒருத்தன் நின்னுட்டு இருந்​தான். நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியில வந்தவங்க முகத்​தைக்கூடப் பார்க்க முடியலை...'' என்றார்.

சுமார் 10 மணிக்கு போஸ்ட்மார்ட்டம் முடிந்து முத்துக்​குமாரின் உடலைப் பெற்றுக்கொண்ட கட்சிக்காரர்களும், உறவினர்களும் வடகாட்டுக்கு ஊர்வலமாகவே எடுத்துச் சென்றனர். கரு.காளிமுத்து வீட்டுக்கு விரைந்து வந்து சேர்ந்த சீமான், முத்துக்குமாரின் உடலைப் பார்த்து கதறி அழுதார். அடக்கத்துக்குப் பின் இரங்கல் கூட்டம் நடத்தப்படுவதாக நாம் தமிழர் கட்சியினர் சொல்லி இருந்தனர். ஆனால், 'இந்தச் சூழ்நிலையில் என்னால் பேச முடியவில்லை’ என சீமான் சொல்லிவிட்டதால்... 'படத் திறப்பு அன்று அவர் பேசுவார்’ எனக் கூறிவிட்ட​னர்.

முத்துக்குமாரின் அண்ணன் வீரமணியிடம் பேசினோம். ''எங்க குடும்பத்தில் நான், முத்துக்குமார், முத்துமாரின்னு மூணு பேர். ஆனா, என் தம்பிக்குதான் எங்க அப்பா அம்மா மத்தியில் செல்லம். அதனால், அவன் எங்க போனாலும் அப்பா எதுவும் கேட்க மாட்டாரு... இப்படிப்பட்ட என் தம்பியைக் கொன்னுட்டாங்களே!'' என்று கதறினார்.

கொலைக்கான காரணங்கள் குறித்து பல தரப்புகளில் விசாரித்தோம். ''இரண்டு நாட்களுக்கு முன்பு முத்துக்​குமார் தங்கி இருந்த வடகாடு பகுதியில், 'இவரைத் தெரியுமா?னு போஸ்டர் ஒட்டி அதில், முத்துக்குமார் விடுதலைப் புலிகளுக்கு டீசல் கடத்தி சம்பாதித்தார். வீரப்பனோடு இருக்கும்போது பல கோடிகளை பங்காகப் பெற்றவர். வீரப்பனோடு பழகி ஆயுதம் கடத்தி விற்றவர்’னு சகட்டுமேனிக்கு குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன் ஹைலைட்டாக, சமீபத்தில் நடந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் படுகொலையில் முத்துக்குமாருக்கும் தொடர்பிருக்கும் போலிருக்கிறது. 'முத்தரையர் சமூகமே, இவரை அடை​யாளம் கண்டுகொள்ளுங்கள்’னு டைப் செய்யப்பட்ட நோட்டீஸ்களும் புழங்​கின. இதைப் பார்த்த முத்துக்குமார் அதிர்ச்சியாகி இரண்டு நாட்கள் யாருடனும் பேசலை. இது தொடர்பா நடவடிக்கை எடுக்கச் சொல்லி வடகாடு காவல் நிலையத்தில் கரு.காளி​முத்து புகார் செஞ்சார். அன்னிக்கு ராத்திரியே முத்துக்குமாரை கொலை செஞ்சுட்டாங்க...'' என்றனர். கரு.காளி​முத்துவிடம் பேசினோம். ''ஒரு மாசத்துக்கு முன்னால், 'எச்சரிக்கையா இருங்க’ன்னு யாரோ முத்துக்குமார்கிட்ட சொல்லி இருக்காங்க. என்ன காரணம்னும் தெரியலை. ஆனாலும் தம்பி அசால்ட்டா இருந்திருச்சு. இந்தத் துண்டுப் பிரசுரம் வெளியிட்டதில் எங்க ஊரைச் சேர்ந்த விஜய் ஆனந்த், பாரதி, திருப்பதி மூணு பேருக்கும் தொடர்பு இருக்கும்னுதான் நான் புகார் கொடுத்தேன். காரணம், இவங்களும் தமிழ் உணர்வாளர்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ கண்ணப்பன்கிட்ட 1 லட்சம் வாங்கிவிட்டு, எந்தச் செலவும் செய்யாம அவங்​களே எடுத்துக்கிட்டாங்க. இப்போ இந்தச் சம்பவம் நடக்குறதுக்கு முன்னால், துண்டுப் பிரசுரம் வெளி வந்துருக்கு. அதுக்குக் காரணம் அவங்க மூணு பேருமாதான் இருக்கணும்னு சொன்னேன். மத்தபடி கொலைக்கும், இவங்களுக்கும் சம்பந்தம் இருக்குற அளவுக்கு எதிர்ப்புக் கிடையாது!'' என்றார்.

நாம் விசாரித்த வரை, 'முத்துக்குமார் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பதால், அவர்களுக்கு எதிரானவர்கள் இந்தச் செயலைச் செய்திருக்கலாம்’ என்ற கோணத்தில் காவல் துறை விசாரணையை தொடங்கியிருக்கிறது. இதற்கிடையில், கொலையாளிகள் பயன்படுத்திய இண்டிகா கார் காரைக்குடி பக்கத்தில் கோட்டையூர் ரயில்வே கேட் அருகில் நிற்க... காவல் துறை அங்கு விரைந்தது. அந்தக் காருக்குள் ரத்தக்கறையுடன் அரிவாள், சிலுவை போன்றவையும் கிடக்கின்றன.

மாவட்ட எ.ஸ்.பி-யான முத்துசாமி, ''கொலை தொடர்பாக மூன்று பேரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். ஆறு தனிப்படைகள் விசாரணை துரித கதியில் நடக்கிறது. விரைவிலேயே குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விடுவோம்...'' என்றார்.

புதுக்கோட்டையில் ரத்தம் காயக்​காய கொலைகள் நடப்பது வழக்க​மானதுதான். ஆனால், முத்துக்குமார் படுகொலை பல்வேறு அதிர்ச்சி அலை​களைக் கிளப்பியுள்ளது!

- வீ.மாணிக்கவாசகம்

படங்கள்: சாய் தர்மராஜ்

Comments